ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மஞ்சள் முகமே வருக

மஞ்சள் முகமே வருக
          மஞ்சள் முகமே வருக” - இது ஒரு திரைப்படப் பாடல் வரி; நான் ரசிக்கின்ற வரியும் கூட. இத்திரைப்படம் வந்த காலகட்டத்தில் அநேகமாக தமிழகத்தைச் சார்ந்த அத்துணை பெண்டிரும் மஞ்சள் முகத்தையே கொண்டிருந்திருப்பர் என நம்புகின்றேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கலாசாரத்தின் எச்சங்கள் இருக்கும் என நம்பும் கிராமங்களில் கூட மஞ்சள் முகத்தைக் காண்பது அரிது.

      இந்த மஞ்சள் தமிழகக் கலாசாரத்தின் ஒரு அங்கம். தமிழ்ப் பெண்களின் அடையாளம். ஆனால் இன்று இந்த அடையாளம் இல்லாமல் போனது எதனால்? இந்த அடையாளம் அசிங்கமாகிப் போனது எதனால்?

      நம்மை நயவஞ்சகமாக ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற ஆங்கிலேயர், அவர்களது நயவஞ்சக குணத்தை நமது மக்கள் அறியாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களது ஒவ்வொரு செயலும் மக்களின் நன்மைக்கு என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்று அதில் அதிக அளவு வெற்றி கண்டனர். காந்தி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் முயற்சியால் ஓரளவு அவர்களது வெற்றி தடுக்கப்பட்டது என்றாலும், அந்தப் போலியான முகம் நல்லதொரு முகமாகவே இன்றளவும் நமது மக்களிடையே உள்ளது. இல்லையென்றால் சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆனபின்னும் சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் ஆங்கிலேயர் நம்மை நல்ல நிலைமையில் வைத்திருப்பர் என்ற பேச்சு இன்று எழுமா?

      ஆங்கில அரசாட்சிக்குப் பின் தமிழகத்தில் பகுத்தறிவுப் பெயரில் எழுந்த இயக்கம் நம்மிடம் உள்ள கலாசாரத்தை மூடநம்பிக்கை என்றும் வெள்ளைக்காரர்கள் கடைபிடிப்பதே உண்மையான கலாசாரம் என்ற நோக்கில் செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஏற்கனவே ஆங்கிளேயரின் மூளைச் சலவையில் பாதி மழுங்கிப் போன மூளை இதன் மூலம் மேலும் மழுங்கடிக்கப்பட்டது. இந்த மஞ்சள் பூசுவது பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாகக் காட்டப்பட்டது.

      ஆங்கிலேயர் எழுதிய வரலாறே உண்மை என்பதுபோல அன்றிலிருந்து இன்றுவரை பாடப்புத்தகத்தில் அதுவே பாடமாய். இன்றுவரை சிப்பாய் கலகம் என்பது முதல் சுதந்திரப் போராட்டம் என்று கற்பிக்கப்படவேயில்லை. எனது குடும்ப வரலாற்றை நான் எழுத வேண்டும் அல்லது என் குடும்ப நண்பர் எழுதினால் உள்ளது உள்ளபடி எழுத வாய்ப்புண்டு. எங்கிருந்தோ வந்த ஒருவர் இப்படித்தான் என் குடும்பம் வாழ்ந்திருக்கும் என்று சொன்னால் எப்படி? அப்படித்தான் இன்றைய நமது நாட்டின் வரலாறும்.

      நான் படித்த புத்தகங்களிலும் சில கிறுக்கு பிடித்த மர்ம நாவல்களிலும் ஆங்கில கலாசாரத்தினைப் பின்பற்றும் பல மாந்தர்களை நவநாகரீக யுவதி என்ற ஒரு வார்த்தையில் வர்ணிப்பதைக் கவனித்துள்ளேன். நவநாகரீகம் என்றால் புதிய நாகரீகம் என்ற பொருளைத்தானே தரும். அனைவரும் அப்பொழுது அதனை விரும்பத்தானே செய்வர். பொருந்தா நாகரீகம் என்ற பொருளை உணர்த்தும் விதமாக வார்த்தையை எழுத்தாளர்கள் கையாண்டிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஏனெனில் நமது நாகரீகம் சிறந்தது மட்டுமல்ல நாம் வாழும் சூழலுக்குப் பொருந்திய ஒன்று. எழுத்தாளர்களின் வார்த்தைகளுக்கு மிகவும் சக்தி அதிகம். அது எந்த வகை எழுத்தாளர்களாக இருந்தாலும்; வாசகர்களிடையே அவர்களது எண்ணத்தை விதைக்கும் வல்லமை படைத்தவர்கள். சில வாசகர்கள் எழுத்தாளர்களை குருவாகவும், தெய்வமாகவும் காணும் போக்கு இன்றும் காணக் கிடைக்கிறது.

      இது போன்ற செயல்களெல்லாம் நம்மிடமிருக்கும் அனைத்து பழக்கவழக்கங்களும் மூடப் பழக்கவழக்கங்கள் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டன. அப்பழக்கங்களைக் கைக் கொள்வது ஏதோ ஒரு அகௌரவமான விஷயம் போலவும், சமுதாயத்திலிருந்து தாங்கள் விலகியிருக்கும் தோற்றத்தை ஏற்படுத்துவது போலவும் உணர்வினை மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. எழுத்தாளர்கள் ஒரு புறம் என்றால் ஓவியர்களின் தாக்கம் கூட மக்களிடையே ஓர் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. எழுத்தாளர்களும், ஓவியர்களும் திட்டமிட்டு இப்படி கலாசாரத்தை சீர்குலைத்தார்கள் என்று குற்றஞ்சாட்ட இயலாது. அவர்கள் அந்த நிலைக்குச் சென்றிருந்தார்கள். சரித்திரத்தில் இந்த நிகழ்வு ஏற்பட அவர்களும் ஒரு கருவிகளாயினர்.

      இன்று தமிழ் தமிழினம் என்று கொந்தளிக்கிற பல பேருக்கும் தமிழினத்தின் அடையாளம் இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூட ஒரு தயக்கம் இருக்கிறது. பயம் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் நம்புவதை இந்த மக்கள் நம்புவார்கள் என்ற ஒரு நம்பிக்கை ஒரு புறமும், இந்த அடையாளங்களை மதத்தோடு இவர்கள் அடையாளப்படுத்தியதால் மதங்கள் இவைகளைக் கட்டி காத்துவிடுமோ என்ற பயம் ஒருபுறமும் இவர்களை ஆட்டுவிக்கிறது. 

      ஒரு பெரியாரிச ஆசிரியை கூறினார் பூ, பொட்டு, வளையல், கோலம் போன்றவை தமிழ்ப் பெண்ணின் அடையாளம் அல்ல; அவை அடிமைச் சின்னங்கள் என்று. இவை தமிழ்ப் பெண்ணின் அடையாளம் இல்லை என்றால் யாருடைய அடையாளம்? நான் கண்ட வரையில் இவையனைத்தும் தமிழகத்திலுள்ளோர் மட்டுமே கொண்டிருக்கும் அடையாளங்களாகத்தான் தெரிகிறது. அந்த ஆசிரியை இந்த அடையாளங்களைத் துறந்திருந்தார். அவைகளை மத அடையாளங்களாக மட்டுமே அவர் காண்பதாகப் புலப்பட்டது. எனக்கென்னவோ இந்த அடையாளங்கள் தமிழின அடையாளமாகவே தெரிகிறது.

      நமது பழக்கவழக்கங்கள் அனைத்துமே மூடநம்பிக்கையல்ல என்பது என் வாதமல்ல. நம்முடைய பழக்கவழக்கங்கள் பலவும் சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்தவையே என்பது என் கருத்து. மஞ்சள் ஒரு கிருமி நாசினி. ஆண்களைவிட பலவிதத்திலும் அதிக உழைப்பைக் கொண்டிருந்தது பெண்ணாகத்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஆண்களைவிட பெண்களுக்கே திட்டமிடலும், குடும்பத்தைக் காக்கும் போராட்ட குணமும் அதிகம் இருந்திருக்கும். இவர்களது ஆரோக்கியம் என்பது மிக முக்கியமாய் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது இவர்களது உடலமைப்பு, பருவ மாற்றங்கள் போன்றவை இவர்களது உடல் நலனை பாதிக்காமல் இருக்க இந்த மஞ்சள் மிகவும் உறுதுணையாய் இருந்திருக்கும். இன்று மஞ்சளில்லாததால் அவர்கள் உடல் நலனில் ஏற்பட்ட சீர்கேட்டை மருத்துவரும் மகளிருமே அறிவர்.

      இந்த மஞ்சள் நிறம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் கோபமாகவோ அல்லது மனவருத்தத்தோடோ இருக்கும்பொழுது இந்த மஞ்சள் நிறத்தை உங்கள் மனக்கண்களில் கண்டு பாருங்கள். உங்கள் மனம் அமைதியடையத் துவங்கும். இதனால்தானோ என்னவோ மஞ்சள் பூசிய பெண்களைக் கண்டபோது மனம் சாந்தியுடன் இருக்கிறது. அவர்களை மரியாதையுடன் காணத் தோன்றுகிறது. மஞ்சள் அவர்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கவசமே!

      இன்று மகளிருக்கான சோப்பு, முகப்பூச்சு போன்றவற்றின் விளம்பரங்களில் மஞ்சள் மகிமை பாடப்படுகின்றது. ஆனால் எத்தனை பேர் இந்த மஞ்சளைத்தானே நமது முன்னோர்கள் சாதாரணமாக உபயோகித்து வந்தனர். இன்று இப்படி ஒரு வடிவத்தில் அதிக விலை கொடுத்து உபயோகிப்பது எவ்வகையில் சரியானது. மஞ்சள் பூசும் வழக்கத்தை அநாகரீகமாகக் கருதி விட்டொழித்து விட்டோமே என்று சிந்தித்தவர்கள் எத்தனை பேர்? நிச்சயம் எண்ணக்கூடிய அளவில் இருந்தால் அது வருந்தத்தக்க ஒன்றே!

      நமது கருத்து கந்தசாமி காக்காய்க்குச் சோறு வைப்பதை மிகவும் நக்கலடித்திருப்பார். அதைக் கண்டு வயிறு வலிக்கச் சிரித்து நம்முடைய பழக்க வழக்கத்தை கேவலமாகப் பேசி சந்தோஷப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். நமது மக்களுக்கு தான் சார்ந்த இனத்தை, மதத்தை கிண்டல் செய்தால் உச்சி குளிர்ந்து போகும் குணம் மூளை மழுங்கியதால் ஏற்பட்டிருக்கும். நான் இந்தக்காட்சியை கண்டபோது எனக்குக் கோபம் வந்தது. ஆனால் சரியான விளக்கம் என்னிடமில்லை.

      சமீபத்தில் சேலத்தில் நண்பர் பியூஸ் மனீஷ் அவர்களின் கூட்டுறவு வனத்திற்குச் சென்ற போது இதற்கான விடை கிடைத்தது. அது எந்த அளவுக்குச் சரி என்று தெரியவில்லை. அங்கு அவர்கள் வறண்ட தரிசு நிலத்தை சோலையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். முதலில் பள்ளத்தாக்கில் இருந்து அந்த முயற்சியை புத்திசாலித்தனமாக ஆரம்பித்து இருந்தார்கள். மிக அருமையான சூழல். அங்கிருந்த நண்பர் எங்களுக்கு அந்த இடத்தைச் சுற்றிக்காட்டி விளக்கி வரும்போது சொன்னார்; நிறைய பழ மரங்களை நட்டிருப்பதாகவும், அதனால் பறவைகள் நிறைய வரும்; அவைகள் மூலமாக விதைகள் பரவி நிறைய மரங்கள் முளைக்கும். இது விதையை நட்டு செடியாக்கி, பின் இடம் தேர்வு செய்து நடுவதை விட சுலபமானது. அவ்வாறு முளைப்பவை வலிமையானவையும் கூட என்று. இயற்கையாக பறவைகளால் பரவும் தாவரங்கள் நல்ல விதமாக வளரும். பெரிய தரிசு நிலத்தை சோலையாக்கும் முயற்சி சுலபமாக நிறைவேறும் என்றும் கூறினார்.

      காக்கைக்குச் சோறு வைக்கும் பலபேரும் காய், பழங்களைச் சேர்த்து வைக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் எள்ளைச் சேர்த்து வைப்பார்கள். எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் சமையலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உகந்தது. இந்த எள் பரவுவதற்காகவும் செய்திருக்கலாம். மேலும் காக்கை ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்களின் பழங்களை அதிக அளவில் உண்ணும். தன் இருப்பிடத்திற்கு அருகில் இம்மரங்களை வளர்க்க காக்கைகளை ஈர்க்கக்கூட இந்த யுக்தி கையாளப்பட்டிருக்கலாம்.

      காக்கைக்கு உணவு வைத்தால் முன்னோர்களுக்கு உணவிட்டது போல என்று சொல்வார்கள். நிச்சயம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்தானே; இயற்கையை விரும்பிய அவன் செயல் இதன் மூலம் தொடரும் என்றால் அவன் ஆசி கிடைக்கும்தானே! இது ஒரு யூகம்தான். இதுதான் உண்மை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இதில் வாய்ப்பு அதிகம் இருக்கிறதே! மேலும் நம் முன்னோர் வரும் சந்ததிக்கு நல்ல இயற்கை வளத்தை விட்டுச் செல்லவே விரும்பினர். நிச்சயம் அவர்களது நோக்கம் இவ்வாறிருக்க வாய்ப்புண்டு என என் மனம் உறுதியாகக் கூறுகிறது. தர்க்கம் மூலமோ, அறிவியல் மூலமாகவோ இதை விவாதிக்க நான் தயாரில்லை. யாரும் இதை மறுத்தோ அல்லது வேறு ஒரு நல்ல சிந்தனையை வைத்துக் காரணம் கூறினால் உண்மையை நோக்கி என் மனதை நகர்த்த நான் தயார். வெறும் புரட்டான ஒரு வாதத்தைக் கேட்க நான் தயாரில்லை.

      சரி இவையனைத்திற்கும் நான் சொன்ன இரண்டு காரணங்கள் மட்டும்தானா? நிச்சயம் இல்லை. குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கு இருந்த மரியாதை இல்லாமல் போனதே காரணம். ஒருகுடும்பம் அல்லது சமூகப் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் பெண்களுக்கு இருக்கும் பக்குவமும் திட்டமிடலும் ஆண்களுக்கு இருக்குமா என்பது ஐயமே! பெண் புத்தி பின் புத்தி என்பதை பின்னால் வருவதை அறிந்து திட்டமிடக் கூடியவள் என்றே நான் எண்ணுகின்றேன். இந்த திட்டமிடல் செயல்பாடுகள் என அனைத்திலிருந்தும் பெண் விலக்கி வைக்கப்பட்டதுதான் நமது கலாசாரத்தின் பேரிழப்புக்குக் மிக முக்கியமான காரணம் என நான் கருதுகிறேன்.

      இப்பொழுது பெண்கள் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்களே! படித்தவர்களாக இருக்கிறார்களே! சுய சம்பாத்யம் உள்ளவர்களாக இருக்கிறார்களே! இப்படி பல இருந்தாலும் அவர்கள் அவர்களது உண்மையான பண்பாடு கலாசாரம் அறியாதவர்களாகவும், அதற்கான முனைப்பு இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் உண்மையை உணர்ந்து விட்டால் மீண்டும் கலாசாரத்தை மீட்டெடுக்கும் சக்தி அவர்களுக்கு மட்டுமே உண்டு.  இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
     
      எப்படி எனக்கு இந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆங்காங்கே சில பெண்கள் சுய தேடுதலை நோக்கி நகர்கிறார்கள். தங்கள் மூதாதையர் பழக்க வழக்கங்களை அறிந்து பின்பற்ற முயல்கின்றனர். உணவினைப் பொறுத்தவரை தங்கள் பண்டைய முறைக்கு மாற முயற்சிக்கின்றனர். கிராமங்களில் இன்னும் உயிர்த்துக் கொண்டுதானிருக்கிறது. ஜீன்ஸ் போட்டிருந்தாலும் உள்ளுக்குள்  தமிழுணர்வு துடித்துக் கொண்டுதானிருக்கிறது.

      ஏன் ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகமாகியிருக்கிறது என்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனால் பெண்களுக்குள் ஏற்படும் ஓர் உத்வேகம் மட்டுமே மிக அதீத வளர்ச்சியைக் கண்டடையும். எனது ஆசை பெண்களை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டிப் போட வேண்டும் என்பதல்ல. இந்த தமிழகத்தின் உயரிய கலாசாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ரட்சகர்களாக அவர்களை நான் காண்கிறேன். அவர்கள் தங்கள் இனத்தின் உண்மைக் கலாசாரத்தை உணர்ந்து தங்கள் சந்ததிக்கு கொண்டு சேர்க்க வேண்டும், அவர்களால் மட்டுமே முடியும் என எண்ணுகின்றேன்.

      அந்த நாள் விரைவில் மலரும் என்ற நம்பிக்கை எனக்குள் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ் மணம் வீசும், அதன் சுகந்தம் எண்திசையும் மணக்கும்   ! பரதக் கண்டத்தின் பெருமையை இந்த தமிழின் சுகந்தமே கொண்டு சேர்க்கும் !
 இந்த நம்பிக்கையோடு பழம்பெருமை மீட்டெடுத்த புதிய தமிழ்மகளை வரவேற்க நான் தயாராகிறேன்.

      மஞ்சள் முகமே வருக - எம்
            மாசறு பொன்னே வருக !
      மங்கல விளக்கே வருக - நன்
            மங்கலம் தன்னைத் தருக !
      குங்குமம் தரித்தே வருக - எம்
            குலம் காக்க வருக !
      வாசனை மலரணிந்தே வருக - வரும்
            துயரனைத்தும் விலக !
      மாக்கோலமிட வருக - மங்காப்
            புகழ் விளங்க வருக !
      தமிழ்த் தாயே வருக - தமிழ்க்

            குலம் தழைக்க அருள்க !

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தன்னைப் போல் பிறரை நினை

தன்னைப் போல் பிறரை நினை

          வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் இது எல்லோரும் அறிந்த வள்ளலாரின் அமுத மொழி. பசியென்ற பிணியின் கொடுமையை நன்குணர்ந்த அவர் அன்னசத்திரம் ஏற்படுத்தி எளியவர்களின் பசிப்பிணி அகல காரணமாக இருக்கிறார் (ஏன் நிகழ்காலத்தில் குறிப்பிடுகிறேன் எனில் அவரது செயல் மூலமாக இன்றும் அவர் நம்முடன் வாழ்கிறார்).

      வாடிய பயிரில் தன்னைக் கண்டார்; அதன் வேதனையை தன்னில் பொருத்திக் கொண்டார்; அதனாலேயே அவர் வாட்டமுற்றார். ஏழை எளியவர்களின் பசிப்பிணியை தனதாக உணர்ந்ததாலேயே பசிப்பிணி போக்குவதை முன்னிறுத்தினார்.

      இன்று நான் அடிக்கடி பல இடங்களில் மிகக் கிண்டலாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சோறு இருக்குன்னா கூட்டம் வந்திடும்பா. அது இல்லைன்னா கூட்டம் சேர்க்கிறது கஷ்டம். சோற்றைப் போட்டே மக்களை கெடுத்துடறீங்க. என்னைக் கேட்டா அன்னதானமே வகைவகையாச் செய்யக்கூடாது. மக்களை சோற்றுப் பிண்டமா மாத்திடாதீங்க ! சிந்திக்கிற தன்மையைக் கொடுங்க. ஐயா, பசி வந்தா பத்தும் பறந்து போம் எனச் சொன்னார்களே ! இதில் பணக்காரன் ஏழை என்று வித்தியாசம் கிடையாது. ஒரு வேளை பட்டினி கிடந்தால் தெரியும் பசியின் கொடுமை.

      இவர்களில் பலர் உபன்யாசங்களை மிக அழகாக ரசித்துக் கேட்பர். நிச்சயம் உபன்யாசங்களில் கர்ணனின் வள்ளல்தன்மை மிக அதிகமாகப் பேசப்படும். ஆனால் அவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு சென்ற அவனுக்கு தாள இயலாத பசி ஏற்பட்டதாம். அதைப்பற்றி அவன் கேட்டதற்கு கிடைத்த பதில் நீ உன் வாழ்நாளில் எத்தனையோ தானம் செய்தாய்; ஆனால் அன்னதானம் செய்யவில்லை; எனவே உனக்கு இத்தகைய பசி உண்டானது என்றார்களாம். பின்னர் ஏதோ ஓர் சமயத்தில் யாரோ ஒருவருக்கு அன்ன சத்திரம் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காண்பித்ததால் அவனை ஆட்காட்டி விரலைச் சப்பிக் கொள்ளச் சொல்ல அவனது பசி தணிந்ததாம்.

      இது உண்மையா பொய்யா என்ற விவாதம் வேண்டாம். இந்தக் கதை சொல்லும் உட்கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒருவன் இவ்வுலகில் வாழ்வதற்கு உணவு என்பது மிக அவசியமாகிறது. அவ்வுணவை இல்லாதவர்க்கு அளிக்க வேண்டிய கடமை இருப்பவனுக்கு உள்ளது. அதை வலியுறுத்தவே அன்னதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.
     
      உணவினை மட்டுமே ஒருவன் போறும் என்று கூறுவான்; மற்ற எதனையும் மேலும் மேலும் வேண்டும் என்பான். பசித்து உணவு உண்டவன் மனதும் நிறைந்து காணப்படும். அப்பொழுது உணவினை அளித்தவனை நெஞ்சார்ந்து வாழ்த்துவான். இம்மாதிரியான வாழ்த்துக்கள் உணவளித்தவர்களை வாழ்விக்கும்.

      எனது பாட்டனார் கூறுவார்; ஒரு கல்யாணத்துக்குப் போனா கண்டிப்பா சாப்பிட்டு விட்டுத்தான் வரவேண்டும் என. உண்டு மனதார நீ வாழ்த்தும் வாழ்த்து நிச்சயம் அந்த தம்பதிகளை நன்கு வாழவைக்கும். இன்று பலரும் குறை சொல்வார்கள் என்று பலரும் முணுமுணுப்பது எனக்கும் கேட்கின்றது. என்ன செய்ய உல்கத்தில் இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள். நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய நிச்சயம் நல்லன வலிந்து பெருகும்.
      வள்ளலாரின் இந்த தன்மையை உணவோடு மட்டுமல்லாமல் பலவகையிலும் விரித்து நோக்குவது சாலச் சிறந்தது. நோயின் வாய்ப்பட்ட மனிதன், வறுமையில் உழல்பவன், படிக்கப் பணமில்லாமல் கஷ்டப்படுபவன் என எந்த வகையில் மனிதன் துன்பப்பட்டாலும் அதை நம் துன்பமாக பாவிக்கும் எண்ணம் மிக வேண்டும். சரி அனைவருக்கும் எப்படி உதவுவது என்னால் இயலாதே என்பீர்கள். உதவுவது என்பது உடலாலும், பொருளாலும் மட்டுமல்ல ஏன் பிரார்த்தனையாலும் நிகழலாம் என்பார் என் குருநாதர். இன்பம் என்பது கொடுத்துப் பார்ப்பது; ஈகை என்பது பார்த்துக் கொடுப்பது என்பார் அவர்.

      இந்தத் தலைப்பு இதோடு நின்றுவிடவில்லை. நம்மைப்போல் மற்றவர்களை பாவித்து உதவி செய்வதைக் கூட பலரும் செய்யக்கூடும். ஆனால் ஒருவரது செயல்களை தாம் அந்தச் சூழ்நிலையில் இருந்தால் எப்படிக் கையாண்டிருப்போம் என நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.

      ஒரு பிரச்சினை; உடனே பல வகையிலும் அறிவுரை மழை போல மட்டுமல்ல; இடி மின்னலோடு வெளுத்துக்கட்டும். நான் கூட இதனைச் செய்திருக்கிறேன். அந்த அனுபவம்தானே இதனை எழுதச் சொல்கிறது. ஒரு சிறு கணமும் நமக்கு அந்த சூழலில் இருக்கும் வாய்ப்பிருந்தால் எப்படிச் செயல்பட்டிருப்போம் என நினைக்கமாட்டோம். அப்படி ஒரு கணம் நினைத்துவிட்டால் நாம் கொந்தளித்துப் பேசமாட்டோம். மிக நிதானமாக பேசுவோம். எதிரிலிருப்பவரின் வலியினை உணர முடியும். அவரை அலட்சியப்படுத்தமாட்டோம். அறிவுரை என்ற பெயரில் அறுவைச் சிகிச்சை செய்ய மாட்டோம்.
     

      இன்னுமொன்று தன்னைப் போல் பிறரை நினை; இதை சிலர் செய்கிறார்கள். எங்கு தெரியுமா; தனது அயோக்கியத் தனங்களை மற்றவர் மேல் பொருத்திப் பார்ப்பது. தான் செய்த செய்து கொண்டிருக்கின்ற தவறுகள் மற்றவர்கள் மேல் ஒரு சந்தேகப் பார்வையை எழச் செய்யும்; நாம் செய்யாத தவறாகக் கூட இருக்கலாம்; ஆனால் மனதில் ஒரு குறுகுறுப்பான எண்ணம் ஓடியிருக்கும்; சூழ்நிலையோ ஏதோ ஒன்று தடுத்திருக்கும். இதனை மற்றவர் மேல் ஏற்றி சந்தேகம் கொள்ளச் செய்யும். இது மிக ஆபத்தான நோய். இந்த நோய் பற்றியவரை மெல்ல மெல்ல கொன்றிடும்.

      சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பிரச்சினை. இவர்கள் தன்னைப் போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்கள் சிந்தனை, பேச்சு போன்றவை உண்மையிலேயே உயர்ந்திருக்கும். ஆனால் இதனை அனைத்து சக மனிதர்களிடமும் எதிர்பார்ப்பார்கள். நல்ல விஷயம்தான்; எல்லாரும் நம்மைப்போல் சிந்தனையில் உயரவேண்டும் என நினைப்பது உத்தமம்தான். ஆனால் அது சாத்தியமான ஒன்றா என்றால் நிச்சயம் இல்லை. ஒவ்வொருவரும் ஒரு அறிவுத் தளத்தில் இயங்குவார்கள்; அவர்களை மேல்நோக்கி பொருந்தச் செய்வதோ, அல்லது கீழ்நோக்கித் தள்ளுவதோ இயலாத காரியம் மட்டுமல்ல; ஒவ்வாத ஒரு செயலும் கூட.

      இவர்கள் உயர்ந்தவர்கள் எனச் சொல்லிவிடலாம். ஆனால் சிலர் மற்றவரைக் காயப்படுத்துவதில் மிகச் சிறந்தவர்களாக இருப்பர். ஒரு சிந்தனைக் கூட்டம். ஒரு நண்பர் தமிழில் மிக அழகாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு உள்ளரங்கு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் அந்த அறக்கட்டளையின் மிக முக்கியஸ்தர் ஒருவர் உள் நுழைகிறார். பேச்சாளர் ஆங்கிலப் பேச்சிலும் மிகச் சிறந்தவர். அந்த முக்கியஸ்தரும் ஆங்கிலம் கற்றவர். உள்ளே நுழைந்தவர், பேச்சாளரிடம் நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றலாமே என்றார். மிகவும் முக்கியஸ்தர் என்பதால் அவர் ஏதோ ஒரு காரணத்திற்காகச் சொல்கிறார் என்று பேச்சாளரும் தன் பேச்சை ஆங்கிலத்திற்கு சட்டென்று மாற்றிக் கொண்டார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு; ஏனெனில் அங்கிருந்த மற்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. உடனே முக்கியஸ்தர் இவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தெரியாது; நீங்க தமிழிலேயே பேசுங்க எனக் கூற பேச்சாளரும் மாற்றிக் கொண்டார்.

      இந்த முக்கியஸ்தர் படித்தவர்தான். ஆனால் சூழலில் தன்னைப் போல் பிறரை நினைக்கும் எண்ணம் இவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஏற்பட்ட ஒரு அவமானம் இவருக்கு ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆங்கிலம் தெரிந்ததால் இவர் அறிவாளியாகவும், ஆங்கிலம் தெரியாததால் மற்றவர்களை அறிவற்றவர்கள் என்றும் காட்ட முனையும் இவரது மனோபாவம் எத்தகையது? சபை நாகரீகம் என்ற ஒன்றைக் கூட கடைபிடிக்க முடியாமல் செய்தது எது? அகங்காரம்; மற்றவர்களைக் காட்டிலும் தன்னிடம் ஒன்று அதிகமாய் நினைத்தது.அகங்காரமில்லாமலிருந்திருந்தால் தன்னைப் போல் மற்றவரையும் மதிக்கும் மாண்பு இவருக்கு இருந்திருக்குமல்லவா?

      ஒருவன் மற்றவர் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி மற்றவர்களை நடத்த வேண்டும். அதனையும் விட தன்னை ஒருவன் எப்படி மதிப்போடு கருதிக் கொள்கிறானோ அப்படியே மற்றவரையும் நினைக்க வேண்டும்.

            சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் குறிப்பிட்டார்; சிலர் தாங்கள் நினைப்பதை இந்த ஒட்டு மொத்த சமூகமும் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள் என்று. எவ்வளவோ உயர்ந்த சிந்தனையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒருவர் தன் சிந்தனையே சரி என்றும், அதன் வழியேதான் ஒட்டு மொத்த உலகமும் இயங்க வேண்டும் என நினைப்பது மூடத்தனம்தானே?

      இப்படி நினைப்பவர் மற்றவர் சிந்தனையை சரியல்ல என்ற நோக்கில்தானே காணுகிறார். அப்படிச் சொல்வதை விட நிராகரிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சமூகம் என்பது பலவித சிந்தனைகளை உடையது; கதம்ப மாலை போன்றது; பல வாசனைகளும், நிறங்களும் கொண்டாலும் இறைவனை அனைத்துமே அடையும் தகுதியுடன் இருக்கின்றன. ஒரு கதம்ப மாலையை இறைவனுக்கு அணிவித்தால் அதிலுள்ள ஒரு நிறத்தையோ அல்லது மணத்தையோ உடைய பூவை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிடுவாரா என்ன? அனைத்தையுமே ஏற்றுக் கொள்வார்.

      அதுபோல பல சிந்தனைகளும், செயல்களும் இருந்தாலும் நோக்கம் ஒன்றாக இருக்கையில் அது வருத்தப்படக்கூடிய ஒன்று அல்ல; விலக்கப்பட வேண்டியதுமல்ல. மதங்களும் கூட அப்படித்தான்; அதனதன் பாதை வேறாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும் இறைநிலையை, ஆன்மீகத்தை நோக்கிய பயணமாகக் காட்டினால் அனைத்தும் நல்ல பாதைதானே? நமது பாதையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவோம். மற்றதை தூற்றாமல் இருக்கப் பழகுவோம்.

      இன்றும் பலர் தாங்கள் பார்த்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று வாதிட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். என்ன செய்ய, அவர்கள் சூழல் அப்படி; தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு அதிலேயே வாழ முயல்கிறார்கள். வேறு எந்த சிந்தனையையும் கவனிக்கவோ, ஆய்வு செய்யவோ அவர்கள் தயாரில்லை. அவர்களை குறை கூறுவதோ, மாற்ற முயற்சி செய்வதோ வீண் வேலை. அது நம் சுயத்தை இழக்கும் முயற்சியாக மாறிவிடும்.           

      நம்மைப் போல் மற்றவரையும் மதிப்போம். நம்மை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே மற்றவரையும் நடத்துவோம். நமது நேர்மறை எண்ணம் நேர்மறை அலைகளை உருவாக்கும். அது நம்மைச் சுற்றி அவ்வாறான அலைகளை அதிகரிக்கச் செய்யும். நம்மைச் சுற்றியுள்ளோரையும் அது தொற்றிக் கொள்ளும். இந்த தொற்று நோயல்ல; இந்தத் தொற்று சமூகத்திலுள்ள பல நோய்களைக் கொல்லும் ஆற்றலுடையது.



அன்பைப் பெருக்குவோம் ! ஆற்றலைப் பேணுவோம் !   

புதன், 27 ஆகஸ்ட், 2014

மகளே !

சரிந்து
கவிழ்ந்து
புரண்டு
மல்லாந்து
தேய்த்து
தவழ்ந்து
மண்டியிட்டு
தத்தி தத்தி
மெல்ல கைபிடித்து குதியிட்டு
தனியே தள்ளாட்டமிட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
என்கைப்பிடி விட்டு விலகி
நடந்து ஓடி விளையாடி
உடலால் வெகு தொலைவிற்கும் செல்கிறாய்
ஆனால் என்னன்புப் பிடிக்குள்
நீ எப்பொழுதும் கட்டுண்டு
மகளே நானும் கூட !


திங்கள், 25 ஆகஸ்ட், 2014

”குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
          என்ன ஒரு அற்புதமான பொன்மொழி. தமிழ் மிக்க வளமையானது இவ்வாறான அறிவு செறிந்த பொன்மொழிகளை உடையதாலும் கூட. தமிழன் எவ்வளவு அணுவணுவாக வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்திருந்தால் இவ்வாறாக தன் அனுபவங்களை ஒரு சிறிய வாக்கியத்தில் எளிமையாகக் கூறிச் சென்றிருப்பான். என் முற்பாட்டனை நினைக்கையில் எனக்கு மிகுந்த கர்வம் ஏற்படுகிறது; மிகப் பெரிய பாரம்பர்யத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள.

      சரி எடுத்துக் கொண்ட விஷயத்திற்குள் நுழைவோம். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. ஆனால் குற்றம் ஏற்படுகையில் அதைக் காணாமல் இருக்க இயலுமா? நடைமுறைச் சாத்தியமா என்று நோக்கினால் நிச்சயம் அது சாத்தியமில்லை என்றே நம்மில் ஒவ்வொருவரும் கூறுவோம். இன்று நம் வாழ்க்கையில் நாம் குற்றம் காணாத, சொல்லாத நபரோ, செயலோ இருக்குமென்று எண்ணவும் இயலாது. அப்படிச் சொல்லாத நபர் ஒருவர் உண்டென்று சொன்னால் அது உலக அதிசயமாகத்தான் இருக்க முடியும்.

      சாதாரணமாக நண்பரைக் குறை சொல்வதில் தொடங்கி, பக்கத்து வீட்டுக்காரர், கவுன்சிலர், எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம், சட்டம் அப்பப்பா எழுதத் தொடங்கினால் பட்டியல் பலப்பல நீளும். ஆனால் இப்படிக் குற்றம் சொல்லும் எவரும் இந்தக் குற்றத்தில் தன் பங்கு எனப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!

      இதில் சிலர் நைச்சியமாக குற்றத்தை மற்றவர் மனது நோகாமல் சுட்டிக்காட்டுவர். சிலர் மனதில் பட்டதை நேர்மையாகக் கூறுகிறேன் என்று முகத்தில் காறி உமிழ்ந்து அறைவது போலக் கூறுவர். இதில் சில நேரம் இப்படிக் கூறுபவர்களுக்கென்று ஒரு நண்பர் வட்டம் இருக்கும். அவர்கள் இதனை இவர் மிகவும் நல்லவர்; மனதில் பட்டதைப் பட்டென்று கூறிவிடுவார்;என்று சான்றிதழ் அளிப்பர். இந்த சான்றிதழை நான் பெற்றிருக்க வேண்டியவன்.     

      பலமுறை எனது வெளிப்படையான பேச்சால் எனது நண்பர் குழாமில் சச்சரவினைச் சந்தித்திருக்கிறேன். எனது நண்பர் ஒருவருடன் நான் உடற்பயிற்சி செய்ய நான் படித்த பள்ளிக்குச் செல்வதுண்டு. இது எனது கல்லூரிப் படிப்பு முடிந்து அருகிலுள்ள கல்லூரியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது. இந்த காலகட்டத்தில் நண்பர் ஒரு பெண்ணோடு காதல் வயப்பட்டுள்ளார். அந்தக்கால கட்டத்தில் இது போன்ற செயல்கள் என்னை அருகிலேயே வைத்துக் கொண்டு செய்தால் கூட உணர்ந்து கொள்ள முடியாத அப்பாவிதான் நான்.

      சிறிது நாட்களுக்குப் பிறகு நண்பர் குழாமில் அந்த நண்பர் தனது காதலையும், தான் அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாயும் தெரிவித்தார். உடனே ஒரு நண்பர் பற்பல காரணங்களைக் கூறி அந்தத் திருமணம் சரிவராது எனக் கூறினார். ஜாதியைக் காரணமாகக் கூறவில்லை; வேறொரு பிரச்சினையைக் கூறினார். ஆனால் இந்த நண்பரோ நான் அவளை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்.அவளில்லையென்றால் நானில்லையென்றார். நான் உடனே இப்படித்தான் நீ பயிற்சிக்குப் போன இடத்தில் ஒரு பெண்ணைக் காதலிப்பதாய்க் கூறினாய். அதற்கு முன் ஒரு பெண்ணைச் சொன்னாய். இப்பொழுது இந்தப் பெண்? எதுடா உண்மைக்காதல் எனக் கேட்டுவிட்டேன்.

      உண்மைதான். ஆனால் உணர்ச்சியில் மூழ்கியிருக்கும் ஒருவரின் முகத்திற்கு நேராகக் கேட்டிருக்கக் கூடாது என மற்றொரு நண்பர் என்னிடம் கூறினார். இந்த உண்மையான விமர்சனம் பின்னாளில் என்னைச் சிறிது மாற்றிக் கொள்ள உதவியது. பின்னர் திருப்பூரில் இருந்து சென்னைக்குச் சென்றபின்பும், மீண்டும் திருப்பூருக்குத் திரும்பி சொந்தமாகத் தொழில் தொடங்கியபிறகு எனது சகோதரனாக இருந்து எனக்கு உதவிய ஒருவர் இதே விமர்சனத்தை என் முன்வைத்தார். நீங்கள் உண்மையை பலநேரங்களில் உடனே சொல்லிவிடுகிறீர்கள். அது தொழிலில் சரியாக இருக்காது என்று அறிவுறுத்தினார்.

      ஐயா, உண்மையையே நாம் மற்றவர்களுக்குச் சொல்கிறபோது அந்தக் குற்றம் பார்க்கும் தன்மை மற்றவர்களை வாட்டிவிடும். அது தொடர்ச்சியாக நடக்க வேண்டிய நல்ல செயல்களுக்கு இக்கட்டாய் அமைந்து விடும் என்கிற பொழுது மனதில் பட்டதையெல்லாம் பேசினால். இப்படியும் சில பேருக்கு அமைந்துவிடும். நண்பர்கள் சரியான விமர்சனம் செய்யாமல் போனால் நான் பேசுவதெல்லாம் சரியென்ற நினைப்பில் என் மனதில் பட்டதையெல்லாம் உண்மை என்று நம்பி அடுத்தவர் மேல் குற்றங்களைச் சொல்லும் வியாதி எனக்கு வந்திருக்கும்.

      இன்றளவும் முழுதாய் குற்றம் சொல்லும் வழக்கத்திலிருந்து விடுபட்டேனில்லை. ஆனால் அதை நோக்கி என் மனதை செலுத்திக் கொண்டிருக்கின்றேன். சிறிது நாட்களுக்கு முன்பு கூட நண்பர் ஒருவர் கேட்டார். ஜி, சாதாரணமா சொல்லியிருக்கக்கூடிய விஷயத்தைக்கூட என் மேல குற்றம் சொல்ற மாதிரியே சொல்லிட்டீங்களேன்னு? சுரீரென்று இருந்தது. என் மனசாட்சி சொன்னது டேய் இன்னும் நீ நிறைய மாறணும்டான்னு. நண்பர்கிட்டே சொன்னேன். இதைக் குறைக்கணும்னு முயற்சி பண்ணிகிட்டிருக்கேன், இருந்தாலும் அப்பப்ப தப்பு பண்ணிடறேன். இனிமே குற்றம் சொல்லாம இருக்க முழுதாய் முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன். இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் கூட என் குறையை எழுதி அதை என்னிடமிருந்து விலக்கி வைக்கும் ஒரு சிறு முயற்சியே.

      இப்படி விமர்சனம் செய்யாமல் இந்த மனதில் பட்டதை பேசும் பழக்கத்தை உயர்வாகக் கொண்டாடும் நண்பர்கள் இருந்துவிட்டால் தான் பேசுவது எல்லாம் சரியென்ற நினைப்பு எனக்கு ஏற்பட்டிருக்கும். பின்னர் நான் சந்தித்த உண்மை நண்பர்கள் இந்தக் குறையை எனக்குச் சுட்டிக் காட்டியிருந்தால் கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும். எனது அகங்காரம் தூண்டப்பட்டிருக்கும். என்னை விமர்சிப்பவர்களை விரோதிகளாகப் பார்க்க ஆரம்பித்திருப்பேன். தூங்கி எழுந்ததிலிருந்து பார்க்கும் அனைவரையும், குற்றவாளிகளாகவும், அனைத்துச் செயல்களையும் குற்றங்களாகவும் பார்ப்பதும், நான் சரியென்று நினைப்பது நியாயமாகவும், நான் தவறென்று நினைப்பதை அநியாயமாகவும் உணர்ந்திருப்பேன். ஜால்ரா தட்டிய நண்பர்களை நினைத்து எனது நண்பர்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் என்று சொல்லி குற்றம் பார்க்கும் ஒரு கோமாளியாக வலம் வந்திருப்பேன். நல்லவேளை விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும், சுயபரிசோதனை செய்து கொள்ளும் தன்மையைக் கொடுத்த இறைக்கு எனது நன்றி.

      இப்படி எதிர்மறையாக நிகழ்ந்திருந்தால் எனது சுற்றமும் நட்பும் என்பது கேள்விக்குறியாயிருக்கும். ஏதோ ஒரளவு காப்பாற்றிக் கொண்டு வந்திருப்பதை முழுமையாய் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் முழுதாய் என் குறைகளை நீக்க வேண்டும்.
     
       சரி சுற்றம் வேண்டும் என்பதற்காக எந்தக் குறையையும் கூறக்கூடாதா என்ற கேள்வி வரலாம். குறைகளை நிறைகளாக மாற்ற ஆலோசனை தரலாம். குறைகளை குற்றமாக்கக் கூடாது. நாம் முதலில் குறைகளைத் தான் சுட்டிக்காட்டுவதாக ஆரம்பிப்போம். ஆனால் பின்னாளில் குறைகளை குற்றங்களாகக் காட்ட ஆரம்பித்துவிடுவோம். அதைக் குற்றமாகச் சொல்ல ஆரம்பிக்கையில் நமது குரலும் உணர்வும் ஓங்கியிருக்கும். இது அகங்காரம் ஆங்காரமாக மாறும் ஓர் தருணம். இத் தருணத்தில் சுற்றம் சூழல் எதையும் காணாது நாம் ஏதோ தர்மதேவன் போலவும், எதிரிலுள்ள நபர் மிக மோசமான குற்றவாளி போலவும் நடக்கத் தொடங்கி விடுவோம். அந்தக் கூச்சலும், உணர்ச்சி மிக்க வார்த்தைகளும் எதிரிலுள்ள நபருக்கு எவ்வித வேதனையை அளிக்கும் என்ற ஒரு சிறு உணர்வு கூட இல்லாத நபராக நாம் மாறிவிடுவோம். இது கூட பரவாயில்லை. இதனை நம்மிடம் யாராவது சொன்னால் கூட அதிலுள்ள நியாயத்தைப் பாராமல் நம்முடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ள முனைவோம்.

      உதாரணத்திற்கு எனது மனைவியிடம் நான் இப்படி நடந்து கொள்கிறபொழுது உன்னிடமில்லாமல் வேறு யாரிடம் நான் கோபத்தைக் காட்டுவது. நீ என் அன்பிற்கு உரியவள் இல்லையா? நீ புரிந்து கொள்வாய் என்றுதான் உன்மீது கோபப்பட்டு விட்டேன் என்பேன். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற வர்க்கத்தைச் சார்ந்தவள் அவள் என்பதால் குடும்பம் சீராக இருக்கிறது. எனது பலம் அவள்தான். வேறு யாராகவாது இருந்தால் இந்நேரம் குடும்பம் சீரழிந்து போயிருக்கும். சரி மனைவி குழந்தைகள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் சுற்றங்கள் இதனைத் தாங்கிக் கொள்ளுமா? அவர்களிடம் இப்படி நடந்து கொண்டால் சுற்றங்கள் நம் வீட்டு நிகழ்ச்சியில் கடமைக்கு வருவர் மூன்றாம் மனிதர் போல. அப்படி நடந்தால் அப்பொழுதும் அவர்களைக் குற்றம் சொல்வோமே தவிர நம் குற்றம் காணும் பழக்கத்தினால்தான் இப்படி ஒரு நிலை உள்ளது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டோம்.
     
       ஒரு நண்பரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன் இன்னொரு நண்பரோடு. என்னுடன் வந்த நண்பர் நாங்கள் சந்திக்கச் சென்ற நண்பரிடம் என்ன இப்படி செருப்பெல்லாம் கலைச்சி வாசல்ல போட்டிருக்கீங்க; வரிசையா அழகாக வைக்க வேண்டாமா என்று. குழந்தை தனியாகக் கேட்டதாம், உள்ள நுழையும்போதே என்ன குற்றம் சொல்லலாம்னு வருவாங்களாப்பா என? அந்தக் குழந்தையின் உள்ளத்தைத் தாக்கக்கூடிய விதமாக நடந்து கொண்டபின்பு அந்தக் குடும்பத்திடம் ஒரு அந்யோந்யம் எப்படி தொடர்ச்சியாக இருக்கும்.

      நக்கீர பரம்பரை என்று இம்மாதிரி ஆட்களை கிண்டல் செய்வார்கள். பாவம் நக்கீரர் அவர் தமிழில் உள்ள குறைகளைத்தான் வருத்தத்தோடு பதிவு செய்ததாகக் கூறுவார்களே தவிர மனிதனின் குறைகளை குற்றங்களாக கண்டவர் அல்ல.

      இன்றைய சமூகம் குற்றம் காணும் சமூகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. நானும் குற்றம் காண ஆரம்பிக்கிறேன். ஆனால் நானும் அச்சமூகத்தின் ஒரு அங்கமே!
      
     குறைகளைச் தகுந்தவாறு தகுந்த நேரத்தில் சுட்டிக் காட்டினால் அவை நிறைகளாய் மாறிவிடக்கூடும். நல்ல மனிதனை உருவாக்கும் ஒரு சிற்பியாய் நாம் இருப்போம். மாறாக குற்றம் சொன்னால் ஒரு குற்றவாளியை உருவாக்குவோம். அப்படி ஒரு சிற்பியாய் நாமிருப்பது அவசியமா எனச் சிந்தித்தோமானால் குற்றம் பார்க்காத குற்றமில்லாத சமுதாயத்தில் நாமும் ஓர் அங்கமாய் இருப்போம்.


       குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!!!!!!!!!!!!!!!!!

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கடவுளோடு ..,,

கடவுளே !
உன்னால் படைக்கப்பட்டேன் நான் எனில்
என் தாயும் தந்தையும்தானே நீ ?
என் மகவுக்கு நானுமென் மணவாட்டியும்தானே ?
எனில் ஒவ்வோர் உயிரும் நீதானே?
ஒவ்வோர் உயிரிலும் கலந்த உன்னை
பிரித்து கோயிலில் மனிதன் வைத்ததேன் ?
மனிதன் கடவுள் பாதி மிருகம் பாதி !
உன்னைப் பிரிந்தபின் மிருகம்தானே மீதி !
உன்னைக் கோயிலில் சிறை வைத்ததால்
நீ அறியாய் என மிருகம் தன் வக்கிரம் காட்ட
மிருகம் தாவர ஜங்கமமென எங்கும்
நீக்கமற நிறைந்துள்ளாய் என மறந்தான் இவன் !
ஜாதி மதம் மாச்சர்யம் பொறாமை அகங்காரமென
பலவித  விகார ஆடையணிந்தே திரிகின்றான் !
முழுதாய் நீ சிறையிலில்லை
முழுதும் நீ விலகவில்லை
முட்டாள் இவனதை உணரவில்லை
மௌனியாய் நீ ஏன் விளங்கவில்லை !

  மகனே !
மௌனியாய் நானில்லை
ஒவ்வொரு அசைவிலும் நானுண்டு;
நான் வேறு நீ வேறல்ல எனினும்
நீயும் நானும் வேறாய் ஆனோம்;
பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவிலும் நானுள்ளேன்;
ஒவ்வோர் அணுவும் முழுதுமாய் நானில்லை;
ஒவ்வொன்றும் சுதந்திரம் கொண்டுள்ளன
முழுதும் நானாய் மாறிக்கொள்ள; ஆனால்
சிந்திக்கும் மனிதன் கூட எது சுதந்திரமென
அறியாமல் சிக்குண்டு தவிக்கிறான்;
எனக்கு விருப்பு வெறுப்பில்லை;
ஜாதி மதமில்லை, வர்ண பேதமில்லை;
ஆனால் அனைத்தும் உனக்குள் உண்டு;
ஏற்றங்களும் இறக்கங்களும்
உயர்வும் தாழ்வும் குற்றங்களல்ல;
இக்குணங்கள் பிரபஞ்ச இயக்க விதிகள்;
நீக்கலும் நீங்கலும் நீயுணர்ந்து நடந்தால்
உன்பாதை எனைநோக்கி;
அப்பொழுது நீயும் மௌனியாவாய் !

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்?
          நீ .,,,,,,,,,,,,,
         எதைப் படிக்க வேண்டும்
     எப்படி வேலை செய்ய வேண்டும்
     எதைச் சாப்பிட வேண்டும்
     எங்கு சாப்பிட வேண்டும்
     
     எதை விதைக்க வேண்டும்
     எப்படி அறுவடை செய்ய வேண்டும்
எங்கு விற்க வேண்டும்
எதை வாங்க வேண்டும்
எவருக்கு விற்க வேண்டும்

எப்படி உனது வாழ்க்கை இருக்க வேண்டும்
          எல்லாமே யாரோ ஒருவன் சிந்தித்ததாய் இருக்க
எவன் சொன்னான் சுதந்திரம் கிடைத்துவிட்டதென்று ???
 
 
 
 
 
 
 
 
இரண்டு பெட்ரூம் வீடு, ஒரு கார்,
டிவி பிரிட்ஜ் என சகலமும் இருந்து
காலை முதல் இரவு வரை
யாரோ ஒருவன் பணம் குவிக்க மாடாய் உழைத்து
ஐந்திலக்க சம்பளம் என பெருமை கொண்டு
வீடு திரும்பியபின் அப்பா; அம்மா என்ற
அமுதக் குரலை அலட்சியப்படுத்தி
அதீத அசதியோடு படுக்கையில் வீழ
அழுத குழந்தை ஆயா மடியில் அணைந்துறங்க
வாழ்க்கைத் தரம் இதுவென உலக வங்கி நிர்ணயிக்க
வளர்ச்சியடைந்து விட்டோமென அரசு பெருமை கொள்ள
வெட்கமாய் இல்லை நாம் சுதந்திரமாய் இருப்பதாய் சொல்லிக் கொள்ள?
 
 
 
 
 
 
 
 
அன்று....
சேவல் கூவும் நேரம் கண்விழித்த நீ கோவிந்தா என்று எழுந்தாய்
விலையில்லாமல் பெற்ற வேப்பங்குச்சியில் பல்துலக்கினாய்
நீராகாரம் அருந்தி வயலில் வேலைக்குச் சென்றாய்
வியர்வை சிந்த உழைத்து வீட்டிற்கு திரும்பிய உனக்கு
கேப்பக்களியோ கம்மங்களியோ அன்போடு அம்மா தந்தாள்;
வேப்பமர நிழலிலோ, ஆலமர நிழலிலோ சதுரங்கம் ஆடினாய்;
இதனோடே உன் பசுவையும் கவனித்துக் கொண்டாய்
மாலைநேரம் வயலை வலம் வந்து வீடு திரும்பினாய்
சுடுசோற்றோடு வீட்டிலிருந்த முருங்கைக்கீரையை சேர்த்துண்டாய்
திண்ணையில் துண்டை விரித்து நாராயணா எனச்சொல்லி உறங்கினாய்
சர்க்கரை, இரத்தக்கொதிப்பு நோயுமில்லை மருந்துமில்லை !
 
இன்று......
ஆறுமணிக்கு அலாரமடித்தாலும்
அலுப்போடு எட்டுவரை புரள்கிறாய்
பிளாஸ்டிக் பிரஷ்ஷில்
வேதிப்பொருளாலான பசையினால்
பல்லைக் கரைக்கிறாய்
இட்லி, பூரி தோசை, ரொட்டி, ஜாம்
என அடுக்கடுக்காய் காலை உணவு
வாகனமேறி அலுவலகமடைந்து
குளிர்சாதன அறையில் சுழல் நாற்காலியில்
கணினி முன்னே அலுவலென
எட்டு மணி நேரத்திற்குமேல்
மதியம் காய்கறியோடு வெள்ளைச்சோறு
குழம்பு ரசம், தயிர் என பலவகையோடு
இடையிடையே தேநீர், பலகாரங்கள் வேறு
மாலையில் கிளப் மதுவகைகள் டிஸ்கொத்தேயென
பலவித களிப்பூட்டும் நிகழ்ச்சிகள்
பிஸா, பர்கர், நான் என பலவகை கொண்ட டின்னர்
இல்லமடைந்து நடுஇரவில் ஏசி அறையில்
இலவம்பஞ்சு மெத்தையில் நீ உறங்குகிறாய் !
ஒருநாள் திடீரென நெஞ்சைப் பிடிக்கிறாய்
சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதயத்தில் அடைப்பு,
அடுக்குகிறார் மருத்துவர்
அடுக்கிவைத்த நோட்டுகளை
அலுங்காமல் அள்ளுகிறார் உன்னிடமிருந்து
நீயறியாமலே உன்னுயிரையும் கூட !
இது சுதந்திரமென்றால்
காறிஉமிழத் தோணுதையா !