வெள்ளி, 28 நவம்பர், 2014

அன்புள்ள நண்பனுக்கு

அன்புள்ள நண்பனுக்கு,
                                    

               நலம். அனைவருக்கும் நலமே நாடுகின்றேன். கல்லூரிக் காலத்தில் உனக்குக் கடிதம் எழுதியது. அதன் பின்னர் கடிதம் எழுதுவது என்பது கனவாகவேப் போனது. இன்று மின்னஞ்சல் என வந்து விட்டாலும் கடிதம் எழுதும், கடிதம் வாசிக்கும் சுகம் இன்னமும் என் நெஞ்சில் நிலை கொண்டுள்ளது. சமீபத்தில் நமக்குள் ஏற்பட்ட உரையாடலை மையமாகக் கொண்டு கடிதம் வரைய வேண்டுமென்று விழைய இதோ அது உண்மையாய் நடந்து கொண்டிருக்கிறது.
                       
               உனது குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று நீயும் உன் மனைவியும் குழம்பிப் போயிருப்பதைக் கூறினாய்? அதைத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியும் கூறினாய். நான் சில விஷயங்களைக் கூறினேன். மேலும் என் மனதில் தோன்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த கடிதம் உதவுமென்பது மிக்க மகிழ்ச்சியே !

                        மொழி என்பது நாம் நமது எண்ணங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள உருவான ஒன்று. நம் தாய் நம்முடன் எந்த மொழியில் உரையாடினரோ அந்த மொழியே நம் தாய்மொழி எனப்படுகிறது. இந்த மொழி நமது குடும்ப, சமூக, பாரம்பரிய எண்ணங்களை நமக்குள்ளே பரவச் செய்யும் வேலையையும் செய்கின்றது. எனவே நம் குழந்தைக்கும் நமக்குமான உறவு எந்நாளும் சுமூகமாக நீடிக்க இந்த மொழி உதவும். மாற்று மொழியில் பயிலும் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கருத்துடன் பலவகையில் மாறுபட்டே விளங்கும். இது தலைமுறை இடைவெளி எனச் சொல்லி வெறுமனே தள்ளிவிட எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் தலைமுறையில் ஏற்படுகின்ற மாற்றம் என்பது சிறுகச் சிறுகச் செம்மைப்பட்டு வளர வேண்டுமே ஒழிய பெரிய மாற்றமாக உருவெடுக்க வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். எனவே முதலாவதாக தாய்மொழிவழிக் கல்வி என முடிவெடுப்பது சாலச் சிறந்தது.

            நாம் இருவருமே அரசுப் பள்ளியில் பயின்றவர்கள்தான். நாம் பெற்ற கல்வியறிவு ஒன்றும் மோசமானதில்லையே ? மேலும் கல்வி என்பது தனது மொழித் திறனோடு பல்வகையறிவு பெற்று வாழ்க்கையை பல்விதத்திலும் எதிர்நோக்க நம்மைத் தகுதிப்படுத்தவே. ஆனால் இன்று நடைமுறையில் உள்ள கல்வித் திட்டம் வெறுமனே வேலைக்காரர்களை உருவாக்குவதைத் தவிர வேறு என்ன செய்கிறது. வாழ்க்கையைப் பற்றியோ, நமது பாரம்பரியத்தைப் பற்றியோ, கலாசாரத்தைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ என்ன பெரிதாகச் சொல்கிறது. தமிழோடு விளையாடி பதக்கங்கள் பெற்றது என்ற நிலையை அழித்ததோடு விளையாட்டையும் அல்லவா முற்றிலுமாக ஒதுக்கிவிட்டன இன்றைய பள்ளிகள்.

            இன்று பல பள்ளிகளில் விளையாட்டு தினம் என்ற ஒன்று கடைபிடிக்கப்படுகிறது. அற்றைக்குப் பதினைந்து நாட்கள் முன்னதாக இருந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுத் தினத்தன்று தாங்கள் பயிற்சி பெற்ற விஷயங்களை மாணவர்கள் செய்துகாட்டுவர். அந்நாளைக்குப் பிறகு விளையாட்டு என்பது அவர்களின் பள்ளி வாழ்க்கையிலிருந்து விலகிப் போகும். அதே போல பாட்டு, நடனம் என அனைத்திற்கும் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் சில பாடல்கள், நடனங்களைப் பயிற்சி அளித்து அதற்கு மாணவர்களை தயார் செய்து பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றம் செய்து விடுவார்கள். பெற்றோராகிய நாமும் பிரமிப்பாய் ஆகா நம்ம பையன் என்ன அழகா டான்ஸ் ஆடறான்னு சொல்லிக்கொண்டே வந்துவிடுவோம். உண்மையில் அரைவேக்காட்டுத்தனமான பயிற்சியே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
       
        இதற்கு என்ன காரணம்? நாம் நம் குழந்தைகளை எப்படியெல்லாமோ வளர்க்க வேண்டும் என்று பேராசைப்படுகிறோம்.அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராகிறோம். அதனை தங்கள் வியாபாரத்திற்கு கல்வி நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. நம் குழந்தையின் இயல்பு என்ன? அதன் திறமை என்ன? அதற்கு எந்தத் துறையில் நாட்டமுள்ளது என்பதை கவனிக்கத் தவறுகிறோம். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் நம் குழந்தையை ஏதோ களிமண் போலவும் அதை நமக்குத் தகுந்தவாறு பிசைந்து உருவாக்க நினைக்கிறோமே தவிர அதுவும் ஒரு உயிருள்ள ஜீவன் என்பதை மறந்து விடுகிறோம்.

        நமக்கு நம் குழந்தையை எதை நோக்கி கொண்டு செல்கிறோம் என்ற தெளிவும் இருப்பதுமில்லை. ஒரு சின்ன உதாரணமே நாம் நம் குழந்தையை உயிருள்ள ஒன்றாக பாவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி விடும். 2 1/2 வயதிலேயே பள்ளிக்கு அனுப்பத் துடிக்கிறோம். நம் குழந்தையின் குறும்புகளைத் தொல்லையாகவே நினைத்து செய்யத் துடிக்கிறோம். அந்தக்காலகட்டத்தில் நாம் எப்படி இருந்தோம், நம்மை நமது பெற்றோர் எப்படி நடத்தினர் என்பதை மொத்தமாக மறந்து விட்டோம். துள்ளி தன் விருப்பம் போல விளையாடி களிக்க வேண்டிய குழந்தையை நாம் பள்ளி என்று ஒரு சிறைக்குள் அடைக்கிறோம். அந்தப் பிஞ்சுப் பாதங்களில் சாக்ஸ், ஷூ என்றும், மேலாடையில் இறுக்கிப்பிடிக்க டை என அணிவித்து கொடுமைப்படுத்துகிறோம். நமது சூழலுக்கு உகந்த ஆடையா இது? அந்தப் பூப் போன்ற குழந்தையை இப்படி 
அடைத்து அனுப்புகிறோமே? உண்மையில் உயிருள்ள ஒன்றாக அதை நாம் பாவித்தால் இப்படிச் செய்வோமா?

        நமது உடை அணிதலைக் கலாசாரம் என்கின்றோம். அது எப்படி உருவானது? நமது சூழலை மையமாக வைத்துத்தானே? இப்படி நாம் வெள்ளைக்காரனைப் போல இருக்க விரும்பி நம் குழந்தையின் உடையை மாற்ற நினைப்பது எவ்வளவு மடத்தனம். எத்தனை நாள் தொழிற்சாலையிலிருந்து இல்லம் அடைந்தவுடன் உனது ஷூவைக் கழற்றி எறியும்போது ஒரு விடுதலை உணர்வை அடைந்திருப்பாய். அதைக் கழற்றி எறிகையில் எவ்வளவு வெறுப்பை அதன் மீது பொழிந்திருப்பாய். எனக்கும் அந்த உணர்வு உண்டு. பெரியவர்களாகிய நாமே நமக்கு ஒவ்வாத காலணியை அணியும் போது தவித்த்துப் போகிறோமே குழந்தையின் நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்.

        இது மட்டுமல்ல இயல்பாக இயற்கையோடு விளையாடி நம் குழந்தை கற்றுக் கொள்ளவிருந்த பல நல்ல விஷயங்களை மிகச் சிறு வயதில் பள்ளிக்கு அனுப்புவதனால் தடுத்து விடுகிறோம். நன்கு யோசித்துப்பார் நாம் நம் சிறு வயதில் வயல் வெளியிலும், தோட்டங்களிலும் எவ்வளவு விளையாடி இருப்போம், எத்தனை பூக்கள், தாவரங்கள், பூச்சிகள் என அறிந்திருப்போம். இவற்றை நாம் இயல்பாக விளையாடும்பொழுது கற்றுக் கொண்டவை. நடக்கவும், பேசவும், பழகவும் இயல்பாக சுதந்திரமாக நாம் கற்றவற்றை இன்று குழந்தைகளை ஒரு கடுமையான சூழலில் நிறுத்தி கற்க வைப்பது எந்த வகையில் நியாயம்?

        பெற்றோர்களின் விருப்பத்தினால் இந்த நிகழ்வுகள் அரசுப் பள்ளிகளிலும் புக ஆரம்பித்திருக்கிறது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நம்மைப் பள்ளியில் சேர்க்கும்போது ஒரு கையால் தலைவழியாக மறுகாதைத் தொடச்சொல்வார்கள். தொட இயலவில்லை என்றாலோ குழந்தைக்கு இன்னும் பள்ளிக்கூடத்தில சேர்க்கிற வயசு வரலைன்னு சொல்லி ஆசிரியர் திருப்பி அனுப்பிவிடுவார். இன்று அந்த நிலை மாறிப்போனது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. எனவே உன் குழந்தையை இன்னும் ஒரு வருடம் சென்று பள்ளியில் சேர்க்க முயற்சிப்பது நலம். அதற்குள் நல்லதொரு பள்ளியையும் நீ தேர்ந்தெடுத்து விடலாம்.

        அண்மையில் நான் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்கு மேல் புதியதாக யாரையும் பள்ளியில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆரம்பக் கல்வியில் சேர்பவர்கள் மட்டுமே மேல்வகுப்புகளில் படிக்க முடியும் என்று. ஏன் என்று நான் வினவியபொழுது இங்கு ஆரம்பக் கல்வியில் நாங்கள் அவர்களை சுதந்திரமாக தங்கள் கல்வியைக் கற்க பழக்கப்படுத்துகிறோம். இதனால் வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்ற செயல் ஆறாம் வகுப்பிலிருந்தே இருக்காது. மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இங்கு மேல்வகுப்புக்கு வரும்பொழுது சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று. இப்படி புரிந்து கற்பதை அறிவுறுத்தும் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் திட்டத்தில் சிபிஎஸ்ஸி முறையில் இவ்வாறு உள்ளது. அதேபோல தற்போதைய சமச்சீர் கல்வி முறையிலும் இப்படி உள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் இப்பாடத்திட்டத்தை அப்படி பயன்படுத்துவதில்லை என்பது ஒரு குறைபாடே? அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

        குறைந்த சம்பளத்திற்கு கிடைப்பதால் தகுதிக்குறைவான ஆசிரியர்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் சமூகத்தில் ஆசிரியர் பணி என்பது ஒரு தொழில் அவ்வளவே! அதற்கு மேல் அதன் புனிதத்துவம், சேவை என்ற நிலை பல ஆசிரியர்களிடத்திலே இல்லை. பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாக அது மாறிவிட்டது. இன்று பலரும் அரசு ஆசிரியத் தொழிலுக்குப் போட்டி போடுவது ஆசிரியத் தொழிலின் மீதான ஈடுபாட்டால் அல்ல. அதனால் கிடைக்கும் பலனைக் கருத்தில் கொண்டே. அதனாலேயே ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்தன. பணம் செலுத்திவிட்டால் பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற்றுவிடலாம். இப்படிச் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் கல்வி கற்பித்தால் மாணவ சமூகம் என்ன நிலைக்குப் போகும்?

        ஏன் நாம் நம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்பொழுது எதை மனதில் கொண்டு சேர்க்கிறோம். ஏதாவது பணம் கொழிக்கக்கூடிய தொழில் படிப்பைப் படித்து நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே? எனவே நம் குழந்தை கல்வியறிவு பெற வேண்டும் என்ற நினைப்பே நமக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஒருவனாக அவனை மாற்றுவதே நமது குறிக்கோள். இப்படி ஒட்டு மொத்தமாக நாம் நமது சமூகம் பணத்தின் பின்னால் செல்வதனாலேயே மேற்சொன்ன நிலை ஏற்பட்டுள்ளது. நம்மிடமும் குறை இருக்கும் போது மற்றவர்களை நொந்துகொள்ள நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

        சமூகம் நலன் சார்ந்து இயங்கிய நாம் தனிநபர் உரிமை என்று பேசி தனிநபர் நலன் சார்ந்து இயங்க ஆரம்பித்த காலத்திலிருந்து இது ஆரம்பமாகிவிட்டது. ஒட்டு மொத்த மக்களுக்கான கோரிக்கை என்பதை நீயும் நானும் கேள்விப்படவேயில்லை. இங்கு கேட்கப்படுவதெல்லாம் ஒரு தனி நபருக்காக, பின்னர் ஒரு சாதிக்காக, பின்னர் ஒரு மதத்துக்காக என்று பிரிவினையோடுதான் எதுவுமே கேட்கப்படுகின்றது. போராட்டங்களும் அவ்வாறு மையப்படுத்தியே நடக்கின்றது. அரசியல் பிழைப்போர்க்கு வேறு வழியில்லை. இப்படி சமூகம் பிளவு பட்டு தனித்தனி அடையாளங்களாக இருந்தால்தான் அவர்கள் பிழைப்பு நடக்கும்.

        இவற்றை எந்தப் பள்ளியும் சொல்லித் தரப்போவதில்லை. ஆனால் நம் குழந்தைகள் இவற்றைத் தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதே நண்பா ! எனவே இன்றைய காலகட்டத்தில் பள்ளியை ஓரளவுக்கு நம்ப வேண்டிய நிலை. கற்கும் திறனை ஊக்கப்படுத்தக்கூடிய நிகழ்வுகள் பள்ளி நல்லது. பிரமாண்டங்களைக் காட்டும் பள்ளிகளைத் தவிர்ப்பது நல்லது. அதுவும் குளிர்சாதன அறை, குளிர்சாதன பேரூந்து என்றால் உன் தலையைத் திருப்பிவிடு. அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிகளுக்கும் என்ன வித்தியாசம்?

        இன்று அரசுப்பள்ளிகளில் சேவை, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியர்கள் அருகிப்போயினர். மேலும் பலர் ஒரு சிந்தனை சார்புள்ளவர்கள். ஆசிரியர்கள் நடுநிலையாளர்களாக மாணவர்களை எது சரியென்று அறிந்து கொள்ளத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசும் இவர்களை ஆசிரியர்களாகக் கருதுவதில்லை. ஒரு பணியாளராகவே நடத்துகிறது. கற்பித்தலைத் தவிர பல வேலைகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. பணிச்சுமை அதிகம். தனியார் பள்ளிகளில் இத்தனை குழந்தைகளுக்கு இத்தனை ஆசிரியர் இருக்க வேண்டும், ஓட்டுக் கட்டிடம் கூடாது, அது வேண்டும் இது வேண்டும் என்று கூறும் அரசு அரசுப் பள்ளிகளை விதிவிலக்காகவே வைத்திருக்கிறது. சில பள்ளிகளில் நான்கு மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் இருப்பர், சில பள்ளிகளில் எண்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்த வேண்டிய நிலை.

        தனியார் பள்ளிகளில் இது இல்லாமல் இருக்கலாம், ஆனால் அங்கும் ஆசிரியர்கள் ஒரு பணியாளராகவே பார்க்கப்படுகிறார். ஏன் பெற்றோரும் அப்படித்தான் அவர்களை நோக்குகின்றனர். நாங்கள் பணம் கட்டுகிறோம். நீ படிப்பு சொல்லிக் கொடுக்கிறாய். மொத்தமாக நாங்கள் சம்பளம் கொடுக்கும் வேலைக்காரர்கள் ஆசிரியர்கள் என்ற நினைப்புதான். ஆசிரியர் என்பவருக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்த தேசம் இது ! ஆனால் இன்று இவ்வளவு கீழான் நிலையும், சிந்தனையும் எதனால் ஏற்பட்டது. நமது சிந்தனை, நமது நோக்கம், நமது பாதை, இத்தனையும் நமது மண்ணிற்கானது அல்லாமல் மேற்கத்திய நாடுகளை ஒட்டியே அமைந்ததுதான். என்று நாம் அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ முற்படுகிறோமோ அப்பொழுதுதான் இதற்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படும்.

        தனியார் பள்ளிகள் சிக்கன வாழ்க்கைக்கு நம் குழந்தைகளை பழக்கப்படுத்தாது. பணத்திற்கென்று ஒரு மதிப்பு உண்டு. அதை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்ற விதி உண்டு. வெற்று ஆடம்பரம், பிரமாண்டம் என திரைப்பட மாயை போல மாணவர்களை இவை நடத்திச் செல்லும். அரசுப் பள்ளியில் பெரிய கல்வியறிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாவிட்டாலும் இந்த தீயது நடக்க வாய்ப்பில்லை. எனவே அரசுப் பள்ளியில் நம் குழந்தையை சேர்ப்பதால் செலவு குறைவதோடு, சிக்கனமாக வாழவும் நம் குழந்தை பழகிவிடும். நம்மில் பலரும் இந்த முடிவெடுத்தால் அரசாங்கம் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.

        நம் குழந்தைகளின் மீது எதையும் திணிப்பதைக் கைவிட வேண்டும். அவர்கள் இயல்பான நிலையில் இருக்கும்பொழுது அவர்களின் கற்றல் திறன் நன்றாக இருக்கும். நமது வேலை அவர்கள் எதிர்பார்க்கும் களத்தை உருவாக்க உதவுவதாக மட்டுமே அமைந்தால் போதும். நாம் நம்மால் அடைய முடியாத, அடைய மிகவும் பிரயத்தனப்பட்ட ஒன்றை நம் குழந்தைகள் மூலமாக அடைய நினைக்கிறோம். அதற்காக அவர்கள் மீது பலவித அழுத்தத்தைக் கொடுக்கிறோம். இதுதான் அவர்களை அவர்களது இயல்பு நிலையிலிருந்து வெளியே தள்ளுகிறது. குழந்தை என்ன கற்றுக் கொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அதற்கான சூழல் மட்டுமே நாம் அமைத்துக் கொடுத்தால் அது அவர்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் அவர்கள் அதை நோக்கி நகர்வார்கள்,

        கலாசாரம், மதம் என எதையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. ஆனால் அதைப்பற்றி எதுவுமே தெரியாத சூழல் இருக்கக்கூடாது. அதாவது பண்பாடு கலாசாரம் என்று எதையெல்லாம் கருதுகிறோமோ அந்த செயல்களை நாம் பின்பற்ற வேண்டும். நம்மால் பின்பற்ற முடியாத ஒன்றை, குழந்தைகள் மீது திணிக்க முயலுகையில் நிச்சயம் அவர்கள் அதை விரும்பமாட்டார்கள். நாம் பின்பற்றுபவற்றை கேள்வி கேட்க, சீர்தூக்கிப் பார்க்க அவர்கள் முயல்வார்கள். அதை அனுமதிக்க வேண்டும். அதுவே அவர்களை உண்மையை நோக்கி நகர்த்த முயற்சிக்கும்.

        இங்கு நாம் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறோம். இதனைப் பற்றிய கேள்வி நிச்சயம் எழும். நமக்கு இருக்கும் பிரச்சினை அந்த நம்பிக்கைகளை, வழக்கங்களை எதற்காக கடைபிடிக்கிறோம் எனத் தெரியாததே. தெரியாது என்ற உண்மையை தைரியமாக அவர்களிடம் ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் செய்வதே சரி என வாதிடக்கூடாது. அப்படி நடந்து கொள்ளும்பொழுது எக்காலத்தும் அவர்கள் மூட நம்பிக்கையில் சிக்கி அழியமாட்டார்கள்.

        குழந்தை வளர்ப்பது ஒரு செடி வளர்ப்பது போலத்தான். செடி முளைவிட்டு வரும் வரையில் காத்திருக்க வேண்டும். அந்த சின்ன செடி பூத்து காய்த்து பலன் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு மடத்தனம். ஆனால் இன்று நாம் நமது குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற உடனேயே ஆங்கிலத்தில் பேச வேண்டும், பல பொது விஷயங்கள் சம்பந்தமாக தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். எங்கள் பயிற்சி நிலையத்துக்கு நிறைய தொலை பேசி அழைப்புகள் வரும் சார் எங்க குழந்தை செஸ் விளையாட கத்துக்கணும், எப்ப சேர்க்கலாம்? சார் எங்க குழந்தை பரதம் கத்துக்கணும், இப்படி பலவிதமான அழைப்புகள். இவர்களிடம் உங்கள் குழந்தையின் வயது என்ன என்று கேட்டால் இரண்டு ஆகிறது என்பார்கள். ஐந்து வயதில் தங்கள் குழந்தை சதுரங்கத்தில் உலக சாம்பியன் பட்டம் வாங்கி விட மாட்டானா என்ற ஆதங்கம் தெரியும்.

        அம்மா உங்கள் குழந்தை மிகவும் சிறியவன். அவன் நன்கு சுதந்திரமாக விளையாடட்டும். அவனுக்கு அருகில் சதுரங்க காய்களையும், பலகையையும் வைத்துவிடுங்கள் அவனுக்கு அதில் ஈர்ப்பு ஏற்படட்டும். அப்படி ஏற்பட்டு சிறிது பெரியவனான பின்பு முறையான பயிற்சி அளிக்கலாம் என்றால் நம்மை முட்டாளாக நோக்கி விட்டுச் சென்று விடுவார்கள். வேறொரு பயிற்சியகத்தில் மாதம் ஐநூறு அல்லது ஆயிரம் கட்டணம் செலுத்தி சேர்த்து விட்டு விடுவார்கள்.

        ஒரு செடி நன்கு வளர அதற்கு சூரிய ஒளி, நல்ல மண், நீர் இவை தேவை. இதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதே நம் வேலை. அதுபோல நம் குழந்தைகளுக்கும் சூழலை ஏற்படுத்தித் தருவோம். அவர்களை அமைதியாக நாம் கவனித்து வந்தாலே அவர்களை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்கு என்ன தேவை, என்ன திறமை உள்ளது என்பவற்றை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நமக்குத் தேவை அவர்களை பொறுமையாக நன்கு கவனித்து அவர்களோடு உறவை பலப்படுத்திக் கொள்வதுதான்.

        உறவு என்றவுடன் நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் நமக்கும் நம் குழந்தைக்கும்  நல்ல உறவு இருக்க வேண்டுமென்று நினைத்தால் நாம் தற்பொழுது நமது உறவுகளோடு நல்ல உறவினைப் பேண வேண்டும். அவர்களை அவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும். என்ன உறவு என்பது தெரிந்திருக்க வேண்டும். தாத்தா பாட்டி அவர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருக்க வேண்டும். அவர்களது அண்மை அவர்களுக்கு பலவித அனுபவ அறிவை ஏற்படுத்தும். மிக நெருங்கிய உறவுகளின் இல்லத்தில் நடக்கும் திருமண வைபவங்கள் கூட பள்ளியைக் காரணம் காட்டி குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. கல்விக் கூடங்கள் இந்த விதிமுறையை மிகக் கடுமையாக பின்பற்றுகின்றன. இத்தகைய நிகழ்வுகள் நமது மண்வாசனையை அறிந்து கொள்ளவும், உறவுகளோடு அறிமுகமாகி பழகவும் மிக அருமையான தருணங்கள். இவை தொடர்ச்சியாக வருடம் முழுதும் நடப்பதுமில்லை. மீண்டும் மீண்டும் நிகழ்பவையும் அல்ல. இப்படி உறவுகளோடு ஏற்படும் பிணைப்பே பின்னர் சமூகத்தோடு நல்ல பிணைப்பை ஏற்படுத்தித் தரும்.

         ஓரளவு உனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும் என நம்புகின்றேன். இக்கடிதம் எழுதும்பொழுது எனக்குள்ளும் பல கேள்விகள். அதற்கான விடைகளைத் தேட வேண்டும். மீண்டும் நமது கடிதத் தொடர்பு வளரும் என நம்புகின்றேன்.
                                                        அன்புடன்.,

       




                       

            

செவ்வாய், 21 அக்டோபர், 2014

சுசீலா

      நன்னாக் கேட்டுக்கோடா வரது ! இந்த பத்து சொன்னா சொன்னதுதான். இதெல்லாம் மீறி செய்யணும்னு நெனச்சா எங்க உறவு ஜென்மத்துக்கும் இல்லைங்கிறதை மறந்துடாதே! அதோட தலைமுழுகிடுவேன் அவ்வளவுதான். பொரிந்து தள்ளிய பத்மநாபன் படாரென்று தொலைபேசியைத் துண்டித்தார்.

      ஏன்னா என்னாச்சு? யாருன்னா போன்ல? ஏன் இப்படி கோபப்படறேள்? படபடத்தாள் சரோஜம்மாள்.

      எல்லாம் இந்த வரதுதான். அவன் பையனுக்கு வேற வரன் பார்த்துண்டிருந்தானில்லையோ? பசுவும் கன்னா பார்த்திருக்கானாம். கொஞ்சம் கூட வெக்கமில்லாம சொல்றான். மடப்பய மடப் பய! சுத்த வெக்கங்கெட்ட ஜென்மம்!

      ஏந்தான் இப்படி புத்தி போறதோ உங்க தம்பிக்கு? புத்தி கித்தி ஏதும் கெட்டுப் போயிடுத்தா? ஊர்ல இல்லாத வழக்கமால்ல இருக்கு. உங்க தம்பி ஆம்படையாளாவது அவர்கிட்டே சொல்லப்படாதா? அவா என்ன சொல்றாளாம்? கேள்விகளை அடுக்கினாள் சரோஜா.

      அவளுக்கும் அவா புள்ளையாண்டானுக்கும் இதில சம்மதந்தானாம். பாச்சு ஆபீசுல எல்லாரும் அவனைப் பெருமையாப் பேசனாளாம். இப்படிப்பட்ட ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறதுக்கு பெரிய மனசு இருக்குன்னு சொல்றதை விட நல்ல மனசுன்னு சொல்லணுமாம். எல்லாம் கலிகாலம், அவாள்ளாம் ஆயிரம் சொல்லுவா; நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் என்ன சொல்றதுன்னு நாம பாக்க வேணாமா?

      எந்த ஊராம் பொண்ணுக்கு? குழந்தைக்கு என்ன வயசாம்? ஏன் அவ ஆம்படையானுக்கு என்னாச்சாம்? விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற குறுகுறுப்பில் கேள்விகளை வீசினாள் சரோஜா.

      கல்லிடைக்குறிச்சிக்குப் பக்கமாம். குழந்தைக்கு இன்னும் மூணுமாசம் கூட ஆகலையாம். ஆக்சிடெண்ட்ல தவறிட்டானாம். புக்காத்துல வேற யாரும் இல்லையாம். அதனால அம்மா ஆத்துக்கே திருநெல்வேலிக்கு வந்துட்டாளாம்.

      கோயம்புத்தூரில் தனது சேரில் சோகமாக சரிந்து உட்கார்ந்திருந்தார் வரதராஜன். உள்ளே நுழைந்த மனைவி அனுராதாவின் மடிசார் சரசர ஒலி அவரை சற்றும் சலனப்படுத்தவில்லை. அவரது அண்ணா கோபமாகப் பேசிய வார்த்தைகள் அவரது மனதை தைத்துக் கொண்டிருந்தன.

      அனுவின் கண்கள் கணவனின் நிலையை எடை போட்டன. ஏதோ ஒரு தாக்குதல் மனதில் நிகழ்ந்திருக்கிறது என்பதை நன்றாய்ப் புரிந்து கொண்டாள். ஏன்னா இந்தாங்கோ ராமர் கோயில் பிரசாதம். எல்லாப்பிரச்சினையும் பகவானுக்குத் தெரியும்னா? அவனுக்குத் தெரியாதா எதை எப்ப செய்யணும்னு. ஏன் மனசைப் போட்டு அலட்டிக்கிறேள்? இப்ப என்ன ஆயிடுத்துன்னு இப்படி சோகமா உட்கார்ந்துண்டிருக்கேள்?

      இல்லடி, நம்ம திருநெவேலி சாம்பு சொன்னாரில்லையா, ஒரு வரன். அதைப் பத்தி அண்ணாகிட்டே சொன்னேன். இதென்ன ஊர்ல இல்லாத வழக்கமா இருக்கு, இப்படியெல்லாம் பண்றதா இருந்தா எங்க உறவே இல்லேன்னு நெனச்சுக்கோன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டும்கிற மாதிரி சொல்றான். இப்ப என்னடி பண்றது? நம்ம பையன் நிலைமையைப் பார்க்கவே சகிக்கலை. பார்த்து பார்த்து கட்டி வைச்ச பொண்ணு இரண்டே நாள்ல இப்படி பகவான்கிட்டே போய்ச் சேர்ந்திடுவான்னு யாருக்குத் தெரியும்?

      இந்தக் காலத்தில முத கல்யாணத்துக்கே பொண் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு. சாம்பு சொன்னது நல்லததான் பட்டது. அந்த பொண்ணுக்குன்னு யாரும் இல்லை. வயசான அம்மாதான். அவளும் எத்த்தனை நாளைக்குத் துணைக்கு. அவ குழந்தைக்கும் மூணு மாசம் கூட ஆகலை. இப்பவே கல்யாணம் பண்ணி வைச்சுட்டா, நாளைக்குப் பின்னால அப்பான்னு இவங்கூட எந்த சங்கோஜமும் இல்லாம ஒட்டிண்டிடும். இன்னும் நாளாச்சுன்னா, குழந்தைக்கு முகம் பரிச்சியம் ஆக ஆரம்பிச்சிடுத்துன்னா சிரமமில்லையோ?

      நம்ம புள்ளையாண்டானுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும்; அந்த பொண்ணுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும். ஆனா அண்ணாக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்கிறதே; பகவான் என்ன வழி காட்டப் போறாரோ தெரியலையே நேக்கு.

      நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. பகவான் நம்மளைக் கைவிடமாட்டார். நிச்சயம் நல்ல வழி காண்பிப்பார். உங்க அண்ணாவே இதற்கு சம்மதம் சொல்லுவார் பாருங்கோ. நீங்க கவலையை விட்டுட்டு சித்த ராமர் கோயில்ல போய் உட்கார்ந்துட்டு வாங்க. அவங்கிட்டே பாரத்தைப் போடுங்கோ.

      காஞ்சிபுரத்தில் நடந்த கோபப்பேச்சுக்களை பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்தாள் பத்மநாபனின் மகள் வயிற்றுப் பேத்தி காயத்ரி. தாய் சுசீலாவின் கைகளில் பிணைந்து கொண்டிருந்தன அவளது பிஞ்சு விரல்கள்.

      மெதுவாகத் தாயின் கையிலிருந்து விடுபட்ட காயத்ரி தாத்தாவின் அருகில் சென்றாள். தாத்தா என அழைக்க மெதுவாகத் திரும்பினார் பத்மநாபன். என்னடா காயூ எனக் கொஞ்சலோடு கேட்டார். அவரது கோபம் பேத்தியின் குரலைக் கேட்டதும் சற்றே தணிந்தது.

      குழந்தையோட இருக்கிற ஒருத்தரை மாமா கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா தாத்தா? என காயத்ரி கேட்க. காயூ பெரியவாகிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது என சுசீலா பதற. முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள பேச்சைப் பாரு என சரோஜா சீற, என்ன பதில் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார் பத்மநாபன். காயத்ரி தற்பொழுது அவரது கைகளைப் பற்றிக்கொண்டிருந்தாள்.

      இல்லடா குழந்தை; நமக்குன்னு சில பழக்கவழக்கங்களை நம்ம பெரியவா சொல்லி வச்சிட்டு போயிருக்கா. அதையெல்லாம் நாம விடாம கடைபிடிக்கணும். அப்பத்தான் பகவான் கடைசி காலத்துல தங்கிட்டே சேத்துப்பார். நம்ம குலதர்மம் மீறப்படாதுடா கண்ணா என்றார்.

      காயத்ரியின் வலது கை மெதுவாக ரேழியின் மேலே சட்டத்தில் மாட்டியிருந்த பழைய படத்தைக் காட்டி அது யார் தாத்தா என்றாள். அது எங்க தாத்தா சடகோபன். அதுக்குப் பக்கத்துல யாரு தாத்தா? அது எங்கப்பா ராமானுஜம். அவா ரெண்டு பேரும் குடுமி வைச்சுண்டிருக்கா; பஞ்சகச்சம் கட்டிண்டிருக்கா ஏன் தாத்தா; அதெல்லாம் நம்ம குடும்ம வழக்கம்டி கண்ணு. எங்க தாத்தா பெரிய வேத வித்வான் தெரியுமோல்லியோ? எங்க அப்பாவும் ஒண்ணும் குறைஞ்சவரில்லே. சம்ஸ்க்ருதத்திலே புலி.

      அப்புறம் ஏன் தாத்தா, நீங்க குடுமி வைச்சுக்கலே, பஞ்சகச்சம் கட்டலே, வேதம் படிக்கலே? பதில் சொல்ல முடியா கேள்விகள் கோபத்தைக் கண்களில் கக்கவைத்தது பத்மநாபனுக்கு. குழந்தையின் கைகளை உதறினார். பெரியவாகிட்டே பேசுற பேச்சைப்பாரு என்று சீறிய சரோஜாவின் கைகள் காயத்ரியை அலற வைத்தது. கண்களில் கண்ணீர் முட்ட அம்மா சுசீலாவின் மடியில் புதைந்தாள். சுசீலா எதுவும் பேச முடியாதவளாய் குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
     

      இத்தனையையும் பங்கஜம்மாளின் பகபகவென்ற சிரிப்பொலி சற்றே திசை திருப்பி விட்டது. எதுக்கும்ம்மா இப்ப இப்படி சிரிக்கிற சீறினார் பத்மநாபன். சரோஜாவின் முகம் அஷ்டகோணலாகியது. எந்த பாதிப்பும் இல்லாதவள் போலிருந்தாள் சுசீலா. அவள் கை குழந்தையின் அடிவாங்கிய உடலை தடவிக்கொண்டிருந்தது.

      போடா முட்டாப்பயலே! எங்கொள்ளுப்பேத்தி கேட்ட கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியல இல்ல. திருவளத்தான் மாதிரி முழிச்சிட்டு நிக்கற. குலதர்மம் சாஸ்திரம்னு பேசற. உங்கப்பா தாத்தா செஞ்சதுல நீ எத்தடா செஞ்ச. லோக க்ஷேமத்துக்காக அவா நித்யம் மூணு வேளை சந்த்யாவந்தனம் பண்ணாளே நீ பண்ணினியா? வேதம் படிச்சாளே நீ படிச்சியா? வெளியிலே எங்கேயும் சாப்பிடாம ஆச்சாரமா இருந்தாளே நீ அப்படி இருந்தியா? அவா பண்ணினது எதையும் நீ பண்ணல. ஆனா அவா பண்ணின தர்மத்தை என்னவோ நீ மட்டுமே கட்டிக் காப்பத்தற மாதிரி பெருமை பீத்திக்கிறே!

      சுசீலாவைப் பார்த்தியா? அவ ஆத்துக்காரர் போனதும் குழந்தையோட இங்க வந்துட்டா? வீட்டிலேயே அடைஞ்சு கிடக்குறா. எப்படி இருந்த குழந்தைடா அவ. இப்ப அவ மூஞ்சியை என்னிக்காவது பார்த்திருக்கியா? அவ படற கஷ்டம் பத்தி என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கியா? ஏதோ நீ உண்டு ஒன் வேலை உண்டுன்னு ஓடிண்டிருக்கே? ஒன் ஆத்துக்காரி சமையல் உள்ளேயும் நீ தாழ்வாரத்துலேயும் ஒட்கார்ந்திண்டிருக்கீங்க. இங்க ஒருத்தி குழந்தையோட தன் கஷ்டத்தை யார்கிட்டே சொல்றதுன்னு தெரியாம முழிச்சிண்டிருக்காளே அவளைப் பத்தி என்னைக்காவது நினைச்சிப் பார்த்திருக்கேளா?

      இப்ப கூட்டுக்குடும்பங்கிறதே இல்லாமப் போச்சு. ஒங்கப்பா காலம் வரைக்கும் இங்க ஆத்துல எல்லாரும் ஒண்ணா இருந்தோம். இன்னைக்கி நீ ஒரு இடம். ஒந்தம்பி ஒரு இடம். ஒம்ப்சங்க ஒரு இடம்னு ஆளாளுக்கு அவாவாளுக்கு சௌகர்யமா எங்கெங்கியோ போயிருந்துடறேள். நாளைக்கு ஒங்காலத்துக்கு அப்புறம் சுசீலாவும் கொழந்தையும் எங்கடா போயிருப்பா? ஒம் பொண்ணு கஷ்டத்தையே பார்க்க முடியாத நோக்கு ஊரான் பொண்ணோட கஷ்டம் புரியுமா?
     

      சாஸ்திரம் சம்ப்ராதயங்கிறது நம்ம நல்லதுக்காகத்தானே ஒழிய வெறுமே வறட்டுத்தனமா கத்திண்டிருக்கிறதுக்கில்ல. அதை மட்டும் நன்னா புரிஞ்சிக்கோ. வேதம் சத்யம்டா அது மாறாது. ஆனா சாஸ்த்ரம் சம்ப்ரதாயங்கிறது  ஒவ்வொரு காலத்துலேயும் சூழ்நிலைக்கு ஏத்தாப்பல மாத்தங்களை உள்ளே இழுத்துக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானேன்னு சொல்லியிருக்கா பெரியவா. லோகத்துக்கு நன்மை தரக்கூடிய விஷயங்களை அப்பப்ப மாத்திக்கிறது தப்பில்ல. ஆனா உன்ன மாதிரி லோகக்ஷேமத்துக்கான சந்த்யாவந்தனம்கூட பண்ணாம இருக்கிறதுதான் மகாபாபம்.
     
      ஒம் பொண்ணுக்கு நல்லது செய்யலை. பரவால்ல. இன்னொரு பொண்ணுக்கு நடக்க இருக்கிற நல்லதைத் தடுக்காதே. அந்த பாபம் இன்னும் பல தலைமுறைக்கு ஒன் வம்சத்தை பாதிக்கும். ஒன் பசங்களும் பேரக்குழந்தைகளும் நன்னா இருக்கணும்னா ஒன் தம்பியைக் கூப்பிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச்சொல்லு. முடிஞ்சா ஒம் பொண்ணுக்கும் ஒரு வரனைப் பாரு.

      பங்கஜம்மாளின் வார்த்தைகள் சுரீர் சுரீரென்று அடிக்க பத்மநாபனும் சரோஜாவும் பேசமுடியாமல் விக்கித்து நின்று கொண்டிருந்தார்கள். போடா போய் போனைப் போட்டுப் பேசு என பங்கஜம்மாள் மீண்டும் உறும அது பத்மநாபனை உந்தித் தள்ள அவரது கைவிரல் தானாகத் தம்பியின் தொலைபேசி எண்களை தட்ட ஆரம்பித்திருந்தது.