வெள்ளி, 14 மார்ச், 2014

பெரியசாமி ஐயாவும் சாமிநாதனும் 2

பெரியசாமி: சாமிநாதன் எப்படி இருக்கீங்க?

சாமிநாதன்: நல்லா இருக்கேன் ஐயா! நீங்கள் நலம்தானே?

பெரியசாமி: ஆம்! ஆனா மனசுதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு!

சாமிநாதன்: ஏனய்யா? உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?

பெரியசாமி: எனக்கேதும் பிரச்சினை இல்லை. எனது நண்பர் தன் மகனைப் பற்றி என்னிடம் கூறிய விஷயம்தான் குழப்பத்துக்கு காரணம். அவரது மகனின் முயற்சிகள் அனைத்தும் பலனின்றி விரயமாகின்றது. இந்த கடவுளுக்கு கண்ணேயில்லை என்று புலம்புகின்றார்.

சாமிநாதன்: ஹஹா! ஹஹா! தனக்கு நல்லது நடந்ததென்றால் என்னால் நடந்தது என்றும், கெடுதல் நடந்தது என்றால் கடவுளைக் குற்றம் சொல்வதும் பரவலாக நம்மிடையே காணப்படுகின்ற ஒரு எண்ணம்.
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற சொலவடை உண்மையைத்தான் உரைக்கிறது. ஆனால் அம்முயற்சி எவ்வாறு நடக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டில்தான் அனைவருக்கும் குழப்பம் இருக்கிறது.

பெரியசாமி: எப்படி சொல்றீங்க தம்பி?

சாமிநாதன்:  எனது நண்பர் ஒரு திரைப்படக்காட்சியினை விளக்கினார். அது இங்கு பொருத்தமாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.
ஒருவன் தன் உணவுக்காக மீன் பிடிக்கச் செல்கின்றான். தூண்டிலைக் கொண்டு மீன் பிடிக்க அவன் முயற்சி செய்கின்றான். அவனால் அது இயலவில்லை. பின்னர் அம்பினைக் கொண்டு முயற்சி செய்கின்றான். அதிலும் அவனுக்கு மீன் கிட்டவில்லை. பின்னர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றான். ஒன்றிலும் அவனுக்கு மீன் கிடைத்தபாடில்லை. மிகவும் ஆவேசமுற்ற அவன் மீன்களைத் தன் கைகளைக் கொண்டே பிடிப்பது என்று ஓடும் நீரில் குதித்து அம்மீன்களை துரத்திச் செல்கின்றான். அவை அவன் கைகளுக்குச் சிக்காமல் நீந்திச் சென்று கொண்டேயிருந்தன. நீண்ட கால விரயத்திற்குப்பின்னரும் அவன் கைகளில் மீன் எதுவும் சிக்கவில்லை.

திடீரென ஏதோ ஓர் உணர்வு உந்தித் தள்ள அவன் மீன்களை துரத்துவதை விட்டுவிட்டு அமைதியாக அவைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். அவன் மனம் அமைதியடைய அடைய அவன் கண்டவை நிச்சயம் அவனுக்கு வியப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னவென்றால் அம்மீன்கள் இவனது துரத்தலுக்கு பயந்து செல்லவில்லை. அவற்றின் பயணம் இயல்பாகவே அமைந்திருந்தது. இவன் அமைதியாக இருக்க அவைகள் அந்த பயணத்தின் வழியில் அவைகள் இயல்பாக அவனது கைகளில் தவழ்ந்து செல்ல ஆரம்பித்தன. அவன் பல நாட்களாக மிகத் தீவிரமாக முயற்சித்தபோது கிடைக்காத மீன்கள் எவ்வித பெரிய முயற்சியின்றியே அவனது கைகளில்.

ஒன்றை அடைய வேண்டும் என்ற எண்ணம் பெரிதும் மனதில் ஆக்கிரமிக்கும்பொழுது நம்மைச் சுற்றி நடப்பதை கவனிக்கத் தவறுகிறோம். அதன் விளைவுகளை கவனிக்கத் தவறுகிறோம். அதனால் நமது முயற்சிகள் நமது லட்சியத்தை தவிர்த்து வேறு எங்கோ செலுத்துவதை நாம் அறியத் தவறி விடுகிறோம். இத்தனையையும் அறியத் தவறிவிட்டு நமது முயற்சிகள் பலனளிக்கத் தவறுவதற்கு கடவுளைக் காரணம் காட்டுவது முட்டாள்தனமானது.

ஒரு லட்சியத்தினை அடைய நாம் செயலை துவக்கும்போது ஒவ்வொரு அடியினையும் முழுக்கவனத்துடனும், லட்சியத்தின் மதிப்பினை அளித்து முழுமனதுடன் செய்யும்போது ஒவ்வொரு அடியும் முழுமை பெற்று நமது லட்சியத்தினை நோக்கிச் செல்லவும் அது நம் கைகளில் அழகாக  தவழத் துவங்குவதையும் காணலாம்.

கடவுள் அளித்துள்ள மனதின் மகத்தான சக்தியை பயன்படுத்துவதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். அமைதி இருக்க வேண்டும். எளிமை இருக்க வேண்டும். இவ்வுலகில் கடவுள் படைத்த மனதின் சக்தியும், அதன் செயல்களும் நம்மைப் போன்றே படைக்கப்பட்ட ஏனைய இயற்கை பொருள்களூடே இயைந்து பயணிக்கும்பொழுது அனைத்தும் கைவசமாகும்.
எனவே உங்கள் நண்பரின் மகனிடம் கூறுங்கள் தனது லட்சியத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டு அதனை அடையச் செல்லும் ஒவ்வொரு படியினையும் மிகவும் காதலோடு செயலாற்றச் சொல்லுங்கள். 
அப்பொழுது அவரது லட்சியம் அவரது கைகளில் தவழுவதைக் காண்பார்.

பெரியசாமி: மிகச் சரியாகச் சொன்னீர்கள் தம்பி! ஒவ்வொரு மனிதனின் மனமும் மிகவும் பரபரப்புடனும், ஒருவித ஆவேசத்துடனும் இருப்பதாலேயே தன்னைச் சுற்றி நடப்பதை அதன் இயல்பான விஷயத்தை உணர இயலாமல் போகிறது. என் நண்பரின் வருத்தம் என் மனதில் குடி பெயர்ந்தவுடன் எனக்கு எதுவே விளங்க இயலாமல் போனது இதனால்தானே?

சாமிநாதன்: சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

பெரியசாமி: எனக்கு ஒரு சந்தேகம்!

சாமிநாதன்: சொல்லுங்கள் ஐயா!

பெரியசாமி: இங்கு தவறிழைப்பதும், சரியாகச் செய்வதும் நம் கைகளில் இருக்கும்பொழுது இதற்கு கடவுளைப் பொறுப்பாக்கக்கூடாது என்று சொன்னீர்கள் தம்பி! அப்படி இருக்கையில் கடவுளை பெரிதாக்கி வழிபாடு செய்து நேரத்தை வீணாக்குவது தவறுதானே?

சாமிநாதன்: மீன்களின் பயணம் எப்படி இயல்பானதோ அப்படியே இயற்கையின் ஒவ்வொரு செயலும் விளைவும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதித்திருப்பதை சிலர் இயற்கை என்கிறார்கள்; சிலர் கடவுள் என்கிறார்கள். நமக்கும் மேலான ஒரு சக்தி இப்படி ஒரு சீரான இயக்கத்தைப் படைத்திருக்கிறது என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாம் மீனின் இயக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் அதனோடே அமைதியாய் இருக்கும்போது அதன் பயணத்தோடே நம் பயணத்தை வகுத்துக் கொள்ள முடியும். இப்படியே இயற்கையின் ஒவ்வொரு படைப்பினோடும் நம் செயல் அமையுமே ஒழிய எதையும் நாம் முழுதாகக் கட்டுப்படுத்திவிட முடியாது.

அப்படி இருக்க கடவுள் வழிபாடு என்ற ஒன்று இல்லாமல் போனால் என்னாலே எல்லாம் ஆனது என்ற அகங்காரம் உள்ளத்தில் குடி கொண்டு விடும். இது மனதின் அமைதியைக் குலைத்துவிடும் அல்லது நம்மைத் தவறான வழியில் கொண்டு சேர்க்கும். அப்பொழுது நாம் இயற்கைக்கு மாறான விஷயங்களைச் செய்யத் துவங்கிவிடுவோம். அது இயற்கையின் சீரான இயக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முனையும்போது எதிர்விளைவுகள் ஏற்பட்டு நமது அழிவிற்குக் காரணமாய் அமைந்துவிடும்.

பெரியசாமி: அதுவும் சரிதான். இன்றைக்கு நிறைய விஷயங்கள் இப்படித்தான் அமைந்துவிட்டன என்றே எண்ணுகின்றேன். நாளை மாலை அதைப் பற்றிப் பேசுவோம். இப்பொழுது உடனே நண்பர் வீட்டுக்குச் சென்று அவர் மனம் அமைதியடைய உதவ முயற்சிக்கிறேன்.

சாமிநாதன்: உடனே செய்யுங்கள். இறைவன் உங்களுக்குத் துணையிருக்கப் பிரார்த்தித்துக் கொள்ளுகின்றேன்.

பெரியசாமி: சரி தம்பி! சென்று வருகிறேன்!

சாமிநாதன்: ஆகட்டும் ஐயா!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக