சனி, 6 அக்டோபர், 2012

தாய்மை

தாய்மை   

தாய்மை ஒவ்வொருவரும் மிகவும் புளகாங்கிதமடைந்து பேசக்கூடிய, எழுதக்கூடிய வார்த்தை. 
பெற்ற தாயின் மூலமாக ஒவ்வொருவரும் அடையும் ஒன்று. நான் சந்தித்த பெரும்பாலானோர் தாயின் மூலமாக மட்டுமே கிடைப்பது தாய்மை என்றே சொல்லினர். ஆயின் நான் பெற்ற அனுபவங்கள் வேறானது.

ஒன்றரை வயது வரை எனை ஈன்ற தாய் பாலூட்டி சீராட்டி தன் தாய்மையைக் காட்டியதோடு ஊட்டியும் விட்டாள். பின்னர் மகனில்லாத என் தாய்வழிப்பாட்டி என்னை எந்த சடங்கும் இல்லாமல் தத்து எடுத்துக் கொண்டாள். தனக்கொரு மகனிருந்திருந்தால் எப்படி வளர்த்து இருப்பாளோ அப்படி என்னை வளர்த்தாள். தாய்மையை முதன்முதலாக தாயினைத் தவிர்து மற்ற ஒருவரிடம் பெற ஆரம்பித்தது இங்கிருந்துதான்.

ஆறுதல், அரவணைப்பு, கண்டிப்பு என அத்தனையையும் என்னிடம் காட்டினாள். ஆயினும் என்னிடம் நேராகக் காட்டாமல் அவள் எனக்கு உணர்த்திய ஒன்று உழைப்பு. அதனை அன்று உணர்ந்தேனில்லை. இன்று அவள் என்னோடு இல்லை. நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது அவளது உழைப்பு.

எனது கல்லூரிக் காலங்களில் கல்லூரியில் நான் எவரிடமும் தாய்மை உணர்வை அனுபவித்தது இல்லை. பின்னர் நான் வேலை பார்த்த இடங்களிலும் இத்தன்மையினை நான் வேறாரிடத்தும் கண்டேனில்லை.

இதன்பின் எனது திருமணம், இதன்பின்னர் என் மனைவியிடம் இதனை உணர்ந்தேன். என் தாய் என்னுடனே இருந்து செய்வதைவிட மேலானதாக தாய்மை உணர்வினை என்மேல் பொழியும்போது வியந்து போகிறேன்.

இதனை அடுத்து தற்பொழுது எங்களுக்கு ஆத்மீக குருவாக இருந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் நெமிலி ஸ்ரீ பாபாஜியிடம் தாய்மையுணர்வினைக்  காண்கிறேன். அது பொங்கி பிரவாகமாகி ஆத்மீக குடும்பங்கள் அனைத்திலும் இத் தாய்மையுணர்வை காணமுடிகிறது.

ஒவ்வொரு மனிதனிலும் தாய்மையுணர்வு பொதிந்து கிடக்கிறது. அது விழித்தெழுந்து விட்டால் இவ்வுலகில் நிறைய பிரச்சினைகள் குறையும் என்று பெரிதும் நம்புகின்றேன்.