திங்கள், 9 டிசம்பர், 2013

அரையிறுதி - 2013, இறுதிப்போட்டி- 2014


        ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபைத் தேர்தலை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் 2014 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே சித்தரித்தன. அதற்கேற்றாற்போல தமிழகத்தில் உள்ள கட்சிகளோடு கூட்டணி பற்றிய முடிவை பாஜக தள்ளிவைத்தது. பாஜக தற்போது கடேரிக் கன்றல்ல, சினைப் பசு. கன்று ஈனும் காலத்தில் எவ்வளவு கறக்கும் என்று அனுமானங்கள் துவங்கிவிட்டன. இறுதிப்போட்டியில் wild card round மூலமாக இத்தனை நாள் ஆட்சியில் இருக்கும் காங்கிரசும் தகுதிபெற்று போட்டியிடக் காத்திருக்கிறது.
        தற்பொழுது வெளிவந்துள்ள நான்கு மாநிலத் தேர்தல்கள் சொல்வது என்ன? முதலாவதாக தலைநகர் தில்லியில் நடந்தது என்ன? திரு.அரவிந்த் கேஜ்ரிவாலின் ஏழை மக்கள் கட்சி தனது முதல் போட்டியிலேயே அரைஇறுதிப்போட்டியில் தேவையான மதிப்பெண்களைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஏன் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்த பொழுது தில்லி மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலில்
மட்டும் ஏழை மக்கள் கட்சி போட்டியிட்டது? இந்த கேள்விக்கான விடை அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கலாம். தில்லியில் உள்ள வாக்காளர்கள் அதிகம் படித்த வாக்காளர்கள். கடந்த வருடங்களில் அன்னா ஹசாரே துவக்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பாதிப்பு தில்லி முழுதும் பரவிக்கிடந்தது. ஆனால் இந்த நிலைமை அதன் அண்டை மாநிலங்களிலோ அல்லது தேர்தல் நடைபெற்ற எந்த மாநிலங்களிலும் காணப்படவில்லை. இந்த மாநிலங்களில் போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றிக்களிப்பினைப் போல் அங்கும் நடந்திருக்கும் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை.
        எல்லோரும் வைக்கும் குற்றச்சாட்டு அரவிந்த் கேஜ்ரிவால் காங்கிரசின் கைப்பாவை. அதனால் ஏழை மக்கள் கட்சியினால் பலன் அடையப்போவது காங்கிரஸ் என்றே நானும் எண்ணி வந்தேன். அது உண்மையா அல்லது வடிகட்டின பொய்யா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனாலும் தில்லி மக்கள் முழுவதுமாக ஏழைமக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விடவில்லை. மேலும் காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் வென்றிருக்கிறது. அனைவரும் பார்ப்பது காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதனையே. அது இன்னும் முழுவதுமாக நிராகரிக்கப்படவில்லை யாரும் நினைவில் கொள்ளத் தயாராக இல்லை.அரவிந்த் கேஜ்ரிவால் இதனைக் கணித்திருக்கக் கூடும். அதனால்தான் அவரது கட்சி தில்லியில் மட்டுமே போட்டியிட்டிருக்கக் கூடும்.
        இந்தத் தேர்தலில் மோடி அலை வீசிவிட்டது என்று பெருமிதம் கொள்ளும் பாஜகவினர் சுலபமாக aap யின் வெற்றியை மறக்கடிக்க முயல்கிறார்கள். மனதுணர்ந்து சொன்னாரோ, அல்லது இப்பொழுதுதான்
புரிந்து கொண்டாரோ ராகுலின் பதில் இந்த விஷயத்தில் சரியான ஒன்றாகவே நான் காண்கிறேன். சாதாரண மனிதனைக் கவனிக்கத் தவறியதுதான் காங்கிரசின் தோல்விக்கு காரணமென்றும், ஆம் ஆத்மியின் வெற்றிக்கு அது சரியாகச் சாதாரண மனிதனைச் சென்றடைந்ததே என்றும். இதனைப் பாஜக புரிந்து கொண்டதா அல்லது புரியாத மாதிரி இருக்கிறதா?
        இங்குமே தமிழகத் தலைவர்கள் சாதாரண மனிதனுக்கான தேவைகளைப்பற்றி சிந்திப்பதேயில்லை. பாஜகவினரை எடுத்துக்கொண்டால், சிறுபான்மை, மதமாற்றம் அதனால் ஏற்படும் விளைவுகள் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ஈழப்பிரச்சினையை அதிகம் கையிலெடுத்திருக்கிறார்கள். ஆனால் அதில் சரியானதொரு தீர்வு என்னவாயிருக்க வேண்டும் என்று இவர்களால் சொல்ல இயலாது. ஏனெனில் பெரும்பாலான தமிழ் இயக்கங்களின் எண்ணத்திற்கு மாறுபாடான ஒரு கருத்தினை முன்வைக்கக்கூடும். இப்பொழுதுமே காதில் விழும் தகவல்கள் பாஜக திமுகவோடு கூட்டணி அமைக்க முன்னாள் தலைவரும், இன்னாள் தலைவரும் முயற்சிப்பதாகக் கூறுகின்றன. சாமான்ய மனிதன் முதற்கொண்டு பலரும் ஈழத்தமிழர் விவகாரம் முதற்கொண்டு மிகப்பெரிய ஊழல்வரை காங்கிரசை எவ்வாறு காண்கிறார்களோ அவ்வாறே திமுகவையும் காண்கின்றனர். எனக்குத் தெரிந்த இந்த செய்தி பாஜக தலைவர்களுக்குத் தெரியாதா? இது அவர்கள் சாதாரண மனிதர்களைப் பற்றி நினைக்கத் தெரியாத ஒரு மேல்தட்டு மக்கள் என்ற உணர்வை அல்லவா ஏற்படுத்துகிறது.
        ஏழை மக்கள் கட்சி பெற்றுள்ள வெற்றி அவர்களுக்கு மட்டுமல்ல மாற்று அரசியலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஓட்டுப் போடாமல் இத்தனை நாளும் வீட்டில் உறங்கியவர்கள் இனி ஓட்டுப்போட முன்வரலாம். நோட்டோவையும் பயன்படுத்தலாம். ஏழைமக்கள் கட்சி புதிய அத்தியாயத்தை துவங்கியிருக்கிறது. பிரபலங்கள், ஜாதி, பணபலம், ஆள்பலம் இதனைத்தாண்டி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனையெல்லாம் யோசித்தாவது பார்த்திருப்பார்களா? தமிழகத்தில் இந்த நிலைப்பாடு சரியானதாக இருக்காது என்று யாராவது சொன்னால் பின்னால் இழப்பு அவர்களுக்குத்தானே ஒழிய எனக்கல்ல.
        ஏழைமக்கள் கட்சியின் வெற்றி மற்ற அரசியல் கட்சிகளையும் சிந்திக்க வைத்தால் நல்ல வேட்பாளர்கள் கிடைக்கலாம். நல்ல அரசியல் மாற்றம் ஏற்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் தேர்வில் ஏழைமக்கள் கட்சியை வழியில் தேர்வு செய்வது என்பது மிகச் சிரமமான ஒன்றே. ஏனெனில் இங்குள்ள தலைமைகளுக்கு உண்மைத் தொண்டன் பெயரே நினைவுக்கு வராதே! தொகுதியில் எந்த ஜாதிக்கு செல்வாக்கு, எந்த மதத்தினர் அங்கு அதிகம் உள்ளனர் என்ற எண்ணம்தானே வரும். தமிழக பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல என்றே நினைக்கிறேன். மோடி எங்கோ இருக்கப்போகிறார். இங்கு எனக்கான பிரதிநிதியாக யார் இருக்கப் போகிறார் என்பது ஒவ்வொரு சாமான்யனின் எண்ணமாக இருக்காதா? அதற்கு மதிப்பளிக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமையல்லவா?
        ராஜஸ்தானைப் பொறுத்தவரை ஊழலும் காங்கிரஸ் எதிர்ப்பும் பாஜகவிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. மோடி அலை அதற்கு உதவியிருக்கும். ஆனால் பெரும்பங்கு என்பது மறுக்கக்கூடிய ஒன்றாக அமையும். ஏனெனில் மத்தியப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றி என்பது சிவராஜ்சிங் சௌகானின்
நேர்மையான ஆட்சிக்கு கிடைத்தப் பரிசு. இதற்கும் மோடி அலை என்று சொன்னால் சிவராஜ் சௌகானின் ஆட்சித்திறமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகிவிடும். சத்தீஷ்கரில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலை என்று சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் பெற்றுள்ள இடங்கள் அதிகமாக நக்சலால் பாதிக்கப்பட்ட இடங்கள். இங்கு சட்டம் ஒழுங்கும், பழங்குடி மக்களுக்கு அதிக நன்மையும் சரிவர கிடைக்கப் பெற்றிருந்தால் அவர்கள் பாஜகவிற்குத்தானே ஆதரவளிப்பார்கள். தோல்வியை மறைக்க வேண்டுமானால் மேற்கண்ட வாதம் சரியாக இருக்குமே ஒழிய உண்மை அதுவல்ல. மக்களவைத் தேர்தலுக்குள் மாற்றங்கள் ஏற்பட்டால் மக்கள் மனங்களிலும் மாற்றம் ஏற்படும்.
       


        பாஜக மோடி அலை என்று கூறுவதன் பின்னணி என்ன? மோடியின் நிர்வாகத் திறன், மாநிலத்தின் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு நிலைமை எனும்போது அதுதானே மாநிலத்தேர்தல்களில் பிரதிபலிக்கும். தில்லி மக்களுக்கு பாஜகவின் மீது முழு நம்பிக்கை வரவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இங்கு சாமான்யனின் தேவை என்ன அதனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை அமைந்தால் அது அந்தக் கட்சி வெற்றி பெற வழிவகுக்கும்.
 இன்றைய முதல் தேவை, உணவு, இருப்பிடம், வேலைவாய்ப்பு போன்றவைதானே ஒழிய தேசப்பாதுகாப்பு, மதம், கோயில் இவைகளைப்பற்றி சாமான்ய மனிதன்நினைக்கப்போவதில்லை. அவனுக்குத் தேவையானதை கொடுத்தபின்பு மற்றவற்றைப் பேசினால் மனதில் நிற்கும். பசித்தவனுக்கு உணவுதான் வேண்டுமே ஒழிய கோமேதகமோ வைரமோ அல்ல.
        என்னுடைய ஆசை என்னவெனில் தில்லியில் பாஜகவும், ஏழை மக்கள் கட்சியும் கூட்டாட்சி அமைத்தால் மிக நன்றாக இருக்கும். ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை தர இது சாத்தியமாகுமா? அதனை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
        இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று காங்கிரஸ் பாஜகவினை மதவாதக்கட்சி என்று தூற்றியதை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். அது மட்டுமல்ல காங்கிரசின் செக்யூலரிசம் என்ற வார்த்தை தோல்வி கண்டுள்ளது. அதற்குக்காரணம் பயன்படுத்துச் சொற்களுக்கும் உண்மை நிலைக்குமுள்ள வேறுபாடே என்று எண்ணுகின்றேன். இதனை பாஜக எப்படி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்போகிறது? இங்கு முகநூலில் பாஜக சார்பாக அதிகம் பதிவிடுபவர்கள் அதற்கு மதச்சாயம் பூசுவதில் மும்முரமாகச் செயல்படுகிறார்கள். இதனை எப்படி அதன் தலைவர்கள் கைக்கொள்ளப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தமிழகத்தில் இன்னும் தன் ஆதரவாளர்களை முழுவதுமாக சரிவரப்பயன்படுத்தாத பாஜக கூட்டணி விஷயத்தில் சறுக்கினால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை மறந்தவர்களாவார்கள்.
        இன்னும் ஏழை மக்கள் கட்சி தன் திட்டங்களை செயல்படுத்த நிறைய நேரமிருக்கிறது. அதற்கு தில்லியின் அளவு ஆதரவு இல்லையென்றாலும் ஓரளவு சாதிக்க முடியும் என்றே எண்ணுகின்றேன். மோடி அலை இவர்களைக் கரையேற்றுமா அல்லது இவர்கள் அதற்கு எதிராக கடலில் மூழ்குவார்களா பொறுத்திருந்து பார்ப்போம். யார் இறுதிப்போட்டியில் வெல்லப்போகிறார்கள்? மக்கள் வெல்ல வேண்டும் என்று விரும்புகின்றேன்.



சத்யமேவ ஜயதே ! வந்தே மாதரம் !









செவ்வாய், 24 செப்டம்பர், 2013

அன்பு மகளுக்கு,

அன்பு மகளுக்கு.,,,
        உன்னோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இற்றைச் சூழலில் நமது தேசம் பலவித தாக்குதல்களால் பலவீனமடைந்து இருக்கிறது. அந்த நிலையிலிருந்து அதனை மீட்டெடுக்க இளைய சமுதாயமும், இனி வரும்சமுதாயமும் முயன்றால் மட்டுமே இயலும் என எண்ணுகிறேன். நான் சொல்லும் கருத்துக்களை நீ சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுத்து செயலாக்க வேணுமாய் விரும்புகின்றேன். ஏனெனில் எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவதென்பதிழுக்காம், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்றெல்லாம் வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கிறான்.
        இங்கு எல்லா கருத்துக்களும் நீ விரும்புகிறாயோ இல்லையோ, அது உண்மையற்றதாய் இருந்தாலும் உன் மீது திணிக்கப்படுகிறது. ஆங்கிலம் மட்டுமே அறிவென்பது அதனைப்போன்ற ஒன்று. ஒரு மொழி என்பது நம்முடைய எண்ணங்களை அடுத்தவரோடு பகிர்ந்துகொள்ள பயன்படுவது. உன் எண்ணம்தான் அறிவைத் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய மொழி அல்ல. தாய்மொழி, இது உன் தாய் உன்னைக் சின்ன சிசுவாக கையில் ஏந்திய காலத்தே தன் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உன்னோடு உறவாடிய மொழி. உன் உறவுகளனைத்தும் அந்நேரத்தே அம்மொழியில் மட்டுமே உறவாடத் தொடங்கியிருக்கும். நீ இப்புவியில் பிறந்த காலத்தே உனக்கு முதலில் அறிமுகப்படுத்த ஒன்று. அதன்பின் இன்று நீ படிக்கின்ற காலத்தே எத்தனையோ மொழிகள் அறிமுகமாகியிருக்கலாம். ஆனால் முதன்மையானது என்றால் அது உன் தாய் உனக்குக் கொடுத்த தாய்மொழிதான். அதிலும் நம் தமிழ் உலகத்து மொழிக்கெல்லாம் முதலானது, எனவே இப்பொழுது நீ எப்படி அதனோடு உறவாடுகிறாயோ அதைத் தொடர்ச்சியாக செய். அறிவென்பது மொழியிலல்ல அது உனது உயிர், உணர்வு என்பதை உணர்ந்து கொள்.
        அடுத்ததாக நமக்கென்று ஒரு பண்பாடு, ஒரு கலாசாரம் இவை வழி வழியாக வந்துள்ளது. இன்றைய சூழலில் அரசு, ஊடகம், கல்வித்துறை ஆகியன மிகவும் முயன்று நமது வரலாற்றை நாம் அறிந்துகொள்ளா வண்ணமும், நமது கலாசாரத்திலிருந்து விலகி நிற்கவுமே கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. தமிழனுக்கென்று நீண்ட நெடிய வரலாறு உண்டு. இறை நம்பிக்கை, மனிதம், கட்டுமானம், கலை, இலக்கியம், தொழில் இப்படி நீ எந்த துறையை நோக்கினாலும் தமிழனுக்கு அதில் ஒரு தனித்துவம் இருக்கும். இதில் நீ மறந்துவிடக்கூடாத ஒன்று அது இந்த தேசம் முழுதும் இவனோடே பிணைந்து இயங்கிக் கொண்டிருந்ததை. இந்த தேசத்தின் எந்த மூலை முடுக்குக்கு நீ சென்றாலும் ஏதோ ஒரு விஷயத்தில் நம்மோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு நூலிழை நம் அனைவரையும் கட்டியிணைத்து வந்திருக்கிறது ஒரே தேசமாய், ஒரே மக்களாய். இதில் நாம் தனித்துவமாய் முன்னணியில் இருந்தோமென்பதுதான் உண்மை.
        இந்தப்பண்பாடு கலாசாரம் எல்லாமே வழிவழியாய் உன் தாய் உனக்குக் கொடுத்தது போல, அவள் தாய், அவள் தாய் என ஒவ்வொரு தாயும் பேணி வளர்த்து வந்த ஒரு பொக்கிஷம். அதில் கறை படிந்திருக்கலாம் பல கைகள் மாறி வரும்பொழுது; கறை எங்கிருக்கிறது என்பதை அறிந்து அதை நீக்கும் வழி அறிந்து, அதை நீக்கி அந்த அரும்பெரும் பொக்கிஷத்தை அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உனக்கிருக்கிறது. என்பதை எந்நாளும் மறந்துவிடாதே. தமிழனின் கலாசாரத்தோடே அவனது வரலாறு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கலாசாரத்தை துறந்து விட்டால் வரலாறு காணாமல் போய்விடும்.
        ஒரு நாட்டின் பொருளாதாரம் எங்கேயோ இருப்பதாக நினைத்துவிடாதே, அது அரசின் செயல்பாடுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அப்படி அது மற்ற நாடுகளில் வேண்டுமானால் நிகழலாம். இன்றும் நம் நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவை தாங்கிக் கொண்டிருக்கிறது என்றால் நமது சமூக அமைப்பே காரணம். இன்று தனிமனிதர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தன்னார்வத்தினாலேயே இந்தியப் பொருளாதாரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அரசும், ஊடகமும், மிகப்பெரும் நிறுவனங்களும் இந்தியக் குடும்பங்களை பொருள்சார்ந்து இயங்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றன. நீ எதனால் பல்துலக்குவது, நீ எதை குடிப்பது, உண்பது, உடுத்துவது என பல விஷயங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆசைப்படி நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பர்யங்களை இழிவுபடுத்தி அது நாகரீகமற்றது என்ற ஒரு மாயத்தோற்றத்தினை உண்டாக்கி அதில் இந்நிறுவனங்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன.
        உலகின் அனைத்து பகுதிகளிலும் கற்கால மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே தமிழ்மொழி இலக்கண நூலைக் கண்டுவிட்டது. அப்படியென்றால் தமிழகத்தின் அதோடு இயைந்தே வளர்ந்து வந்துள்ள இந்திய நாகரீகம் எத்துணை உயர்ந்ததாக இருந்திருக்கும். அதனுள்ளே விஷங்களை விதைத்து, நமது நாகரீகத்தினை நாமே வெறுக்கும்படி செய்து அவர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள். அதனை உணர்ந்துவிட்ட நாம் நம்மை இன்னும் மாற்றிக் கொள்ள முயற்சிக்காதது வியப்பளிக்கிறது. உதாரணத்திற்கு நாம் மழையை விரும்பியவர்கள், அதை வேண்டியவர்கள். ஆனால் நாம் படிப்பது என்ன ரெயின் ரெயின் கோ அவே லிட்டில் ஜானி வாண்ட்ஸ் டூ பிளே. இது திணிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது என்று தெரிந்திருந்தும் நாம் அதையே கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஜானி என்ற பெயர் நாகரீகமானதென்றும், வளவன் என்ற தமிழ்ச்சொல் நாகரீகமற்றது என்றும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
        நான் என் பள்ளிக் காலத்தே கண்டிருக்கிறேன் என்னோடு வளர்ந்த சிறுமிகளை. அழகாக பாவாடை சட்டை அணிந்து, பின்னலிட்டு, பூவைத்து, அழகாக சாந்துப்பொட்டிட்டு ஏதோ தேவதைகள் இந்த பூமிக்கு வந்தனவோ, பட்டாம்பூச்சிகள் திடீரென்று சிறுமிகளாய் மாறிவிட்டனவே என்று எண்ணவைக்கும் விதத்தில் இருப்பார்கள். இன்றோ சீருடை என்ற பெயரில் நமது காலச்சூழ்நிலைக்கு ஒவ்வாத உடைகள், அணிகலன்கள். நிச்சயமாக பொட்டு,வளையல், பூ இவையெல்லாம் இருக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தும் கல்வி நிறுவனங்கள். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். நமது ரசனையை, அழகைத் தொலைத்துவிட்டு அழகற்ற ஒன்றிலே செலுத்திக் கொண்டிருக்கிறோம். நீ பள்ளிக்கு இந்த உடைகளில் செல்கையில் ஒவ்வொரு நாளும் நீ இழந்து கொண்டிருப்பதை, நான் இழந்து கொண்டிருப்பதை, இந்த சமூகத்தின் அவலத்தை நினைத்து வேதனை அடைவேன்.
        விளையாட்டு, கலை என்பது இன்று கல்வி நிலையங்களில், ஆண்டு நிறைவு விழாவில் கூடும் முட்டாள் பெற்றோர்களை மயக்கும் ஒரு விஷயமாக, ஏதோ சம்பிரதாயமாக அன்று மட்டுமே நிகழும் நிகழ்வாக, வாழ்க்கையில் முக்கியமற்ற அம்சமாக மாற்றிவிட்டார்கள். நீச்சலோ, கபடியோ எந்த கிராமத்து விளையாட்டும் உன்னை நெருங்க விடாதவாறு கல்வி நிறுவனங்கள் மிகக்கவனமாக காத்து நிற்கின்றன. இவர்கள் கட்டமைப்பை உண்டாக்கிவிட்டார்கள் அந்தக் கட்டமைப்பை நோக்கி அனைவரையும் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறார்கள், வேதனையோடு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன வழி என்று என் மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
       
        பெண்ணுரிமை என்று பேசுகிறார்கள் மகளே, ஒரு திரைப்படப்பாடல் உண்டு, உரிமையோ உரிமை என்று போராடும்போது கடமையோ கடமை என்று காரியம் செய்தாலென்ன என. அது இதற்கு சாலப்பொருந்தும். பெண்ணுரிமை பேசுபவர்கள் தங்கள் மொழியை, கலாசாரத்தை, பண்பாட்டை, சமூகத்திலுள்ள நல்ல விஷயங்களை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு எடுத்துப் போகும் கடமையை மறந்து வேறொரு கலாசாரத்தில் மூழ்கிப்போதல் எவ்வகையில் நியாயம். இந்த தேசம் பெண்களை அடிமைப்படுத்திய நாகரீகம் கொண்டதல்ல. இடைக்காலத்தில் சில குறுகிய மனங்கொண்டவர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம். அந்த மனிதர்களின் அநீதியை எதிர்த்துபோராடி மீண்டும் நமது உண்மையான கலாசாரத்தை நிறுத்துவதில்தான் பெண்ணுரிமை அடங்கியிருக்கிறது. மாறாக நமது பண்பாட்டைத் தொலைப்பதில் அல்ல.
        ஜாதி இது இங்கு பெரிதாகப் பேசப்படும் ஒரு பொருள். அது நீ விரும்பவில்லையென்றாலும், உன்னைத் துரத்தி துரத்தி அரசாங்கம் கேட்கும், உன் ஜாதியைப் பட்டியலிடும். எத்தனை ஜாதிகள் இருக்கின்றன, ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்று பட்டியலிடும். நீ மறக்க நினைத்தாலும் நீ சாகும் வரை நீ இன்ன ஜாதி என்று உன்னை நோக்கி கைநீட்டிக்கொண்டேயிருக்கும் இந்த அரசாங்கம். இதை நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான் வள்ளுவன்; பிறப்பினால் ஒருவன் உயர்வு தாழ்வு அடைவதில்லை; அவன் வளரும்போது உள்ள குணங்களே அவனது நிலையைச் சொல்லும்; எனவே ஜாதியைக் கொண்டு உயர்வு தாழ்வு பாராட்டாதே. மனிதரின் குணங்களைப் பார், இழிவெண்ணம் கொண்டவர்களிடமிருந்து உன்னை அகற்றிக் கொள். உன் தாய் உனக்குச் சொல்லிக் கொடுத்தவைகளை நினைவில் கொள், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்.
        தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால் ஒரு மரம் நடப்பட்டால் அதன் கீழ் எத்தனையோ செடிகளும், உயிரினங்களும் தழைக்க ஆரம்பித்துவிடும். எனவே என்னுள் ஏற்படுகின்ற எண்ணங்கள் உன்னிடம் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால் உன் சந்ததி முழுதும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். மற்றவர்களிடம் நீ மாற்றத்தை உண்டு பண்ண நினைக்காதே. உன் வாழ்க்கையை அவர்களுக்கு செய்தியாக்கு, பாடமாக்கு. நிச்சயம் தனி மரம் கொடுக்கும் பலனை நினைத்து, நிறைய மரம் வைத்து தோப்பாக்கி விடுவார்கள். மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாற்றமில்லாதது.
        ஒரு சமூகம் மாறிவிட்டால் அது செழுமையடைவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால் தீய சக்திகள் ஓடி ஒளிந்துவிடும். நல்ல அரசியலை நல்லவர்கள் உருவாக்குவார்கள். நம்பிக்கை கொள் என்று எனது மனது கூறுகிறது. உன் செயல் அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
        மீண்டும் எனது எண்ணங்களை எழுதுகிறேன். அதுவரை ஆசை முத்தங்களுடன்
                                                                        உனது அன்பு அப்பா.




        

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இளைஞனே வா! நன்மாற்றம் செய்குவோம்!


                     மக்களவைக்கான தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. மக்கள் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எப்போதும் போல. அரசியல் கட்சிகள் ரகசியக் கூட்டங்கள், தூதுவர்கள் என மண்டையைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன். அரசியல் கட்சிகள் மண்டையைக் குழப்பிக் கொள்வது நிச்சயமாக மக்கள் முடிவை எண்ணி அல்ல. யாரோடு கூட்டு சேர்ந்தால் நமக்கு ஓட்டு கிடைக்கும். தேர்தல் முடிந்த பிறகு எந்த அணிக்குத் தாவுவது என்ற அதே பழைய பிரச்சினைதான். எப்படியும் கொள்ளை அடிக்க ஓரிடம் கிடைத்தால் போதுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
                   ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் சிம்மாசனம் ஏறும் ஒரு நாள் எசமானர்கள் மட்டும் சங்கர் பட ஒரு நாள் முதல்வன் போல சிந்திக்க இது என்ன திரைப்படமா? இலவசம் ஏதும் புதிதாக அறிவிப்பார்களா?, எவ்வளவு பணம் கிடைக்கும்?, வேறேன்ன வித்தியாசமாக விலை அறிவிப்பார்கள் ஓட்டுக்கு என்ற சிந்தனையில் அமைதியாய் ஒரு வர்க்கம். மெத்தப் படித்த மேதாவிகளோ இந்த நாட்டைத் திருத்த முடியாதப்பா என்று புலம்பும் திருந்தாத ஜென்மங்கள் ஓட்டுச் சாவடிக்கு நிச்சயம் போகப் போவதில்லை என்று முடிவெடுத்து அமைதியாய். மாபெரும் முதலாளிகளோ எல்லோருக்கும் ஒரு விலை வைத்து தேர்தலுக்குப் பின் எப்படி சுரண்டலாம், எப்படி ஆட்சியாளர்களை ஆட்டி வைக்கலாம் என்ற ஆராய்ச்சியுடன்.

                 இந்த மக்கள் நிசமாகவே அரசியல்வாதிகள் அரங்கேற்றும் அவலங்களைப் புரிந்துகொள்ளவில்லையா, இல்லை புரிந்தும் புரியாதது போல் இருக்கிறார்களா? என்றும் இல்லாதவகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடந்துள்ளது. சாதாரணமனிதர்களுக்கு விளங்காவிட்டாலும் நடுத்தரவர்க்கங்களுக்கு விளங்கியிருக்கும். விலைவாசி தாறுமாறாக, விவசாயம் விளங்காமல் போக, தொழில்துறையோ தள்ளாட்டத்தில். இங்கு குடிமகன்களோ மதுக் குடிமகன்களாக. 

                அன்னாஹஸாரே இடையில் ஒரு விழிப்புணர்வு ஊட்டியது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தின ஊடகங்கள். இன்று அவரை மூலையில் தூக்கி எறிந்துவிட்டன. ஊடகங்கள் சொல்லும் கதைகளை மட்டுமே நினைவு கூர்தலும், தான் சார்ந்த இயக்கங்களின் ஊடகங்கள் சொல்வதே உண்மையெனவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தமிழ்ச்சிந்தனை மறந்தோராயினர். தமிழ்வழிப் படித்த இவரே இப்படி எனின் ஆங்கில வழி படித்த வருங்கால சந்ததியினர் நிலை என்ன? ஐயகோ! வயிற்றில் ஏதோ பிசைகிறது எம் சந்ததியினர் படப்போகும் துயரெண்ணி. 

            கையாலாகத்தனமாய் இன்று பலபேரும் நான் உள்பட. புதிதாய் கட்சிகள், ஆம் ஆத்மி, லோக்சத்தா என. புதிய அரசியல் நம்பிக்கையை இளைஞரிடையே விதைக்கின்றன, இவை சாதிக்கப்போவதென்ன? ஆளும் கூட்டணிக் கட்சிக்கெதிரான ஓட்டுக்க்ளில் சிலவற்றை வேட்டையாடி மக்கள் நல்ல அரசியல் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என மார்தட்டிக் கொள்ளப்போகிறார்கள். ஆனால் உண்மை விளைவென்ன? ஆளும் கட்சிக்கெதிரான ஓட்டுகளை ஒன்றிணைக்காமல் சிதறச் செய்வதைத்தவிர இவர் பங்கு வேறெதுவுமில்லை. 

            மாநிலக் கட்சிகள் சுயாட்சி, எம் இனம் என்று பிரிந்து தேசியக் கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை சிதைத்து மாநில அளவில் வெற்றி காண்பர். ஒவ்வொரு மாநில கட்சிகளும் சுயநலம் சார்ந்து என் இனம், என் மக்கள் என மேடைப்பேச்சு பேசுபவை. இவர்கள் ஒன்றாக இணைவது பின்னணியில் மட்டுமே. முன்னணியில் இவர்களால் ஒன்றிணைந்து ஆட்சி கொடுப்பது என்பது சாத்தியமல்லவே? 

          கம்யூனிஸ்ட் கட்சிகள் இரு மாநிலத்தில் மட்டுமே என சுருங்கி மாநிலக் கட்சி என்றாகிவிட்டது, அங்கும் ஒரு மாநிலத்தில் கூட்டணிதான். இவர்களும் கார்பரேட் கலாசாரத்தை பின்பற்றத்துவங்கி மக்களிடம் தங்களுக்கென்று இருந்த நம்பிக்கையை குலைக்க முற்படத்துவங்கி வருடங்களாகிவிட்டது. ஒரு சில தலைவர்களே விதிவிலக்கு.

          பாரதிய ஜனதா, மற்ற கட்சிகளால் வலது சாரி என முத்திரை குத்தப்பட்டபோது தன் நிலை உணர்ந்து, நாங்கள் வலது சாரி அல்ல, நடுநிலையில் உள்ளவர்கள் என்பதை உணர்த்தாமல் தங்கள் மீது குத்தப்பட்ட முத்திரையை ஏற்றுக்கொண்டு அந்த வழிதான் அவர்கள் வழி என தவறாக உணர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மோடி பிரதமர் வேட்பாளர், அவர் சாதனையாளர் என்ற ஒரு தனிப்பட்ட மனிதரின் போர்வைக்குள் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டு வந்ததற்கு மாற்றாக  இங்கும் பணம் இருப்போர், வாய்ச் சவடால் விடுவோர் முன்னணியிலும், உழைப்போர் ஓரத்திலுமல்ல என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இவர்கள் எப்படி இவர்களுக்குச் சொந்தமான ஓட்டு வங்கியை பெற முடியும்? 

      காங்கிரஸ் கூட்டணி, நாடு முழுக்க எதிர்ப்பலையை பெற்றுள்ளதாகக் காட்டப்படுகிறது. உண்மையாகக் கூட இருக்கலாம். சரியான நிர்வாகமின்மை, ஊழல், குடும்ப அதிகாரம், இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் செயல்பட்டது, இன்றும் தமிழக விஷய்த்தில் புறக்கணிப்பைக் காட்டுவது என நிறைய சேர்ந்து தமிழகத்தில் வேண்டுமானால் ஒரளவுக்கு எதிர்ப்பலையை உருவாக்கியிருப்பதாகச் சொல்ல முடியும். ஆனால் நாடு முழுவதும் ஓட்டுக்கள் சிதறும்போது, நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கட்சியாக எந்த தேசியக் கட்சியும் இல்லாதபொழுது காங்கிரஸ் கூட்டணிக்குத்தானே சாதகமாக அமையும். 

     சரி, என்னதான் செய்வது. எம்.ஜி.ஆர் பார்முலாவை பாரதிய ஜனதா கூட்டணி பின்பற்றினால், மாநிலத்தில் மாநிலக்கட்சியும், மத்தியில் தேசியக் கட்சி என்கின்ற எண்ணத்தில் அதிக அளவு இடங்களை மாநிலக்கட்சிகளிடம் பெற்றால், குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள், பொதுவான செயல்திட்டம் என தேர்தல் அறிக்கை என முன்வைத்து ஆம் ஆத்மி, லோக்சத்தா போன்ற கட்சிகளையும் ஒருங்கிணைத்தால் ஆட்சியமைக்க வாய்ப்புண்டு. செய்ய இயலுமா? இதை பாரதிய ஜனதா மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளும் கூட முயற்சித்து பார்க்கலாம்.

    மாநிலக்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கவோ, அல்லது ஆட்சியமைக்க உதவும் சூழ்நிலையோ உருவானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. ஒற்றுமையில்லாமல் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வர மற்ற கட்சிகள் உதவினால் அதுவும் நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். 

    அனைத்து மக்களும் குற்றப்பின்னணி இல்லாத தனக்காக சேவை செய்யக்கூடிய ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து தங்கள் சார்பாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தால் முன்மாதிரியாக இருக்கும். இது பெரிய பகல்கனவென்று நீங்கள் கூறலாம். ஆனால் அது என்னுடைய மிகப் பெரிய ஆசை. அரசியல் கட்சிகள் சொல்லும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதை விட மக்கள் தங்கள் தொகுதிக்கான நபரை தாங்களே முன்னிறுத்தினால் அதைவிடச் சிறந்த விஷயம் ஏதுமில்லை. இது சாத்தியமாகுமா? முடியும் என நினைத்து மக்கள் முன்வந்தால் முடியும். தெளிவுற்ற மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.

        அதிகாரக் குவிப்பு மத்திய அரசை நோக்கிச் செல்லாமல் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் கிராம ஸ்வராஜ்யம் மலர வேண்டும். குளத்தைத் தூர்வாரவும், சாலைகளை அமைக்கவும், நீர்மேலாண்மை செய்யவும் மக்களிடமே அதிகாரம் இருக்க வேண்டும். எங்கோ ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு கிராமத்தை நிர்வகிக்கும் கேவலநிலை ஒழிய வேண்டும். துணிவுள்ள, சேவையை மூச்சாகக் கொண்ட நல்லவர்களை அரியணையில் ஏற்றிட மக்கள் முனைய வேண்டும். சொத்து சேர்க்கும், தகுதியற்ற கயவர்களை இனம் கண்டு நல்லவர்க்கு ஓட்டளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


 இளைஞர் கூட்டம் இந்தியாவின் மாபெரும் பொக்கிஷம். ஆனால் அது குறுகிய மொழி, இனம், ஜாதி, மதம் சார்ந்த குறுங்குழுக்களிடையே சிக்கி அவர்கள் போதிப்பதே வரலாறு, தத்துவம், சித்தாந்தம் என்றெல்லாம் நம்பத்துவங்கி ஒருவித போதையிலே தள்ளாடிக் கொண்டிருக்கிறது, விதிவிலக்கு இங்கும் உண்டே. அறிவோடு சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் இளைஞர்களும் நிறைய பேர் உண்டு. ஆனால் அவர்கள் களம் கண்டு வேலை செய்தால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நிச்சயம் நல்லவழி தென்படும். அழைக்கிறேன் உணர்வுள்ள இளைஞர்களை, தோளோடு தோள் சேர்ந்து உழைப்போம், மாற்றத்தை கொண்டு வருவோம். நம்மை நாமேஆள்வோம். 

அனைத்து அதிகாரங்களும் அந்நிய முதலீடு என்ற பெயரில் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு, நமது கனிம வளங்கள் மீண்டும் ஒருமுறை அயல்நாட்டவரால் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், நம் சந்ததிகள் வளமோடும், நலமோடும் நம் அன்னையின் மடியில் தவழவேண்டுமென்றால் வா இளைஞனே, வீறு கொண்டு வா! ஏறு நடை போட்டு வா! பாரதியின் கவி உன் வாக்கிலும், நேதாஜியின் நெஞ்சுரம் உன் இதயத்திலும், காந்தியின் ஆளுமை உன்னகத்தே கொண்டு வா! விரைந்து புயலென வந்திடு! தேசம் காக்க நம் மக்கள் கண்ணை திறந்திடு. நம்மில் ஒருவரை தேர்ந்தெடு, அரசியல்கட்சிகளை அப்புறம் ஓட்டிவிடு!

கொட்டு முரசை! ஓங்கி பறையடி! ஓடட்டும் கயவர் கூட்டம்!

உள்ளம் சிலிர்க்க, உவகை பொங்க நல்லோரை அரியணையில் அமர்த்துவோம்!

வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதரம்! 





திங்கள், 29 ஜூலை, 2013

யாசகன்


என் கற்பனைக் காதலி என்னோடு பேசாமலிருந்தபொழுது.,

நீ விழையும் மௌனம்
உன் சந்தோஷ ஜன்னலின் சாவியென்றால்
என் இதய வலி மறைத்து
சம்மதமென்றே உரைத்திடுவேன்
சாதிக்கப் போவதென்ன
சத்தியமாய் விளங்கவில்லை எனக்கு
ஆத்மார்த்தமாய் வந்திட்ட உறவில் 
வாய்வார்த்தை தேவையில்லைதான்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஊடல் பேச்சில்லையெனில்
உறவின் விழைவும் விளங்காதல்லவா?
ஆறுமிங்கே ஆழியில் சங்கமிக்கையில்
ஆனந்த இரைச்சலிடுவதை அறிந்தவள்தானே நீ !
புள்ளினமும் மெல்லினமாய்
சத்தமிட்டு சாடுவதைக் கண்டவள்தானே !
சப்தங்கள் இங்கே நம் வாழக்கைச் சாரமாயிற்று
சங்கீதமாய் நம்மோடு இழைந்து போய்விட்டது
உன்னிலும் என்னிலும் மௌனத்திலும்
சபதங்கள் ஜீவித்துக் கொண்டுதானிருக்கின்றன
இதில் நீ மௌனம் என்று எதைத் தேடுகிறாய்?
என்றும் நீ சந்தோஷ சங்கீதமாய் வளைய வர
உன்னிடம் யாசிக்கின்றேன்
நீ ஏன் இன்னும் யோசிக்கின்றாய் ?
                                                                       - யாசகன்

இன்று இதனைப் பதியும்போது என்னை நான் திரும்பிப் பார்க்கும் ஒரு வாய்ப்பு. சப்தங்களை சங்கீதம் என்ற மனது இன்று சப்தங்களை வெறுப்பதேன். மாற்றங்கள் இவ்வளவு பெரிதாயிருக்குமா? இந்த மாற்றம் இயல்பானதாய் இருக்க வேண்டும். இந்த மாற்றமில்லாமல் ஒன்றிலேயே தொங்கிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனமாய் போய்விடுமோ? சொல்ல இயலாது இன்னும் சில நாள்களில் சலசலக்கும் சண்டை சச்சரவுகளை என் மனது விரும்ப ஆரம்பித்து விடலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இப்படியும் கூடத்தானே?


என்னவளே !

கல்லூரிப்படிப்பு முடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களிலே என் கற்பனையில் உதித்த என் காதலிக்கு நான் எழுதிய கவிதை. இதைப் பின்னாளில் என் இல்லாளுக்கே கொடுத்துவிட்டேன். இதில் வரும் முள்ளான நின் வார்த்தைக்குப் பின்னேஎன்ற வரி மட்டும் என் இல்லாளுக்குப் பொருந்தாது.

நின்னை சந்தித்த வேளையில்
நான் நினைக்கவில்லை
பூதாகாராமாய் நம்முள்
இந்த உறவு மலருமென்று !
முள்ளான உன் வார்த்தைக்குப் பின்னே
ரோஜாவான நின் மனதை
மெல்லமாய் புரியவைத்து
உறவை மலரவைத்தாய்
கொஞ்சகொஞ்சமாய்
என் மன சாம்ராஜ்யத்தை
உன் புன்னகையால் சிதைத்தாய்
நின் நட்பிற்கு வித்தாய்
என் நெஞ்சினுள்ளேயன்பை வார்த்தாய்!
என்ன நினைத்து இங்கு வந்தாய்
என்னுள் இன்பம் விளைத்தாய்
என்னை பண்பினனாய் வடித்தாய்
ரசிக்கவும் ரசிக்கப்படவும்
என்னை மாற்றியமைத்தாய்
இன்று பாடலாய் பாவமாய்
என்னுள் நிறைந்தாய்
காலமகள் வடித்தளித்த காவியமாய்
கண்ணிற்கினியதோர் ஓவியமாய்
கண்ணன் எனக்களித்த பரிசானாய்
என்றும் என் ஜீவனானாய்
இனியதோர் நினைவானாய்
யாதுமாய் நின்றாய் என்னவளே,
என்றும் நீ எனக்கே எனக்காய் வேண்டும் !



வியாழன், 18 ஜூலை, 2013

ஆலமரம்

     ஆலமரம்.,


     குயிலின் குக்கூவையும் மீறி அலறல் சத்தம் கேட்க அலறிப் புடைத்து, படுக்கையை சுருட்டி எழுந்து கொண்டேன். கிராமத்துத் தெருவில் அலறல் சத்தம் கேட்கிறது என்றால் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்று உறுதியாய்ச் சொல்லிவிடலாம். சத்தத்தை கூர்ந்து கவனித்தபொழுது ஆத்தா என்று அலறுவது கேட்க ஒரு கணம் உடல் அதிர்ந்துதான் போனது.
     இங்கு ஆத்தா என்று எல்லாரும் கூப்பிடுவது சேட்டப்பனின் அம்மா ராமாயியைத்தான். சேட்டப்பன் என்ற பெயர் அவரின் நீண்ட கால வட இந்திய வாழ்க்கை கொடுத்த பெயர். சேட்டப்பனின் ஆத்தா மிகுந்த வயதானவள் மட்டுமல்ல நல்ல அனுபவசாலி. பழைய கால நினைவுகளை மிகவும் ரசனையோடு சொல்லக் கூடியவள். இந்தக் கிராமத்தின் ஒவ்வொரு மூலையும் முடுக்கும் ஒவ்வொரு அசைவும் ஆத்தாவுக்கு ஒரு காவியம் போல. அதனை கவிநயத்தோடு எல்லோரோடும் பகிர்ந்துகொண்டது அனைவருக்கும் அவளிடத்தே பிரியத்தை உண்டு பண்ணிவிட்டது.
     பதைப்போடே வாசலுக்கு வந்த நான் விரைந்து ஓடிக் கொண்டிருந்த நடராஜை, ஏன் மாப்ளே, என்னாச்சு என்றேன். ஒண்ணுமில்லேடா ஆத்தா கிழக்கால இருக்கிற கிணத்தில குதிச்சிருச்சிடா, தலையிலே அடிபட்டிருக்கு. ஆசுபத்ரிக்கு எடுத்திட்டு போறாங்க. உசிரு இருக்காடா மாப்ளே, இது நான். அதெல்லாம் இருக்கு சிவா, சீக்கிரம் கொண்டு போய்ச் சேத்தா பொழைச்சிடும்.
     வடக்கால இருக்கிற முருகசாமி அண்ணன் காரில ஆத்தாவைத் தூக்கி போட்டுக்கிட்ட்டு ஆசுபத்திரிக்கு பறந்துட்டாங்க. மனசு முழுக்க பதட்டமும் கேள்விக்கணைகளும். ஆத்தா ரொம்ப விவராமாச்சே, ஏன் கிணத்துக்குள்ளே குதிச்சிச்சு. யாரிடமாவது பதில் இருக்கும். பதில் கிடைக்கும் வரை மனசு அடங்காமல் குதித்துக் கொண்டேயிருக்கும்.
    
     பக்கத்திலிருந்த வேம்பிலிருந்து ஒரு குச்சியை உடைத்து பல்லைத் துலக்க ஆரம்பித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். மெதுவாக தெக்குத்தோட்டத்தை நெருங்கியபோது வேலுச்சாமி அண்ணன் மாட்டைதொழுவத்திலிருந்து மாற்றிக் கொண்டிருந்தார். அண்ணே, ஆத்தாவுக்கு என்னாச்சுண்ணே? ஏன் இப்படி பண்ணிருச்சி? விடை தெரிந்து கொள்ளும் ஆவலோடு கேள்விகளை வேகமாகவே வீசினேன். எப்ப வந்தீங்க தம்பி ஊர்லேர்ந்து என்றார் வேலுச்சாமி. விடியாலதாண்ணே வந்தேன் என்றேன் பொறுமையில்லாமல். அதான் விஷயம் தெரியல போல என பொடி வைத்துப் பேசினார்.
     வடக்குத் தெரு முருகசாமியும், கொமாரும் கிழக்கால பிள்ளையார் கோவிலை எடுத்துக் கட்டணும்னு பேசிட்டிருந்தாங்கில்ல, அதுக்கு பூமி பூசை போட்டாங்க. கோயிலை நல்லா பெரிசா கட்டணும், ஆலமரத்தை வெட்டிடலாம்னாங்க. யாருக்கும் மனசில்லே. ஆத்தா ரொம்பவே மனசொடிஞ்சி போச்சி, டேய் வாணாங்கடா, நம்ம பிள்ளையார் சாமி மரத்திலதாண்டா இருக்காரு, ரொம்ப காலமா நாம இந்த கல்லையும் மரத்தையும்தாண்டா சாமியா கும்பிடறோம். சாமியையே வெட்டணும்கிறீங்களேடான்னு அரற்றிக்கிட்டே இருந்த்துச்சி.
     ஏழை சொல் அம்பலம் ஏறுமா? புதுப் பணக்காரங்க, டைல்ஸ் போட்டு கோவில் கட்டணும்கிறாங்க,கோவிலா, கக்கூஸான்னு வெளங்கல தம்பி, கோவில்ல போய் டைல்ஸெல்லாம் ஒட்டிக்கிட்டு. கடைசியில நேத்து மரத்தை வெட்டிப் போட்டாங்க, ஆத்தா துடிச்சிப் போயிடுச்சி. புலம்பிக்கிட்டே இருந்துச்சு தம்பி, வெள்ளென ஆட்டை ஓட்டிக்கிட்டு போச்சி, இப்படி கிணத்துல குதிக்கும்னு யாருக்கும் தெரியல. 

     உண்மையில் எனக்கு விளங்கவில்லை. படிக்காத இந்த ஆத்தாவுக்கு இருக்கும் ஒரு விவரம், படித்தவர்களுக்கு இல்லையே. மரங்கள் வெட்டப்படக் கூடாதென்பதற்காகத்தானே அங்கே கல்லை நட்டி சாமி மரத்தில் குடியிருப்பதாகச் சொல்லி, மரத்தின் கிளையைக் கூட உடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். இறைவன் படைத்த இயற்கை ஒவ்வொன்றிலும் அவன் உறைந்திருப்பதை உணராமல்,அதை சிதைக்க நாம் முயல்வதேன். மரத்தை வெட்டியபின்பு அவ்விடத்தில் இறையம்சம் எப்படி இருக்கும்? அவன் படைத்ததை அழித்தபின்பு அவனருள் பெருவது எப்படி?
    
     என் கால்கள் என்னையறியாமல் கிழக்காக பிள்ளையார் கோயிலை நோக்கி நடை போட்டது. பெரிதும் பரந்து பல்லுயிர்க்கும் இடமளித்து அரவணைத்து கொண்டிருந்த அந்தப் பெரிய ஆலமரம் அண்ணாந்து சாய்ந்திருந்தது. அதன் கிளைகள் துண்டிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த்தது. ஆத்தாவும் ஆலமரமும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவை. எத்தனையோ காலமாய் எங்கள் சேர்வராயன்பாளையம் கிராமத்தை நிதானமாய் கவனித்து வந்தவை. இன்று ஒன்று அடிபட்டது தாங்காமல் மற்றொன்று தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. என் கண்ணில் தானாக கண்ணீர் பெருகியது ஆச்சர்யமாக இருந்தது.
     இரண்டு நாளில் ஆத்தா வீடு திரும்பியிருந்தாள். அனைவரும் அவளை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என் கண்களும் அவளை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டு கொள்ளுவாள், பழங்கதையை அசைபோடுவாள் என்று மிகவும் ஆசையோடு இருந்தேன்.என் ஆசையை தவிடுபொடியாக்கியது கௌரியக்காவின் குரல். ஆத்தாவுக்கு தலையில அடிபட்டதில சித்தம் கலங்கிடுச்சாம், இனிமே போறமட்டும் இப்படியேதானாம், வார்த்தைகள் இடியாய் இறங்கியது என்னுள்.
     சேட்டப்பன் வட இந்திய முதலாளியின் கம்பெனியில்தான் வேலை பார்த்து வந்தார். நடந்த செய்திகளைக் கேட்டு அவர் அந்த இடத்தை பார்வையிட்டு கிராமத்தாரிடம் அந்த மரத்தை தான் கொண்டு செல்ல அனுமதி கேட்டார். கிராமத்தின் உதவியோடு அருகிலிருந்த தன் தொழிற்சாலை வளாகத்தில் மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த ஆலமரத்தை நட்டுவிட்டார்.   

    வெகுவேகமாக கோயில் வேலை நடந்து கிரானைட், டைல்ஸ் என்று நவீனப்படுத்தப்பட்ட பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகம். முணுமுணுத்தவாறே உலவிக்கொண்டிருந்த ஆத்தா பைத்தியமெனப்பட்டாள், உபயதாரர்களால். பிள்ளையாருக்கும் ஆத்தாவுக்கும் மட்டுமே தெரியும் பைத்தியக்காரர்கள் யாரென்று.
     ஆல் போல்தழைத்து வாழ் என வாழ்த்தும் நாட்டில் ஆலையே வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். இயல்பிலிருந்து மாறிப் போன வாழ்க்கைமுறை மீண்டும் திரும்ப வாய்ப்பிருக்குமா? இந்திய பாரம்பரிய இயல்பு திரும்ப வாய்க்குமா எனப் பலப்பல சிந்தனைகள். ஏம்பா அன்னதானம் ஆரம்பிச்சிடுச்சி சாப்டப் போலாம் வாங்க என்ற குரல் என் சிந்தனையைக் கலைத்தது.

     இயற்கையை அழிக்க ஆரம்பித்துவிட்டோமே, நம் சந்ததிக்கு உணவுவாய்ப்பு எப்படி?  அதை சிறிதும் உணராமல் எல்லோரும் அன்னதானத்தில் உண்ண சென்று கொண்டிருக்கிறார்களே? உண்ண விருப்பமில்லாமல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். தொழிற்சாலை வரை சென்றுவிட்டேன் என்னையறியாமல், உள்ளே நடப்பட்டிருந்த ஆலமரம் துளிர்விட ஆரம்பித்திருந்தது. இனி எனக்கு பிள்ளையார் கோயில் இந்த தொழிற்சாலை ஆலமரம்தான். 

செவ்வாய், 16 ஜூலை, 2013

உன்னை உணர்! உயர்ந்துவிடு!

     இளவரசன் மரணம் என்பது மிக்க துயரத்தை ஏற்படுத்திய ஒன்று. அது மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் என்னுள் சில எண்ணங்கள். இவர் சாதிமறுப்பு போராளி என்று பட்டம் சூட்டப்பட்டிருக்கிறார், மேலும் பல இளைஞர்கள் இவர் வழியில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள்.

     இளைஞர்களே சிந்திப்பீர் அன்னாரது திருமணத்துக்குப்பின் ஏற்பட்ட நிலை என்ன இரு சமுதாயத்து மக்கள் மோதிக்கொண்டனர், எண்ணற்ற பொருளிழப்பு, மன அமைதியின்மை, ஜாதி என்ற எண்ணம் இரு சாராரிடத்தும் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. நன்கு கவனிக்கவும் இந்த நிகழ்வு சாதியை மறுக்கும், மறக்கும் மனநிலைக்கு மக்களைச் செலுத்தவில்லையே, மாறாக ஜாதியை சிறு குழந்தைகள் மனதிலும் ஆழமாகப் பதித்துவிட்டதே. மாநிலம் முழுதும் ஜாதியை மையம் கொண்டு புயலென அரசியல் வாதிகள் பயணம் செய்தார்களே?  இருதரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இதைத்தான் எதிர்பார்த்திருந்திருப்பார்கள், அவர்கள் இந்தத் தீயில் பல நாள் குளிர் காய்வார்கள்.
     இளவரசனின் தாய், அவரது மனைவி திவ்யா, திவ்யாவின் தாய் இவர்களது மனநிலையை எண்ணிப்பார்க்க, உண்மையாய் தோள்கொடுக்க இந்த அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள். அந்த ஜீவன்களை நினைந்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். பழைய நாறிப்போன மீடியாவோடு, மிகவும் நாற்றமெடுத்த இந்த இணைய ஊடகமும் இவர்களை வைத்து பிழைப்பு நடத்துவார்கள், பொழுது போக்குவார்கள். இளவரசன் போன்றதொரு மகனை இழந்த தாய்க்கு இன்னொரு இளவரசன் கிடைக்க முடியுமா? வாழ்க்கையை ஜாதி அரசியலில் தொலைத்த திவ்யாவிற்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்குமா? சிந்தியுங்கள்.
     மூர்க்கமான போராட்டம், ஆயுதம் ஏந்திய போராட்டம் நிச்சயமாய் தீர்வல்ல. எண்ணத்தில், பேச்சில், செயலில் மாற்றம் ஏற்பட்டு சமுதாயம் மாறவேண்டும். அதை அடைய இன்றைய நடைமுறை சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொள் இளைஞனே!  மிகவும் இளவயதில் கொள்ளும் காதல் பிரச்சினையைத் தாங்கும் சக்தி கொண்டதல்ல என்பதனையும் புரிந்துகொள். சாதியை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருப்பவனின் சந்ததியின் ஜீனிலும் ஜாதி இருக்கும். காதல் மாயையில் மறைந்திருந்தாலும் பின்னர் தலைகாட்டும். அது சரியான வழியல்ல.
   அம்பேத்கர் சொன்னது போல கல்வி பெறுவதை மட்டுமே லட்சியமாகக் கொள், உன்னைப் போல் அறிவாளி இல்லை என்ற நிலை கொள், அறிவார்ந்த சமுதாயமாக உன்னைச் சுற்றியிருப்போரை மாற்று. உன்னைச் சார்ந்தோரே உயர்ந்தோர் என்ற எண்ணம் கொள்.

     மேலும் இங்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் சில குறிப்பிட்ட இனத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள், தலித் என்ற பெயரில் அழைப்பதை மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் அரசியலில் பிழைப்பு நடத்துபவர்கள். அன்றைப் போல் இன்று இல்லை. இன்று உனக்கு கல்வி கிடைக்கிறது, நிறைய உதவிகளைச் செய்ய அரசு இருக்கிறது. சமுதாயத்திலும் சாதியை மறந்த நண்பர்கள் உன்னோடே உண்டு. இந்த நிலையில் அடுத்தவன் சொல்வதைக் கேட்டு நான் தாழ்ந்தவன் என்ற நினைப்பை உன் மனதில் வளர்க்காதே. விதையை யார் விதைத்தாலும் நீக்கிவிடு. நீயும் உன் பெற்றோர்களும் உயர்ந்தவர்கள், நல்ல பாரம்பரியம் மிக்கவர்கள், இந்த பாரதத்திருநாட்டில் பிறந்தஎவனொருவனும் தாழ்ந்தவன் இல்லை என்ற எண்ணத்தினை உன் மனதில் உறுதியாய் பற்று.

     உன் எண்ணங்களில் தீயின் சுடர் பிரகாசிக்கட்டும், அது தீப ஒளியினைப் போல் அடுத்தவர்க்கு வழி காட்டுமாறு உன் வாழ்க்கை இருக்கட்டும். உன் எண்ணத்தின் ஜ்வாலை கண் வழியே வெளிப்ப்ட்டு அடுத்தவரின் வாழ்க்கையில் இருள் உண்டாக்குமாறு இருந்துவிடக் கூடாது. அடுத்தவரில் உன் குடும்பமும் அடங்கியுள்ளது நண்பனே.

    அறிவு, அறிவு, அறிவு அது ஒன்றே உன் தேடலாய் இருக்கட்டும். இந்த பாரதபூமி படைத்துள்ள அத்துணை அறிவார்ந்த விஷயங்களையும் அறிந்துகொள். அதனை உன்னைச் சார்ந்தோர்க்கு கொடுத்திடத் தயங்காதே! உன்னைச் சார்ந்தோரையும் உன்னைப்போல் உயர்த்து. அடுத்தவர்களால் உன்னை உயரவைக்கமுடியாது.
     நீ உயர்ந்தவன் என்று நீ உணராத வரை யாராலும் உன் நிலைமையை மாற்ற முடியாது.உன்னை தாழ்ந்தவன் என்று சொல்பவன் முன்னால் மேலும் தாழ்ந்து போவாய். நீ உயர வேண்டுமானால் உன்னை தாழ்ந்தவன் என்று சொல்பனின்றும் தள்ளி நில். அவனை உன் வாழ்க்கையினின்றும் அகற்றிவிடு.
      உன் சக்தியை வீண் கோஷம் போடுவதிலும், அடுத்தவன் பின்னால் சுற்றி வலிமை காட்டுவதிலும் வீணடித்து விடாதே! பெண்ணின் பின்னால் சுற்றியும் வீணடித்து விடாதே!
       உன் சக்தி உன்னை உயர்த்தவும், உன்னைச் சார்ந்தோரை உயர்த்தவும் செலவழியட்டும். ஏற்றத்தாழ்வென்பது உலகின் எல்லா மூலையிலும் என்றும் இருந்து கொண்டிருக்கும். அடுத்தவர் சொல்வதால் நாம் தாழ்ந்தவனாகிறோம் என்றால் அது நாம் நம் மீது நம்பிக்கையில்லாமல் போனால் மட்டுமே நிகழும். இப்படி நான் சொன்னவுடன் கொடுமைகளைச் சுட்டிக்காட்டுவார்கள். அந்தக் கொடுமைகள் நிகழ்ந்ததன் காரணம், அப்போது அவர்கள் கல்வியற்று நம்பிக்கையற்று நின்ற நிலையில் என்பதனை மறவாதே.

      அறிவும், நம்பிக்கையும் பெற்று ஒதுக்க முடியாத சக்தியாக உன்னை உயர்த்திக் கொண்டால் இங்கு அனைத்துச் சமுதாயத்தினரும் உன்னை அரவணைத்துக் கொள்வர். ஆனால் அது மட்டும் போதாது, உன்னோடு சேர்ந்து உன் உறவினர்களும் அவ்வாறான நிலையை அடைந்தால், எண்ணிப்பார். அம்பேத்கர் முதற்கொண்டு இன்றைய நிலையிலும் ஒதுக்க முடியாத சக்தியாக, அனைத்துத் தரப்பினராலும் அன்பு பாராட்டக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதனை உன் அறிவுக் கண் கொண்டு நோக்கு.

    மாற்றங்களை அடுத்தவரிடம் எதிர்பார்க்காதே, அதை உன்னிடத்திலிருந்து துவங்கு.
” மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்”

 இது வெற்றுக் கோஷங்களாலோ, வன்முறையாலோ நிகழாது என்பதனைப் புரிந்து கொள். உன்னை மதிக்காதவனைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவனை உதாசீனப்படுத்து, அவன் முன்னே இமயமாய் மாறி நின்று விடு. வீணாய் அவனை மேடை போட்டுத் திட்டுவதாலோ, இணையதளத்தில் வசை மாறிப் பொழிவதாலோ நீயும் உன்னைச் சார்ந்தோரும் உயர்ந்துவிடமுடியுமா? இப்படித்திட்டினவுடன் ஓடி வந்து கட்டியணைத்து சம்பந்தம் பேசப் போகிறார்களா? மேலும் வெறுப்பு உன் மனதிலும் கொழுந்து விட்டெறியும். வெறுப்புடன் உள்ள மனதில் கலை எப்படி உருவாகும், அறிவு எப்படி விருத்தியடையும்.

அமைதியாய் இரு! அறிவைப் பெருக்கு!
உன்னை உணர் ! உயர்ந்துவிடு!

இக்கட்டுரையை தருமபுரி சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

ஸ்ரீராமன் - இன்றைய தேவை


ஸ்ரீராம நவமி



19.04.2013


     இன்று ஸ்ரீராம நவமி. மனித வாழ்க்கைக்கு உதாரண புருஷனாக வாழந்தவர். காதல்,இல்லற வாழ்க்கை, சகோதர பாசம், அரசியல், நிர்வாகம், சமூக புரிந்துணர்வு, சமத்துவநோக்கு என வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் மனிதன் இப்படித்தான் நடக்கவேண்டும் என சொல்லாமல் தன் வாழ்வினால், செயலால் உணர்த்திய ஒரு மஹா புருஷன். மாற்றங்களை மற்றவரிடத்திலிருந்து எதிர்நோக்காமல் தன்னிலிருந்து நிகழ்த்தி வாழ்க்கையை வரலாறாக பதிவு செய்த வரலாற்று நாயகன்.

     ஸ்ரீராமன் ஒரு காவியத்தலைவனே, அப்படி ஒருவன் வாழ்ந்திருக்க வாய்ப்பேயில்லை என பல அறிவுஜீவிகள் பறைசாற்றலாம். பாரததேசத்தின் பெருமையை உணராதவன், இந்தத் தாய்மண்ணின் வாசனையை ஒரு நாளும் நுகராதவன், அதன் மைந்தர்களின் இயல்புகளை கண்டறியாதவன் இப்படிப்பட்ட ஒருவனால் மட்டுமே ஸ்ரீராமனை சாதரணமான ஒரு காவியத்தலைவனாகவும், அவனது இயல்பை கவிஞனின் அதிகப்படியான புகழ்ச்சியாகக் காணமுடியும். மற்றபடி இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்பவர்கள் ஸ்ரீராமனை இறைவனாகவே கண்டார்கள்.

     இந்த இருவகையான மனிதர்களுமே ஆபத்தானவர்கள். ஒருவன் மண்ணின் பெருமையைக் குறைத்து மதிப்பிட்டு, இம்மண்ணின் மைந்தர்களை தரம் தாழ்த்துவதிலேயே நேரத்தைச் செலவிட்டு சகமனிதர்களையும் தன்னோடு படுகுழிக்குள் தள்ள நினைக்கும் பாதகர்கள். இன்று இறைவனாகக் காண்பவர்கள் அனைவரின் மண்ணின் மைந்தர்கள் என்றோ, அதன் மகிமையை பரிபூர்ணமாக உணர்ந்தவர்கள் என்றோ கருதிவிட முடியாது. ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தால், குடும்ப பழக்கத்தின் காரணமாகவோ ஸ்ரீராமனைத் தெய்வமாகக் காண்கிறார்கள். அந்த வரலாற்று நாயகனின் நிறைகளை பூரணமாக இவர்கள் உணர்ந்தார்களில்லை.

     இவ்வாறானவர்கள் ஸ்ரீராமனின் உயரிய குணங்கள் மனிதர்களுக்கானவை அல்ல அவை தெய்வமான ஸ்ரீராமனால் மட்டுமே செயல்படுத்தக்கூடிய ஒன்றாக நினைப்பவர்கள். விஷ்ணு ஸ்ரீராமனாக, மானுடனாக அவதரித்தது, அற்புதங்கள் நிகழ்த்தாமல் மனிதனாகவே வாழ்ந்தது, மனிதனுக்குண்டான சுகதுக்கங்களை அனுபவித்தது என்று ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்ந்தாலும், மனிதன் அந்நிலையிலும் எவ்வாறு உயரிய குணங்களை தன்னுள் கொண்டு நடப்பது என்பதை செயலில் காட்டவே. மனிதர்கள் இதனை பார்த்து, உணர்ந்து, தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே! அப்படியிருக்க ஸ்ரீராமனின் உயரிய குணங்களை வாழ்க்கையில் பின்பற்றாமல், ஸ்ரீராமனுக்குக் கோயில் கட்டுவதனாலோ, ஸ்ரீராமனுக்குப் பூஜைகள் செய்வதனாலோ எவ்விதப்பயனும் விளையாது. ஸ்ரீராமனது அவதார நோக்கமே மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மாண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதற்காகத்தான் எனும்போது நாம் மற்றெதனினும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

     கண்டதும் காதல் என்பது இன்றைய காலகட்டத்தில் பொருத்தமற்றதாக இருக்கிறது. அதற்குக் காரணம் காமம் என்ன, அதன் இச்சைக்கான காரணம் என்பது சரியான வயதில், சரியானவர்களால் கற்பிக்கப்படாமல் போனதே. காணும் பெண்களையெல்லாம் காமத்துடனே நோக்கும் இக்காலத்தில் இந்த வாக்கியம் அர்த்தமற்றதாகிப் போனது. ஆனால் ஸ்ரீராமன், சீதா விஷயத்தில் இது ஓர் உன்னதமானது. ஸ்ரீராமன் மற்ற பெண்களையெல்லாம் சகோதர பாவத்துடனே கண்டு வந்த போது சீதையை மட்டுமே தனக்கு உரித்தாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கண்டான். சீதையும் ஸ்ரீராமனைக் கண்ணுற்றபோது இவனை நாம் மணாளனாக அடைவோமா என்றெண்ணினாள். இந்தக் கண்டதும் காதல் நிறைவேறியது, காரணம் அவர்கள் மற்றவர்களைக் காமத்துடன் நோக்கியதில்லை.

     இந்தக் காதலை அல்லவா நாம் கொள்ளவேண்டும். இன்றைய ஊடகத்திலேயே பிரமாண்டமான ஊடகமான வெள்ளித்திரை என்ன செய்கிறது? அதன் பிள்ளையான சின்னத்திரை எவ்விதமான காதலை காட்டிக் கொண்டிருக்கிறது. பள்ளிப் பருவத்தில் படிக்க வேண்டிய வயதில் கதாநாயகன் படிப்பினைவிட காதலே முக்கியம் என நினைப்பது, இங்கு அவ்வாறு குறிப்பிடுவது கூட தவறென்றே நினைக்கிறேன்.காமம் என்றே குறிப்பிடவேண்டும். இப்படிப்பட்ட நாயகர்களை ஆதர்ஷ புருஷர்களாக நினைத்து இளைய சமுதாயம் தறிகெட்டுப் போகவேண்டிய நிலை இன்று. ஆதர்ஷ புருஷனாகக் கொள்ள வேண்டிய ஸ்ரீராமன் இளைய சமுதாயம் அறியப்படாத நாயகனாகவே அமைந்துவிட்டான். ஸ்ரீராமன் அறிமுகப்படுத்த வேண்டிய இடம் பள்ளிகளில். அங்கேயே இந்நாயகன் அறிமுகப்படுத்தப்பட்டால் இளைய சமுதாயம் பேராண்மையோடு திகழுமல்லவா?

     இல்லற வாழ்க்கையில் ஏகபத்னி விரதனாக இருந்து தன் மனைவியைத் தவிர மற்ற மாதர் மீது எந்நேரத்திலும் இச்சையெழாமல் உறுதியாக வாழந்தான். வள்ளுவன் கூற்றில் பிறன்மனைநோக்கா பேராண்மை இவனுடையதன்றோ? இன்றைய காலகட்டத்தில் காம இச்சைக்கொண்டு திரியும் மிருகங்களால் பெண்கள் படும் அவதியால் இந்நாட்டின் மாண்பே அல்லவா கேள்விக்குறியாயிருக்கிறது. தன் மனைவி நன்றாய் இருக்கும்போதே பல மணம் புரியும் கேடு கெட்ட ஆண்கள், வேலிதாண்ட நினைக்கும் கருங்காலிகள் இன்று பெருகிப் போயினர். இவர்கள் குறளையும் அறிந்திருக்கவில்லை, குறள்வழி வாழ்ந்த ஸ்ரீராமனையும் அறிந்திருக்கவில்லை. வள்ளுவன் கூறுகிறானே கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத்தக என்று, இங்கு கற்பது என்ன, அனைத்தும் பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்வது என்பது அப்படித்தானே, அதோடு இந்த குறளையும் தேர்வுக்காக மட்டுமே படித்த மாணவன் எப்படி இருப்பான்?

     புரிதல் என்பது இல்லறத்திற்கு மிகவும் முக்கியமானது. திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது என்ன செய்கிறோம்? என்ன படித்திருக்கிறார்கள், எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், எவ்வளவு பொருள் ஈட்டுகிறார்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா இவையெல்லாம்தானே மணமக்களின் தகுதிகளாகப் பெற்றோர்களால் நினைக்கப்படுகிறது, குழந்தைகளின்மேல் திணிக்கப்படுகிறது. குடும்பம், கலாசாரம், பண்பாடு, குணம் இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை, அப்படி ஒன்று இருந்ததே மறந்து போய்விட்டது. இந்த நிலையில் நடக்கும் திருமணம் எவ்வாறான இல்லற வாழ்க்கையைத் தரும். விவாகாரத்தைத் தவிர வேறில்லை. அந்நிகழ்வும் வேதனையான விஷயமாக கருதப்படுவதில்லை.

     அயல்தேசத்து பெண்மணி ஒருவர் இந்தியத் திருமண உறவினை மிகவும் சிலாகித்து எங்களிடம் உரையாடினார். அப்போது பெற்றோர்கள் இந்தியாவில் எவ்வாறு தங்கள் குழந்தைகளின் இல்லற வாழ்க்கை சிறப்பாக நடக்க, பிரிதல் ஏற்படாமல் புரிதல் ஏற்பட, விவாகரத்து ஏற்படாமல் விளைவுகளை உள்வாங்கி விளங்கிக் கொண்டு நீண்ட நல்லதோர் இல்லறத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று வியந்து போனார். அன்று நான் நிச்சயம் இந்த மண்ணின் மைந்தனாகப் பெருமைப்பட்டேன். ஆனால் இன்று பெற்றோர்கள்தான் பல விவாகரத்துகளுக்கு காரணமாக உள்ளார்கள் என்ற நிலையினை நான் உணரும்பொழுது மிகவும் வேதனைப்படுகிறேன். இன்னும் எத்தனை நாள் நாம் முன்னோரின் பெருமையை மட்டுமே பாடிக்கொண்டு இருக்க முடியும், அந்த நிழலிலேயே வாழ்ந்துவிட முடியும்? நாம் அந்த சிறப்புகளை அடைய வேண்டாமா? ராமன் இருக்குமிடமே அயோத்தி என்று வாழ்ந்த சீதையின் மனநிலை எப்படி, ஏகபத்னி விரதனாக இருந்த ராமனின் மனநிலை எப்படி, அற்ப காரணங்களுக்காக பிரியும் இன்றைய தம்பதிகளின் மனநிலை எப்படி? ராமாயணம் இவர்களின் வாழ்வில் அர்த்தம் பொதிந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?

     சகோதரத்துவத்தை அன்றே கடைபிடித்து வாழ்ந்த ஸ்ரீராமனை அல்லாது வெற்றுப்பேச்சாளர்களையல்லவா இன்றைய இளைய சமுதாயம் தலைவனாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமனை வழிகாட்டியாகக் கொண்டால் இளைய சமுதாயத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும்? குகனை சகோதரனாகப் பாவித்தபோதும், விபீஷணனை சகோதரனாகப் பாவித்தபோதும் ஸ்ரீராமன் தன் தம்பி லட்சுமணனைப் போன்றே அல்லவா அவர்களையும் மதித்தான். அந்த சகோதர பாவம்தானே இன்றைய சமுதாயத்திற்குத் தேவை. எந்த பேதங்களுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் சகோதர பாவத்துடன் நோக்கினால் எவ்வாறு பிரச்சினை வரும்? ஆனால் இப்படிப்பட்ட ராமாயணம் சகோதரத்துவம் பேசிய வெற்றுப் பேச்சாளர்களால் இழிவுபடுத்தப்பட்டது, தலைமுறை தலைமுறையாக கற்பிக்கப்பட்டு வந்த நற்பண்புகள் தடைபட்டது. இன்றைய சமுதாயம் செல்ல வேண்டிய வழியைத் தவறவிட்டு வேறு பாதையில் வெகுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு சொல், ஒரு அம்பு என்று வாழ்ந்த ஸ்ரீராமன் எங்கே, நொடிக்கொரு வார்த்தைஜாலம் செய்யும் இன்றைய பேச்சாளர்கள் எங்கே, வெறும் பேச்சை நம்பி இளைய சமுதாயம் ஏமாற வேண்டாம். 
இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம் ஸ்ரீராமனின் அளப்பரிய குணங்களையும் அதனை இன்று கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும். பின்னொரு சமயத்தில் அதனையும் காண்போமே!



   வெறுமனே தூப, தீப, நைவேத்யம் செய்து ஸ்ரீராமனை வழிபட்டோமானால் எந்தவொரு வாழ்த்தையும் ஸ்ரீராமன் நமக்கு அருளப்போவதில்லை, அவனது உயரிய கொள்கைகளைக் கடைபிடித்தொழுகி சமுதாயம் மேம்பட்டால் மட்டுமே அவனது வாழ்த்து முழுமையாகக் கிடைக்கப்பெற்று உலகம் செழிக்கும். இது சத்தியமின்றி வேறில்லை.
 ஜெய் ஸ்ரீராம்

      

    

வியாழன், 21 மார்ச், 2013

எம் தமிழ் சொந்தங்கள்


ஈழத்தமிழர் பிரச்சினை.

நான் எதிர்பார்த்தது போலவே மாணவர்களின் போராட்டத்தின் வாயிலாக, மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டி தஙகள் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றிருப்பவர்கள் யார்? இங்கு என்ன மாதிரியான சிந்தனைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.  இது சரிதானா?

இங்கு முன்வைக்கப்பட வேண்டியவை எவை?

1.  இந்திய அரசால், தமிழக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, இருப்பிடம், உணவு,  மருத்துவ வசதி ஆகிய விஷயங்களில் உடனடியாக கவனம் செலுத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

2. உடனடியாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

3. மேற்கண்ட விஷயங்களில் ஐ.நா மேற்பார்வையிட அனுமதித்தல்

4. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நியாயமான விசாரணை ஐ.நாவால் நடத்தப்பட இந்தியா இலங்கையை சம்மதிக்க வைத்தல் வேண்டும்

5. ஆசியப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டுமெனில் இந்தியா சில உறுதியான முடிவுகளை நட்போடு எடுத்தேயாக வேண்டும். ஒரு நட்பு நாட்டை பகை நாடாக அறிவிப்பது என்பது தீர்வாகாது. அதே நேரத்தில் நட்பு நாடு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் அமைதி காப்பதும் சரியான தீர்வல்ல.

அனைத்து எதிர்கட்சிகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வேண்டாம் என்றிருக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய நம் பிரதிநிதிகள் சொல்வதை நம்புவோம். சரி இப்பிரச்சினைக்கு மாற்றான தீர்வு என்று ஒரு முடிவினை எடுத்திருந்தால் அவர்கள் மீது நாம் நம்ம்பிக்கை வைக்கலாம். தீர்வை நோக்கி செல்ல அவர்கள் கூடியது போன்று தெரியவில்லை. யாரையோ சமாதானப்படுத்த அல்லது நாங்களும் ஏதோ செய்து கொண்டுதானே இருக்கிறோம் என்பதாக மக்களை நம்பவைக்க கூடியது போன்றதொரு தோற்றத்தினையே தற்போது நான் காண்கிறேன்.

இப்பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு என்றொரு கோரிக்கை வந்துள்ளது, தமிழீழம் அமைய வேண்டும் என்றொரு கோரிக்கையும் வந்துள்ளது. இவ்விரண்டும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையா அல்லது புலிகளின் கோரிக்கையா அல்லது நம் மாணவர்களின் கோரிக்கையா?

ஏன் இந்த கேள்வியை நான் முன்வைக்கிறேனென்றால் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக தற்போது யார் செயல்படுகிறார்கள்? அவர்கள் ஏதும் இவ்வாறான கோரிக்கையினை வைத்திருக்கிறார்களா? எனக்கு இதைப்பற்றித் தெரியாததனாலேயே இக்கேள்வி.

ஆனால் இந்த கோரிக்கையின் பின்னணியில் தனித்தமிழக ஆதரவாளர்கள் இருந்திருந்தால்,மாணவர்கள் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கும் வேளையில் அவர்கள் அறியாமலே இது திணிக்கப்பட்டிருக்கிறதா?

இங்கு தேசிய சிந்தனை, இந்திய ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசுபவர்களும் கூட சிலர் தமிழீழம் என்றும், புலிகள் என்றும் பிதற்றுகிறார்கள். ஈழத்தமிழ் வரலாற்றில் புலிகளின் பங்களிப்பை யாரும் மறைத்துவிட முடியாது, கூடவும் கூடாது. ஆனால் அந்தக் கொடியை தாங்கிப்பிடிக்க வேண்டியதன் அவசியம் என்ன. ராஜபக்ஷேவுக்கு புலிகள் அழியவில்லை எங்கள் உருவத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லி உசுப்பேத்தவா?

இந்தியாவிற்கு இறையாண்மை என்று ஒன்று இருக்கிறதென்றால் உலக நாடுகள் அனைத்துக்கும் அது பொதுவானதுதானே? இந்தியா உடையக்கூடாது ஆனால் இலங்கை உடைய வேண்டும் என்றால் அது சரியானதுதானா? எனக்குப்புரியவில்லை. இப்படி உடைத்துக் கொண்டுபோன, நாம் உடைத்துப் பிரித்த பாகிஸ்தான், பங்களாதேஷின் இன்றைய நிலை என்ன? அதனால் நமக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் என்ன?

உடைத்துப் பிரித்தல் மேற்கத்திய சிந்தனை, சேர்த்துப் பார்த்தல் இந்திய சிந்தனை. எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இலங்கை சிதறுண்டு அங்கு மேலும் பகைநாட்டினர் கூடாரம் கொண்டு வடக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே பங்களாதேஷ், தெற்கே புதிதாக இலங்கை ஒன்று எதிரியாக வேண்டும் என்பதா நம் நிலைப்பாடு.

தனித்தமிழீழத்தினைவிட தன்னாட்சி உரிமை கொண்ட தமிழர் தலைமையிலான தமிழ் மாநில அரசு அமைய வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. என் எதிர்பார்ப்பென்ன இறுதி முடிவா? இதனை முடிவு செய்ய வேண்டியது ஈழச் சகோதரர்கள்தானே, என்னைவிட அந்நிலத்தினை முழுதுமாய் அறிந்தவர்கள் அவர்கள்தானே? நான் சொல்வது இந்தியாவிற்கும் ஈழத்திற்குமான பாதுகாப்பான ஒரு நல்லுறவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன்.

நம் குழந்தை உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலோ, ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ நமது உடனடி கவனம் அதனை மருத்துவமனையில் சேர்த்து தகுந்த சிகிச்சை அளித்து நல்லபடியாக வீட்டிற்கு அழைத்து வருவதில்தானே இருக்கும்.

அதனைத் தவிர்த்து விபத்து நடந்த இடத்தில் அமர்ந்து வாகனங்களை தடை செய்யவோ, சாலை பாதுகாப்பு விதிகளை அமுல்படுத்தக் கோரியோ போராடிக் கொண்டிருக்க மாட்டோம். நம் குழந்தைசரியான பிறகு மீண்டும் அது போல் நிகழாதிருக்க என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து செயல்படுத்த முனைவோம்.

அதுபோல இன்றைய நிலையில் உடனடியாக ஈழத்தமிழனுக்கு, நம் தொப்பூழ்க் கொடி உறவுக்கு என்ன தேவை எனபதனை அறிந்து முதலில் அதனை அல்லவா தீர்க்க வேண்டும், மத்திய அரசை அதற்கல்லவா வலியுறுத்த வேண்டும்.

அதனைத் தவிர்த்து ஓநாய் அமெரிக்கனுக்கு பின்னால், அவன் கொண்டு வரும் உப்புச் சப்பில்லாத தீர்மானத்தினை ஆதரிக்கக் கோரி போராட்டம் நடத்துவதில் என்ன பயன். அவனுக்கு இலங்கையில் இராணுவத்தளம் கிடைக்கவில்லை, அதற்கு இலங்கையை மிரட்ட ஓர் ஆயுதம் எடுத்துள்ளான். மனிதாபிமானம் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது. தாலிபான்களை ருஷ்யாவிற்கு எதிராக வளர்த்து இன்று ஆப்கானிஸ்தான் ஒரு தாழ்நிலையிலிருக்க அவர்களின் ஆதிக்க வெறிதானே காரணம். ஈராக் போரில் என்ன மனிதாபிமானத்தோடு செயல்பட்டார்களா? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது. ஆட்டுக்கு புரிந்திருக்கும், ஆட்டின் தோழனுக்கு?

ஈழத்தமிழனுக்கு தாய்நாடு ஸ்ரீலங்காதான், அங்கு அவன் உரிமையுடன் வாழும் நிலை அமைய வேண்டும். முதல் விஷயமாக இந்தியா செய்யவேண்டியது

முள்கம்பிகளுக்கு பின்னால் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த ஊரில் குடியமர்த்த இல்ங்கையை வலியுறுத்துவது.

ராணுவத்தைக் குறைத்து தமிழர்களுக்குள்ள பயத்தினை நீக்க வலியுறுத்துவது. முற்றிலுமாக ராணுவத்தினை நீக்குவதற்கு இலங்கை அரசு உடன்படாது, மீண்டும் புலிகளின் ஆதிக்கம் உருவாகிவிடுமோ என்ற தயக்கம் இலங்கை அரசுக்கு இருக்கும். இல்லையென்றாலும் நம் தமிழக அரசியல்வாதிகள் உருவாக்குவார்கள்.

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது.

முதலில் இந்த கோரிக்கைகள் நிறைவேறினாலே ஈழத்தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்களே. பின்னர் படிப்படியாக அவர்களின் உரிமையை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்குவதி இந்திய அரசு உறுதி செய்யலாமே?

இந்திய அரசை இதற்கு வலியுறுத்த வேண்டும். இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் அதை எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. எதிர்கட்சிகள் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இதனைக் கையாள வேண்டும். ஏற்கனவே மத்திய அரசின் ஒருதலைபட்சமான அணுகுமுறையே தமிழர்களின் உணர்வு பொங்குவதற்கு காரணமாக இருக்கலாம்.

ஈழத்தமிழர்கள் விரும்புவது போராட்டங்களையோ அல்லது போர்களையோ அல்ல. அமைதியை. அந்த அமைதி அங்கு ஏற்பட இந்திய தமிழ்ச் சமூகம் உதவி புரிய வேண்டும். முக்கியமாக இந்திய அரசு இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஈழத்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்ற எம் நட்புகளும் அதனையே விரும்புகிறார்கள் என நம்புகின்றேன்.

என் நெஞ்சில் கொடுமைகளின் வேதனை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.எனது வேண்டுதல்களெல்லாம் மீதமிருக்கும் ஈழத்தமிழர்களாவது உயிருடன், நலமுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே.

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்.






புதன், 6 மார்ச், 2013

மகளிர் தினம் ஒரு பார்வை



மார்ச் – 8 மகளிர் தினம்.

ஒரு ஆண் கல்வியறிவு பெற்றால் அது ஒரு ஆணுக்கு மட்டுமே மாற்றப்படும்.ஒரு பெண்ணிற்கு கல்வியறிவு கிடைக்கப்பெற்றால் அது ஒரு சந்ததியையே மாற்றிவிடும்.
     ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்கென ஒதுக்கப்பட்டு அன்று மட்டுமே அதனை உணர்வதும் அதன்பின் அதனை மறப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இவற்றில் நிறைய நிகழ்ச்சிகள் அரசாலும், சமூக நிறுவனங்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்திலும் மிகச் சிறந்த அறிவாளிகள் உரையாற்றுகிறார்கள். அருமையான் உரைகள். நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள், இவையெல்லாம் நடந்துவிட்டால் நமது தேசமும் உலக சமுதாயமும் எவ்வளவோ முன்னேறிவிடுமே என்று. ஆயின் நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன?
     சூடாகச் சாப்பிட்ட வடையின் சுவை நம் நாவிலும், எண்ணத்திலும் நிற்கும் நேரம் கூட இந்த உரைகளின் தாக்கம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.
     வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம். இப்பொழுதே களைகட்டிவிட்டது. பல்வேறு சமூக அமைப்புகளும் விதம்விதமாக நிகழ்ச்சிகளை நடத்தப்போகின்றன. மகளிர் பெருமை பேசப்போகின்றன. சென்ற ஆண்டுகளிலும் இது நடந்ததுதானே? பின்னர் ஏன் வருடம் முழுதும் மகளிர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மகளிரை ஒரு நாள் மட்டுமே மதித்தால் போதுமா?
     இந்த தேசம் மகளிரை மதித்து வந்த தேசம்தானே. இந்த நாட்டினை, புண்ணிய நதிகளை பெண்ணின் அம்சமாகக் கண்டு வந்த சமூகம்தானே? அன்றில்லாத அளவுக்கு இன்றைக்கு மட்டும் ஏனிந்த நிலை.
     பெண்ணினை காமம் கொண்டு நோக்காத ஆண்மகன் எந்தவொரு நாளிலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அது இயற்கை. ஆயினும் அதனையும் தாண்டி ஒரு கட்டுப்பாடோடுதானே இந்த சமுதாயம் வாழ்ந்து வந்தது? இன்று மட்டும் ஏன் அந்த கட்டுப்பாடு இல்லாமல் போனது. வயது வித்தியாசமே இல்லாமல் குழந்தையோ, மூதாட்டியோ காமம் கொண்டு நோக்கும் காமக்கொடூரன்கள் மிகுந்து போயினரே ஏன்?
     எங்கெங்கு காணினும் பெண்ணை காமக் கண்ணோடு சித்தரிக்கும் காட்சிகளே நிறைந்து கிடக்கின்றன். அது எந்த பொருளாயினும் அதன் அருகில் காம உணர்ச்சியினை தூண்டும் விதத்தில் ஒரு பெண்ணின் படம் இருந்தால் மட்டுமே அந்த பொருள் விற்கும் என்ற எண்ணம் பொருளை விற்பவனுக்கும், வாங்குபவனுக்கும், விளம்பரம் தயாரிப்பவனுக்கும் எப்படி உருவானது. வாங்குபவன் பொருளின் தேவையையோ, தரத்தினையோ கருத்தில் கொள்ளாமல் விளம்பரத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு பொருளினை நுகரும் நிலைக்கு வந்தது ஏன்?

     இந்த விளம்பரங்களை கணவனோடு உட்கார்ந்து தொலைக்காட்சியில் காணும் பெண்ணுக்கும் இந்த விஷயம் எந்தவித உறுத்தலையும் உண்டாக்காதது ஏன்? அது மட்டுமா, சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் ஒரு கேள்வியினை முன்வைத்திருந்தார். உங்கள் இல்லங்களில் கொலைகாரர்களையும், மற்ற குற்றவாளிகளையும் அனுமதிப்பீர்களா என்று. இல்லையென்ற பதிலை யாரும் கூறியிருந்தால் அனைவரும் முட்டாள்களே. தொலைக்காட்சித் தொடர்களில் எத்தனை விதமான குற்றவாளிகள், அத்தனை பேரையும் நம் இல்லங்களில் அனுமதிப்பதோடு அவர்கள் பேச்சுகளையும் அல்லவா கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
     இதனை நாம் உணர்ந்திருக்கிறோமா, உணர்த்தப்படும்போது அதிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்கிறோமா? இதில் பெண்களை எப்படியெல்லாம் கொடுமையாக காட்டமுடியுமோ அந்த எல்லையையும் தாண்ட ஒவ்வொரு தயாரிப்பாளரும் போட்டியிடுக் கொண்டுள்ளார்கள். வேதனையான விஷயம் இந்த தொடர்களுக்கெல்லாம் அதிகபட்ச பெண் ரசிகர்கள். தயாரிப்பாளர்கள் சொல்வதோ நடப்பதைத்தானே காட்டுகிறோம் என்று, பார்க்கும் பெண்ணோ மகளிர் அமைப்புகளோ இதனை கண்டு கொள்வதாகத் தெரியவில்லையே?
     இங்கு திருமணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்குமாயென்றிருந்தது. பின்னர் குடும்பம், ஜாதி, மதம் எனப் பல காரணிகள் இதனைத் தீர்மானித்தன.  இன்றைய நிலை என்ன? படிப்பும் படிப்பும், பணமும் பணமும் திருமணம் செய்து கொள்கின்றன. குணம் என்ற ஒன்று எந்த மதிப்புமில்லாமல் போய்விட்டது.
     அதிகம் தொலைக்காட்சி காணும் பழக்கமில்லை எனினும் அதனைச் சில நல்ல விஷயங்களுக்காக மட்டுமாவது வேண்டுமே என வைத்துள்ளேன். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நான் கண்ட ஒரு விளம்பரம். ஒரு லேமினேஷன் தொடர்பானது அது. மனைவி கணவனது வீட்டிற்குள் நுழைகிறாள். உட்புகும்போதே விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டாகிவிட்டதா என்ற கேள்வியோடு. வரவேற்கும் கணவன், என்ன அவசரம் காபி குடிக்கலாமே என்கிற கேள்வியோடு உள்ளே திரும்பிச் செல்கிறார். மனைவியின் கண் அங்கு வீடு புதியதாக மாற்றப்பட்ட்தைக் கண்டு அதிலேயே லயித்துப் போகிறார். இதெல்லாம் எப்போது மாற்றப்பட்ட்து என்று கேட்கிறார். இதோ விவாகரத்துப் பத்திரம் கொண்டு வருகிறேன் என்று செல்கிறார். விவாகரத்து அவசியமா என்ற கேள்வி மனைவியிடமிருந்து. இந்த மாற்றத்தை உண்டாக்கியது அந்த புதிய பொருள்கள்.
      
     இங்கு ஒரு மனித உயிரின் குணநலனும் பண்பினையும் விட இல்லற வாழ்க்கைக்கு பொருளும் பணமும் மட்டுமே முக்கியம் என்ற ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. இதுவா நம் தேசத்துப் பெண்களின் குணம்? இது போற்றப் படவேண்டிய ஒன்றா? இந்த விளம்பரம் கண்டபோது நானும் என் குடும்பத்தினரும் மிகவும் வருந்தினோம். எம் தேசப் பெண்களுக்கு இந்த குணம் இருக்காதே, அவர்கள் பண்பினையும், மாண்பினயும் மதிப்பவர்களாயிற்றே, இப்படி ஒரு சிந்தனையில் ஏன் படம் பிடித்தார்கள் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
தொலைக்காட்சிகளும் தங்களுக்கென்று எந்த ஒரு கோட்பாட்டினையும் கொள்ளாமல் பணம் ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு நிகழ்ச்சிகளை நட்த்திக் கொண்டிருக்கின்றன், அரசுக்கும் இதனைப்பற்றிய எந்தவொரு கோட்பாடுமில்லை.

இச்சிந்தனை சிறிது சிறிதாக நம் அனைவரின் மனதிலும் பல வருடங்களாக பதிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் அருள் சார்ந்த வாழ்க்கையிலிருந்து பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறோம்.
இந்த மண்ணிற்கென்று ஒரு பெருமை உள்ளதென்றால் அதற்கு முழுக்காரணமாக இந்த தேசத்தின் அன்னையரை மட்டுமே காரணம் என நான் உறுதிபடக் கூறுவேன். ஆனால் இன்று பாரத்த்தின் பெரும்பாலான மகளிர் இப்படி பொருள் சார்ந்த வாழ்க்கைக்கல்லவா மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் உயர்ந்த விஷயம், நீங்கள் நினைப்பது போல் அருள் சார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது.
     இந்த சூழலில் வளர்த்தெடுக்கப்படும் ஆண்மகனிடம், மனிதாபிமானத்தினயும், பெண்களிடத்தே அவனுக்கு மாண்பிருக்கும் என்றும்  எப்படி எதிர்பார்க்கமுடியும். எதிர்பார்க்க இந்த சமூகத்திற்கு என்ன தகுதியிருக்கிறது. உடனே குற்றவாளிகளுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக என் மீது பாயாதீர்கள். இங்கு நான் மகளிரை மட்டுமே இதற்கு காரணமாக முன்னிறுத்தவில்லை, ஒட்டுமொத்த சமுதாயமும் இதற்கு உடந்தையென நான் காண்கிறேன்.
     இது மகளிர் தினத்துக்கு மட்டுமல்ல, அன்னையர் தினத்துக்கும், தந்தையர் தினம் அவற்றுக்கும் இதே நிலைதான். நிறைய பேருக்கு அன்றுகூட பெற்றோரை காப்பகத்தில் சென்று காண நேரமிருக்காது.
     அறிஞர்களே, மகளிரே, மகளிர் தினத்தினைக் கொண்டாடும் முன் நாமிருந்த நிலையென்ன, இன்றிருக்கும் நிலை என்ன என்பதை சற்றே சிந்தியுங்கள். பாராட்டும், ஏச்சும் இங்கு முக்கியமல்ல, சிந்தனையும், தகுந்த மாற்றமுமே இன்றைய தேவை. மாற்றத்தினை மற்றவரிடத்தே தேடாதீர்கள், கேட்காதீர்கள். உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள். ஒரு சிந்தனையை கடைபிடிப்பவன் சொல்லும்போதுதான் அந்த சொல்லில் ஆன்ம பலம் இருக்கும், அப்பொழுதுதான் அது சமுதாயத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
     பெண்கள் இந்த தேசத்தின் கண்கள் என்பது சத்தியம், அந்த கண்கள் சமூகத்தில் நடக்கும் நன்மை தீமைகளை கண்டறிந்து தன் சந்ததிக்கு சரியானதைக் கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த தேசம் தன் இழந்த பெருமையை அடையமுடியும். மேற்கத்திய சிந்தனையால் கட்டப்பட்டிருக்கும் எம் தேசப் பெண்களின் கண்களின் திறக்க எந்த ஆணுக்கும் சக்தியில்லை, அதை அவர்களேதான் கழற்றியெறிய வேண்டும். ஏனெனில் இது வலிந்து கட்டப்பட்டல்ல கட்டல்ல, நயவஞ்சகமாய் கட்டப்பட்டது, தொடர்ந்து இறுக்கப்பட்டும் வருகிறது. எல்லாம்வல்ல ஆதிசக்தி எம் தேசப்பெண்களுக்கு தடைகளை உடைத்தெறியும் சக்தியினை அளிப்பாள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.