திங்கள், 29 ஜூலை, 2013

யாசகன்


என் கற்பனைக் காதலி என்னோடு பேசாமலிருந்தபொழுது.,

நீ விழையும் மௌனம்
உன் சந்தோஷ ஜன்னலின் சாவியென்றால்
என் இதய வலி மறைத்து
சம்மதமென்றே உரைத்திடுவேன்
சாதிக்கப் போவதென்ன
சத்தியமாய் விளங்கவில்லை எனக்கு
ஆத்மார்த்தமாய் வந்திட்ட உறவில் 
வாய்வார்த்தை தேவையில்லைதான்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஊடல் பேச்சில்லையெனில்
உறவின் விழைவும் விளங்காதல்லவா?
ஆறுமிங்கே ஆழியில் சங்கமிக்கையில்
ஆனந்த இரைச்சலிடுவதை அறிந்தவள்தானே நீ !
புள்ளினமும் மெல்லினமாய்
சத்தமிட்டு சாடுவதைக் கண்டவள்தானே !
சப்தங்கள் இங்கே நம் வாழக்கைச் சாரமாயிற்று
சங்கீதமாய் நம்மோடு இழைந்து போய்விட்டது
உன்னிலும் என்னிலும் மௌனத்திலும்
சபதங்கள் ஜீவித்துக் கொண்டுதானிருக்கின்றன
இதில் நீ மௌனம் என்று எதைத் தேடுகிறாய்?
என்றும் நீ சந்தோஷ சங்கீதமாய் வளைய வர
உன்னிடம் யாசிக்கின்றேன்
நீ ஏன் இன்னும் யோசிக்கின்றாய் ?
                                                                       - யாசகன்

இன்று இதனைப் பதியும்போது என்னை நான் திரும்பிப் பார்க்கும் ஒரு வாய்ப்பு. சப்தங்களை சங்கீதம் என்ற மனது இன்று சப்தங்களை வெறுப்பதேன். மாற்றங்கள் இவ்வளவு பெரிதாயிருக்குமா? இந்த மாற்றம் இயல்பானதாய் இருக்க வேண்டும். இந்த மாற்றமில்லாமல் ஒன்றிலேயே தொங்கிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனமாய் போய்விடுமோ? சொல்ல இயலாது இன்னும் சில நாள்களில் சலசலக்கும் சண்டை சச்சரவுகளை என் மனது விரும்ப ஆரம்பித்து விடலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இப்படியும் கூடத்தானே?


என்னவளே !

கல்லூரிப்படிப்பு முடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களிலே என் கற்பனையில் உதித்த என் காதலிக்கு நான் எழுதிய கவிதை. இதைப் பின்னாளில் என் இல்லாளுக்கே கொடுத்துவிட்டேன். இதில் வரும் முள்ளான நின் வார்த்தைக்குப் பின்னேஎன்ற வரி மட்டும் என் இல்லாளுக்குப் பொருந்தாது.

நின்னை சந்தித்த வேளையில்
நான் நினைக்கவில்லை
பூதாகாராமாய் நம்முள்
இந்த உறவு மலருமென்று !
முள்ளான உன் வார்த்தைக்குப் பின்னே
ரோஜாவான நின் மனதை
மெல்லமாய் புரியவைத்து
உறவை மலரவைத்தாய்
கொஞ்சகொஞ்சமாய்
என் மன சாம்ராஜ்யத்தை
உன் புன்னகையால் சிதைத்தாய்
நின் நட்பிற்கு வித்தாய்
என் நெஞ்சினுள்ளேயன்பை வார்த்தாய்!
என்ன நினைத்து இங்கு வந்தாய்
என்னுள் இன்பம் விளைத்தாய்
என்னை பண்பினனாய் வடித்தாய்
ரசிக்கவும் ரசிக்கப்படவும்
என்னை மாற்றியமைத்தாய்
இன்று பாடலாய் பாவமாய்
என்னுள் நிறைந்தாய்
காலமகள் வடித்தளித்த காவியமாய்
கண்ணிற்கினியதோர் ஓவியமாய்
கண்ணன் எனக்களித்த பரிசானாய்
என்றும் என் ஜீவனானாய்
இனியதோர் நினைவானாய்
யாதுமாய் நின்றாய் என்னவளே,
என்றும் நீ எனக்கே எனக்காய் வேண்டும் !



வியாழன், 18 ஜூலை, 2013

ஆலமரம்

     ஆலமரம்.,


     குயிலின் குக்கூவையும் மீறி அலறல் சத்தம் கேட்க அலறிப் புடைத்து, படுக்கையை சுருட்டி எழுந்து கொண்டேன். கிராமத்துத் தெருவில் அலறல் சத்தம் கேட்கிறது என்றால் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்று உறுதியாய்ச் சொல்லிவிடலாம். சத்தத்தை கூர்ந்து கவனித்தபொழுது ஆத்தா என்று அலறுவது கேட்க ஒரு கணம் உடல் அதிர்ந்துதான் போனது.
     இங்கு ஆத்தா என்று எல்லாரும் கூப்பிடுவது சேட்டப்பனின் அம்மா ராமாயியைத்தான். சேட்டப்பன் என்ற பெயர் அவரின் நீண்ட கால வட இந்திய வாழ்க்கை கொடுத்த பெயர். சேட்டப்பனின் ஆத்தா மிகுந்த வயதானவள் மட்டுமல்ல நல்ல அனுபவசாலி. பழைய கால நினைவுகளை மிகவும் ரசனையோடு சொல்லக் கூடியவள். இந்தக் கிராமத்தின் ஒவ்வொரு மூலையும் முடுக்கும் ஒவ்வொரு அசைவும் ஆத்தாவுக்கு ஒரு காவியம் போல. அதனை கவிநயத்தோடு எல்லோரோடும் பகிர்ந்துகொண்டது அனைவருக்கும் அவளிடத்தே பிரியத்தை உண்டு பண்ணிவிட்டது.
     பதைப்போடே வாசலுக்கு வந்த நான் விரைந்து ஓடிக் கொண்டிருந்த நடராஜை, ஏன் மாப்ளே, என்னாச்சு என்றேன். ஒண்ணுமில்லேடா ஆத்தா கிழக்கால இருக்கிற கிணத்தில குதிச்சிருச்சிடா, தலையிலே அடிபட்டிருக்கு. ஆசுபத்ரிக்கு எடுத்திட்டு போறாங்க. உசிரு இருக்காடா மாப்ளே, இது நான். அதெல்லாம் இருக்கு சிவா, சீக்கிரம் கொண்டு போய்ச் சேத்தா பொழைச்சிடும்.
     வடக்கால இருக்கிற முருகசாமி அண்ணன் காரில ஆத்தாவைத் தூக்கி போட்டுக்கிட்ட்டு ஆசுபத்திரிக்கு பறந்துட்டாங்க. மனசு முழுக்க பதட்டமும் கேள்விக்கணைகளும். ஆத்தா ரொம்ப விவராமாச்சே, ஏன் கிணத்துக்குள்ளே குதிச்சிச்சு. யாரிடமாவது பதில் இருக்கும். பதில் கிடைக்கும் வரை மனசு அடங்காமல் குதித்துக் கொண்டேயிருக்கும்.
    
     பக்கத்திலிருந்த வேம்பிலிருந்து ஒரு குச்சியை உடைத்து பல்லைத் துலக்க ஆரம்பித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். மெதுவாக தெக்குத்தோட்டத்தை நெருங்கியபோது வேலுச்சாமி அண்ணன் மாட்டைதொழுவத்திலிருந்து மாற்றிக் கொண்டிருந்தார். அண்ணே, ஆத்தாவுக்கு என்னாச்சுண்ணே? ஏன் இப்படி பண்ணிருச்சி? விடை தெரிந்து கொள்ளும் ஆவலோடு கேள்விகளை வேகமாகவே வீசினேன். எப்ப வந்தீங்க தம்பி ஊர்லேர்ந்து என்றார் வேலுச்சாமி. விடியாலதாண்ணே வந்தேன் என்றேன் பொறுமையில்லாமல். அதான் விஷயம் தெரியல போல என பொடி வைத்துப் பேசினார்.
     வடக்குத் தெரு முருகசாமியும், கொமாரும் கிழக்கால பிள்ளையார் கோவிலை எடுத்துக் கட்டணும்னு பேசிட்டிருந்தாங்கில்ல, அதுக்கு பூமி பூசை போட்டாங்க. கோயிலை நல்லா பெரிசா கட்டணும், ஆலமரத்தை வெட்டிடலாம்னாங்க. யாருக்கும் மனசில்லே. ஆத்தா ரொம்பவே மனசொடிஞ்சி போச்சி, டேய் வாணாங்கடா, நம்ம பிள்ளையார் சாமி மரத்திலதாண்டா இருக்காரு, ரொம்ப காலமா நாம இந்த கல்லையும் மரத்தையும்தாண்டா சாமியா கும்பிடறோம். சாமியையே வெட்டணும்கிறீங்களேடான்னு அரற்றிக்கிட்டே இருந்த்துச்சி.
     ஏழை சொல் அம்பலம் ஏறுமா? புதுப் பணக்காரங்க, டைல்ஸ் போட்டு கோவில் கட்டணும்கிறாங்க,கோவிலா, கக்கூஸான்னு வெளங்கல தம்பி, கோவில்ல போய் டைல்ஸெல்லாம் ஒட்டிக்கிட்டு. கடைசியில நேத்து மரத்தை வெட்டிப் போட்டாங்க, ஆத்தா துடிச்சிப் போயிடுச்சி. புலம்பிக்கிட்டே இருந்துச்சு தம்பி, வெள்ளென ஆட்டை ஓட்டிக்கிட்டு போச்சி, இப்படி கிணத்துல குதிக்கும்னு யாருக்கும் தெரியல. 

     உண்மையில் எனக்கு விளங்கவில்லை. படிக்காத இந்த ஆத்தாவுக்கு இருக்கும் ஒரு விவரம், படித்தவர்களுக்கு இல்லையே. மரங்கள் வெட்டப்படக் கூடாதென்பதற்காகத்தானே அங்கே கல்லை நட்டி சாமி மரத்தில் குடியிருப்பதாகச் சொல்லி, மரத்தின் கிளையைக் கூட உடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். இறைவன் படைத்த இயற்கை ஒவ்வொன்றிலும் அவன் உறைந்திருப்பதை உணராமல்,அதை சிதைக்க நாம் முயல்வதேன். மரத்தை வெட்டியபின்பு அவ்விடத்தில் இறையம்சம் எப்படி இருக்கும்? அவன் படைத்ததை அழித்தபின்பு அவனருள் பெருவது எப்படி?
    
     என் கால்கள் என்னையறியாமல் கிழக்காக பிள்ளையார் கோயிலை நோக்கி நடை போட்டது. பெரிதும் பரந்து பல்லுயிர்க்கும் இடமளித்து அரவணைத்து கொண்டிருந்த அந்தப் பெரிய ஆலமரம் அண்ணாந்து சாய்ந்திருந்தது. அதன் கிளைகள் துண்டிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த்தது. ஆத்தாவும் ஆலமரமும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவை. எத்தனையோ காலமாய் எங்கள் சேர்வராயன்பாளையம் கிராமத்தை நிதானமாய் கவனித்து வந்தவை. இன்று ஒன்று அடிபட்டது தாங்காமல் மற்றொன்று தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. என் கண்ணில் தானாக கண்ணீர் பெருகியது ஆச்சர்யமாக இருந்தது.
     இரண்டு நாளில் ஆத்தா வீடு திரும்பியிருந்தாள். அனைவரும் அவளை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என் கண்களும் அவளை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டு கொள்ளுவாள், பழங்கதையை அசைபோடுவாள் என்று மிகவும் ஆசையோடு இருந்தேன்.என் ஆசையை தவிடுபொடியாக்கியது கௌரியக்காவின் குரல். ஆத்தாவுக்கு தலையில அடிபட்டதில சித்தம் கலங்கிடுச்சாம், இனிமே போறமட்டும் இப்படியேதானாம், வார்த்தைகள் இடியாய் இறங்கியது என்னுள்.
     சேட்டப்பன் வட இந்திய முதலாளியின் கம்பெனியில்தான் வேலை பார்த்து வந்தார். நடந்த செய்திகளைக் கேட்டு அவர் அந்த இடத்தை பார்வையிட்டு கிராமத்தாரிடம் அந்த மரத்தை தான் கொண்டு செல்ல அனுமதி கேட்டார். கிராமத்தின் உதவியோடு அருகிலிருந்த தன் தொழிற்சாலை வளாகத்தில் மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த ஆலமரத்தை நட்டுவிட்டார்.   

    வெகுவேகமாக கோயில் வேலை நடந்து கிரானைட், டைல்ஸ் என்று நவீனப்படுத்தப்பட்ட பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகம். முணுமுணுத்தவாறே உலவிக்கொண்டிருந்த ஆத்தா பைத்தியமெனப்பட்டாள், உபயதாரர்களால். பிள்ளையாருக்கும் ஆத்தாவுக்கும் மட்டுமே தெரியும் பைத்தியக்காரர்கள் யாரென்று.
     ஆல் போல்தழைத்து வாழ் என வாழ்த்தும் நாட்டில் ஆலையே வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். இயல்பிலிருந்து மாறிப் போன வாழ்க்கைமுறை மீண்டும் திரும்ப வாய்ப்பிருக்குமா? இந்திய பாரம்பரிய இயல்பு திரும்ப வாய்க்குமா எனப் பலப்பல சிந்தனைகள். ஏம்பா அன்னதானம் ஆரம்பிச்சிடுச்சி சாப்டப் போலாம் வாங்க என்ற குரல் என் சிந்தனையைக் கலைத்தது.

     இயற்கையை அழிக்க ஆரம்பித்துவிட்டோமே, நம் சந்ததிக்கு உணவுவாய்ப்பு எப்படி?  அதை சிறிதும் உணராமல் எல்லோரும் அன்னதானத்தில் உண்ண சென்று கொண்டிருக்கிறார்களே? உண்ண விருப்பமில்லாமல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். தொழிற்சாலை வரை சென்றுவிட்டேன் என்னையறியாமல், உள்ளே நடப்பட்டிருந்த ஆலமரம் துளிர்விட ஆரம்பித்திருந்தது. இனி எனக்கு பிள்ளையார் கோயில் இந்த தொழிற்சாலை ஆலமரம்தான். 

செவ்வாய், 16 ஜூலை, 2013

உன்னை உணர்! உயர்ந்துவிடு!

     இளவரசன் மரணம் என்பது மிக்க துயரத்தை ஏற்படுத்திய ஒன்று. அது மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் என்னுள் சில எண்ணங்கள். இவர் சாதிமறுப்பு போராளி என்று பட்டம் சூட்டப்பட்டிருக்கிறார், மேலும் பல இளைஞர்கள் இவர் வழியில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள்.

     இளைஞர்களே சிந்திப்பீர் அன்னாரது திருமணத்துக்குப்பின் ஏற்பட்ட நிலை என்ன இரு சமுதாயத்து மக்கள் மோதிக்கொண்டனர், எண்ணற்ற பொருளிழப்பு, மன அமைதியின்மை, ஜாதி என்ற எண்ணம் இரு சாராரிடத்தும் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. நன்கு கவனிக்கவும் இந்த நிகழ்வு சாதியை மறுக்கும், மறக்கும் மனநிலைக்கு மக்களைச் செலுத்தவில்லையே, மாறாக ஜாதியை சிறு குழந்தைகள் மனதிலும் ஆழமாகப் பதித்துவிட்டதே. மாநிலம் முழுதும் ஜாதியை மையம் கொண்டு புயலென அரசியல் வாதிகள் பயணம் செய்தார்களே?  இருதரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இதைத்தான் எதிர்பார்த்திருந்திருப்பார்கள், அவர்கள் இந்தத் தீயில் பல நாள் குளிர் காய்வார்கள்.
     இளவரசனின் தாய், அவரது மனைவி திவ்யா, திவ்யாவின் தாய் இவர்களது மனநிலையை எண்ணிப்பார்க்க, உண்மையாய் தோள்கொடுக்க இந்த அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள். அந்த ஜீவன்களை நினைந்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். பழைய நாறிப்போன மீடியாவோடு, மிகவும் நாற்றமெடுத்த இந்த இணைய ஊடகமும் இவர்களை வைத்து பிழைப்பு நடத்துவார்கள், பொழுது போக்குவார்கள். இளவரசன் போன்றதொரு மகனை இழந்த தாய்க்கு இன்னொரு இளவரசன் கிடைக்க முடியுமா? வாழ்க்கையை ஜாதி அரசியலில் தொலைத்த திவ்யாவிற்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்குமா? சிந்தியுங்கள்.
     மூர்க்கமான போராட்டம், ஆயுதம் ஏந்திய போராட்டம் நிச்சயமாய் தீர்வல்ல. எண்ணத்தில், பேச்சில், செயலில் மாற்றம் ஏற்பட்டு சமுதாயம் மாறவேண்டும். அதை அடைய இன்றைய நடைமுறை சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொள் இளைஞனே!  மிகவும் இளவயதில் கொள்ளும் காதல் பிரச்சினையைத் தாங்கும் சக்தி கொண்டதல்ல என்பதனையும் புரிந்துகொள். சாதியை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருப்பவனின் சந்ததியின் ஜீனிலும் ஜாதி இருக்கும். காதல் மாயையில் மறைந்திருந்தாலும் பின்னர் தலைகாட்டும். அது சரியான வழியல்ல.
   அம்பேத்கர் சொன்னது போல கல்வி பெறுவதை மட்டுமே லட்சியமாகக் கொள், உன்னைப் போல் அறிவாளி இல்லை என்ற நிலை கொள், அறிவார்ந்த சமுதாயமாக உன்னைச் சுற்றியிருப்போரை மாற்று. உன்னைச் சார்ந்தோரே உயர்ந்தோர் என்ற எண்ணம் கொள்.

     மேலும் இங்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் சில குறிப்பிட்ட இனத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள், தலித் என்ற பெயரில் அழைப்பதை மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் அரசியலில் பிழைப்பு நடத்துபவர்கள். அன்றைப் போல் இன்று இல்லை. இன்று உனக்கு கல்வி கிடைக்கிறது, நிறைய உதவிகளைச் செய்ய அரசு இருக்கிறது. சமுதாயத்திலும் சாதியை மறந்த நண்பர்கள் உன்னோடே உண்டு. இந்த நிலையில் அடுத்தவன் சொல்வதைக் கேட்டு நான் தாழ்ந்தவன் என்ற நினைப்பை உன் மனதில் வளர்க்காதே. விதையை யார் விதைத்தாலும் நீக்கிவிடு. நீயும் உன் பெற்றோர்களும் உயர்ந்தவர்கள், நல்ல பாரம்பரியம் மிக்கவர்கள், இந்த பாரதத்திருநாட்டில் பிறந்தஎவனொருவனும் தாழ்ந்தவன் இல்லை என்ற எண்ணத்தினை உன் மனதில் உறுதியாய் பற்று.

     உன் எண்ணங்களில் தீயின் சுடர் பிரகாசிக்கட்டும், அது தீப ஒளியினைப் போல் அடுத்தவர்க்கு வழி காட்டுமாறு உன் வாழ்க்கை இருக்கட்டும். உன் எண்ணத்தின் ஜ்வாலை கண் வழியே வெளிப்ப்ட்டு அடுத்தவரின் வாழ்க்கையில் இருள் உண்டாக்குமாறு இருந்துவிடக் கூடாது. அடுத்தவரில் உன் குடும்பமும் அடங்கியுள்ளது நண்பனே.

    அறிவு, அறிவு, அறிவு அது ஒன்றே உன் தேடலாய் இருக்கட்டும். இந்த பாரதபூமி படைத்துள்ள அத்துணை அறிவார்ந்த விஷயங்களையும் அறிந்துகொள். அதனை உன்னைச் சார்ந்தோர்க்கு கொடுத்திடத் தயங்காதே! உன்னைச் சார்ந்தோரையும் உன்னைப்போல் உயர்த்து. அடுத்தவர்களால் உன்னை உயரவைக்கமுடியாது.
     நீ உயர்ந்தவன் என்று நீ உணராத வரை யாராலும் உன் நிலைமையை மாற்ற முடியாது.உன்னை தாழ்ந்தவன் என்று சொல்பவன் முன்னால் மேலும் தாழ்ந்து போவாய். நீ உயர வேண்டுமானால் உன்னை தாழ்ந்தவன் என்று சொல்பனின்றும் தள்ளி நில். அவனை உன் வாழ்க்கையினின்றும் அகற்றிவிடு.
      உன் சக்தியை வீண் கோஷம் போடுவதிலும், அடுத்தவன் பின்னால் சுற்றி வலிமை காட்டுவதிலும் வீணடித்து விடாதே! பெண்ணின் பின்னால் சுற்றியும் வீணடித்து விடாதே!
       உன் சக்தி உன்னை உயர்த்தவும், உன்னைச் சார்ந்தோரை உயர்த்தவும் செலவழியட்டும். ஏற்றத்தாழ்வென்பது உலகின் எல்லா மூலையிலும் என்றும் இருந்து கொண்டிருக்கும். அடுத்தவர் சொல்வதால் நாம் தாழ்ந்தவனாகிறோம் என்றால் அது நாம் நம் மீது நம்பிக்கையில்லாமல் போனால் மட்டுமே நிகழும். இப்படி நான் சொன்னவுடன் கொடுமைகளைச் சுட்டிக்காட்டுவார்கள். அந்தக் கொடுமைகள் நிகழ்ந்ததன் காரணம், அப்போது அவர்கள் கல்வியற்று நம்பிக்கையற்று நின்ற நிலையில் என்பதனை மறவாதே.

      அறிவும், நம்பிக்கையும் பெற்று ஒதுக்க முடியாத சக்தியாக உன்னை உயர்த்திக் கொண்டால் இங்கு அனைத்துச் சமுதாயத்தினரும் உன்னை அரவணைத்துக் கொள்வர். ஆனால் அது மட்டும் போதாது, உன்னோடு சேர்ந்து உன் உறவினர்களும் அவ்வாறான நிலையை அடைந்தால், எண்ணிப்பார். அம்பேத்கர் முதற்கொண்டு இன்றைய நிலையிலும் ஒதுக்க முடியாத சக்தியாக, அனைத்துத் தரப்பினராலும் அன்பு பாராட்டக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதனை உன் அறிவுக் கண் கொண்டு நோக்கு.

    மாற்றங்களை அடுத்தவரிடம் எதிர்பார்க்காதே, அதை உன்னிடத்திலிருந்து துவங்கு.
” மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்”

 இது வெற்றுக் கோஷங்களாலோ, வன்முறையாலோ நிகழாது என்பதனைப் புரிந்து கொள். உன்னை மதிக்காதவனைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவனை உதாசீனப்படுத்து, அவன் முன்னே இமயமாய் மாறி நின்று விடு. வீணாய் அவனை மேடை போட்டுத் திட்டுவதாலோ, இணையதளத்தில் வசை மாறிப் பொழிவதாலோ நீயும் உன்னைச் சார்ந்தோரும் உயர்ந்துவிடமுடியுமா? இப்படித்திட்டினவுடன் ஓடி வந்து கட்டியணைத்து சம்பந்தம் பேசப் போகிறார்களா? மேலும் வெறுப்பு உன் மனதிலும் கொழுந்து விட்டெறியும். வெறுப்புடன் உள்ள மனதில் கலை எப்படி உருவாகும், அறிவு எப்படி விருத்தியடையும்.

அமைதியாய் இரு! அறிவைப் பெருக்கு!
உன்னை உணர் ! உயர்ந்துவிடு!

இக்கட்டுரையை தருமபுரி சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.