செவ்வாய், 24 செப்டம்பர், 2013

அன்பு மகளுக்கு,

அன்பு மகளுக்கு.,,,
        உன்னோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இற்றைச் சூழலில் நமது தேசம் பலவித தாக்குதல்களால் பலவீனமடைந்து இருக்கிறது. அந்த நிலையிலிருந்து அதனை மீட்டெடுக்க இளைய சமுதாயமும், இனி வரும்சமுதாயமும் முயன்றால் மட்டுமே இயலும் என எண்ணுகிறேன். நான் சொல்லும் கருத்துக்களை நீ சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுத்து செயலாக்க வேணுமாய் விரும்புகின்றேன். ஏனெனில் எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவதென்பதிழுக்காம், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்றெல்லாம் வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கிறான்.
        இங்கு எல்லா கருத்துக்களும் நீ விரும்புகிறாயோ இல்லையோ, அது உண்மையற்றதாய் இருந்தாலும் உன் மீது திணிக்கப்படுகிறது. ஆங்கிலம் மட்டுமே அறிவென்பது அதனைப்போன்ற ஒன்று. ஒரு மொழி என்பது நம்முடைய எண்ணங்களை அடுத்தவரோடு பகிர்ந்துகொள்ள பயன்படுவது. உன் எண்ணம்தான் அறிவைத் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய மொழி அல்ல. தாய்மொழி, இது உன் தாய் உன்னைக் சின்ன சிசுவாக கையில் ஏந்திய காலத்தே தன் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உன்னோடு உறவாடிய மொழி. உன் உறவுகளனைத்தும் அந்நேரத்தே அம்மொழியில் மட்டுமே உறவாடத் தொடங்கியிருக்கும். நீ இப்புவியில் பிறந்த காலத்தே உனக்கு முதலில் அறிமுகப்படுத்த ஒன்று. அதன்பின் இன்று நீ படிக்கின்ற காலத்தே எத்தனையோ மொழிகள் அறிமுகமாகியிருக்கலாம். ஆனால் முதன்மையானது என்றால் அது உன் தாய் உனக்குக் கொடுத்த தாய்மொழிதான். அதிலும் நம் தமிழ் உலகத்து மொழிக்கெல்லாம் முதலானது, எனவே இப்பொழுது நீ எப்படி அதனோடு உறவாடுகிறாயோ அதைத் தொடர்ச்சியாக செய். அறிவென்பது மொழியிலல்ல அது உனது உயிர், உணர்வு என்பதை உணர்ந்து கொள்.
        அடுத்ததாக நமக்கென்று ஒரு பண்பாடு, ஒரு கலாசாரம் இவை வழி வழியாக வந்துள்ளது. இன்றைய சூழலில் அரசு, ஊடகம், கல்வித்துறை ஆகியன மிகவும் முயன்று நமது வரலாற்றை நாம் அறிந்துகொள்ளா வண்ணமும், நமது கலாசாரத்திலிருந்து விலகி நிற்கவுமே கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. தமிழனுக்கென்று நீண்ட நெடிய வரலாறு உண்டு. இறை நம்பிக்கை, மனிதம், கட்டுமானம், கலை, இலக்கியம், தொழில் இப்படி நீ எந்த துறையை நோக்கினாலும் தமிழனுக்கு அதில் ஒரு தனித்துவம் இருக்கும். இதில் நீ மறந்துவிடக்கூடாத ஒன்று அது இந்த தேசம் முழுதும் இவனோடே பிணைந்து இயங்கிக் கொண்டிருந்ததை. இந்த தேசத்தின் எந்த மூலை முடுக்குக்கு நீ சென்றாலும் ஏதோ ஒரு விஷயத்தில் நம்மோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு நூலிழை நம் அனைவரையும் கட்டியிணைத்து வந்திருக்கிறது ஒரே தேசமாய், ஒரே மக்களாய். இதில் நாம் தனித்துவமாய் முன்னணியில் இருந்தோமென்பதுதான் உண்மை.
        இந்தப்பண்பாடு கலாசாரம் எல்லாமே வழிவழியாய் உன் தாய் உனக்குக் கொடுத்தது போல, அவள் தாய், அவள் தாய் என ஒவ்வொரு தாயும் பேணி வளர்த்து வந்த ஒரு பொக்கிஷம். அதில் கறை படிந்திருக்கலாம் பல கைகள் மாறி வரும்பொழுது; கறை எங்கிருக்கிறது என்பதை அறிந்து அதை நீக்கும் வழி அறிந்து, அதை நீக்கி அந்த அரும்பெரும் பொக்கிஷத்தை அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உனக்கிருக்கிறது. என்பதை எந்நாளும் மறந்துவிடாதே. தமிழனின் கலாசாரத்தோடே அவனது வரலாறு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கலாசாரத்தை துறந்து விட்டால் வரலாறு காணாமல் போய்விடும்.
        ஒரு நாட்டின் பொருளாதாரம் எங்கேயோ இருப்பதாக நினைத்துவிடாதே, அது அரசின் செயல்பாடுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அப்படி அது மற்ற நாடுகளில் வேண்டுமானால் நிகழலாம். இன்றும் நம் நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவை தாங்கிக் கொண்டிருக்கிறது என்றால் நமது சமூக அமைப்பே காரணம். இன்று தனிமனிதர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தன்னார்வத்தினாலேயே இந்தியப் பொருளாதாரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அரசும், ஊடகமும், மிகப்பெரும் நிறுவனங்களும் இந்தியக் குடும்பங்களை பொருள்சார்ந்து இயங்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றன. நீ எதனால் பல்துலக்குவது, நீ எதை குடிப்பது, உண்பது, உடுத்துவது என பல விஷயங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆசைப்படி நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பர்யங்களை இழிவுபடுத்தி அது நாகரீகமற்றது என்ற ஒரு மாயத்தோற்றத்தினை உண்டாக்கி அதில் இந்நிறுவனங்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன.
        உலகின் அனைத்து பகுதிகளிலும் கற்கால மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே தமிழ்மொழி இலக்கண நூலைக் கண்டுவிட்டது. அப்படியென்றால் தமிழகத்தின் அதோடு இயைந்தே வளர்ந்து வந்துள்ள இந்திய நாகரீகம் எத்துணை உயர்ந்ததாக இருந்திருக்கும். அதனுள்ளே விஷங்களை விதைத்து, நமது நாகரீகத்தினை நாமே வெறுக்கும்படி செய்து அவர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள். அதனை உணர்ந்துவிட்ட நாம் நம்மை இன்னும் மாற்றிக் கொள்ள முயற்சிக்காதது வியப்பளிக்கிறது. உதாரணத்திற்கு நாம் மழையை விரும்பியவர்கள், அதை வேண்டியவர்கள். ஆனால் நாம் படிப்பது என்ன ரெயின் ரெயின் கோ அவே லிட்டில் ஜானி வாண்ட்ஸ் டூ பிளே. இது திணிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது என்று தெரிந்திருந்தும் நாம் அதையே கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஜானி என்ற பெயர் நாகரீகமானதென்றும், வளவன் என்ற தமிழ்ச்சொல் நாகரீகமற்றது என்றும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
        நான் என் பள்ளிக் காலத்தே கண்டிருக்கிறேன் என்னோடு வளர்ந்த சிறுமிகளை. அழகாக பாவாடை சட்டை அணிந்து, பின்னலிட்டு, பூவைத்து, அழகாக சாந்துப்பொட்டிட்டு ஏதோ தேவதைகள் இந்த பூமிக்கு வந்தனவோ, பட்டாம்பூச்சிகள் திடீரென்று சிறுமிகளாய் மாறிவிட்டனவே என்று எண்ணவைக்கும் விதத்தில் இருப்பார்கள். இன்றோ சீருடை என்ற பெயரில் நமது காலச்சூழ்நிலைக்கு ஒவ்வாத உடைகள், அணிகலன்கள். நிச்சயமாக பொட்டு,வளையல், பூ இவையெல்லாம் இருக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தும் கல்வி நிறுவனங்கள். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். நமது ரசனையை, அழகைத் தொலைத்துவிட்டு அழகற்ற ஒன்றிலே செலுத்திக் கொண்டிருக்கிறோம். நீ பள்ளிக்கு இந்த உடைகளில் செல்கையில் ஒவ்வொரு நாளும் நீ இழந்து கொண்டிருப்பதை, நான் இழந்து கொண்டிருப்பதை, இந்த சமூகத்தின் அவலத்தை நினைத்து வேதனை அடைவேன்.
        விளையாட்டு, கலை என்பது இன்று கல்வி நிலையங்களில், ஆண்டு நிறைவு விழாவில் கூடும் முட்டாள் பெற்றோர்களை மயக்கும் ஒரு விஷயமாக, ஏதோ சம்பிரதாயமாக அன்று மட்டுமே நிகழும் நிகழ்வாக, வாழ்க்கையில் முக்கியமற்ற அம்சமாக மாற்றிவிட்டார்கள். நீச்சலோ, கபடியோ எந்த கிராமத்து விளையாட்டும் உன்னை நெருங்க விடாதவாறு கல்வி நிறுவனங்கள் மிகக்கவனமாக காத்து நிற்கின்றன. இவர்கள் கட்டமைப்பை உண்டாக்கிவிட்டார்கள் அந்தக் கட்டமைப்பை நோக்கி அனைவரையும் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறார்கள், வேதனையோடு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன வழி என்று என் மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
       
        பெண்ணுரிமை என்று பேசுகிறார்கள் மகளே, ஒரு திரைப்படப்பாடல் உண்டு, உரிமையோ உரிமை என்று போராடும்போது கடமையோ கடமை என்று காரியம் செய்தாலென்ன என. அது இதற்கு சாலப்பொருந்தும். பெண்ணுரிமை பேசுபவர்கள் தங்கள் மொழியை, கலாசாரத்தை, பண்பாட்டை, சமூகத்திலுள்ள நல்ல விஷயங்களை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு எடுத்துப் போகும் கடமையை மறந்து வேறொரு கலாசாரத்தில் மூழ்கிப்போதல் எவ்வகையில் நியாயம். இந்த தேசம் பெண்களை அடிமைப்படுத்திய நாகரீகம் கொண்டதல்ல. இடைக்காலத்தில் சில குறுகிய மனங்கொண்டவர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம். அந்த மனிதர்களின் அநீதியை எதிர்த்துபோராடி மீண்டும் நமது உண்மையான கலாசாரத்தை நிறுத்துவதில்தான் பெண்ணுரிமை அடங்கியிருக்கிறது. மாறாக நமது பண்பாட்டைத் தொலைப்பதில் அல்ல.
        ஜாதி இது இங்கு பெரிதாகப் பேசப்படும் ஒரு பொருள். அது நீ விரும்பவில்லையென்றாலும், உன்னைத் துரத்தி துரத்தி அரசாங்கம் கேட்கும், உன் ஜாதியைப் பட்டியலிடும். எத்தனை ஜாதிகள் இருக்கின்றன, ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்று பட்டியலிடும். நீ மறக்க நினைத்தாலும் நீ சாகும் வரை நீ இன்ன ஜாதி என்று உன்னை நோக்கி கைநீட்டிக்கொண்டேயிருக்கும் இந்த அரசாங்கம். இதை நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான் வள்ளுவன்; பிறப்பினால் ஒருவன் உயர்வு தாழ்வு அடைவதில்லை; அவன் வளரும்போது உள்ள குணங்களே அவனது நிலையைச் சொல்லும்; எனவே ஜாதியைக் கொண்டு உயர்வு தாழ்வு பாராட்டாதே. மனிதரின் குணங்களைப் பார், இழிவெண்ணம் கொண்டவர்களிடமிருந்து உன்னை அகற்றிக் கொள். உன் தாய் உனக்குச் சொல்லிக் கொடுத்தவைகளை நினைவில் கொள், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்.
        தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால் ஒரு மரம் நடப்பட்டால் அதன் கீழ் எத்தனையோ செடிகளும், உயிரினங்களும் தழைக்க ஆரம்பித்துவிடும். எனவே என்னுள் ஏற்படுகின்ற எண்ணங்கள் உன்னிடம் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால் உன் சந்ததி முழுதும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். மற்றவர்களிடம் நீ மாற்றத்தை உண்டு பண்ண நினைக்காதே. உன் வாழ்க்கையை அவர்களுக்கு செய்தியாக்கு, பாடமாக்கு. நிச்சயம் தனி மரம் கொடுக்கும் பலனை நினைத்து, நிறைய மரம் வைத்து தோப்பாக்கி விடுவார்கள். மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாற்றமில்லாதது.
        ஒரு சமூகம் மாறிவிட்டால் அது செழுமையடைவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால் தீய சக்திகள் ஓடி ஒளிந்துவிடும். நல்ல அரசியலை நல்லவர்கள் உருவாக்குவார்கள். நம்பிக்கை கொள் என்று எனது மனது கூறுகிறது. உன் செயல் அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
        மீண்டும் எனது எண்ணங்களை எழுதுகிறேன். அதுவரை ஆசை முத்தங்களுடன்
                                                                        உனது அன்பு அப்பா.