செவ்வாய், 21 அக்டோபர், 2014

சுசீலா

      நன்னாக் கேட்டுக்கோடா வரது ! இந்த பத்து சொன்னா சொன்னதுதான். இதெல்லாம் மீறி செய்யணும்னு நெனச்சா எங்க உறவு ஜென்மத்துக்கும் இல்லைங்கிறதை மறந்துடாதே! அதோட தலைமுழுகிடுவேன் அவ்வளவுதான். பொரிந்து தள்ளிய பத்மநாபன் படாரென்று தொலைபேசியைத் துண்டித்தார்.

      ஏன்னா என்னாச்சு? யாருன்னா போன்ல? ஏன் இப்படி கோபப்படறேள்? படபடத்தாள் சரோஜம்மாள்.

      எல்லாம் இந்த வரதுதான். அவன் பையனுக்கு வேற வரன் பார்த்துண்டிருந்தானில்லையோ? பசுவும் கன்னா பார்த்திருக்கானாம். கொஞ்சம் கூட வெக்கமில்லாம சொல்றான். மடப்பய மடப் பய! சுத்த வெக்கங்கெட்ட ஜென்மம்!

      ஏந்தான் இப்படி புத்தி போறதோ உங்க தம்பிக்கு? புத்தி கித்தி ஏதும் கெட்டுப் போயிடுத்தா? ஊர்ல இல்லாத வழக்கமால்ல இருக்கு. உங்க தம்பி ஆம்படையாளாவது அவர்கிட்டே சொல்லப்படாதா? அவா என்ன சொல்றாளாம்? கேள்விகளை அடுக்கினாள் சரோஜா.

      அவளுக்கும் அவா புள்ளையாண்டானுக்கும் இதில சம்மதந்தானாம். பாச்சு ஆபீசுல எல்லாரும் அவனைப் பெருமையாப் பேசனாளாம். இப்படிப்பட்ட ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறதுக்கு பெரிய மனசு இருக்குன்னு சொல்றதை விட நல்ல மனசுன்னு சொல்லணுமாம். எல்லாம் கலிகாலம், அவாள்ளாம் ஆயிரம் சொல்லுவா; நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் என்ன சொல்றதுன்னு நாம பாக்க வேணாமா?

      எந்த ஊராம் பொண்ணுக்கு? குழந்தைக்கு என்ன வயசாம்? ஏன் அவ ஆம்படையானுக்கு என்னாச்சாம்? விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற குறுகுறுப்பில் கேள்விகளை வீசினாள் சரோஜா.

      கல்லிடைக்குறிச்சிக்குப் பக்கமாம். குழந்தைக்கு இன்னும் மூணுமாசம் கூட ஆகலையாம். ஆக்சிடெண்ட்ல தவறிட்டானாம். புக்காத்துல வேற யாரும் இல்லையாம். அதனால அம்மா ஆத்துக்கே திருநெல்வேலிக்கு வந்துட்டாளாம்.

      கோயம்புத்தூரில் தனது சேரில் சோகமாக சரிந்து உட்கார்ந்திருந்தார் வரதராஜன். உள்ளே நுழைந்த மனைவி அனுராதாவின் மடிசார் சரசர ஒலி அவரை சற்றும் சலனப்படுத்தவில்லை. அவரது அண்ணா கோபமாகப் பேசிய வார்த்தைகள் அவரது மனதை தைத்துக் கொண்டிருந்தன.

      அனுவின் கண்கள் கணவனின் நிலையை எடை போட்டன. ஏதோ ஒரு தாக்குதல் மனதில் நிகழ்ந்திருக்கிறது என்பதை நன்றாய்ப் புரிந்து கொண்டாள். ஏன்னா இந்தாங்கோ ராமர் கோயில் பிரசாதம். எல்லாப்பிரச்சினையும் பகவானுக்குத் தெரியும்னா? அவனுக்குத் தெரியாதா எதை எப்ப செய்யணும்னு. ஏன் மனசைப் போட்டு அலட்டிக்கிறேள்? இப்ப என்ன ஆயிடுத்துன்னு இப்படி சோகமா உட்கார்ந்துண்டிருக்கேள்?

      இல்லடி, நம்ம திருநெவேலி சாம்பு சொன்னாரில்லையா, ஒரு வரன். அதைப் பத்தி அண்ணாகிட்டே சொன்னேன். இதென்ன ஊர்ல இல்லாத வழக்கமா இருக்கு, இப்படியெல்லாம் பண்றதா இருந்தா எங்க உறவே இல்லேன்னு நெனச்சுக்கோன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டும்கிற மாதிரி சொல்றான். இப்ப என்னடி பண்றது? நம்ம பையன் நிலைமையைப் பார்க்கவே சகிக்கலை. பார்த்து பார்த்து கட்டி வைச்ச பொண்ணு இரண்டே நாள்ல இப்படி பகவான்கிட்டே போய்ச் சேர்ந்திடுவான்னு யாருக்குத் தெரியும்?

      இந்தக் காலத்தில முத கல்யாணத்துக்கே பொண் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு. சாம்பு சொன்னது நல்லததான் பட்டது. அந்த பொண்ணுக்குன்னு யாரும் இல்லை. வயசான அம்மாதான். அவளும் எத்த்தனை நாளைக்குத் துணைக்கு. அவ குழந்தைக்கும் மூணு மாசம் கூட ஆகலை. இப்பவே கல்யாணம் பண்ணி வைச்சுட்டா, நாளைக்குப் பின்னால அப்பான்னு இவங்கூட எந்த சங்கோஜமும் இல்லாம ஒட்டிண்டிடும். இன்னும் நாளாச்சுன்னா, குழந்தைக்கு முகம் பரிச்சியம் ஆக ஆரம்பிச்சிடுத்துன்னா சிரமமில்லையோ?

      நம்ம புள்ளையாண்டானுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும்; அந்த பொண்ணுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும். ஆனா அண்ணாக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்கிறதே; பகவான் என்ன வழி காட்டப் போறாரோ தெரியலையே நேக்கு.

      நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. பகவான் நம்மளைக் கைவிடமாட்டார். நிச்சயம் நல்ல வழி காண்பிப்பார். உங்க அண்ணாவே இதற்கு சம்மதம் சொல்லுவார் பாருங்கோ. நீங்க கவலையை விட்டுட்டு சித்த ராமர் கோயில்ல போய் உட்கார்ந்துட்டு வாங்க. அவங்கிட்டே பாரத்தைப் போடுங்கோ.

      காஞ்சிபுரத்தில் நடந்த கோபப்பேச்சுக்களை பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்தாள் பத்மநாபனின் மகள் வயிற்றுப் பேத்தி காயத்ரி. தாய் சுசீலாவின் கைகளில் பிணைந்து கொண்டிருந்தன அவளது பிஞ்சு விரல்கள்.

      மெதுவாகத் தாயின் கையிலிருந்து விடுபட்ட காயத்ரி தாத்தாவின் அருகில் சென்றாள். தாத்தா என அழைக்க மெதுவாகத் திரும்பினார் பத்மநாபன். என்னடா காயூ எனக் கொஞ்சலோடு கேட்டார். அவரது கோபம் பேத்தியின் குரலைக் கேட்டதும் சற்றே தணிந்தது.

      குழந்தையோட இருக்கிற ஒருத்தரை மாமா கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா தாத்தா? என காயத்ரி கேட்க. காயூ பெரியவாகிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது என சுசீலா பதற. முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள பேச்சைப் பாரு என சரோஜா சீற, என்ன பதில் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார் பத்மநாபன். காயத்ரி தற்பொழுது அவரது கைகளைப் பற்றிக்கொண்டிருந்தாள்.

      இல்லடா குழந்தை; நமக்குன்னு சில பழக்கவழக்கங்களை நம்ம பெரியவா சொல்லி வச்சிட்டு போயிருக்கா. அதையெல்லாம் நாம விடாம கடைபிடிக்கணும். அப்பத்தான் பகவான் கடைசி காலத்துல தங்கிட்டே சேத்துப்பார். நம்ம குலதர்மம் மீறப்படாதுடா கண்ணா என்றார்.

      காயத்ரியின் வலது கை மெதுவாக ரேழியின் மேலே சட்டத்தில் மாட்டியிருந்த பழைய படத்தைக் காட்டி அது யார் தாத்தா என்றாள். அது எங்க தாத்தா சடகோபன். அதுக்குப் பக்கத்துல யாரு தாத்தா? அது எங்கப்பா ராமானுஜம். அவா ரெண்டு பேரும் குடுமி வைச்சுண்டிருக்கா; பஞ்சகச்சம் கட்டிண்டிருக்கா ஏன் தாத்தா; அதெல்லாம் நம்ம குடும்ம வழக்கம்டி கண்ணு. எங்க தாத்தா பெரிய வேத வித்வான் தெரியுமோல்லியோ? எங்க அப்பாவும் ஒண்ணும் குறைஞ்சவரில்லே. சம்ஸ்க்ருதத்திலே புலி.

      அப்புறம் ஏன் தாத்தா, நீங்க குடுமி வைச்சுக்கலே, பஞ்சகச்சம் கட்டலே, வேதம் படிக்கலே? பதில் சொல்ல முடியா கேள்விகள் கோபத்தைக் கண்களில் கக்கவைத்தது பத்மநாபனுக்கு. குழந்தையின் கைகளை உதறினார். பெரியவாகிட்டே பேசுற பேச்சைப்பாரு என்று சீறிய சரோஜாவின் கைகள் காயத்ரியை அலற வைத்தது. கண்களில் கண்ணீர் முட்ட அம்மா சுசீலாவின் மடியில் புதைந்தாள். சுசீலா எதுவும் பேச முடியாதவளாய் குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
     

      இத்தனையையும் பங்கஜம்மாளின் பகபகவென்ற சிரிப்பொலி சற்றே திசை திருப்பி விட்டது. எதுக்கும்ம்மா இப்ப இப்படி சிரிக்கிற சீறினார் பத்மநாபன். சரோஜாவின் முகம் அஷ்டகோணலாகியது. எந்த பாதிப்பும் இல்லாதவள் போலிருந்தாள் சுசீலா. அவள் கை குழந்தையின் அடிவாங்கிய உடலை தடவிக்கொண்டிருந்தது.

      போடா முட்டாப்பயலே! எங்கொள்ளுப்பேத்தி கேட்ட கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியல இல்ல. திருவளத்தான் மாதிரி முழிச்சிட்டு நிக்கற. குலதர்மம் சாஸ்திரம்னு பேசற. உங்கப்பா தாத்தா செஞ்சதுல நீ எத்தடா செஞ்ச. லோக க்ஷேமத்துக்காக அவா நித்யம் மூணு வேளை சந்த்யாவந்தனம் பண்ணாளே நீ பண்ணினியா? வேதம் படிச்சாளே நீ படிச்சியா? வெளியிலே எங்கேயும் சாப்பிடாம ஆச்சாரமா இருந்தாளே நீ அப்படி இருந்தியா? அவா பண்ணினது எதையும் நீ பண்ணல. ஆனா அவா பண்ணின தர்மத்தை என்னவோ நீ மட்டுமே கட்டிக் காப்பத்தற மாதிரி பெருமை பீத்திக்கிறே!

      சுசீலாவைப் பார்த்தியா? அவ ஆத்துக்காரர் போனதும் குழந்தையோட இங்க வந்துட்டா? வீட்டிலேயே அடைஞ்சு கிடக்குறா. எப்படி இருந்த குழந்தைடா அவ. இப்ப அவ மூஞ்சியை என்னிக்காவது பார்த்திருக்கியா? அவ படற கஷ்டம் பத்தி என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கியா? ஏதோ நீ உண்டு ஒன் வேலை உண்டுன்னு ஓடிண்டிருக்கே? ஒன் ஆத்துக்காரி சமையல் உள்ளேயும் நீ தாழ்வாரத்துலேயும் ஒட்கார்ந்திண்டிருக்கீங்க. இங்க ஒருத்தி குழந்தையோட தன் கஷ்டத்தை யார்கிட்டே சொல்றதுன்னு தெரியாம முழிச்சிண்டிருக்காளே அவளைப் பத்தி என்னைக்காவது நினைச்சிப் பார்த்திருக்கேளா?

      இப்ப கூட்டுக்குடும்பங்கிறதே இல்லாமப் போச்சு. ஒங்கப்பா காலம் வரைக்கும் இங்க ஆத்துல எல்லாரும் ஒண்ணா இருந்தோம். இன்னைக்கி நீ ஒரு இடம். ஒந்தம்பி ஒரு இடம். ஒம்ப்சங்க ஒரு இடம்னு ஆளாளுக்கு அவாவாளுக்கு சௌகர்யமா எங்கெங்கியோ போயிருந்துடறேள். நாளைக்கு ஒங்காலத்துக்கு அப்புறம் சுசீலாவும் கொழந்தையும் எங்கடா போயிருப்பா? ஒம் பொண்ணு கஷ்டத்தையே பார்க்க முடியாத நோக்கு ஊரான் பொண்ணோட கஷ்டம் புரியுமா?
     

      சாஸ்திரம் சம்ப்ராதயங்கிறது நம்ம நல்லதுக்காகத்தானே ஒழிய வெறுமே வறட்டுத்தனமா கத்திண்டிருக்கிறதுக்கில்ல. அதை மட்டும் நன்னா புரிஞ்சிக்கோ. வேதம் சத்யம்டா அது மாறாது. ஆனா சாஸ்த்ரம் சம்ப்ரதாயங்கிறது  ஒவ்வொரு காலத்துலேயும் சூழ்நிலைக்கு ஏத்தாப்பல மாத்தங்களை உள்ளே இழுத்துக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானேன்னு சொல்லியிருக்கா பெரியவா. லோகத்துக்கு நன்மை தரக்கூடிய விஷயங்களை அப்பப்ப மாத்திக்கிறது தப்பில்ல. ஆனா உன்ன மாதிரி லோகக்ஷேமத்துக்கான சந்த்யாவந்தனம்கூட பண்ணாம இருக்கிறதுதான் மகாபாபம்.
     
      ஒம் பொண்ணுக்கு நல்லது செய்யலை. பரவால்ல. இன்னொரு பொண்ணுக்கு நடக்க இருக்கிற நல்லதைத் தடுக்காதே. அந்த பாபம் இன்னும் பல தலைமுறைக்கு ஒன் வம்சத்தை பாதிக்கும். ஒன் பசங்களும் பேரக்குழந்தைகளும் நன்னா இருக்கணும்னா ஒன் தம்பியைக் கூப்பிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச்சொல்லு. முடிஞ்சா ஒம் பொண்ணுக்கும் ஒரு வரனைப் பாரு.

      பங்கஜம்மாளின் வார்த்தைகள் சுரீர் சுரீரென்று அடிக்க பத்மநாபனும் சரோஜாவும் பேசமுடியாமல் விக்கித்து நின்று கொண்டிருந்தார்கள். போடா போய் போனைப் போட்டுப் பேசு என பங்கஜம்மாள் மீண்டும் உறும அது பத்மநாபனை உந்தித் தள்ள அவரது கைவிரல் தானாகத் தம்பியின் தொலைபேசி எண்களை தட்ட ஆரம்பித்திருந்தது.