வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பிள்ளையார்

எனது பால்ய கால நினைவுகளை சற்றே மீட்டிப் பார்க்க விநாயகர் சதுர்த்தி கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது நினைவுக்கு வந்தது.

நாள் நெருங்குகையில் குயவர் ஏரியிலிருந்து தான் எடுத்து வைத்திருந்த களிமண்ணில் பிள்ளையார் சிலைகளை சிறிதும் பெரிதுமாக அழகாக வெயிலில் உலர்த்தி வைத்திருப்பார். அந்த குயவரது இல்லம் ஒரு குளக்கரையில் அரசமரத்தினடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரின் வீட்டிற்கு அடுத்தது. பிள்ளையார் வீட்டின் வாசல் முழுக்க இவர் பிள்ளையார்களை அணிவகுத்து வைத்திருப்பார்.

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் ஒவ்வொரு வீட்டுக்குழநதையும் குயவரிடம் சென்று பணம் கொடுத்து பிள்ளையார் சிலைகளை வாங்கி வருவர். அந்த ஊரில் இரண்டு குயவர் இல்லங்கள். இருவரும் ஏமாற்றமடையாமல் ஊர்மக்கள் இரண்டாகப் பிரிந்து இருவரது படைப்புகளையும் வாங்கியிருப்பர். அதீத உற்பத்தியுமில்லை, ஏமாற்றமுமில்லை. என்ன ஒரு புரிதல் மக்களிடையே!

எல்லோரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த பிள்ளையாரை நன்கு பூஜை செய்து வழிபடுவர்.வெள்ளெருக்கு மாலை, ஒரு பிடி அருகம்புல், தும்பைப்பூக்கள் கோர்க்கப்பட்ட ஒரு சிறிய மாலை இவ்வளவே அலங்காரம். ஒவ்வொரு பிள்ளையாருக்கும் களிமண்ணால் செய்த வெண்கொற்றக் குடையே மிக பிரமிப்பு கொடுக்கக்கூடியதாய் இருக்கும் எங்களுக்கு. அருகிலேயே பசுஞ்சாணத்தால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார் அவர் தலையிலே அருகம்புல்லே வெண்கொற்றக்குடையாய் மாறியிருக்கும்.

கொண்டைக்கடலை சுண்டல், கொழுக்கட்டை நிவேதனம். பெரிய செலவில்லை. ஆனால் ஒரு பிரமாண்ட பூஜைபோலிருக்கும். ஒவ்வொரு வீடும் அந்நாளை ஆனந்தமாய் வரவேற்க தொடங்கி இருக்கும்.
விவசாய வேலைகளால் நேரந்தள்ளீப் போகும் குளியல் கூட அன்று நேரத்தோடே நடந்திருக்கும். ஒவ்வொரு மனிதரும் மற்றவரைச் சந்திக்கையில் தங்களது பூரிப்பை அடுத்தவரோடு பங்கிட்டுக் கொள்வதை அவர்களது கண்களிலே கண்டு கொள்ளலாம்.

முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் இருக்கும் பெரிய பிள்ளையார்கள் சிறப்பு கவனிப்பு பெறுவார்கள் அன்றைய தினத்தில். நாளெல்லாம் உடன் சுற்றும் நண்பனை பிறந்த நாள் அன்று சிறப்பாக கவனித்துக் கொள்ள முற்படுவோமே, அதுபோலத்தான். பிள்ளையாரின் விழா மட்டுமே ஒரு தோழமை உணர்வோடு மிக யதார்த்தமாக எந்தவித கெடுபிடியுமில்லாமல் கொண்டாடப்படும் விழா.

விழா முடிந்தபின்னர் மறுநாளோ அல்லது இரு தினங்கள் கழித்தோ ஒவ்வொரு குழந்தையும் தான் அலங்கரித்து அழகாக பூஜை செய்த பிள்ளையாரை கைகளில் ஏந்தி நீர்நிலை ஏகி மிக மெதுவாக நீருக்குள் இறக்கி விடுவார்கள். பிருத்வி என்ற மண்ணின் தத்துவத்தை விளக்கும் பிள்ளையார் தான் கரைந்து தனது பிம்பம் தொலைத்து தன்னுருவான மண்ணாய் மாறிப்போவார். எங்கிருந்து வந்தாரோ அங்கேயே போய்ச் சேருவார்.

ஊர்வலமில்லை, ஒலி பெருக்கிகள் இல்லை, வண்ண விளக்கு அலங்காரங்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பிள்ளையார் இருந்தார். ஒவ்வொரு வீடும் ஆவலோடு ஆத்மார்த்தமாக கொண்டாடியது. பிள்ளையாரை பார்த்தார்கள், ரசித்தார்கள், அவரோடு வாழ்ந்தார்கள், அவர் பிரிதலையும் மிக யதார்த்தமாக குழந்தைகள் புரிந்து கொண்டு ஏற்றன.

இயற்கைக்கு கேடில்லா இயல்பான விழாவை இன்று கிராமங்களும் தொலைத்துவிட்டது வேதனை. அதைவிட இன்று நகரங்களில் மூலைக்கு மூலை பிள்ளையார் சிலைகள். மிகமிகப் பெரிதாய், அவை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று பல்வகைப்பட்ட வேதிப்பொருள்களால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள். ஆம் அவை சிலைகள் மட்டுமே. அவை பிள்ளையார் அல்ல. பந்தல்கள், வண்ண விளக்குகள், பறைகொட்டு என மிக சப்தமாக.

ஆனால் இவை அனைத்தும் ஏனோ உள்ளத்தைத் தொடவில்லை. நெஞ்சில் ஒரு ஆனந்தத்தை அளிக்கவில்லை. அமைதியை வீணை மீட்டலென இதயத்தில் மெல்லியதாய் உணரவைக்கவில்லை.

எங்கே செல்கிறோம் நாம், நம்முடைய பயணம் எதை நோக்கி? வெளிர்ந்த மனதில் இன்னமும் நம்பிக்கை கீற்றிருக்கு இயல்பான இயற்கை வாழ்க்கையை மீண்டும் என்றாவது ஒரு நாள் வாழத்தொடங்கி விடுவோம் என்று.


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பங்காளி

            குடும்ப அட்டை என்று தமிழில் கூறப்படும் ரேஷன் கார்டு பஞ்ச காலத்தில் வறியவர்களுக்காக உணவுப் பொருளை அளந்து அளவாகப் பகிர்ந்து கொடுக்க வழங்கப்பட்ட அடையாள அட்டை. அது இன்று அனைத்து குடும்பத்துக்கும் ஆதாரமான அட்டையாய் மாறிப்போய் ஆதார் அட்டை எதற்கு என்ற கேள்வி வேறு. அந்த அட்டை ஏழ்மையின் அடையாளம் என்பது முழுவதுமே காணாமல் போயிற்று. 

             சமூகத்தில் தாழ்த்தப்பட்டு முடங்கிக் கிடந்தோர்க்காக, மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டோர்க்காக அவர்களது அவலநிலை மாற வேண்டும் பொருளாதார நிலையில் உயர்ந்தால் அவர்களது தகுதியும் மாறிவிடும் என்ற எண்ணத்தில் இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த தாழ்நிலை ஆதிக்கத்தினாலும் அடக்குமுறையினாலும், ஒரு சில பிரிவினருக்கு ஏற்பட்டது. அவர்கள் என்றும் அந்த நிலையிலேயே இருந்திருப்பார்கள் என்று கூற இயலாது. அவர்களும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க சாத்தியக்கூறுகள் உண்டு.

           ஆனால் நானும் தாழ்ந்தவன் என்று அவனைத் தாழ்த்திய சமூகங்களும் இடஒதுக்கீட்டை வெட்கமில்லாமல் பங்கு போட்டுக் கொண்டன. பங்கு போட்டுக்கொண்ட அனைவரும் பங்காளிகள்தானே. என்ன வேறுபாடு கண்டார்கள் இவர்கள் இன்னமும் மற்றவரை தாழ்ந்தவராய் நினைக்க.

           தாழ்த்தப்பட்டவர்களின் சொத்தைப் பங்க்கிட்டுக் கொள்ள ஒவ்வொரு சமூகமும் வெட்கமில்லாமல் பங்கு போடத்துவங்கியது இன்று மிகவும் ஆதிக்க சக்திகளாக விளங்கும் ஜாட் மற்றும் பட்டேல் சமூகங்களுக்கும் ஆசையைக் கிளப்பி விட்டது. அவர்களும் நாங்களும் உங்களில் ஒருவரே என்று பங்கு கேட்கிறார்கள். நல்லதுதானே சமத்துவம் வந்துவிடுமே; எல்லாருமே பிற்படுத்தப்பட்டவர் என்றால் அனைவரும் ஒன்று என்றாகிவிடுமே?

           இதில் தேவேந்திர குல வேளாளருக்கு மட்டும் என்ன ஆயிற்று? எங்கள் பரம்பரை மிகப் பெருமை வாய்ந்தது. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல;
எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்; எங்களை உயர்ந்தவர்கள் என்று அறிவியுங்கள் என்கிறார்கள்.

           எனக்கு ஒவ்வொரு சமயத்திலும் என் மனதில் ஆழப்பதிந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது. சுனாமி தாண்டவமாடிய தருணம். ஆயிரம் கரங்கள் கடற்கரை கிராமங்களை நேசத்தோடு உதவி புரிய நீண்டன. அங்கு பாதிக்கப்பட்ட மீனவ இனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னலைக் கண்டு, இழந்த சொந்தங்களை எண்ணி வேதனையோடு இருந்தன. உதவி புரிய வந்த கரங்களில் இருந்த பொருள்கள் அவர்களை ஈர்க்கவில்லை. தன்மானம் கொண்ட அவர்களது கரங்கள் தாழ்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களை ஏந்த மிகுந்த தயக்கம் காட்டின. ஆனால் அதே நேரத்தில் குவிந்த பொருட்களை அள்ளிச் செல்ல ஒரு கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. மிக அலட்டலோடு பொருள்களை கேட்டு வாங்கிக் கொண்டது.

            தாழ்ந்து கிடக்கும் சமுதாயம் 60 ஆண்டு கால வாழ்க்கையில் முழுவதுமாக பொருளாதார சுதந்திரமும் பெறவில்லை; சமூக அந்தஸ்தும் பெறவில்லை. ஆனால் சமூகத்தில் உயர்ந்து கிடந்த சமூகங்கள் இடஒதுக்கீட்டிற்காகத் தங்களைத் தாழ்த்திக் கொண்டன. இதில் எங்கு ஓட்டை உள்ளது. ஏன் மறுபரிசீலனை என்ற ஒன்று இவ்விஷயத்தில் நடை பெறவேயில்லை என்ற கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை.
இன்னாருக்குப் பிறந்த இன்னார் இன்ன சாதிதான் என்று அரசு பட்டியலிடுவது வழக்கம். இப்படி பட்டியலிட்டால்தான் இட ஒதுக்கீடு என்ற ஒன்றை அளிக்க இயலும். ஒரு வரையறையை இப்படி வகுத்துவிட்ட பிறகு சாதியை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டால் சாதி எப்படி ஒழியும்? விளங்கவில்லையே!


            சமூகத்தில் மாற்றம் வலிந்து திணிப்பதனால் என்றும் ஏற்படாது. அது இயல்பாக மாறிப் போக வேண்டும். அப்படி ஒரு வழிமுறை முன்வருமா? வந்தால் அதனை  ஏற்க முன்வருவரா என்பதும் ஐயப்பாடே! காலம் மாறும் என்று காத்திருப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

மதுவும் வன்முறையும்

மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு,

வணக்கம். நாளைய தலைமுறையை அதன் தரத்தை வாழ்வியலை அது பதியப்போகும் வரலாற்றைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள். உங்களில் ஒருவனாக உங்கள் மாணவப் பருவத்தை கடந்து வந்த உங்கள் சகோதரனாக உங்கள் முன் என் கருத்தை வைக்கிறேன்.

மாணவ சமுதாயம் போராட்டக் களங்களில் இறங்குவது ஒன்றும் புதிதல்ல; மொழிப்போராட்ட காலம் முதல் மாணவ சமூகம் பல்வேறு போராட்ட களங்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு போராட்ட களமும் வரும் இளைய தலைமுறைக்கு கொடுத்து சென்ற செய்தி என்ன? மாணவ சமுதாயமே, இந்த போராட்ட களங்களைக் கண்ட உங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களை சந்தித்திருக்கிறீர்களா? அவர்களின் போராட்ட விளைவுகளைச் சிந்தித்திருக்கிறீர்களா?

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைக்கு எதிராக இன்று நடத்திய போராட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைத்து சமூக ஊடக வாயிலாகவும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தக் காட்சியை நானும் கண்டேன். திரளாக ஓடிச் சென்ற மாணவர்கள் மதுக்கடை மீது கல்வீசித் தாக்குதலைத் தொடங்க,  இருந்த ஓரிரு காவலர்கள் அந்த மதுக்கடையின் கதவை அடைக்க முனைகிறார்கள். அவர்களை தள்ளிவிட்ட மாணவர்கள் மதுக்கடையின் மீது தொடர் தாக்குதலைச் செய்கிறார்கள்.

தள்ளிவிடப்பட்ட காவலர்கள் நழுவிச் சென்ற சிறிது நேரத்திற்குள் காவலர் படை தாக்குதலை மாணவர்கள் மீது நடத்துகிறது. கட்டுப்படுத்த நினைக்கும் ஓரிரு மாணவர்களின் குரல் பெருங்கூட்டத்தின் முன்னே தேய்ந்து காணாமல் போகிறது. அவர்களுக்கும் காவலரின் தடியடி மரியாதை கிடைக்கிறது. காவலரின் தடியடி ஆரம்பித்த சில விநாடிகளில் மாணவர் கூட்டம் நெல்லிக்காய் மூட்டையென சிதறி ஓடிவிட்டது.அடி வாங்கிய மாணவர்களையும், கல்லெறிக்குப் பயந்து பின்னர் எதிர்தாக்குதலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்களையும் என்னால் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை.

உங்களில் எத்துணை பேர் காந்தியின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட காட்சிகளைக் கண்டிருக்கிறீர்கள். காந்தி என்ற திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகளாவது நினைவிருக்கிறதா? அதற்கும் உங்கள் போராட்ட முறைக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்று யோசியுங்கள். அங்கு வன்முறை என்ற ஆயுதத்தை போராடியவர்கள் என்றும் ஏந்தியதில்லை. எதிர்பட்ட வன்முறையைக் கண்டு ஓடியதுமில்லை. மனவலிமையோடு எதிர்கொண்டார்கள்.

மதுவோ விஷமோ அது அரசாங்கத்தின் சொத்து; அரசாங்கம் என்பது நாம்தான் எனில் அது நமது சொத்துதான். நமது என்றால் அது பொதுச் சொத்தே ஒழிய தனிப்பட்ட நபருக்கானது அல்ல. அதைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது;காவல்துறைக்கும் இருக்கிறது. நாம் அதைக் காக்கத் தவறும்போது நம்மைக் கண்டிக்கிற தண்டிக்கிற உரிமையை நாம்தான் அவர்களுக்கு அளித்துள்ளோம். நாமே நமது சட்டத்தை மீறுவதும், அதைக் காக்க நம்மால் நியமிக்கப்பட்டவர்களை தூற்றுவதும் சரியானதா? இப்படி வழி காட்டுபவர்களை எப்படி சரியானவர்களாகக் கொள்ள முடியும்?

நான் இப்படிக்கேட்பது ஆச்சர்யமாக இருக்கலாம்; சமூக ஊடகங்களில் உங்கள் செயல் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கையில் நான் இப்படி.  ”மாணவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள் இனி அரசுக்கு வேறு வழியில்லை” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். அதைப் படித்தவுடன் நான் நினைத்தது இவரது மகனையோ மகளையோ காவல்துறையிடம் அடி வாங்கக்கூடிய போராட்டத்துக்கு அனுமதிப்பாரா என்றுதான். இல்லை இவர்தான் அப்படி ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வாரா? அடுத்தவன் வீட்டுப் பிள்ளைதானே என்ற ஒரு அலட்சிய எண்ணம்தானே இவர்களை இப்படி பொறுப்பில்லாமல் சமூக ஊடகங்களில் எழுத வைக்கிறது.

பேடிகளாய் சமூக வலைத்தளங்களில் பொங்குபவர்களை நம்பி நீங்கள் வன்முறைக்களம் காணாதீர்கள். தங்கள் இயலாமையை கொட்டித் தீர்த்துக் கொள்கிறவர்கள் அங்கு அதிகம். நன்மை தீமை இரண்டும் அங்கு உண்டு, அதில் நன்மையை கண்டு தெளிவது நன்று.

 உங்களில் ஒருவர் அடிபட்டு இறந்தால் உங்கள் உடலுக்கு மாலை மரியாதை செய்து உங்கள் படத்தைப் போட்டு தியாக தீபமென்று ஊர் ஊராய் பேசி தனக்கான ஓட்டினை அறுவடை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஈழத்து உறவுகளின் பிணவாடையோடு அரசியல் செய்தவர்கள்தானே இவர்கள்; உங்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கா?

மதுக்கடையை அடித்து நொறுக்கிய உங்களில் எத்துணை பேர் மதுவை தீண்டியதில்லை என்ற விவாதத்திற்குச் செல்ல வேண்டாம். ஆனால் மாணவர்களை குடிகாரர்களாக, பெண்களின் பின்னால் சுற்றுபவர்களாக காட்டுகின்ற திரைத்துறையின் மீது ஏன் உங்களுக்கு அறச்சீற்றம் எழவில்லை. பெண் அரைகுறை ஆடையணிந்து சென்றால் அவள் மீது காமம் ஏற்படுமா என்ற ஒரு கேள்வி எழுப்பிய அதிமேதாவிகள் மதுக்கடை இருப்பதால்தானே குடிக்கிறான் என்று கேள்வி எழுப்பும்போது உங்களுக்கு அவர்கள் மீது ஏன ஐயம் எழவில்லை?

மதுவுக்கெதிரான போராட்டம் என்பது அரசுக்கெதிரான போராட்டமாக,மதுக்கடைகளை உடைத்தெறியும் போராட்டமாக மாறினால் அது அரசியல் போராட்டம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மதுவுக்கெதிரான போராட்டம் என்பது உண்மையில் ஒவ்வொருவரும் மதுவை வெறுக்கும் விழிப்புணர்ச்சியை உண்டாக்குமாறு அமைய வேண்டும்.

மதுக்குடிப்பதை சமுதாயத்தில் அவமதிப்பாக கருதும் நிலை வரவேண்டும். அவர்களை உங்கள் உறவு வட்டத்திற்குள் வைக்காத உறுதிநிலை வேண்டும். உங்களைச் சுற்றி இருப்போருக்கு அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களை மாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.        திரு. சசிபெருமாள் எந்த மதுக்கடையையும் தாக்கவில்லை;மது குடிப்போரின் காலில்தான் விழுந்தார் குடிக்க வேண்டாம் என்று. உண்மையில் அவரின் தியாகத்தை மதிப்பவர்கள் அந்த வழியைத்தான் கைக்கொள்ள வேண்டும்.

திரு. சசிபெருமாள் அலைபேசி கோபுரத்தில் ஏறி நடத்திய போராட்டம் கூட எமக்கு உடன்பாடில்லை; அது காந்திய வழியுமல்ல.  இன்று பலரும் அதைக் கைக்கொண்டு செல்லக்கூடிய வழியைப் படைத்துவிட்டாரே என்று ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. உணர்ச்சிகளுக்கு என்றும் போராட்ட களங்களில் இடம் இருக்கக்கூடாது, தெளிந்த உணர்வோடுதான் அது அமைய வேண்டும்.

அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும் உங்களை வன்முறைப் பாதையில் திருப்ப முயல்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். மாற்றம் என்பது நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்;அது நம் அயலாரை அடைய வேண்டும். அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது நிரந்தரம். கூக்குரலோடு கூடிய கோஷங்களோ, வெறித்தனமாக கண்மூடி செய்யும் வன்முறைச் செயல்களோ உங்களை சாதனையாளர்களாக மாற்றாது.
  

அமைதியாய் நிதானமாய் செய்யும் அறப் போராட்டங்களே உங்களைச் செம்மைப்படுத்தும் என்று உணருங்கள். நீங்கள் கூச்சலிட்டு ஓடியபொழுது உங்களைத் தவிர அந்தப்பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏன் ஒருவர் கூட உங்கள் பக்கலில் நிற்கவில்லை? ஏனெனில் வன்முறையை மக்கள் ஆதரிப்பதில்லை. வன்முறை நிகழ்த்தினால் மட்டுமே போராட்டம் என்று உங்கள் மனதில் பதிய வைத்த அரக்கர்களை உங்கள் மனதிலிருந்து அகற்றுங்கள். மதுவைப்போல் வன்முறையும் சமுதாயத் தீங்கே; அதுவும் அழித்தொழிக்கப்பட வேண்டியதே.

உண்மையில் மதுவை எதிர்த்து போராட நினைத்தால் அரசியல் நிழலை விட்டு ஒதுங்குங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள். அறிவைப் பட்டை தீட்டுங்கள். அமைதியான அறப்போராட்டத்தை மட்டுமே கைக்கொள்ளுங்கள். அறமற்ற எந்த செயலும் உங்களை குற்றவாளிகளாக வரலாற்றில் பதிய வைத்துவிடும் என்ற நினைப்போடு செயலாற்றுங்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத, அவர்களது பரிபூரண ஆதரவு பெற்ற போராட்டங்களே வெற்றி காண இயலும். 

அறம் வளர்த்த தமிழகத்தில் இனி மாணவர்கள் புதிய வரலாறு படைப்பார்கள்; வன்முறையற்ற இனியதொரு சமுதாயம் சமைப்பார்கள்; இனி போராட்ட களங்கள் காந்தியை மட்டுமே அடையாளப்படுத்தும் என்பது என் நம்பிக்கையும், பிரார்த்தனையுமாம்.




சனி, 7 மார்ச், 2015

பெண்மணி என்பவள் கண்மணி


இயற்கையின் படைப்பில் அனைத்தும் உன்னதம்.அது தன் படைப்பில் பல்வேறுபட்ட இயல்புகளை எங்கணும் பரவி வியாபித்து இருக்கச் செய்துள்ளது. ஒவ்வொன்றும் அதன் இயல்பில் மாறுபட்டே, இதில் எது உயர்வு? எது தாழ்வு? அனைத்தையும் இயற்கை ஒன்றென பாவித்தே படைத்திருக்கும். ஒரு நந்தவனம் ரோஜா மலர்களால் மட்டுமே நிரம்பியிருந்தாலும் ஆனந்தம், ஆயினும் அதைவிட அது பலவித மலர்களாலும், பலவித நிறம் மணம் இவற்றால் நிரம்பியிருத்தல் இன்னும் ஆனந்தத்தைக் கூட்டத்தானே செய்கிறது.

விலங்குகளோ, பூச்சிகளோ ஒவ்வொன்றும் ஒருவிதம். அதிலும் ஆண் பெண் இரண்டுக்கும் உடல், குணம் வேறுவிதம். அதனதன் இயல்பில் அவை. இதில் எதை உயர்வென்பது தாழ்வென்பது. வண்ணத்துப்பூச்சி மிக அழகானது. அதுபோல பல பூச்சியினங்கள். எல்லாமே சிறிய உருவிலானவை. மயில் பெரிய பறவை, அழகானது. வண்ணத்துப் பூச்சி மயிலின் உருவிலும், மயில் வண்ணத்துப் பூச்சி அளவிலும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே ரசிக்க இயலும். நேரில் நிச்சயம் சாத்தியமில்லை.

ஆணோ பெண்ணோ அவரவர் இயல்பில் மாறுபட்டே இங்கு உள்ளனர். உடலமைப்பு, குணம் இரண்டுமே இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம். இதில் இரண்டுமே அதனதன் இடத்தில் அதன் இயல்பில் இயங்கும்போதுதானே இயற்கையின் படைப்பு மாறாமல் அதனோடு சுருதி மாறாமல் இயைந்து காண்பதுதானே அழகு. இதில் இரண்டும் சரிநிகர் சமானம்தான் என்று நிறுவவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. சரி ஆண்கள் சமமாகக் கருதுவதில்லை, மதிப்பதில்லை என்றால் நாம் அது அவர்கள் இயல்பு எனப் புறந்தள்ளிவிட இயலாது. ஏனெனில் மனித உயிர்கள் சிந்தனை என்ற ஒன்றைக் கொண்டவை.                                                                                                                                         
உலகம் முழுதும் எப்படியோ, ஆனால் இன்னமும் பாரத தேசத்தில்
குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெண்களிடமே இருக்கிறது. ஒரு ஆணானாலும் அவன் ஒரு பெண்ணுக்குக் குழந்தையே. அவள் தன் மகனை, நாளைய சமூகத்தில் ஆண்மகனாக உலவக்கூடியவனை பெண்மக்களை மதிக்கக்கூடியவனாக வளர்ப்பதில் உறுதி எடுத்துக் கொள்ளலாமல்லவா? இதுகாறும் இருந்த தாய்கள் அப்படி தங்கள் மகனை வளர்க்கத் தவறியவதாகவே எடுத்துக் கொள்வோம், ஆனால் ஒரு குழந்தையை உருவாக்கும் அதிகாரம் இன்னமும் பெண்களிடம் தானே இருக்கிறது.
குடும்பப் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமா, ஆணுக்கு இல்லையா என்றொரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளட்டுமே; நான் வேலைக்குச் செல்கிறேனே. வேலைக்குச் செல்வதில் தவறில்லை. குடும்பப் பொறுப்பு என்னும் அதிகாரத்தை நீ இழந்தால் நாளைய சமுதாயம் மேலும் சீரழிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறாய் சகோதரி. பெண்களை மதிக்கத் தெரியாத ஒரு ஆண்மகன் உருவாகிவிட்டால் அது நாளைக்கு பெண்சமுதாயத்துக்குத் தானே பாதிப்பு என்பதை உணர்ந்து கொள்.

பெண்மையின் மென்மைதான் இயல்பு; அது உன்னதமான ஒன்று. அது உன் பணிகளாலோ, எதன் காரணமாகவோ தொலைந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் மனோசக்தி பெண்மையைப் போல் ஆண்களுக்கு கிடையாது. பதுங்கிய புலி போன்றது பெண்ணின் உள்ளுறை சக்தி. அணுவுக்குள் அடைபட்டிருக்கும் சக்தி போன்றது. அது உள்ளுறைந்து இருக்கும் வரை பல சாம்ராஜ்யங்களை உருவாக்கும் சக்தியாய் திகழும் அது தன் இயல்பை மாற்றும் முகத்தான் சிதறி விடக்கூடாது.

பெண்ணின்றி படைப்பில்லை. ஆண் படைப்புக்கு உறுதுணை அவ்வளவுதான். ஆனால் அந்த படைப்பை முழுமையாய் ஆக்குபவள் பெண்தான். படைப்பு பெண்ணின் மிகச்சக்தி வாய்ந்த இயல்பு. அதனால்தான் படைக்கும் கடவுளைப் படைத்ததும் பெண்ணாய் இந்த தேசம் கருதியது. இந்தப்படைப்பை ஒரு மிகச்சாதாரணமாக பிள்ளைபெறும் இயந்திரம் என்று இயந்திரத்தோடு ஒப்புமைப் படுத்திப் பேசுவது எவ்வளவு பெரிய மடத்தனம். மிக உறுதியாய் நம்புகிறேன் இந்த வார்த்தை முதல்முதலாக எந்த பெண்மணியிடமிருந்தும் வந்திருக்காது;ஏதாவது ஒரு ஆண்தான் இதைச் சொல்லாடியிருக்க வேண்டும்.

பெற்றவளுக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை என்ற ஒரு சொல்லாடலை நினைத்துப் பாருங்கள். அதைப் படைப்பதற்கு அவள் பட்ட சிரமங்கள் பெண்ணைத் தவிர வேறு யாரும் உணரார். ஒரு ஆணால் நிச்சயம் அதை உணர முடியவே முடியாது. ஒரு பெண் தன் இயல்பை ஆணாக மாற்றிக் கொள்ள முயலும்போதும் இந்தத் தாய்மைப் பண்பு சிறிது சிறிதாக விலகத் துவங்கும். மரபணு மாற்றுப் பயிர் போலேத்தான். மரபணு மாற்றத்தை எதிர்க்கும் எவரும் இதை எதிர்க்கத் துணியார். அதிலும் அதிகமாக ஆண்கள் பெண்ணின் சுதந்திரம் பறிபோகுது என்று கூக்குரலிடுவர். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

ஏனய்யா சிந்திக்கத் தெரியாத ஒரு செடியினம் கூட தன் இயல்பிலிருந்து மாறக்கூடாது என்று நினைக்கிற நீங்கள் எங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளச் சொல்வது ஏன் என்று நீங்கள் கேள்வியெழுப்புங்கள். வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தை வீட்டிற்கு விலை கொடுத்து வாங்கிய மற்ற பொருள்கள் போலத்தான்.
பெண்ணினை மதிக்கும் குணம் ஆண்களிடம் அருகிப் போயிருக்கலாம். ஏன் பெண்ணிடம் இது ஏற்படவேண்டும். சகமனுஷியை மதிக்கலாமே? கல்பனா சாவ்லாவை அண்ணாந்து பார்க்கும் நாம் நம் அலுவலகத்தில் பாடுபடும் ஒரு கமலாத்தாளையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்கலாமே. வயலில் வேலை செய்யும் பெண்டிர், சாலைப் பணியில் ஈடுபடும் பெண்டிர், கட்டிட வேலையில் ஈடுபடுபடுவோர் என பாடுபடும் ஒவ்வொரு பெண்டிரும் இங்கு பெண்மணிகளே. அவர்களையும் போற்றுங்கள்.
இந்திய தேசத்தின் இணையில்லா பெண்களை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு துறையிலும் சாதிக்க முடிந்தவர்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சக்தியின் வடிவான நீங்கள் கருணையின் உருவும் நீங்கள் என்பதை மறவாதீர்கள், அன்புக்கு மறுபெயர் நீங்கள், அன்னை, மனைவி, தங்கை, மகள் என பல்வேறு உறவிலும் அன்பினைப் பொழிபவர்கள் நீங்கள். அன்பென்பது உங்கள் இயல்பு. அது உங்களில் பொங்கிப் பெருகத்தான் இந்த உலகம் அன்பென்ற மழையில் நனையும்.

கல்விகள் பலகற்றும் கேள்வி ஞானம் பல அடைந்தும் இன்னமும் உள்ளுக்குள் பயமென்பது ஏன்? உங்களை நீங்கள் உணருங்கள். உங்கள் இயல்புதான் சக்தி வாய்ந்தது. நீங்கள் ஆணின் இயல்புக்குள் புக நினைத்தால் நீங்கள் உங்கள் சக்தியை இழக்க முயல்கிறீர்கள் என்பதை உணருங்கள். நீங்கள் பெண் சிங்கங்களைப் போன்றவர்கள். வேட்டையாடும் சக்தி ஆண் சிங்கத்தை விட பெண்சிங்கத்திற்குத்தான். குடும்பமோ, சமுதாயமோ அதைக் காப்பதும் உருவாக்குவதும் பெண்மையின் இயல்புதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இயந்திரம் போலொரு வாழ்க்கை இனியும் வேண்டாமே என்று முடிவெடுங்கள். அனைத்தையும் இயக்கும் சக்தி கொண்டவர்கள் நாங்கள் என்று நம்புங்கள். சுதந்திரம் என்பது நம் இயல்பை நம் குணத்தை எப்பொழுதும் கொண்டிருப்பதே! அடுத்தவனின் காலணிக்குள் நம் கால்கள் பொருந்தாது. ஆணின் உடைக்குள் பெண்ணினை மறைப்பது அவசியமற்றதே. பெண்ணின் உடையோடு சுதந்திரமாய் வலம் வருதல்தானே சுதந்திரம்? நாம் நாமாய் இருப்பதும் அதுபோல்தானே? இயல்பினை உடைத்தெறிந்து செல்வதல்லவே?  குடிப்பதும், புகைப்பதும் சுதந்திரம் என ஒரு தோழி சென்றால் அவளிடம் தெளிவினை ஊட்டுதல் நம் கடமைதானே? ஆணுக்கு சரிசமம் நாமென்று சிலர் குற்றங்கள் புரிந்திடில் அதை கண்டும் காணாமல் செல்வதா? அது நம் இனமென்று நமக்குள்ளே பாசம்தான் பொங்கிட வேண்டாமா?

ஊரையே மாற்றும் சக்தி உன்னிடம் உள்ளது. உன் சக்தி நீ உணராமல் வாழ்வது நியாயமா? உன் வாழ்க்கை உன்னைச் சுற்றியிருப்போரிடம் நம்பிக்கை உண்டாக்க வேண்டும். உனக்குள்ளே ஏற்படும் நம்பிக்கை ஊருக்கே வழிகாட்டும் உணர்ந்துகொள். உலகிற்கே வழிகாட்டும் நாடாக
பாரதம் ஆகுமா எனில் அது உன்னால்தான் சாத்தியமே அறிந்துகொள். வல்லரசு என்று எத்தனை பேர் பாடினாலும் பெண்ணிங்கு நினைக்காமல் சாத்தியமில்லை. இந்நாடு வல்லரசாகவும் நல்லரசாகவும் ஆக வேண்டுமெனில் பெண்களின் பங்கு அவசியம் என்பதை ஆண்கள் உணர்கிறார்களோ இல்லையோ நீ உணர்ந்து கொள் சகோதரி.

இயற்கையாகவே அழகாய் இருக்கும் உனக்கு செயற்கையாய் ஏற்படுத்தப்படும் அழகெதற்கு? அழகு நிலையங்களில் செயற்கையாய் செய்யும் செயல்களால் உனது இயற்கையான அழகு பாதிப்படையுமே? இயற்கையை அழித்து செயற்கையை புகுத்துவது தாய்மையின் இயல்பல்லவே? தோற்றங்கள் மாறினால் ஏற்றங்கள் வந்திடும் என்கின்ற நினைப்பது வேண்டாமே! உனது பொன்னான நேரம் இந்த நாட்டினை உயர்த்திட பயன்படுமே? சற்றே சிந்தித்துப் பார்.

காதல் என்பது புனிதமானது; அது உனக்குத் தெரிந்திருக்கும். ஆனால் காமத்தோடு திரியும் ஆண்மகனுக்கு அது புரிய நாளாகும். அறியாத புரியாத நபரிடம் அவசரமாய் காதலது வேண்டாமே! வாழ்க்கையில் காலூன்றி நீ நிற்கையில் நிதானமாய் உனக்குள் ஏற்பட்டால் அப்பொழுது சிந்திக்கலாமே அது பற்றி. உன் பெற்றோர்கள் சம்மதம் தந்தால்தான் அந்த காதலும் உன்னதம் என்பதைப் புரிந்துகொள். படைப்பின் வலியறிந்த உன் தாய் மீண்டும் ஒரு வலியடைய பெற்றோரைத் துறக்கின்ற காதலது வேண்டாமே? ஒரு இன்பம் அடுத்தவரின் வலியில் உருவாக வேண்டுமா? நீ பெற்றோராய் மாறும்போது பிள்ளைகள் சம்மதம் தந்தால்தான் திருமணம் என்பதை உணர்ந்து செயல்படு.

உனக்கு உயிர் தந்த பெற்றோரை உதறித் தள்ளிட ஒரு நொடி போதும். ஆனால் மீண்டும் சேர்ந்திட பல வருடங்கள் துடித்திட்ட பலபேரை நானறிவேன். சினிமாவும், தொலைக்காட்சியும், எழுத்தாளர்களும் தங்களின் கற்பனையில் வடிப்பவை அவை கற்பனைக் காதலே. திரையில் தோன்றி மறையும் பிம்பங்கள் போலே அவை. உண்மையின் வலியை உரைத்தால் ரசிக்காது விற்காது என நினைத்து அவர்கள் செய்யும் மாயவியாபாரம் கண்டு ஏமாந்துவிடாதே.

ஜாதகம் ஜோசியம் இவையெல்லாம் சாதகமான சூழ்நிலைக்காக மாறிக்கொள்வதை உணர்ந்துகொள். வாழ்க்கையில் உடன் வருபவன் நம்பிக்கை கொள்பவனாக, நல்லவனாக இருக்க வேண்டும். பணம் பொருள் இவை திருமணத்தை நிச்சயிக்கும் காரணிகளாக இருக்க வேண்டுமா என யோசி. நல்ல வரன் என்பது படிப்பு, பணம், அந்தஸ்து எனக் கொண்டா, நல்ல குடும்பம், நல்ல மனது, நல்ல குணம் என்பதைக் கொண்டா என்பதைச் சற்றே சிந்தித்துப் பார். உனக்காயினும் சரி நாளை உன் மக்களுக்காயினும் சரி எது நல்ல வரன், நல்ல இடம் என்பதை சற்றே துலாக்கோலில் நிறுத்துப் பார்.

புலியினை முறம் கொண்டு விறட்டினாள் என் தமிழ்நாட்டு மறத்தி என சங்கப் பாடல் கூறியது. இன்றைய சினிமாப் பாடல்கள் அவளை வெறும் கனவுக் கன்னியாக, காமப் பொருளாக சித்தரிக்கின்றன. அன்பில்லாதவளாக, அறிவில்லாதவளாகக் காட்டுகின்றன. அவற்றை புறந்தள்ளு.உன் முன்னோரின் உண்மையான வாழ்க்கையையும், சக்தியையும் அறிந்து கொள். அவர்களின் வழி வீறு நடை போட முடிவெடு.



படைக்கும் சக்தி கொண்ட நீ தெய்வத்துக்கு நிகரானவள். ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு புதிது புதிதாக முளைக்கும் சாமியார்களுக்கு முன் நீ உயர்வானவள். அவர் காலடி வீழ்ந்து உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே. கண்டவர் காலில் வீழ்வது படைக்கும் சக்தியான நீ வீழ்வது பாவம் என்று அறிந்து கொள். ஆஸ்ரமங்கள் தேடி அலைவதால் எந்த பயனுமில்லை. உன் இயல்பே தெய்வீகமானது, உனது முன்னோர் தர்மப்படி வாழ்வதைவிட ஆஸ்ரமங்கள் மிகப் பெரும் தர்மத்தை தந்துவிடப் போவதில்லை. நல்ல உள்ளங்களை வணங்குதல் தவறில்லை, புற்றீசல் போல முளைத்து வருபவர்களைக் குறித்துத்தான் எச்சரிக்கை.

இன்று ஊடகங்கள் தோறும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பெண்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்று உன்னை பயந்தவர்காளாகக் காட்ட முற்படுகின்றனர். உன்னைப் போல் நல்ல தாய் வளர்த்த ஆண்மக்கள் உன்னோடு பாதுகாப்பாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தளரவிடாதே. உன்னுள் பொதிந்திருக்கும் வீரமதை தொலைத்துவிடாதே. வீறு கொண்டு எழுந்துவிடு; இங்கு உலகைக் காக்க உன்னைத் தவிர வேறு ஆள் இல்லை விழித்துவிடு.

இன்று நம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படை தொடர்ச்சியான வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அவர்களின் சிந்தனைகள் நம் கலாசாரத்தை சீரழித்தது, அவர்கள் அடித்த கொள்ளை நம்மை வறுமையில் தள்ளியது. சுதந்திரத்திற்குப் பின்னும் இந்த அரசு சரியான ஆளுமைகளின் கைகளில் இல்லாமல் போனதால் வறுமையின் பிடியிலிருந்து முழுதாய் மீளவில்லை. இப்படி வறுமையின் கோரப் பிடியிலுள்ள பல குடும்பங்கள் வன் எண்ணம் கொண்ட வாரிசுகளை தங்களின் விருப்பம் இல்லாமலே உருவாக்கிவிடுகின்றன. அப்படிப்பட்டவர்களால் பாலியல் பிரச்சினைகள் ஒரு புறம். பணம் படிப்பு இருந்தாலும் வக்கிர புத்தியுடன் அலையும் கலாசாரம் இல்லாத அறியாத அறிவிலிகளினாலும் பாலியல் தொல்லைகள்.
இவை அனைத்திலிருந்தும் மீள்வது என்பது முழுமையான கல்வி, நமது பெருமை, கலாசாரம் உணர்தல் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தல் என்பதன் மூலமே அடையமுடியும். கல்வி ஒன்றே வறுமையை விரட்டும்.
எனவே கல்வி என்னும் வேள்வி எல்லாப் பெண்களுக்கும் கிடைக்க உதவுங்கள். பெண்கள் கல்வியறிவு அடைந்தால் மட்டுமே அனைத்தையும் சீராக்க முடியும்.  



பெண்மணிகள் கண்மணிகள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்களை தாய்மார்கள் உருவாக்க வேண்டும். சமுதாயத்தையும் தர்மத்தையும் காத்து வரக்கூடிய ஒரே சக்தி பெண்கள்தான். தாய்மையே உருவான என் குருவடி பணிந்து பெண்கள் தன் சக்தியினை உணர்ந்து இந்த பாரதத் தாயை பாரினில் உயர்த்திட அருள் தர வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.