ஞாயிறு, 22 ஜூன், 2014

விதைப்பு

        விதைப்பு





        அறிவழகன் தனது அழகிய கருப்பு நிற டெல் மடி கணினியில் தட்டச்சு செய்யத் துவங்கினான். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் தன் சிந்தனைகளை மடிகணினியில் எழுத்துக்களாக இறக்கி வைப்பதும், முகநூலில் ஏற்றி வைப்பதும் அவன் வழக்கம்.

        விடியற்காலை நேரம் தோட்டத்தில் இருந்த சேவல் தன் கொக்கரக்கோவினால் என்னை எழுப்பியது. மாங்குயில்கள் மங்கலமாய் சுப்ரபாதம் இசைத்தன. மெதுவாய் எழுந்து கண்களை துடைத்து முகம், கைகளை தேய்த்து எழுந்தேன். இலேசான சில்லென்ற காற்று உடலைத் தழுவிச் செல்வது ஒரு அற்புத சுகமாய் இருந்தது. கதவு திறந்து வெளியே வர இன்னும் கொஞ்சம் புதிதாக மணமுடித்த மனைவியின் வேகத்தில் காற்று என் மீது மோதியது.

        வேப்பங்குச்சியுடன் பல்துலக்கிக் கொண்டே இயற்கையின் அழைப்பின் உந்துதனினால் வயல்வெளியினை நோக்கி நடை துவங்கினேன். இரவு முழுக்க தன் டெசிபலின் அளவுகளை அளவிட்டுக் கொண்டிருந்த தெரு நாய்கள் அசதியாய் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தன. அவற்றை தவிர்த்து நடையினைத் தொடர்ந்தேன். ஊர் பொது மந்தைவெளியை கடந்து சாலையில் ஏறினேன். கறவை மாடுகளை ஓட்டிக் கொண்டு மந்தைவெளி நோக்கி மக்கள் நடக்கத் துவங்கியிருந்தனர்.

        சாலையைக் கடந்து மறுபுறம் இறங்கி வயல் வரப்பில் நடக்கத் துவங்கினேன். ஏய் யாரது? என்று நெல் வயலுக்கு தண்ணீர் மடை மாற்றிக் கொண்டிருந்த கோவிந்து குரல் கொடுக்க, நாந்தான் கேசவன் என்றேன். தம்பீ நல்லா இருக்கீங்களா? எப்ப பட்டணத்திலேர்ந்து வந்தீங்க என்றார். நேற்று ராத்திரி வந்தேங்க என்று மீண்டும் நடக்கத் தொடங்கினேன். கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது.

        வயல்கள் செம்மைப்படுத்தப்பட்டிருந்தாலும் சுற்றிலும் வேலிக்காத்தான் மரங்கள் அடர்ந்து கிடந்தன. இவை பெரும்பாலும் விறகுக்கும், அதன் காய்கள் ஆடுகளுக்கும் உணவாகும். அதனால் இவை அடர்ந்திருப்பதை மக்கள் வெறுக்கவில்லை. ஆனால் அதன் அபாயம் பெரிய அளவில் அலசப்பட்டிருந்தாலும் இன்னும் இந்த கிராமத்து மக்களின் இதயங்களை அடையவில்லை.

        நான் கால்வாயில் ஓடிக் கொண்டிருந்த நீரில் சுத்தம் செய்து கொண்டு, திரும்பி நடக்கத்துவங்கியிருந்தேன். எதிர்பட்ட நலவிசாரிப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டே வீடு நோக்கி நடக்கத் துவங்கி இருந்தேன். தேநீர்க் கடைகளில் வீட்டு அரசியல் முதல் நாட்டு அரசியலும் ஒவ்வொரு குழுக்களினிடையே விவாதப்பொருளாய்.

        நல்ல கடின காஃபியின் மணம் நாசியைத் துளைக்க அடுக்களை சென்று அத்தையிடம் காஃபிக் குவளையை பெற்றுக் கொண்டு தோட்டத்துக் கிணற்றடி நோக்கி திரும்பின எனது கால்கள். பக்கத்திலிருந்த கொடுக்காய்புளி மரம் எனது பால்ய கால நினைவுகளைச் சீண்டியது. பால்ய காலத்தில் கோடைகாலத்தில் கொடுக்காய்புளி, பனை, பப்பாளி என எங்கள் நண்பர்கள் குழுவின் வேட்டை தொடங்கிவிடும். பின்னர் கிணற்றில் குதிக்கும் நாங்கள் மீன்களோடு மீன்களாக மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் கிடப்போம்.

        கலைந்த தலையும், சிவந்த கண்களும் இடுப்பில் துவாலையும், தலைக்கு மேல் ஜட்டியும் என்று நடந்து வருவோம். நல்ல பசியோடு இருக்கும் எங்களுக்கு உணவைத் தவிர வேறெந்த நினைவும் இருக்காது அப்போது. காஃபியின் கடைசி சொட்டும் தீர என் சிந்தனை கலைந்தது. கேணியில் நீரிறைத்து எனது குளியலை ஆரம்பித்தேன்.

        எழுபதுக்குப் பிறகு வந்த பஞ்சத்தின்போது குடிநீருக்காக அலைய வேண்டியிருந்தது. அப்பொழுதுதான் இந்த இடத்தில் மண்மூடிப் போயிருந்த பழைய கேணியை கண்டறிந்து தாத்தா தோண்டியெடுத்தார். உணவும், சிறிதளவு பணமே அதற்கு செலவானது அப்போது. உள்ளே பழைய செங்கல் கட்டிடமே வலுவாக இருந்தது எங்களுக்கு செலவு மிச்சமாக ஒரு பெரிய காரணம். இளநீரைப் போல் ருசித்தது முதலில் தெளிந்து கிடைத்த நீர். பின்னர் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருந்த பாட்டியின் கால்கள் சிறிது ஓய்வெடுக்க ஆரம்பித்தன.

        அத்தையின் குரல் சிந்தனையைக் கலைக்க துவாலையால் தலையைத் துவட்டிக்கொண்டே நடக்க ஆரம்பிதேன். இட்டிலியும் பூண்டு மிளகாய்பொடியும் காலை உணவாய். அமைதியாய் விள்ளல்களை உள்ளே அனுப்பிக் கொண்டே அத்தையின் கேள்விகளுக்கு பதிலிறுத்தேன். மாமா வெளியூர் சென்றிருந்ததால் அவர் வரும் வரை ஒரு நாள் தங்குமாறு கேட்டார். எனது மென்பொருள் நிறுவன வேலையின் சுமையைக் கூறி மதியமே புறப்பட வேண்டுமெனக் கூற, இவ்வளவு நாள் பொறவு வந்துட்டு மாமாவைப் பாக்காம போனா எப்புடி? அப்படி என்னதான் வேலையோ, ஒரு நாள் கூட தங்க முடியாம என்று புலம்பித் திரும்பினாள் அத்தை.

        ஊரை ஒரு முறை வலம் வந்து, ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள உயர்நிலைப் பள்ளியை நோக்கி நடக்கத் துவங்கினேன். பள்ளிக்கால நினைவுகள் சிந்தனையில் மோதிக் கொண்டிருக்க, டேய் கேசவா எப்ப வந்தே என்ற ரவியின் குரல் நனவுலகிற்கு இழுத்தது. சம்பிரதாய உரையாடலுக்குப் பின் அவனது மிதிவண்டி எனது நடைக்குத் தடை போட்டது. ப வடிவில் அமைந்து,முன் பகுதியில் நிறைய மாமரங்களுடன் இருந்த பள்ளி அந்த மரங்களை இழந்து காங்ரீட் கட்டிடங்களோடு நின்றிருந்தது. விளையாட்டு மைதானத்தில் இருந்த ஆலமரங்கள் மட்டும் இன்னும் நின்றிருந்தன. மீண்டும் ரவியோடு வீடு திரும்பிய என் கண்களில் நீரை வரவழைத்தது நீரில்லாமல் முற்றிலும் வேலிக்காத்தான் மரங்களால் சூழப்பட்டிருந்த ஏரியும் குளங்களும். ஏரியின் மேல் வளைந்தும் நெளிந்தும் நின்றிருந்த பனை, ஈச்ச மரங்களின் சிதிலம் கூட காணக் கிடைக்கவில்லை.


        தனது இயற்கை வளத்தை முழுதுமாக தொலைத்து விடாவிட்டாலும் பெரும்பகுதியை இழந்திருந்தது அந்த சிறிய கிராமம். அந்தச் சூழல் மனதில் இறுக்கத்தை ஏற்படுத்த என்னைத் தாலாட்டிய கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்; மீண்டும் இயற்கை வளத்தை ஏற்படுத்த நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியோடு அத்தையின் சிறு அழுகை கலந்த புலம்பலுக்கிடையே புறப்பட்டேன். பேரூந்தின் புகை கிராமத்தை இருளாக்கியது.

        அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஒன்பதாவது மாடியில் அமைந்த தனது வீட்டில் குழல் விளக்கினால் ஒளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த அறிவழகன், தன் நண்பன் கேசவன் நேற்று சொன்ன விஷயங்களை அப்படியே கணினியில் இறக்கி வைத்திருந்தான். சென்னையிலேயே வளர்ந்திருந்த அறிவழகனுக்கு கேசவன் சொன்ன எதையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கேசவனது வருத்தம் தோய்ந்த வார்த்தைகள் இயற்கையின் மகத்துவத்தை மனதில் ஏற்றியிருந்தது. கணினியிலும் முகநூல்களிலுமே கண்டிருந்த இயற்கை விதைக்காத ஒன்றை கேசவனின் வார்த்தைகள் விதைத்திருந்தன. அறிவழகன் இனி முகநூலில் இயற்கையை விதைப்பதை, வெற்று கோஷத்தை விட்டு கேசவனோடு உண்மையாய் களமிறங்க முடிவு செய்தான்.