புதன், 19 மார்ச், 2014

பெரியசாமி ஐயாவும், சாமிநாதனும் 3

பெரியசாமி ஐயாவும், சாமிநாதனும் 3

ஐயா, உங்கள் நண்பரின் மகன் இப்போது எப்படி உள்ளார்?

தம்பீ, நான் என் நண்பரிடம் பேசிய பின்பு, அவர் தனது மகனோடு அமைதியாக உட்கார்ந்து அளவளாவத் தொடங்கினார். தற்சமயம் புலம்பல்கள் குறைந்து, அமைதியாக யோசிக்கவும், தந்தையுடன் தனது தொழிலைப் பற்றி விவாதிக்கவும் துவங்கியுள்ளார். கூடிய விரைவில் தனது தொழிலைத் திறம்பட நடத்திச் செல்வார் என்று என் நண்பருக்கு நம்பிக்கை கூடியுள்ளது.

மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா.

எனக்கு ஒரு சந்தேகம்!

சொல்லுங்கள் ஐயா.

ஒருவன் ஒரு தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு வருகின்றான். அவனுக்கு நிறைய பிரச்சினைகள். எதற்கும் சரியான தீர்வு கிடைக்காமல் தவித்து வருகின்றான். இந்தச் சூழ்நிலையில் அவனுக்கு இன்னொரு தெய்வத்தைப் பற்றி ஒருவர் கூறுகிறார். உடனே இவன் இதுநாள் வரை தான் தொழுது வந்த தெய்வத்தை புறக்கணித்து வேறு ஒரு தெய்வத்தை தொழ ஆரம்பிக்கின்றான். இது சரியா? பல தெய்வங்கள் என்ற கூற்றும் சரியா?

முதலில் உங்களது இரண்டாவது கேள்விக்கு விடையிறுக்க முயல்கின்றேன். உண்மையில் கடவுள் என்பவர் ஒருவரே. பேராற்றல் கொண்ட இறை சக்தி என்பது ஒன்றே. நாம் அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். ஆற்றல் என்பது ஆக்கவும் அழிக்கவும் இயலாதது. அது ஒரு ஆற்றலிலிருந்து மற்றொரு ஆற்றலாக மாறும். இது ஒரு சுழற்சியாக அமைந்திருக்குமே தவிர ஆற்றல் எப்பொழுதும் அழிவதில்லை.

அப்படியே இறைப் பேராற்றல் பல சக்திகளாகவும், தத்துவங்களாகவும் தன்னைப் பிரித்துக் கொண்டு இந்த உலகத்தை இயக்கி வருகின்றது. ஒரு பேராற்றலே இப்படி பல சக்திகளாகவும், தத்துவங்களாகவும் இயங்கி வருவதை உணர்ந்த நம் முன்னோர், பேராற்றலை பரபிரம்மம் என்றும், அதை உணர்ந்து கொள்வதை பிரம்மஞானம் என்றும் கூறினர். பல்வேறாக பிரிந்துபட்டு காணப்படும் சக்திகளுக்கு, வெவ்வேறான வடிவங்களை வடித்தனர். ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்தமான சக்திகளையும், தத்துவங்களையும் வழிபடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வழிமுறையிலும் வழிபாடு என்பது முடிவில் எல்லையில்லா அந்த பிரம்ம ஞானத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டது. எப்படி அறிவியலின் மூலம் நாம் அறியும் பல்வேறு ஆற்றல்கள் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ இல்லையோ, அப்படியே இந்த பல்வேறு தெய்வ வழிபாட்டு முறைகளிலும் உயர்வு தாழ்வு என்ற பேதமில்லை.

ஆயின் இங்கு ஒருவன் பிரம்மஞானத்தை அடைய வேண்டுமெனில் ஏதாவது ஒரு பாதையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு தான் வழிபடும் தெய்வத்தை மாற்ற வேண்டாமென்றும், ஒரு தெய்வ வழிபாடே உயர்ந்ததென்றும் கூறி வந்துள்ளனர் பெரியோர். இல்லையெனில் ஒருவன் தான் கற்றுக் கொண்ட பல்வகை வழிபாடுகளிலும் மனதைச் செலுத்த முற்படும்போது மன ஒருமுகப்பாடில்லாமல், தன் இலக்கை அடையாமல் போக நேரிடும்.
இறை சக்தியின் பல்வேறு வடிவங்களும், தத்துவங்களும் ஒன்றே போல எனவும், அவைகளுக்குள் பேதமில்லை எனும்போது ஒரு தெய்வத்தை வணங்குவதால் பலனில்லை எனவும், மற்றொரு தெய்வம் சக்தி வாய்ந்தது எனவும் சொல்வது மிகவும் முட்டாள்தனமானது. தன் முன்னோர் பின்பற்றிய, நன்குணர்ந்து வழிகாட்டப்பட்ட பாதையில் செல்வதே மிகவும் உத்தமமானது.

சில பேர் இந்த கோயிலுக்குப் போவதை விட அந்த கோயிலுக்குச் செல்லுங்கள். அந்த அம்மன் சக்தி வாய்ந்தது என்று பேசுவார்கள். ஒரு தெய்வம் சக்தி வாய்ந்தது என்றும், மற்றொன்று சக்தியற்றது என்றும் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது.

ஒருவனது பிரச்சினைகள் தீரவில்லை எனும்போது, நான் வழிபடும் தெய்வம் எனக்கு உதவவில்லை. அதனால் மாற்று தெய்வத்தை நாடிச் செல்கிறேன் என்பதும் முட்டாள்தனமானதே. நாம் ஒரு தெய்வத்தை வணங்கி, அந்த தத்துவ வழிபாட்டில் முழு ஈடுபாட்டோடு வாழ்ந்து வருகையில் அந்த தெய்வ சக்தியோடு நம்முள் உறைகின்ற சக்தி இணைந்து ஒன்றாக இயங்க ஆரம்பிக்கும். அவ்வாறு நடந்த பின்பு நம்மை அது வழி நடத்திச் செல்ல ஆரம்பிக்கும். இந்த நிலை முழுமை அடைவதற்கு முன்பான காலகட்டத்தில் நமது மனது முழுவதுமாக அந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பு மனதின் தன்னிச்சையான ஆசைகளும், விருப்பங்களும் தலை தூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது நம்மை வழிகாட்ட விரும்பும் சக்தி நமக்கு நல்லதை மட்டுமே தர நினைத்து நம்முடைய தேவையற்ற ஆசைகளையும், விருப்பங்களையும் தடுத்து நம்மை மாற்று வழியில் செலுத்த முற்படும். இந்த காலகட்டத்தில் நாம் நமது விருப்பங்கள் பூர்த்தியாகவில்லை என்று முட்டாள்தனமாக வழிபாட்டைத் துறந்தோமானால் நம்முடைய நலனை நாம் துறக்கிறோம் என்றாகிறது.

எத்தனை நாள்தான் தம்பி பொறுமையோடு இருப்பது?

நிச்சயம் ஒவ்வொரு செயலுக்கும், அதற்கான விளைவுக்கும் ஒரு கால அளவு தேவை. அதை நிர்ணயிப்பது எல்லாம் வல்ல பேராற்றல்.
ஒருவனிடம் ஒரு சாது ஒரு முட்டையைக் கொடுத்து, அப்பா நீ இதை அடைக்காக்கும் தன்மைக்கு ஏற்ப வெப்பம் ஏற்பட வகை செய்து பாதுகாத்து வா. உனது வாழ்க்கையை உயர்த்த வேண்டிய ஒரு விஷயத்தை இதன் மூலமாக உனக்கு இறைவன் அருளிச் செய்வார் என்றார். அவன் முட்டையை சாது சொன்னது போல, அடைகாக்க ஏற்பாடு செய்தான். ஒரு வாரம் சென்றது, என்னடா இது முட்டையை வைத்து ஒரு வாரம் ஆயிற்றே, என்ன ஆனது பார்க்கலாம் என்று அடைகாக்கும் இடத்திலிருந்து எடுத்துப் பார்த்தான். அதில் எந்த மாற்றமும் தெரியாமலிருக்கவே மீண்டும் அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டான். இப்படி பலமுறை அவன் பொறுமையிழந்து முட்டையை மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்க அதற்கு தொடர்ச்சியாக வெப்பம் கிடைக்காமல் அது வீணாய் போனது. சாது அடைகாக்க ஏற்பாடு செய், உனக்கான நல்லது ஒன்று கிடைக்கும் என்று சொன்ன பின்னர் நம்பிக்கையோடு தன் செயலைச் செய்து முடித்து விட்டு பொறுமையோடு இருந்திருந்தானென்றால் அவனுக்கு நிச்சயம் அந்த நல்ல விஷயம் கைகூடியிருக்கும். அவனது பொறுமையற்ற தன்மை அவனுக்கு நன்மை கிடைக்காமல் தடுத்து விட்டது. எனவே ஒவ்வொரு விஷயத்துக்கும் பொறுமை மிகவும் அவசியம்.

தம்பீ இப்படி ஒரே பேராற்றல்தான் உள்ளது, அதற்கு ஏதாவது ஒரு வழிபாடு செய்யலாம் எனும்போது; வீட்டிலிருந்தே செய்யலாம் அல்லவா? கோயில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலை தேவையா?

ஐயா, பேராற்றல் பிரபஞ்சம் முழுமையும் தன் ஆற்றலை பரப்பி இருக்கிறது. அதை நாம் உணர முடியாத நிலைமையிலேயே இருக்கிறோம். ஒரு வானொலி அலைவரிசையில் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றது. அது இந்த வானவெளியிலே மிதந்து கொண்டிருக்கின்றது. எந்த வானொலிப்பெட்டியில் அந்த குறிப்பிட்ட அலைவரிசைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கிறதோ அங்கு பாடல் கேட்கப்படுகிறது. அதுபோல எவனொருவனது மனது ஏதாவது ஒரு தெய்வத்துடைய வழிபாட்டைத் தொடர்ச்சியாக செய்து வரும்போது அந்த தெய்வத்தோட அலைவரிசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். இது சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் சாத்தியமான ஒன்றென்றாலும் காலச் சூழ்நிலையில் பொருளீட்ட அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இதனைச் சாத்தியப்படுத்துவது எப்படி, என்று யோசித்த நமது முன்னோர் மனித உடலைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ஆலயங்களை அமைத்து, அங்கு தெய்வத்தின் சக்தியை பிரபஞ்சத்திலிருந்து ஈர்க்கும் வகையாக செய்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில் அந்த சக்தியின் அதிர்வலைகள் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். அங்கு செல்லும் நாம் அமைதியாக அதனை உணர முற்படுகையில் அந்த அதிர்வலைகள் நமக்குள்ளே சக்தியை பரப்பும். அவ்வாறு ஏற்பட்டபின் நமது மனது ஒரு அமைதி நிலைக்குத் திரும்புகிறது.

சரி, அப்படியானால் கோயிலுக்குச் சென்று கோரிக்கை வைக்கிறார்களே, அந்த கோரிக்கைகள் நிறைவேறுவதாகச் சொல்கிறார்களே? ஆனால் நீ வெறும் மன அமைதிதான் கோயிலில் ஏற்படுகிறது என்று சொல்கிறாயே?

நான் ஏற்கனவே பலமுறை உங்களிடம் கூறியபடி மனம் அமைதியுற்றிருக்கும்போது மட்டுமே, தன்னைச் சுற்றி நடப்பதை சரியான முறையில் அறிந்து கொள்ள அதனால் இயலும். அதனடிப்படையில் அமைதியடைந்த மனம் தனது விருப்பத்தை பூர்த்தி செய்யத் தேவையானவற்றை சரிவர உணர்ந்து கொண்டு செயல்பட விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

அப்படியெனில் கடவுள் எதையும் செய்யவில்லைதானே?

இந்தக் கேள்வியினை எதிர்பார்த்தே சென்ற கேள்விக்கான பதிலை நான் முழுமையாகச் சொல்லவில்லை. எந்த கோயிலுக்குச் சென்றாரோ அந்த சக்தியுடனேயான ஒரு இணைப்பினை நமது மனது பெற்றுக் கொள்கிறது. பின்னர் அமைதியடைந்த மனதுக்கு வழிகாட்டுகிறது. நீங்கள் அவதார் என்ற ஆங்கிலப் படம் பார்த்திருப்பீர்கள். அதில் அந்த மனிதர்கள் ஒரு குதிரையில் ஏறிச்செல்ல முற்படும்பொழுது அதனுடலுடன் தங்கள் உடலை இணைத்துக் கொள்வார்கள். ஏறக்குறைய அது போலத்தான் இங்கு ஏற்படும் இணைப்பும், ஆனால் இது வெளியில் தெரியாது. அந்த தெய்வ சக்தியே வழிநடத்துகின்றது. இதுவுமே முழுமையாக நடக்கவில்லை. எனவே அடிக்கடி கோயிலுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஏன் எல்லாம் தெரிந்த அந்த கடவுள் தன்னை முழுமையாக கோயிலுக்கு வரும் அந்த பக்தனோடு இணைத்துக் கொள்ளக்கூடாது?

நீங்கள் சிறியதாக இருக்கும் எல்.ஈ.டி விளக்கைப் பார்த்திருப்பீர்கள். அதனை இயக்க மின்சக்தி தேவைப்படுகின்றது. வீட்டில் இருக்கும் பெரிய அளவிலான விளக்கினை இயக்கவும் மின்சக்தியே தேவைப்படுகின்றது. நாம் என்ன செய்கின்றோம்? சிறிய அளவிலான விளக்கிற்கு பேட்டரியையும், பெரிய விளக்கிற்கு வீட்டிலுள்ள ப்ளக்கிலிருந்தும் மின்சக்தியினை எடுக்கிறோம். ஏன்? ப்ளக்கிலிருந்து சிறிய விளக்கிற்கு மின்சக்தியை செலுத்தினோமானால் அது எரிந்து போய்விடும். ஏனெனில் அந்த சக்தியை தாங்கக்கூடிய அளவில் செய்யப்படவில்லை. அதுபோலவே மனிதர்களும் அந்த தெய்வ சக்தியை முழுதுமாக தாங்கக் கூடிய அளவில் இல்லை. எனவே கோயிலிலிருந்து சிறிய அளவில் சக்தியைப் பெற்றுக் கொள்கிறோம். உபாசனை செய்து தன் தாங்கும் சக்தியைப் பெருக்கிக் கொண்டவர்கள் இன்னும் பெரிய அளவில் இறை சக்தியோடு இணைகிறார்கள்; வீட்டிலிருக்கும் பெரிய அளவிலான விளக்குகளைப் போல. மகான்கள் டிரான்ஸ்பார்மர்களைப் போல.

இன்னும் ஒரு கேள்வி; கருணை மிகுந்தவர் கடவுள் என்கையில், மனிதனுக்கு வர இருக்கும் பிரச்சினைகளை முன்கூட்டியே தீர்த்து வைத்தால் என்ன?

மனிதன், பேராற்றலின் ஒரு துளிதான். அவனுக்கு வரும் பிரச்சினைகள் எல்லாம் அவனது முற்செயலின் விளைவுகள்தானே தவிர வேறல்ல. அப்படி இருக்கையில் அதை அவனே எதிர்கொண்டு தீர்ப்பதே சரியென்பதாலும், அதற்கான சக்தி அவனுக்களிக்கப்பட்டிருப்பதாலும் இறைவன் இதைச் செய்வதில்லை. மேலும் கருணை கொண்ட இறைவன் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அவன் அறியுமாறே வைத்துள்ளார். அதை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பது யாருடைய பிழை.
  
மேலும், இங்கு மனிதன் முழுதுமாக இறைவனைச் சரணடைவதுமில்லை, தான் என்ற அகங்காரத்திலே உழன்று கொண்டிருக்கையில் இப்படி கடவுளே பிரச்சினையைத் தீர்ப்பது என்பது எப்படி சரியாகும். இது இன்று ஆசிரியர்கள் கேள்விகளுக்கான விடைகளை மாணவர்களைத் தயார் செய்யச் சொல்லாமல் தாங்களே விடைகளைக் கொடுப்பது போலத்தானே ஆகும். அதனால் அம்மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் திறனற்று, தன் காலில் நிற்காமல் சார்ந்து நின்று செயல்படும் தன்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்

தன்னுடைய படைப்பு சுயபலம் உணர்ந்து, தன் காலில் சுயமாய் நின்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதாலும், தன் கருணையைச் சரிவர பயன்படுத்துகின்றார் இறைவன்.

சரி தம்பீ, மிகச் சரியாகச் சொல்லியிருக்கின்றாய். இன்னும் சில கேள்விகள் மனதிலே ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. அவைகளை மற்றொரு சந்திப்பின்போது கேட்கிறேன்.

சரி ஐயா. எப்பொழுதும் உங்கள் கேள்விகளுக்கு என் மனம் அளிக்கும் பதிலைத் தருகிறேன் ஐயா.






வெள்ளி, 14 மார்ச், 2014

பெரியசாமி ஐயாவும் சாமிநாதனும் 2

பெரியசாமி: சாமிநாதன் எப்படி இருக்கீங்க?

சாமிநாதன்: நல்லா இருக்கேன் ஐயா! நீங்கள் நலம்தானே?

பெரியசாமி: ஆம்! ஆனா மனசுதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு!

சாமிநாதன்: ஏனய்யா? உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?

பெரியசாமி: எனக்கேதும் பிரச்சினை இல்லை. எனது நண்பர் தன் மகனைப் பற்றி என்னிடம் கூறிய விஷயம்தான் குழப்பத்துக்கு காரணம். அவரது மகனின் முயற்சிகள் அனைத்தும் பலனின்றி விரயமாகின்றது. இந்த கடவுளுக்கு கண்ணேயில்லை என்று புலம்புகின்றார்.

சாமிநாதன்: ஹஹா! ஹஹா! தனக்கு நல்லது நடந்ததென்றால் என்னால் நடந்தது என்றும், கெடுதல் நடந்தது என்றால் கடவுளைக் குற்றம் சொல்வதும் பரவலாக நம்மிடையே காணப்படுகின்ற ஒரு எண்ணம்.
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற சொலவடை உண்மையைத்தான் உரைக்கிறது. ஆனால் அம்முயற்சி எவ்வாறு நடக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டில்தான் அனைவருக்கும் குழப்பம் இருக்கிறது.

பெரியசாமி: எப்படி சொல்றீங்க தம்பி?

சாமிநாதன்:  எனது நண்பர் ஒரு திரைப்படக்காட்சியினை விளக்கினார். அது இங்கு பொருத்தமாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.
ஒருவன் தன் உணவுக்காக மீன் பிடிக்கச் செல்கின்றான். தூண்டிலைக் கொண்டு மீன் பிடிக்க அவன் முயற்சி செய்கின்றான். அவனால் அது இயலவில்லை. பின்னர் அம்பினைக் கொண்டு முயற்சி செய்கின்றான். அதிலும் அவனுக்கு மீன் கிட்டவில்லை. பின்னர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றான். ஒன்றிலும் அவனுக்கு மீன் கிடைத்தபாடில்லை. மிகவும் ஆவேசமுற்ற அவன் மீன்களைத் தன் கைகளைக் கொண்டே பிடிப்பது என்று ஓடும் நீரில் குதித்து அம்மீன்களை துரத்திச் செல்கின்றான். அவை அவன் கைகளுக்குச் சிக்காமல் நீந்திச் சென்று கொண்டேயிருந்தன. நீண்ட கால விரயத்திற்குப்பின்னரும் அவன் கைகளில் மீன் எதுவும் சிக்கவில்லை.

திடீரென ஏதோ ஓர் உணர்வு உந்தித் தள்ள அவன் மீன்களை துரத்துவதை விட்டுவிட்டு அமைதியாக அவைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். அவன் மனம் அமைதியடைய அடைய அவன் கண்டவை நிச்சயம் அவனுக்கு வியப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னவென்றால் அம்மீன்கள் இவனது துரத்தலுக்கு பயந்து செல்லவில்லை. அவற்றின் பயணம் இயல்பாகவே அமைந்திருந்தது. இவன் அமைதியாக இருக்க அவைகள் அந்த பயணத்தின் வழியில் அவைகள் இயல்பாக அவனது கைகளில் தவழ்ந்து செல்ல ஆரம்பித்தன. அவன் பல நாட்களாக மிகத் தீவிரமாக முயற்சித்தபோது கிடைக்காத மீன்கள் எவ்வித பெரிய முயற்சியின்றியே அவனது கைகளில்.

ஒன்றை அடைய வேண்டும் என்ற எண்ணம் பெரிதும் மனதில் ஆக்கிரமிக்கும்பொழுது நம்மைச் சுற்றி நடப்பதை கவனிக்கத் தவறுகிறோம். அதன் விளைவுகளை கவனிக்கத் தவறுகிறோம். அதனால் நமது முயற்சிகள் நமது லட்சியத்தை தவிர்த்து வேறு எங்கோ செலுத்துவதை நாம் அறியத் தவறி விடுகிறோம். இத்தனையையும் அறியத் தவறிவிட்டு நமது முயற்சிகள் பலனளிக்கத் தவறுவதற்கு கடவுளைக் காரணம் காட்டுவது முட்டாள்தனமானது.

ஒரு லட்சியத்தினை அடைய நாம் செயலை துவக்கும்போது ஒவ்வொரு அடியினையும் முழுக்கவனத்துடனும், லட்சியத்தின் மதிப்பினை அளித்து முழுமனதுடன் செய்யும்போது ஒவ்வொரு அடியும் முழுமை பெற்று நமது லட்சியத்தினை நோக்கிச் செல்லவும் அது நம் கைகளில் அழகாக  தவழத் துவங்குவதையும் காணலாம்.

கடவுள் அளித்துள்ள மனதின் மகத்தான சக்தியை பயன்படுத்துவதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். அமைதி இருக்க வேண்டும். எளிமை இருக்க வேண்டும். இவ்வுலகில் கடவுள் படைத்த மனதின் சக்தியும், அதன் செயல்களும் நம்மைப் போன்றே படைக்கப்பட்ட ஏனைய இயற்கை பொருள்களூடே இயைந்து பயணிக்கும்பொழுது அனைத்தும் கைவசமாகும்.
எனவே உங்கள் நண்பரின் மகனிடம் கூறுங்கள் தனது லட்சியத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டு அதனை அடையச் செல்லும் ஒவ்வொரு படியினையும் மிகவும் காதலோடு செயலாற்றச் சொல்லுங்கள். 
அப்பொழுது அவரது லட்சியம் அவரது கைகளில் தவழுவதைக் காண்பார்.

பெரியசாமி: மிகச் சரியாகச் சொன்னீர்கள் தம்பி! ஒவ்வொரு மனிதனின் மனமும் மிகவும் பரபரப்புடனும், ஒருவித ஆவேசத்துடனும் இருப்பதாலேயே தன்னைச் சுற்றி நடப்பதை அதன் இயல்பான விஷயத்தை உணர இயலாமல் போகிறது. என் நண்பரின் வருத்தம் என் மனதில் குடி பெயர்ந்தவுடன் எனக்கு எதுவே விளங்க இயலாமல் போனது இதனால்தானே?

சாமிநாதன்: சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

பெரியசாமி: எனக்கு ஒரு சந்தேகம்!

சாமிநாதன்: சொல்லுங்கள் ஐயா!

பெரியசாமி: இங்கு தவறிழைப்பதும், சரியாகச் செய்வதும் நம் கைகளில் இருக்கும்பொழுது இதற்கு கடவுளைப் பொறுப்பாக்கக்கூடாது என்று சொன்னீர்கள் தம்பி! அப்படி இருக்கையில் கடவுளை பெரிதாக்கி வழிபாடு செய்து நேரத்தை வீணாக்குவது தவறுதானே?

சாமிநாதன்: மீன்களின் பயணம் எப்படி இயல்பானதோ அப்படியே இயற்கையின் ஒவ்வொரு செயலும் விளைவும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதித்திருப்பதை சிலர் இயற்கை என்கிறார்கள்; சிலர் கடவுள் என்கிறார்கள். நமக்கும் மேலான ஒரு சக்தி இப்படி ஒரு சீரான இயக்கத்தைப் படைத்திருக்கிறது என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாம் மீனின் இயக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் அதனோடே அமைதியாய் இருக்கும்போது அதன் பயணத்தோடே நம் பயணத்தை வகுத்துக் கொள்ள முடியும். இப்படியே இயற்கையின் ஒவ்வொரு படைப்பினோடும் நம் செயல் அமையுமே ஒழிய எதையும் நாம் முழுதாகக் கட்டுப்படுத்திவிட முடியாது.

அப்படி இருக்க கடவுள் வழிபாடு என்ற ஒன்று இல்லாமல் போனால் என்னாலே எல்லாம் ஆனது என்ற அகங்காரம் உள்ளத்தில் குடி கொண்டு விடும். இது மனதின் அமைதியைக் குலைத்துவிடும் அல்லது நம்மைத் தவறான வழியில் கொண்டு சேர்க்கும். அப்பொழுது நாம் இயற்கைக்கு மாறான விஷயங்களைச் செய்யத் துவங்கிவிடுவோம். அது இயற்கையின் சீரான இயக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முனையும்போது எதிர்விளைவுகள் ஏற்பட்டு நமது அழிவிற்குக் காரணமாய் அமைந்துவிடும்.

பெரியசாமி: அதுவும் சரிதான். இன்றைக்கு நிறைய விஷயங்கள் இப்படித்தான் அமைந்துவிட்டன என்றே எண்ணுகின்றேன். நாளை மாலை அதைப் பற்றிப் பேசுவோம். இப்பொழுது உடனே நண்பர் வீட்டுக்குச் சென்று அவர் மனம் அமைதியடைய உதவ முயற்சிக்கிறேன்.

சாமிநாதன்: உடனே செய்யுங்கள். இறைவன் உங்களுக்குத் துணையிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகின்றேன்.

பெரியசாமி: சரி தம்பி! சென்று வருகிறேன்!

சாமிநாதன்: ஆகட்டும் ஐயா!




செவ்வாய், 4 மார்ச், 2014

பெரியசாமி ஐயாவும், சாமிநாதனும் 1

பெரியசாமி ஐயாவும், சாமிநாதனும் பேசிகொண்டிருந்தபோது கவனித்துக் கேட்ட விஷயங்களை உங்களிடம் அவர்களின் அனுமதியோடு பகிர்ந்து கொள்கிறேன்.


பெரியசாமி: தன் கையே தனக்குதவின்னு சொல்றியே. அப்ப உனக்கு கடவுள் நம்பிக்கையில்லையா?

சாமிநாதன்: ஐயா, கடவுள் நம்பிக்கை இருக்கிறதாலதான் நான் என் கையே எனக்குதவின்னு நம்புறேன்.

பெரியசாமி: புரியலையே?

சாமிநாதன்: ஐயா, இந்த உலகிலுள்ள பொருள்களையும், உங்களையும் என்னையும் இறைவனே படைத்தார். சரிதானே?

பெரியசாமி: ஆம்! இதிலென்ன சந்தேகம்?

சாமிநாதன்: அப்படி இருக்கையில் எனக்கு உழைக்க கையையும் கொடுத்து, சிந்திக்க மூளையையும் கொடுத்துள்ள இறைவன் அதை பயன்படுத்துவதற்காகத்தானே அளித்துள்ளான். அதனை முழுமையாகப் பயன்படுத்துதல்தானே, அவனுக்கு நன்றி செலுத்துதலுக்கும், நம்புவதற்கும் சரியான ஒரு வழிமுறையாய் இருக்கும்.

பெரியசாமி: சரியாகத்தான் சொல்வது போல இருக்கிறது. ஆனால் அவனின்றி அணுவும் அசையாது; அனைத்தும் அவன் செயல் என்பன போன்ற சொற்றொடர்கள் அனைத்துச் செயலுமே கடவுளால் நடக்கிறது. மனிதனால் ஆவது ஒன்றுமில்லை என்பது போல அல்லவா சொல்லப்படுகிறது. அப்படியெனில் நீ சொல்வது கடவுள் நம்பிக்கைக்கு முரணாக அல்லவா இருக்கும்? நீ இந்த வார்த்தைகளை இல்லை என்று மறுக்கிறாயா?

சாமிநாதன்: இல்லை ஐயா! இந்த சொற்றொடர்களை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இவை மேலோட்டமாக மனிதன் செயலில் யாதொரு பயனுமில்லை என்பதுபோல தோற்றமளிக்கிறது. உண்மையில் அப்படியல்ல! நான் முன்னமே சொன்னது போல அனைத்தையும் படைத்தது இறைவனே எனும்போது அவன் அனைத்துள்ளும் நிறைந்துள்ளான், அப்படியெனில் உங்களுள்ளும் என்னுள்ளும் அவன் நிறைந்திருப்பதால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்யும் செயலைப்போலத்தானே? இதைத்தான் இச்சொற்றொடர்கள் குறிக்கின்றன.

பெரியசாமி: சரி! நீ சொல்வதை ஏற்றுக்கொண்டால், கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் செயலும் கடவுளின் செயலாகுமா? இதுவும் முரணாகத்தானே அமையும்?

சாமிநாதன்: ஐயா! இங்கு முரணாகக் காணப்படும் ஒன்றும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இங்கு தெய்வ சிந்தனை வளர வேண்டுமெனில் அதற்கு தெய்வ நிந்தனை தேவைப்படுகிறது. நிழலின் அருமை வெயிலில்தானே தெரியும். தெய்வநிந்தனையில் வாழ்பவர் தெய்வ சிந்தனையை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்போது, அவர்கள் அதன் அருமையை பரிபூரணமாக உணர்ந்து கொள்வர். மேலும் தெய்வ சிந்தனை மேற்கொண்டிருப்போர் அதனை சரியான வழியில் கைக்கொள்ள இந்த நாத்திகவாதம் முழுவதுமாக உதவுகின்றது. உண்மையை ஆய்ந்தறிய உதவுகின்றது. எதிரிலுள்ளவர் இல்லை என்று சொல்லும்போது, நாம் இருக்கிறது என்று நம்பும் ஒன்றை முழுமையாக அறிந்து கொள்ள முயலுகிறோம். உண்மையில் நாத்திகமே அதிகளவில் தெய்வத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. அது இல்லை இல்லை என்று ஒரு புறம் சொல்லச் சொல்ல, இருக்கிறது இருக்கிறது என்று மறுபுறம் அது பீறிட்டு அதி உற்சாகத்துடன் வளர்கிறது.

நீங்கள் கண்கூடாகக் காணலாமே! நாத்திகம் நம் தமிழகத்தில் எந்த அளவு பேசப்பட்டதோ அதனைவிட பன்மடங்கு பக்தியாளர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. அங்கு தவறுகள் நடந்து ஆன்மீக கூட்டங்கள் கேலிக்கூத்தாக்கப்பட்டபோது, தவறுகளை ஆராய்ந்து உண்மையான ஆன்மீகத்தை நோக்கி ஆத்மார்த்தமாக செல்ல பல இடங்களில் சிறு குழுக்கள் முயற்சிக்க மீண்டும் ஆன்மீக ஒளி பீறிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கிறது.

பெரியசாமி: அப்படியா? சரி, இந்த கேள்விக்குப் பதில் சொல்லப்பா! அப்ப சாமியாரெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். பகவானை நினைத்துக் கொண்டிருந்தாலே போதும்; எல்லாமே கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்களே! அது பொய்யா?

சாமிநாதன்: உங்களுக்கு உண்மையா சமீபத்துல நடந்த இரண்டு கதைகளைச் சொல்றேன்.

ஒரு சமூக நலத்தொண்டர். அவர் ஒரு இயக்கத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. நாளடைவில் அந்தச் சமூகப்பணிகளையும் தாண்டி ஆன்மீக நாட்டத்தோடே செயல்படத்துவங்கினார். தனக்கென விதிக்கப்பட்ட நியமங்களை அனுஷ்டிக்கத் துவங்கினார். நாளடைவில் அவருக்கு இதில் தீவிர செயல்பாட்டுக்கான எண்ணம் உதிக்க உணவுக்கான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கத் துவங்கினார்.

இவர் சமூக சேவகர் என்பதால் இவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் கேள்வி இவருக்குத் தோன்றியது. பகவாந்தான் படியளக்கப் போகிறான். அதனால யாரும் சாப்பாடு போடாம நாம யார்கிட்டேயும் சாப்பாடு கேட்கக்கூடாதுன்னு முடிவெடுத்தார். முடிவெடுத்த அன்று காலை இவர் தங்கியிருந்த இடத்தில் தன்னுடைய அன்றாட நியம அனுஷ்டானங்களை முடித்துக் கொண்ட அவர் அருகிலிருந்த தெரிந்தவர் வீட்டுக்குச் சென்றார். இவர் சென்றவுடன் அவர்கள் இவரை ஆனந்தமாக வரவேற்று பேசிக்கொண்டேயிருந்தனர். ஆனால் சாப்பிடச் சொல்லி ஏனோ கேட்கவில்லை. அங்கு இவருக்குப் பல நாள் உணவளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை ஏனோ அவர்கள் உணவைப்பற்றியே பேசவில்லை. இவர் சற்று நேரம் சென்ற பின்னர் பசி தாங்க முடியாததால் அங்கிருந்து கிளம்பத்துவங்கினார். அவர் கிளம்பும்போதும் யாரும் அவரிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்கவில்லை. அவசியம் அடிக்கடி வாருங்கள் என்று வழியனுப்பி வைத்தனர்.

அடுத்த இரண்டு வீடுகளிலும் இதே நிலைமை. ஒவ்வொரு வீட்டிலும் அரை மணி நேரம், பயண நேரம் என நேரம் கடந்ததே ஒழிய அவருக்கு உணவு கிடைத்த பாடில்லை. மிகவும் பசியால் வாடிக் களைத்து நான்காவதாக அடைந்த வீட்டில் இவர் உள்ளே நுழைந்தவுடன் வரவேற்ற அன்பர்கள், முதலில் வாங்க சாப்பிடலாம்; அப்புறமா பேசலாம் என்று உணவளிக்க அழைத்துச் சென்று விட்டனர்.

இன்னொரு கதை; மிகவும் உடல்நலம் பாதித்த ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றார். இருதய நோயாளியான அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தால்தான் மறுவாழ்வு கிடைக்கும் என மருத்துவமனை ஆய்வு முடிவுகள் சொன்னது. மருத்துவர் அவரிடம் அப்ப என்ன தேதியில அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்று சொல்லுங்கள்; அதன்படி தேவையானவற்றை ஏற்பாடு செய்துவிடலாம் என்றார்.

நோயாளி, ஐயா நீங்கள் உங்களுக்கு சவுகரியமான நாளில் உடனடியாக அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்; நான் என் அப்பன் முருகனிடம் சென்று பிரார்த்திட்டு வந்துவிடுகிறேன் என்றார். உடனே மருத்துவர் கோபமாக ஒன்று பிரார்த்தனை செய்யுங்கள், அல்லது அறுவை சிகிச்சை செய்யுங்கள். நான் அறுவை சிகிச்சை செய்து பிழைச்சிட்டா முருகன் காப்பாத்திட்டான்னு சொல்றதுக்கா? நோயாளி விக்கித்து நின்றார்.

பெரியசாமி: இந்த இரண்டு கதை மூலமா நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு நான் சொல்றேன். சரியான்னு பாருங்க தம்பி!

முதல் கதைல வருகிற மாதிரி பகவானே எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு அமைதியா உட்கார்ந்துடறது அவ்வளவு சுலபமில்லை. அது மிகவும் கடுமையான தவமா இருக்கும். அதற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனோநிலை வேண்டும். அது பிரமச்சாரிக்கும், சந்யாசிக்கும் வேண்டுமானால் சாத்தியப்படலாம். இல்லறத்தானுக்கு சரியான உதாரணம் இரண்டாம் கதையில் வரும் நோயாளிதான். பிரச்சினையை எதிர்கொண்டு செயலாற்றும் அதே நேரத்தில் இறைவனை பிரார்த்திக்க மறக்கவுமில்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழும் வாழ்க்கையும் சாத்தியம். எதிர்பார்ப்புகளோடும், இறை சிந்தனையோடும் வாழ்வதும் சாத்தியம். இதில் ஏதாவது ஒன்று மட்டுமே உலகில் இருக்கும் என்று மருத்துவரைப் போல் சிந்தித்தால் அது பைத்தியக்காரத்தனம். முரண்பட்ட விஷயங்கள், எதிரெதிர் திசையில் சுழலும் சக்கரங்களே வாழ்க்கையையும், இயந்திரத்தையும் நகர்த்த முடியும்.

சாமிநாதன்: மிகவும் சரி ஐயா!

பெரியசாமி: வாழ்த்துக்கள்! மீண்டும் ஒருநாள் நிச்சயம் சந்திப்போம்!  போய்வருகிறேன்.

சாமிநாதன்: ஆகட்டும் ஐயா! வருகிறேன்!



சனி, 1 மார்ச், 2014

அன்புள்ள மகளுக்கு,,
                     நீ அருகில் இருந்தாலும் கடிதம் எழுதி என் மனதை உன்னிடம் தெரியப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாய் போனதால், இதோ இன்னொரு கடிதம் எழுதுகின்றேன். என் எண்ணங்களை சரியான முறையில் நீ புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

                     பெண்ணாய் பிறந்திடவே பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இது வெறும் வார்த்தைகளல்ல; சத்யமானவை. ஆயின் இன்றைய சூழலில் மட்டும் அல்ல நெடிய ஆண்டுகளாகவே பெண்ணினம் இங்கு தன்னிலை மறந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்மணி என்பவள் உண்மையில் கண்மணி என்றே முழக்கமிட வேண்டியிருக்கின்றது. பெண்ணருமை தெரியாமல் சுற்றி இருப்போர்கள் கண்டபடி பேசினாலும் அந்த ஏச்சுக்களை உனது ஞானத் தீயிலிட்டு பொசுக்கி விடு.

                     பெண் ஞானியா? உலகத்தை படைத்திட்ட பெண் எனும் தெய்வமே முதல் ஞானி. படைப்புத் தொழிலுக்குக் காரணமானவற்றை அது மனித இனமோ, தாவர இனமோ பெண்சக்தியாகத்தான் நாம் காண்கின்றோம். படைப்பாற்றல் என்ற ஒரு அருமையான சக்தி உன்னிடத்தில் இருக்கிறதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். இந்த படைப்பாற்றல் என்பது புதிய உயிர்களை படைப்பது மட்டுமல்ல இந்த உலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு புதிய படைப்புகளிலும் பெண்களின் சக்தியில்லையெனில் நடைபெறாது.

                     இந்த ஞாலத்தைக் காத்திடும் சக்தியாக பராசக்தியை காண்கிறோம்;அவளே படைத்திடும் கடவுளாகிய பிரம்மனை படைத்ததாய் அறிகிறோம். இன்று பெண்கள் தங்கள் சக்தியினை உணராமல் பேதையாய் வாழும் நிலை. கல்விகள் பல கற்கும் நீங்கள், கேள்விகள் பல கேட்டு உங்கள் சக்தி உணர்ந்து, இமயத்தினும் மேலாய் உயர்ந்து எழுந்து நிற்க வேண்டும்

                     இந்த அகண்ட பாரததேசம் ஒரு காலத்தில் பெண்மையின் சக்தி, அருமை பெருமைகளை பரிபூரணமாய் உணர்ந்திருந்தது. உலகின் மற்றனைத்து பகுதிகளிலும் பெண்ணை ஒரு பெண்ணாகவே பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவளை தாயாய் வழிபட்டது. இந்த மண்ணை தாய் மண் என்றும், நதிகள், காடுகள், மலைகள் என அனைத்தையும் பெண் வடிவாகவும், தாயாகவும் கண்ட பூமி இது. இன்று அந்நிலையை மீட்டெடுக்க வேண்டிய சூழல். இந்த விதியினையும் மாற்றும் வல்லமை பெண்களிடத்து மட்டுமே!                    

                     சரி இந்த நிலைமை எதனால் ஏற்பட்டது? உங்கள் சக்தி நீங்கள் உணராமல் போனது மட்டுமல்ல; உங்கள் சக பெண்ணினத்தை நீங்கள் சரிவர நடத்தாததாலும் ஏற்பட்டிடுக்கக் கூடும். இன்றும் விண்ணிலே பறந்திடும் வேலையைச் செய்கின்ற பெண்களை மதிக்கின்ற நாம், மண்ணிலே இறங்கி உழைத்திடும் மாதரை மதியாமல் போவது ஏன் மகளே?

                     படிப்போடு வீட்டிலே பலப்பல வேலைகள் இருப்பதை மறந்தாய்; உன் வீட்டு வேலையை இன்னொரு பெண்ணிடம் தந்தாய்; எந்தப்பணி இருந்தாலும் உன் வீட்டுக்கடமையை மறுப்பது நியாயமா? அன்று ஆரம்பக் கல்வியோடு நின்றுவிட்டனர் பெண்கள், இன்று உயர்கல்வி பல பெற்றுள்ளனர்; அன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிய பெண்கள் இன்று வானமே எல்லையென வாழ்கின்றனர்; இருந்தும் இன்று உள்ளுக்குள் பயம் கொண்டு வாழ்வதேன்?

                     காரணம், எது சுதந்திரம், எது கட்டுப்பாடு, எது அடிமைத்தனம் என்பதன் வரையறை அறியாமல் போனதே! இதன் வரையறை வகுக்கப்படும்பொழுது நமது சமூக அமைப்பு, அதன் கலாசாரம், பாரம்பர்யம் இவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்பது நம்மிடம் உள்ள அனைத்தையும் தகர்த்தெறிவதல்ல! ஒரு உடை இருக்கிறது.அதில் கறை ஏற்பட்டால் கறையைத்தான் போக்க முனைய வேண்டுமே ஒழிய உடையை அல்ல! நம்மிடம் சிக்கல் ஏற்பட்டது இவ்விடத்தில்தான். நாம் நமக்கான ஒன்றை விட்டு வேறொரு கலாசாரப்படி, சிந்தனைப்படி இவ்வரையறைகளை வகுக்க முற்பட்டதுதான்.

                     பெண்ணை தாய் என்ற உயர்ந்த நிலையில் கண்டு வந்த மக்களிடத்தே ஆணும் பெண்ணும் சமம் என்று கூறியது எவ்வளவு முட்டாள்தனம். உயர்ந்த இடத்திலிருந்து ஒரு படி கீழிறக்கிக்கொண்டது தன்னைத்தானே பெண் சமுதாயம். சமம் என்று கூறிக்கொண்டதோடு நில்லாமல் எதில் போட்டி போடுவது என்றில்லாமல் குற்றங்கள் புரிவதற்கும், போதையின் பாதையில் பயணிப்பதற்கும் சுதந்திரம் என்று அர்த்தம் கொண்டால் எவ்வாறு சரியாகும்.

                     படிக்கின்ற காலத்திலே பாதிக்கின்ற ஒரு செயல் காதல். திருமணம் என்பது பெண்ணுடைய முடிவுதான்; சந்தேகம் அதிலில்லை. புரியாத புதிராக தெரியாத மனிதரை கைபிடிக்க நினைப்பது சரியா? கைப்பிடிக்கும் மணவாளன் நம்பிக்கை தரவேண்டும்; நல்லோர்கள் துணையும் நம்பிக்கையும் இங்கு இருக்க வேண்டும். உயிர்க்காதல் உயர்காதல் எல்லாமே வாய்ஜாலம்! உயிர் தந்த பெற்றோரை உதறியே தள்ளிடும் காதல் சரியா? ஈன்ற உறவுகள் வலி கொண்டு அழும்போது அவ்வாழ்க்கை சிறக்குமா? உறவினைத் துண்டித்து, உணர்வினைத் தண்டித்து காதலைக் கைப்பிடித்தல் முறையோ?

                     தாய்தந்தை சம்மதம் தந்தால்தான் காதலும் உன்னதம் இவ்வுலகில்! பிள்ளைகள் சம்மதம் தந்தால்தான் திருமணம் என்பதை பெற்றோரும் நினைவு கொள்ள வேண்டும். இருபது வருடங்கள் வளர்த்திட்ட பெற்றோரை இழந்திட ஒரு நிமிடம்; ஆனால் இழந்திட்ட பெற்றோரை மீண்டுமே அடைந்திட பலவருடம் துடிக்கின்ற நிலை சரியா? திருமணம் என்பது இருமனம் இணைவது. பணம் கொண்டு திருமணம் முடிவாகும் வேடிக்கை இங்கு நடைபெறுவதேன்? சாதகம் இல்லையென்றால் ஜாதகம் சரியில்லை எனச் சொல்லி திருமணத்தை நிறுத்தும் அவலமும் இங்கு ஏன்?

                     நல்ல இடம் என்பதை பணமுள்ள இடமென்றும், பணமில்லை என்றால் நல்லவர் என்றாலும் சரியில்லை என்பதும், பணத்தினை மதித்து குணத்தினை மிதித்திடும் நிலை இங்கு ஏனம்மா? தன்னுடைய விருப்பமே முக்கியம் என்று பெற்றோரும், பெற்றவர்களும் நினைக்கும் நிலை மாற வேண்டும். குடும்பமே சேர்ந்து விரும்பிடும் நிலை வர வேண்டும்.

              மாற்றங்கள் என்பது மாறித்தான் வருவது;மாறாத நிலையிது மகளே! தோற்றங்கள் மாறினால் ஏற்றங்கள் வந்திடும் நினைப்பிங்கு ஏற்பட்டது ஏன் மகளே! வெண்மையோ கருமையோ அதனதன் இயல்பிலே இருப்பது நல்லது. கருமையை வெண்மையாய் மாற்றிட நினைக்கும் சிறுமைகள் ஏனிங்கு? நிறத்திலே உயர்வில்லை, குணத்திலே அது உண்டு என்ற நிஜத்தை நீ உரைப்பாய்! இறைவனால் தரப்பட்ட இயல்பான உருவம் இணையில்லா படைப்பு எனும்போது நிலையான அழகினை நிலைகுலையச் செய்திடும் வீண் அழகு நிலையங்கள் இங்கு ஏன்? அழகினை அழகாக்க நினைத்திடும் செயல்முறைகள் அனைத்தும் செயற்கையே. இயற்கையை அழித்திங்கு செயற்கையை புகுத்திடும் இழிநிலை எவ்வகையில் நியாயம் மகளே?

                     இனியென்ன பெண்ணிற்குள் ஒளிந்து கிடக்கும் பேராற்றலை அறிந்து செயல்படுவதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமைய முடியும். எய்திடும் கணை யாவும் இலக்கினை அடையாது. ஆனால் இலக்கினை முடிவு செய்து அடைந்திடும் கணையாக நீ மாறு! உனைச் சுற்றி உள்ளோர்க்கு உன் வாழ்க்கை நம்பிக்கை தர வேண்டும். உன் சமுதாயத்தை உயர்த்திடும் நம்பிக்கை உனக்குள்ளே வரவேண்டும். நினைப்பது நடப்பதும், நடப்பது சிறப்பதும் உனக்குள்ளே உருவாகும் நம்பிக்கையினால் மட்டுமே!
                    
                     அதிகாரக் கூட்டத்தினை எதிர்கொள்ளும் துணிச்சலும், மதிகொண்டு மண்ணுலகை மாற்றிடும் வல்லமையும், விதிதன்னை மாற்றிடும் விந்தைகளும் நீயறிந்திருந்தாலும் வீணான ஓர் தயக்கம் உன்னுள்ளே ஓர் இழையாய் ஓடிக்கொண்டிருப்பதேன்? தயக்கத்தை உதறியெறிந்து, தார்மீக நெறியுணர்ந்து தனியொருவளாய் நீ முனைந்திடும்பொழுதிலே உனது பின்னே பெண்ணினம் முழுவதும் நின்று கொண்டிருக்கும்.

                     பிறப்பதும் இறப்பதும் புதிதல்ல, சிறப்பது வேண்டும். வெறுப்பது என்பது நமை நாமே அழிப்பது; பொறுப்பது என்பது பொறுப்போடு இருப்பது என்பதை உணர்ந்திடு!  விரைவாக செயல்படும் உன்னுடைய திறன் கண்டு இந்த உலகம் வியந்து போக வேண்டும். பயந்திடும் நிலை வேறு, பணிந்திடும் நிலை வேறு என்றுணர்ந்து, பாய்ந்திடும் துணிவிருந்தும் ஓய்ந்திடும் நிலை கொண்ட பெண்ணினம் மாறட்டும் உன் செயலால்! நித்தமும் நன்மைகள் நிகழ்த்திடும் ஒளியாக திகழ்ந்திடு!

                     இந்திய தேசத்தின் இணையில்லா பெண்களை இங்கு நீ நினைவு கொள்! கார்க்கி முதல் கல்பனா சாவ்லா வரை பல்துறையிலும் அழுத்தமாய் காலடி பதித்து சாதனை புரிந்த பெண்களின் வழி வந்தவள் நீ என்று உணர்! ஒவ்வொரு பெண்ணும் தான் செல்லும் துறையினை தானே முடிவெடுக்கும் நிலை வேண்டும்! விடுமுறை நாட்களில் ஓய்வென்ற பெயரிலே தொலைக்காட்சி முன்பாக தோய்வாக இருந்திடும் தோழிகளை மாற்றிவிடு! இருக்கின்ற காலம் மிகமிகக் குறைவு; தயக்கமோ மயக்கமோ இன்றி முன்னேறிச் செல்!

                     நமது குரு நெமிலி ஸ்ரீபாபாஜியின் சிந்தனைகளையும், வார்த்தைகளையும் உள்வாங்கி நான் வரைந்திருக்கும் மடலிது. குருவின் திருவருள் என்றும் துணையிருக்கும் என்ற நம்பிக்கையோடு நடைபோடு! வெற்றி உனதே! பாரதத் தாய் உலகிற்கெல்லாம் வழிகாட்ட நீங்கள் அத்துணை பேரும் களம் கண்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் !
                    
                                                        அன்புடன்,
 
                    சு. சத்ய நாராயணன்