சனி, 14 பிப்ரவரி, 2015

கருத்துச் சுதந்திரம்


     எழுத்தாளர் பெருமாள் முருகனின் தயவில் கருத்துச் சுதந்திரம் என்ற வார்த்தைக்கு மீண்டும் பொருளைத் தேடும் ஒரு சூழல் உருவானது போலத் தோன்றுகிறது. ஆனால் உற்று நோக்கில் ஒரு கேலிக்கூத்து அரங்கேறி வருவதை நன்றாய் உணர முடிகிறது. திரு.ஜெயமோகன் அவர்களின் கருத்துச் சுதந்திரம் காப்போம் என்ற நகைச்சுவைக் கட்டுரை கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசப்படும் இடங்களில் நினைவில் எழுந்து நகைப்பை உருவாக்குவதை தவிர்க்க இயலவில்லை.
    
     கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன, அதற்கு ஏதேனும் வரையறை இருக்கிறதா, இல்லை இனி அப்படி ஒன்றைச் செய்யலாமா, எந்த காரணிகளை முன்வைத்து அதனைத் தீர்மானிக்கலாம் என்ற கேள்வி நம்முள் எழுகிறது. ஆனால் ஒவ்வொரு அமைப்பும் கருத்துச் சுதந்திரம் பற்றி கூட்டமோ, கருத்தரங்கமோ, போராட்டமோ என வெவ்வேறு தளங்களில் விவாதப் பொருளாக்க முனையக்கூட இல்லை என்பதே உண்மை. ஒரு தரப்பு மற்றவரின் கருத்துச் சுதந்திரத்தை எப்படி மிதிக்கிறது என்பதை மட்டுமே பேசுகிறது.

     நீ அன்று அப்படிச் செய்தாயே என ஒரு தரப்பும், இன்னொரு தரப்பு உன் சித்தாந்தமே இப்படித்தான் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் என வெட்டிக் கூச்சல்களை மேடை தோறும் செய்து வருகின்றன. இவர்களில் பெரும்பான்மையோர் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். விளங்குமையா, உம்மை வாசிக்கின்ற பின் தொடர்கின்ற இளைய சமுதாயம்.

     முற்போக்கு எழுத்தாளர்களின் இரட்டை வேடம் பெருமாள் முருகன் தயவால் வெகுவாய் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமது சங்கத்தில் உறுப்பினராய் உள்ள  எச். ரசூல் என்பவர் பதிந்த மதம் சார்ந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பினைப் பெற்று தனிமைப்படுத்தப் பட்டபோது பெயரளவிற்கு கூட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்ததோடு சரி, இன்று வரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை அதற்கு த.மு.எ.ச உதவவில்லை என்கிறது தகவலறிந்த வட்டாரம். மதத்தைக் குறித்து தான் விரும்பாவிட்டாலும் அதற்கு விமர்சனங்கள் வரும்போது அதற்காக முதலில் போராட்டக் களத்தில் நிற்பது முற்போக்குதான் என இப்போது முகத்தில் அறைந்தாற்போல் பதிவு செய்யப்படுகிறது.
    
     சமீபத்தில் ஹிந்து நாளிதழ் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையில் வந்த கேலிச்சித்திரத்தை விமர்சித்து எழுதிய கட்டுரையில் வெளியிடப்பட்ட படத்துக்காக மறுநாள் மன்னிப்பு கோரியது. இந்த இதழ்தான் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கருத்துச் சுதந்திரம் பற்றி மிகப் பெரும் பிரச்சாரம் மேற்கொண்டது. அதனைப் பொறுத்து  கருத்துரிமையின் எல்லை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்

ஆனால் திரு.ஜெயமோகன்

நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிடுகிறேன். என் டிஸ்கிளெய்மர். இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகப்பேசும் ஆற்றல் எனக்கு இல்லை. எந்த நாளிதழுக்கும் இல்லை. இந்திய அரசுக்கே இல்லை.அப்புறமென்ன?
பிற முற்போக்கு அறிவுஜீவிகளைப்போல அதனிடமே போய் கைநீட்டாமலிருக்கும் நேர்மை மட்டும் இருக்கிறது.”
என்கிறார். இதனைப் படிக்கும்பொழுது இந்தியாவின் கருத்துச் சுதந்திரத்தின் வரையறை இதுவோ என எண்ணத் தோன்றுகிறது.

     திரு.மனுஷ்யபுத்ரன் என்கிறவர் சொல்கிறார், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் மிக நுண்ணிய உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்கிறார். ஆனால் இவர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பேசுகிறார். திருச்செங்கோட்டு மக்களின் நுண்ணிய உணர்வுகளைப் பற்றி யாரும் கவலை கொள்ளக்கூடாது என்பது இவரது நிலைப்பாடா?

     சரஸ்வதியை ஹூஸைன் நிர்வாணமாக வரைந்தபோது அது அவரது கருத்துச் சுதந்திரம், கலையுணர்வு என்று சொன்னவர்கள் தஸ்லிமா நஸ்ரூனின் நூலுக்கு எதிரான ஃபத்வாவை எப்படி எதிர்கொண்டார்கள். திரைமறைவில் பேசுவதை எல்லாம் சொல்லக்கூடாது. ஒவைசியின் கருத்துக்குக் கூட இவர்கள் வாயசைக்கவில்லை என்பது உண்மை. அதற்காக ஹூஸைனை நாம் எதிர்க்கிறோமென்றில்லை. விமர்சனங்களை  ஒட்டு மொத்தமாக நிராகரிப்பது என்பது பாரத சிந்தனை மரபல்ல.

     ஹூசைன் இப்படி வரைவதற்கு எந்த தத்துவம் பின்புலமாய் அமைந்தது என்றும் குறிப்பிட்டுச் சொன்ன மாதிரி தெரியவில்லை(அப்படி ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள், திருத்திக்கொள்கிறோம்). இந்திய ஞான மரபுகளில் இருந்து வராமல் வெளியிலிருந்து வரும் கருத்துக்கள் அதன் உள்நோக்கம் குறித்த சந்தேகங்களை உருவாக்குகிறது. வெறும் கலைப் படைப்பு என்று பொருத்திச் செல்ல இயலாத சூழலில் இது போன்ற படைப்புகள் நிச்சயம் எதிர்வினையை எதிர்கொள்ளத்தானே வேண்டும்.    

     .மு..ச பொங்கி வசைபாடுவது இந்தியப் பண்பாட்டுக்கும், இந்திய சிந்தனைகளுக்கு எதிராக மட்டுமே. பெரும்பான்மையான ஒன்றை எதிர்ப்பதே இவர்களை தக்க வைக்கும் என்று நம்புகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. தவற்றை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை. தங்களைச் சுற்றி ஒரு வட்டமிட்டுக் கொண்டு அதனின்றும் வெளி நோக்காமல் அதனுள்ளிருந்து மட்டுமே அவர்களது பார்வைகள், சிவப்புக் கண்ணாடி அணிந்து மட்டுமே. கம்யூனிஸ்டுகளின் வெளியுறவுக் கொள்கை என்பது கம்யூனிஸ்டு நாடுகளுக்கு ஆதரவாகவும் மற்றவற்றிற்கு எதிரான நிலைப்பாடும்.

     ஒரு நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமெனில் அதன் பண்பாட்டை கலாசாரத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற கொள்கை இவர்கள் மூலமாக யாரோ நிறைவேற்றிக் கொள்ளத் துணிகிறார்கள் என்ற ஐயப்பாட்டிற்கு இடம் கொடுக்கலாமல்லவா? மெக்காலேவின் கல்விமுறை கூட ஒட்டு மொத்தமாக பண்பாட்டை அழித்து விடவில்லை ஆனால் அதை முழுவது அழித்தொழிக்கும் முயற்சியோ என்ற ஐயத்துடன் சில எழுத்துகளை நோக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்த தேசத்தின் பண்பாடு எங்கெங்கிருந்தோ அது வீர்யத்துடன் முளைத்துக் கொண்டே வருகிறது. அது இந்த மண்ணோடு கலந்து விட்ட, இந்த மண்ணின் மைந்தர்களின் ரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று. எனவே பாரதீயர்கள் எவ்விமர்சனத்தையும், எதிர் சிந்தனைகளையும் அச்சத்தோடோ அல்லது எதிர்வினையாற்ற வேண்டுமே என்ற நோக்கில் அணுகாமல் ஆதாரபூர்வமாக, கூடவே கொஞ்சம் உணர்வோடும், உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்காமல் அணுகுவது நல்லது என எண்ணுகிறோம்.

     பெருமாள் முருகனுக்கு ஒட்டு மொத்த இந்திய மக்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவருக்கு ஆதரவாகப் பேசப்போகும்போதுதான் முற்போக்கு எனச் சொல்பவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது. திருமாவளவன், இவர் ஒரு காலத்தில் தாழ்ந்த நிலையிலிருக்கும் மக்களுக்கு போராடுபவர் என அறிமுகப் படுத்தப்பட்டவர். அதை நாம் நம்பினோம். இன்று அவரது செயல்பாடுகள் அவ்வாறு எண்ணத்தோன்றவில்லை. இவரது கருத்துச் சுதந்திர ஆதரவும் எதிர்ப்பும் இப்படி இருவேடம் கொண்டதே. குஷ்பூவின் பேச்சுக்கு இவர் அளித்த கருத்து சுதந்திரம், அம்பேதகரின் கேலிச் சித்திரத்திற்கு இவர் அளித்த கருத்து சுதந்திரம் மறக்கப்பட்டதா இல்லை மறைந்து விடுமென்று நினைத்தாரா? 

     சாதாரணமாக சமூக வலைத் தளங்களில் உலவுபவர்களின் கருத்து கூட எனக்கு இந்து மதம் பிடிக்காது; அதனால் அது சார்ந்த எதை விமர்சித்தாலும் அது எனக்கு உகந்ததே என்ற எண்ணம் மேலோங்கியிருப்பதைக் காண முடிகிறது. இங்கு பெருமாள் முருகன் விமர்சித்திருப்பது, மதத்தை அல்ல ஒரு இனக்குழுவின் பண்பாட்டை, திருச்செங்கோட்டு மக்களின் வாழ்க்கையை; அதை அவர் புனைவாகச் சொல்லவில்லை மாறாக வரலாற்று ஆவணமாக மாற்ற முனைகிறார். இப்படி தமிழர் வாழ்வியலில் இல்லாத ஒன்றை வரலாற்று ஆவணமாக மாற்ற முயல்வதை அனைத்து தமிழ் ஆதரவாளர்களும் விரும்புகிறார்களா? இல்லை திருச்செங்கோட்டு மக்கள் தமிழர்களில்லையா? என்ன சொல்ல வருகிறார்கள் இன்றைய தமிழ்க் காவலர்கள்?

    அது வாழ்வியலில் இருந்ததில்லை என்பது திருச்செங்கோட்டு மக்களின் கருத்து. திருச்செங்கோட்டு வரலாறு என்ற புத்தகத்தை ஏற்கனவே வெளியிட்ட திரு. நாராயணசாமி என்ற 90 வயது ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இதைச் சொல்பவன் வாய் அழுகிவிடும் என்கிறார். ஆதாரங்களை முன்வைக்காமல் கருத்துச் சுதந்திரமில்லை என்று கூக்குரலிடுவது என்ன நியாயம் என்று விளங்கவில்லை.

     இதில் இன்னொரு கேள்வியும் முன்வைக்கப்பட்டது; ஒரு வேளை அப்படி ஒரு பழக்கம் இருந்திருக்குமெனில் இதனை ஏற்றுக் கொள்வீர்களா என்று. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் உங்கள் கேள்வியே தொக்கி நிற்கிறதே? இருந்தால் என்றுதானே கேட்கிறீர்கள். ஆதாரமற்ற ஒரு தகவலை பதிவதன் மூலமாக, ஒரு குழுவின் மன உணர்வுகளை புண்படுத்துவதன் மூலமாக நீங்கள் சாதிக்கப்போவதென்ன? பெருமாள் முருகனுக்கு ஆதரவாகப் பேசுவோர் எவரும் ஆதாரம் கொண்டு பேசவில்லை மாறாக பொத்தாம் பொதுவாகவே பேசி வருகின்றனர்.

     ஆனால் நடந்ததில் ஒரு நல்லது என்னவென்றால் திருச்செங்கோட்டு மக்கள் இணைந்து போராடினார்கள்; அதை .மு.. தன் சிவப்புக் கண்ணாடி வழியாகப் பார்த்து மதச் சாயம் பூசிவிட்டது. அந்த வாய்ப்பை இந்துத்வர்கள் பயன்படுத்த முனைகிறார்கள். இப்படி மக்கள் ஒருங்கிணையும் தருணங்களில் அமைப்புகள் ஆதரவு என்ற நிலையைத் தவிர்த்து எந்த அமைப்பும் அந்த இயக்க நிகழ்வை தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றே எண்ணுகிறோம். 

     சில மாதங்களுக்கு முன்னால் பாடகர் ஜேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்ற ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். உடனே முற்போக்காளார்கள் பொங்கியெழுந்து அவரை கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள்.பெரும்பான்மையான பெண்களின் மனநிலை என்ன, அவர் கருத்தைப் பதிந்த இடத்தில் எதிர்ப்பு இருந்ததா, அவர் சொன்னது நன்மையா தீமையா என எதையும் யோசிக்காமல் ஒரு எதிர்வினை. நாங்கள் சிந்திப்பது, பேசுவது மட்டுமே முற்போக்கு மற்றது எல்லாமே பிற்போக்கு என்ற ஒரு எண்ணம். இது ஆதிக்க மனோநிலை இல்லையா? இவர்கள் ஆதிக்க மனநிலையை எதிர்ப்பவர்கள் என்ற வேடத்தில் இருப்பவர்கள்.

     சிறுபான்மையினக் காவலர்களின் செயல்கள் மேற்கண்டவாறு வாடிக்கை எனில் ஹிந்து மக்களின் காவலர்களின் செயல்கள் மிகவும் வேடிக்கை. ஏதாவது ஒரு விமர்சனம் ஹிந்து என்ற பெயரில் வந்துவிட்டால் உனக்கு தைரியம் இருந்தால் இஸ்லாமியரை விமர்சித்துப்பார், கிறித்தவரை விமர்சித்துப்பார் என ஒரு கதகளியாட்டம் நிகழ்த்திவிடுவார்கள். இதனைக் கேட்கும்பொழுது வடிவேலுவின் கைப்பிள்ளை கதாபாத்திரமே மனதில் நிழலாடும்.

     விமர்சனம் வந்தால் அதனை எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய இப்படி அவனைப் பற்றிப் பேசிப்பார் எனச் சொல்வது எந்த வகையில் சரி ? இன்றும் அப்படித்தான் இவர்கள் பெருமாள் முருகனின் வார்த்தைகளுக்கு விமர்சனங்களை முன்வைக்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் தமுஎசவின் இரட்டை வேடத்தை இம்முறை சரியான விதத்தில் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதால் அதனைப் பாராட்டியே தீரவேண்டும்.

     எழுத்தாளர்களின் வறுமை அவர்களை யாருடைய சிந்தனைக்காகவோ எழுத வைத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக சொல்லப்படுகிறது. சில விதிவிலக்குகளும் உண்டு என்கின்றனர். பெருமாள் முருகனின் நாவலுக்கு புக்கர் பரிசு நிச்சயம் உண்டு என்று சாரு நிவேதிதா குறிப்பிடுவதும் இந்த எண்ணத்தை முன்னிறுத்தித்தானோ என எண்ணத் தோன்றுகிறது.
     பொதுவாக இந்திய கலாசாரம், பண்பாடு, மதம், போன்றவை பற்றிய சரியான வரலாறு எழுதப்படவில்லை; வெள்ளையர்கள் தங்களுக்குச் சாதகமாக எழுதியவையே இங்குள்ளது என்ற ஒரு நிலை. இதனை மீண்டும் ஒருமுறை ஆதாரங்களோடு திருத்த முனைவது நல்லது என்ற கருத்து பலரிடமும் இருக்கிறது. திரு.அரவிந்தன் நீலகண்டன் சொல்வது போல கற்பனைப் புனைவுகளை நம் வரலாறு எனப் பதியாமல், ஆராய்ச்சியில் ஆதாரங்களோடு எடுத்துரைப்பது இன்றைய கடமை. ஆனால் கம்யூனிஸ்டுகள் போல மீள்வாசிப்பு என்ற பெயரில் சிவப்புக் கண்ணாடி அணிந்து பார்ப்பது போல காவிக் கண்ணாடி அணியாமல் உண்மைக் கண்களால் காணவேண்டும் என்றும் அவர் குறிப்பிடுவது சாலச் சிறந்தது.

     கருத்துக்கள் கருத்துகளால் விமர்சிக்கப்படவேண்டும்; தனிமனித தாக்குதலால் அல்ல. வரலாறு என்பது ஆதாரங்களோடும், ஆவணங்களோடும் எழுதப்படவேண்டும். புனைவுகள் தம் வக்கிரங்களைத் தணித்துக் கொள்ளவோ, மற்றவரின் உணர்வுகளோடு விளையாடுவதாகவோ இல்லாமல் இருத்தல் நல்லது என எண்ணுகிறோம். இங்கும் பெருமாள் முருகன் என்ற தனிப்பட்ட எழுத்தாளரை மனதளவிலே முடக்க நினைப்பது தவறென்றே கருதுகிறோம். அவரது கருத்துக்கு, சிதறிய சிந்தனைக்கு வேண்டுமானால் எதிர்வினையாற்றலாம், அதுவும் தரக்குறைவில்லாமல். பாமரர்கள் உணர்ச்சிப் பிழம்பாக எதிர்வினையாற்றுவது போல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், படித்தவர்கள் எதிர்வினையாற்ற நினைப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

     எழுத்து மிகப்பெரிய ஆயுதம், அது மிகப்பெரிய வன்முறைக்கும் மனத்தில் களமிடும், பேரமைதிக்கும் களமிடும். நம் சிந்தனை, எழுத்து எதை நோக்கி என்பதை நாம்தானே தீர்மானிக்க வேண்டும். எழுத்து என்பது வெறும் கலையா அல்லது மக்களுக்காகவா என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி நீர்த்துப் போய் அதற்கு இன்னமும் விடை காணாமலேயே மார்க்சிய அறிவுஜீவிகள், அதனை கலைக்காக மட்டுமே அல்லது தங்கள் சிந்தனைகளை மக்களிடம் விதைக்க என்ற நிலையில் இருக்கிறார்கள் என எண்ணுகிறோம். இதில் மட்டும் இந்துத்வர்களும்(இன்றைய) அவர்களைப் பின்பற்றுகிறார்களோ என்ற ஐயமும் ஏற்படாமலில்லை.

     கருத்துச் சுதந்திரம் எது என்பதை நோக்கி நகர வேண்டிய தருணம் இது. சார்பு இல்லாமல் சத்யத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். அது நாட்டுக்கு நாடு மாறுபட்டுப் போகட்டும், நமது தேசத்துக்கு எது, நமது மக்களுக்கு உகந்தது எது, எது நம் பண்பாட்டுக்கு, நம் தர்மத்திற்கு இழுக்கு தராதோ அந்த வரையறையை நோக்கி செலுத்தலாமல்லவா?

     ஏதாவது ஒரு முகமூடியின் பின் ஒளியாமல் அனைத்தையும் துணிவுடன் எதிர்கொள்பவர்கள் சங்க இலக்கியப் புலவர்கள் என்பர். ஆனால் இன்று எழுத்தாளர்கள் இப்படி எதையுமே எழுத முடியாத சூழல் உருவாவது தொலைந்தொழிக்கப்பட வேண்டிய ஒன்று. பொதுமக்கள் எல்லா விஷயத்திலும் கண்டும் காணாமல் இருப்பதும் இதற்குக் காரணம். அவர்கள் நல்ல எழுத்தாளர்களை மதித்து ஆதரிக்கும் சூழல் உருவானால் எழுத்துலகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அச்சூழல் உருவாக பிரார்த்திப்போமாக.