செவ்வாய், 16 ஜூலை, 2013

உன்னை உணர்! உயர்ந்துவிடு!

     இளவரசன் மரணம் என்பது மிக்க துயரத்தை ஏற்படுத்திய ஒன்று. அது மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் என்னுள் சில எண்ணங்கள். இவர் சாதிமறுப்பு போராளி என்று பட்டம் சூட்டப்பட்டிருக்கிறார், மேலும் பல இளைஞர்கள் இவர் வழியில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள்.

     இளைஞர்களே சிந்திப்பீர் அன்னாரது திருமணத்துக்குப்பின் ஏற்பட்ட நிலை என்ன இரு சமுதாயத்து மக்கள் மோதிக்கொண்டனர், எண்ணற்ற பொருளிழப்பு, மன அமைதியின்மை, ஜாதி என்ற எண்ணம் இரு சாராரிடத்தும் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. நன்கு கவனிக்கவும் இந்த நிகழ்வு சாதியை மறுக்கும், மறக்கும் மனநிலைக்கு மக்களைச் செலுத்தவில்லையே, மாறாக ஜாதியை சிறு குழந்தைகள் மனதிலும் ஆழமாகப் பதித்துவிட்டதே. மாநிலம் முழுதும் ஜாதியை மையம் கொண்டு புயலென அரசியல் வாதிகள் பயணம் செய்தார்களே?  இருதரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இதைத்தான் எதிர்பார்த்திருந்திருப்பார்கள், அவர்கள் இந்தத் தீயில் பல நாள் குளிர் காய்வார்கள்.
     இளவரசனின் தாய், அவரது மனைவி திவ்யா, திவ்யாவின் தாய் இவர்களது மனநிலையை எண்ணிப்பார்க்க, உண்மையாய் தோள்கொடுக்க இந்த அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள். அந்த ஜீவன்களை நினைந்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். பழைய நாறிப்போன மீடியாவோடு, மிகவும் நாற்றமெடுத்த இந்த இணைய ஊடகமும் இவர்களை வைத்து பிழைப்பு நடத்துவார்கள், பொழுது போக்குவார்கள். இளவரசன் போன்றதொரு மகனை இழந்த தாய்க்கு இன்னொரு இளவரசன் கிடைக்க முடியுமா? வாழ்க்கையை ஜாதி அரசியலில் தொலைத்த திவ்யாவிற்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்குமா? சிந்தியுங்கள்.
     மூர்க்கமான போராட்டம், ஆயுதம் ஏந்திய போராட்டம் நிச்சயமாய் தீர்வல்ல. எண்ணத்தில், பேச்சில், செயலில் மாற்றம் ஏற்பட்டு சமுதாயம் மாறவேண்டும். அதை அடைய இன்றைய நடைமுறை சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொள் இளைஞனே!  மிகவும் இளவயதில் கொள்ளும் காதல் பிரச்சினையைத் தாங்கும் சக்தி கொண்டதல்ல என்பதனையும் புரிந்துகொள். சாதியை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருப்பவனின் சந்ததியின் ஜீனிலும் ஜாதி இருக்கும். காதல் மாயையில் மறைந்திருந்தாலும் பின்னர் தலைகாட்டும். அது சரியான வழியல்ல.
   அம்பேத்கர் சொன்னது போல கல்வி பெறுவதை மட்டுமே லட்சியமாகக் கொள், உன்னைப் போல் அறிவாளி இல்லை என்ற நிலை கொள், அறிவார்ந்த சமுதாயமாக உன்னைச் சுற்றியிருப்போரை மாற்று. உன்னைச் சார்ந்தோரே உயர்ந்தோர் என்ற எண்ணம் கொள்.

     மேலும் இங்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் சில குறிப்பிட்ட இனத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள், தலித் என்ற பெயரில் அழைப்பதை மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் அரசியலில் பிழைப்பு நடத்துபவர்கள். அன்றைப் போல் இன்று இல்லை. இன்று உனக்கு கல்வி கிடைக்கிறது, நிறைய உதவிகளைச் செய்ய அரசு இருக்கிறது. சமுதாயத்திலும் சாதியை மறந்த நண்பர்கள் உன்னோடே உண்டு. இந்த நிலையில் அடுத்தவன் சொல்வதைக் கேட்டு நான் தாழ்ந்தவன் என்ற நினைப்பை உன் மனதில் வளர்க்காதே. விதையை யார் விதைத்தாலும் நீக்கிவிடு. நீயும் உன் பெற்றோர்களும் உயர்ந்தவர்கள், நல்ல பாரம்பரியம் மிக்கவர்கள், இந்த பாரதத்திருநாட்டில் பிறந்தஎவனொருவனும் தாழ்ந்தவன் இல்லை என்ற எண்ணத்தினை உன் மனதில் உறுதியாய் பற்று.

     உன் எண்ணங்களில் தீயின் சுடர் பிரகாசிக்கட்டும், அது தீப ஒளியினைப் போல் அடுத்தவர்க்கு வழி காட்டுமாறு உன் வாழ்க்கை இருக்கட்டும். உன் எண்ணத்தின் ஜ்வாலை கண் வழியே வெளிப்ப்ட்டு அடுத்தவரின் வாழ்க்கையில் இருள் உண்டாக்குமாறு இருந்துவிடக் கூடாது. அடுத்தவரில் உன் குடும்பமும் அடங்கியுள்ளது நண்பனே.

    அறிவு, அறிவு, அறிவு அது ஒன்றே உன் தேடலாய் இருக்கட்டும். இந்த பாரதபூமி படைத்துள்ள அத்துணை அறிவார்ந்த விஷயங்களையும் அறிந்துகொள். அதனை உன்னைச் சார்ந்தோர்க்கு கொடுத்திடத் தயங்காதே! உன்னைச் சார்ந்தோரையும் உன்னைப்போல் உயர்த்து. அடுத்தவர்களால் உன்னை உயரவைக்கமுடியாது.
     நீ உயர்ந்தவன் என்று நீ உணராத வரை யாராலும் உன் நிலைமையை மாற்ற முடியாது.உன்னை தாழ்ந்தவன் என்று சொல்பவன் முன்னால் மேலும் தாழ்ந்து போவாய். நீ உயர வேண்டுமானால் உன்னை தாழ்ந்தவன் என்று சொல்பனின்றும் தள்ளி நில். அவனை உன் வாழ்க்கையினின்றும் அகற்றிவிடு.
      உன் சக்தியை வீண் கோஷம் போடுவதிலும், அடுத்தவன் பின்னால் சுற்றி வலிமை காட்டுவதிலும் வீணடித்து விடாதே! பெண்ணின் பின்னால் சுற்றியும் வீணடித்து விடாதே!
       உன் சக்தி உன்னை உயர்த்தவும், உன்னைச் சார்ந்தோரை உயர்த்தவும் செலவழியட்டும். ஏற்றத்தாழ்வென்பது உலகின் எல்லா மூலையிலும் என்றும் இருந்து கொண்டிருக்கும். அடுத்தவர் சொல்வதால் நாம் தாழ்ந்தவனாகிறோம் என்றால் அது நாம் நம் மீது நம்பிக்கையில்லாமல் போனால் மட்டுமே நிகழும். இப்படி நான் சொன்னவுடன் கொடுமைகளைச் சுட்டிக்காட்டுவார்கள். அந்தக் கொடுமைகள் நிகழ்ந்ததன் காரணம், அப்போது அவர்கள் கல்வியற்று நம்பிக்கையற்று நின்ற நிலையில் என்பதனை மறவாதே.

      அறிவும், நம்பிக்கையும் பெற்று ஒதுக்க முடியாத சக்தியாக உன்னை உயர்த்திக் கொண்டால் இங்கு அனைத்துச் சமுதாயத்தினரும் உன்னை அரவணைத்துக் கொள்வர். ஆனால் அது மட்டும் போதாது, உன்னோடு சேர்ந்து உன் உறவினர்களும் அவ்வாறான நிலையை அடைந்தால், எண்ணிப்பார். அம்பேத்கர் முதற்கொண்டு இன்றைய நிலையிலும் ஒதுக்க முடியாத சக்தியாக, அனைத்துத் தரப்பினராலும் அன்பு பாராட்டக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதனை உன் அறிவுக் கண் கொண்டு நோக்கு.

    மாற்றங்களை அடுத்தவரிடம் எதிர்பார்க்காதே, அதை உன்னிடத்திலிருந்து துவங்கு.
” மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்”

 இது வெற்றுக் கோஷங்களாலோ, வன்முறையாலோ நிகழாது என்பதனைப் புரிந்து கொள். உன்னை மதிக்காதவனைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவனை உதாசீனப்படுத்து, அவன் முன்னே இமயமாய் மாறி நின்று விடு. வீணாய் அவனை மேடை போட்டுத் திட்டுவதாலோ, இணையதளத்தில் வசை மாறிப் பொழிவதாலோ நீயும் உன்னைச் சார்ந்தோரும் உயர்ந்துவிடமுடியுமா? இப்படித்திட்டினவுடன் ஓடி வந்து கட்டியணைத்து சம்பந்தம் பேசப் போகிறார்களா? மேலும் வெறுப்பு உன் மனதிலும் கொழுந்து விட்டெறியும். வெறுப்புடன் உள்ள மனதில் கலை எப்படி உருவாகும், அறிவு எப்படி விருத்தியடையும்.

அமைதியாய் இரு! அறிவைப் பெருக்கு!
உன்னை உணர் ! உயர்ந்துவிடு!

இக்கட்டுரையை தருமபுரி சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். 

1 கருத்து: