புதன், 27 பிப்ரவரி, 2013

திருக்குறள், அறத்துப்பால், அதிகாரம் 1, குறள் 5

            இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
 
பொருள்:-
                      பிறவி மயக்கத்துக்கு ஏதுவாகிய இன்பத் துன்பங்களை உண்டாக்கும் நல்வினையுந் தீவினையுமாகிய இரண்டு வினையுஞ் சேராமல் நீங்கும், இறிவனுடைய மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

நானுணர்ந்தது:-
                          ஒருவன் இறைவனை அடைய வேண்டுமனில் அவன் தீவினை தவிர்த்தால் மட்டும் போதாது, நல்வினையையும் தவிர்க்க வேண்டும். பாவம், புண்ணியம் இரண்டும் இல்லாதிருக்கும்போது மட்டுமே ஒருவன் இறைநிலையோடு கூட முடியும். ஏனெனில் ஒருவன் செய்யும் நல்வினை, தீவினை இரண்டிற்கும் ஏற்ப அவனது மறுபிறவி அமைகிறது. எனவே இறைநிலையோடு ஒன்றுதல் என்பது நிகழாமல் போகிறது.
                        தீவினையைத் தவிர்க்கலாம் என்பது ஒருவகையில் சரியாக இருக்கலாம். ஆயின் நல்வினையினைத் தவிர்ப்பது என்பது எவ்வகையில் சரியாக இருக்கும். இங்கு அறம் என்பதே நல்வினையைத்தானே குறிக்கிறது, அது இந்த மண்ணின் குணமாகவும், மண்ணின் மைந்தர்களின் மரபணுக்களிலே தேங்கி நிற்கிறது.
                        நிச்சயம் வினைகளைப் புரியும்போது நம்முள் அகங்காரம் ஏற்படுவது இயல்பு, அதுவும் நல்வினைகளைப் புரியும்போது கிடைக்கும் புகழ்ச்சொற்கள் நம் அகங்காரத்தினை மென்மேலும் தூண்டிவிடும். அதிலிருந்து விலகி நான் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் என்னைக் கருவியாய்க் கொண்டு உலக நன்மைக்காக செய்தது என்ற எண்ணம் கொள்வோமானால், இச்செயலுக்கு உரிமை கொண்டாடாமல் இருந்தோமென்றால் நாம் செய்யும் நல்வினைகளின் பலன் நம் கணக்கில் சேராமல் இருக்கும், நம்மை இறைவனிடத்து நெருங்கச் செய்யும். சுருங்கச் சொன்னால் நாம் இறை நிலையோடு ஐக்கியமாவோம்.
                        இதனையே இன்னொரு கோணத்தில் சிந்திப்போம். நன்மை, தீமைக்கு அப்பாற்பட்டு மெய்ம்மை நிலையில் இருக்கும் இறைவனின் புகழினை சிந்தித்து, அவனையே மனதில் இருத்தி நம் கடமையை செவ்வனே செய்து வரும்போது நாம் நல்வினை, தீவினை என்னும் இருள் சேர்க்கும்(மறுபிறவி சேர்க்கும்) நிலையினை அடையாதிருக்கலாம்.
                       நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்கிறார் விவேகானந்தர். இருவினைகளிலிருந்து நீங்கி நிற்கும் பரம்பொருளை நாம் மனத்தில் எண்ணிவர நாம் மெதுவாக இறைநிலை நோக்கி பயணப்படுவோம். அவ்விரு நிலைகளும் நம்மை நீங்கி நாம் இறையோடு ஐக்கியமாவோம்.
                        இன்றைய காலகட்டத்திலே நாம் நமக்காக அதிகம் யோசித்து, இறைவனிடம் அதிகம் யாசித்து எந்நேரமும், நான், என் குடும்பம், என் வீடு என வாழ்ந்து வருகிறோம். விதிவிலக்கானவர்கள் இவ்வாக்கியத்தினை தவிர்த்து விடுங்கள். இதிலிருந்து சிறிதேனும் விடுபட்டு பிறர்நலன் யோசித்து அதற்காக இறைவனிடம் யாசித்து, பிரார்த்தனை செய்து வந்தால் நிச்சயம் நாம் இறைநிலையினை நோக்கி பயணப்படுவோம். பிறருக்காக வாழ்ந்து மக்கள் சேவை செய்து வந்தால் மகேசன் பக்கத்தில் நாம் செல்ல வேண்டாம், நம்மிடம் மகேசன் நெருங்கி வருவான் என்கிறார் நெமிலி ஸ்ரீ பாபாஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக