வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தன்னைப் போல் பிறரை நினை

தன்னைப் போல் பிறரை நினை

          வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் இது எல்லோரும் அறிந்த வள்ளலாரின் அமுத மொழி. பசியென்ற பிணியின் கொடுமையை நன்குணர்ந்த அவர் அன்னசத்திரம் ஏற்படுத்தி எளியவர்களின் பசிப்பிணி அகல காரணமாக இருக்கிறார் (ஏன் நிகழ்காலத்தில் குறிப்பிடுகிறேன் எனில் அவரது செயல் மூலமாக இன்றும் அவர் நம்முடன் வாழ்கிறார்).

      வாடிய பயிரில் தன்னைக் கண்டார்; அதன் வேதனையை தன்னில் பொருத்திக் கொண்டார்; அதனாலேயே அவர் வாட்டமுற்றார். ஏழை எளியவர்களின் பசிப்பிணியை தனதாக உணர்ந்ததாலேயே பசிப்பிணி போக்குவதை முன்னிறுத்தினார்.

      இன்று நான் அடிக்கடி பல இடங்களில் மிகக் கிண்டலாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சோறு இருக்குன்னா கூட்டம் வந்திடும்பா. அது இல்லைன்னா கூட்டம் சேர்க்கிறது கஷ்டம். சோற்றைப் போட்டே மக்களை கெடுத்துடறீங்க. என்னைக் கேட்டா அன்னதானமே வகைவகையாச் செய்யக்கூடாது. மக்களை சோற்றுப் பிண்டமா மாத்திடாதீங்க ! சிந்திக்கிற தன்மையைக் கொடுங்க. ஐயா, பசி வந்தா பத்தும் பறந்து போம் எனச் சொன்னார்களே ! இதில் பணக்காரன் ஏழை என்று வித்தியாசம் கிடையாது. ஒரு வேளை பட்டினி கிடந்தால் தெரியும் பசியின் கொடுமை.

      இவர்களில் பலர் உபன்யாசங்களை மிக அழகாக ரசித்துக் கேட்பர். நிச்சயம் உபன்யாசங்களில் கர்ணனின் வள்ளல்தன்மை மிக அதிகமாகப் பேசப்படும். ஆனால் அவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு சென்ற அவனுக்கு தாள இயலாத பசி ஏற்பட்டதாம். அதைப்பற்றி அவன் கேட்டதற்கு கிடைத்த பதில் நீ உன் வாழ்நாளில் எத்தனையோ தானம் செய்தாய்; ஆனால் அன்னதானம் செய்யவில்லை; எனவே உனக்கு இத்தகைய பசி உண்டானது என்றார்களாம். பின்னர் ஏதோ ஓர் சமயத்தில் யாரோ ஒருவருக்கு அன்ன சத்திரம் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காண்பித்ததால் அவனை ஆட்காட்டி விரலைச் சப்பிக் கொள்ளச் சொல்ல அவனது பசி தணிந்ததாம்.

      இது உண்மையா பொய்யா என்ற விவாதம் வேண்டாம். இந்தக் கதை சொல்லும் உட்கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒருவன் இவ்வுலகில் வாழ்வதற்கு உணவு என்பது மிக அவசியமாகிறது. அவ்வுணவை இல்லாதவர்க்கு அளிக்க வேண்டிய கடமை இருப்பவனுக்கு உள்ளது. அதை வலியுறுத்தவே அன்னதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.
     
      உணவினை மட்டுமே ஒருவன் போறும் என்று கூறுவான்; மற்ற எதனையும் மேலும் மேலும் வேண்டும் என்பான். பசித்து உணவு உண்டவன் மனதும் நிறைந்து காணப்படும். அப்பொழுது உணவினை அளித்தவனை நெஞ்சார்ந்து வாழ்த்துவான். இம்மாதிரியான வாழ்த்துக்கள் உணவளித்தவர்களை வாழ்விக்கும்.

      எனது பாட்டனார் கூறுவார்; ஒரு கல்யாணத்துக்குப் போனா கண்டிப்பா சாப்பிட்டு விட்டுத்தான் வரவேண்டும் என. உண்டு மனதார நீ வாழ்த்தும் வாழ்த்து நிச்சயம் அந்த தம்பதிகளை நன்கு வாழவைக்கும். இன்று பலரும் குறை சொல்வார்கள் என்று பலரும் முணுமுணுப்பது எனக்கும் கேட்கின்றது. என்ன செய்ய உல்கத்தில் இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள். நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய நிச்சயம் நல்லன வலிந்து பெருகும்.
      வள்ளலாரின் இந்த தன்மையை உணவோடு மட்டுமல்லாமல் பலவகையிலும் விரித்து நோக்குவது சாலச் சிறந்தது. நோயின் வாய்ப்பட்ட மனிதன், வறுமையில் உழல்பவன், படிக்கப் பணமில்லாமல் கஷ்டப்படுபவன் என எந்த வகையில் மனிதன் துன்பப்பட்டாலும் அதை நம் துன்பமாக பாவிக்கும் எண்ணம் மிக வேண்டும். சரி அனைவருக்கும் எப்படி உதவுவது என்னால் இயலாதே என்பீர்கள். உதவுவது என்பது உடலாலும், பொருளாலும் மட்டுமல்ல ஏன் பிரார்த்தனையாலும் நிகழலாம் என்பார் என் குருநாதர். இன்பம் என்பது கொடுத்துப் பார்ப்பது; ஈகை என்பது பார்த்துக் கொடுப்பது என்பார் அவர்.

      இந்தத் தலைப்பு இதோடு நின்றுவிடவில்லை. நம்மைப்போல் மற்றவர்களை பாவித்து உதவி செய்வதைக் கூட பலரும் செய்யக்கூடும். ஆனால் ஒருவரது செயல்களை தாம் அந்தச் சூழ்நிலையில் இருந்தால் எப்படிக் கையாண்டிருப்போம் என நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.

      ஒரு பிரச்சினை; உடனே பல வகையிலும் அறிவுரை மழை போல மட்டுமல்ல; இடி மின்னலோடு வெளுத்துக்கட்டும். நான் கூட இதனைச் செய்திருக்கிறேன். அந்த அனுபவம்தானே இதனை எழுதச் சொல்கிறது. ஒரு சிறு கணமும் நமக்கு அந்த சூழலில் இருக்கும் வாய்ப்பிருந்தால் எப்படிச் செயல்பட்டிருப்போம் என நினைக்கமாட்டோம். அப்படி ஒரு கணம் நினைத்துவிட்டால் நாம் கொந்தளித்துப் பேசமாட்டோம். மிக நிதானமாக பேசுவோம். எதிரிலிருப்பவரின் வலியினை உணர முடியும். அவரை அலட்சியப்படுத்தமாட்டோம். அறிவுரை என்ற பெயரில் அறுவைச் சிகிச்சை செய்ய மாட்டோம்.
     

      இன்னுமொன்று தன்னைப் போல் பிறரை நினை; இதை சிலர் செய்கிறார்கள். எங்கு தெரியுமா; தனது அயோக்கியத் தனங்களை மற்றவர் மேல் பொருத்திப் பார்ப்பது. தான் செய்த செய்து கொண்டிருக்கின்ற தவறுகள் மற்றவர்கள் மேல் ஒரு சந்தேகப் பார்வையை எழச் செய்யும்; நாம் செய்யாத தவறாகக் கூட இருக்கலாம்; ஆனால் மனதில் ஒரு குறுகுறுப்பான எண்ணம் ஓடியிருக்கும்; சூழ்நிலையோ ஏதோ ஒன்று தடுத்திருக்கும். இதனை மற்றவர் மேல் ஏற்றி சந்தேகம் கொள்ளச் செய்யும். இது மிக ஆபத்தான நோய். இந்த நோய் பற்றியவரை மெல்ல மெல்ல கொன்றிடும்.

      சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பிரச்சினை. இவர்கள் தன்னைப் போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்கள் சிந்தனை, பேச்சு போன்றவை உண்மையிலேயே உயர்ந்திருக்கும். ஆனால் இதனை அனைத்து சக மனிதர்களிடமும் எதிர்பார்ப்பார்கள். நல்ல விஷயம்தான்; எல்லாரும் நம்மைப்போல் சிந்தனையில் உயரவேண்டும் என நினைப்பது உத்தமம்தான். ஆனால் அது சாத்தியமான ஒன்றா என்றால் நிச்சயம் இல்லை. ஒவ்வொருவரும் ஒரு அறிவுத் தளத்தில் இயங்குவார்கள்; அவர்களை மேல்நோக்கி பொருந்தச் செய்வதோ, அல்லது கீழ்நோக்கித் தள்ளுவதோ இயலாத காரியம் மட்டுமல்ல; ஒவ்வாத ஒரு செயலும் கூட.

      இவர்கள் உயர்ந்தவர்கள் எனச் சொல்லிவிடலாம். ஆனால் சிலர் மற்றவரைக் காயப்படுத்துவதில் மிகச் சிறந்தவர்களாக இருப்பர். ஒரு சிந்தனைக் கூட்டம். ஒரு நண்பர் தமிழில் மிக அழகாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு உள்ளரங்கு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் அந்த அறக்கட்டளையின் மிக முக்கியஸ்தர் ஒருவர் உள் நுழைகிறார். பேச்சாளர் ஆங்கிலப் பேச்சிலும் மிகச் சிறந்தவர். அந்த முக்கியஸ்தரும் ஆங்கிலம் கற்றவர். உள்ளே நுழைந்தவர், பேச்சாளரிடம் நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றலாமே என்றார். மிகவும் முக்கியஸ்தர் என்பதால் அவர் ஏதோ ஒரு காரணத்திற்காகச் சொல்கிறார் என்று பேச்சாளரும் தன் பேச்சை ஆங்கிலத்திற்கு சட்டென்று மாற்றிக் கொண்டார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு; ஏனெனில் அங்கிருந்த மற்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. உடனே முக்கியஸ்தர் இவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தெரியாது; நீங்க தமிழிலேயே பேசுங்க எனக் கூற பேச்சாளரும் மாற்றிக் கொண்டார்.

      இந்த முக்கியஸ்தர் படித்தவர்தான். ஆனால் சூழலில் தன்னைப் போல் பிறரை நினைக்கும் எண்ணம் இவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஏற்பட்ட ஒரு அவமானம் இவருக்கு ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆங்கிலம் தெரிந்ததால் இவர் அறிவாளியாகவும், ஆங்கிலம் தெரியாததால் மற்றவர்களை அறிவற்றவர்கள் என்றும் காட்ட முனையும் இவரது மனோபாவம் எத்தகையது? சபை நாகரீகம் என்ற ஒன்றைக் கூட கடைபிடிக்க முடியாமல் செய்தது எது? அகங்காரம்; மற்றவர்களைக் காட்டிலும் தன்னிடம் ஒன்று அதிகமாய் நினைத்தது.அகங்காரமில்லாமலிருந்திருந்தால் தன்னைப் போல் மற்றவரையும் மதிக்கும் மாண்பு இவருக்கு இருந்திருக்குமல்லவா?

      ஒருவன் மற்றவர் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி மற்றவர்களை நடத்த வேண்டும். அதனையும் விட தன்னை ஒருவன் எப்படி மதிப்போடு கருதிக் கொள்கிறானோ அப்படியே மற்றவரையும் நினைக்க வேண்டும்.

            சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் குறிப்பிட்டார்; சிலர் தாங்கள் நினைப்பதை இந்த ஒட்டு மொத்த சமூகமும் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள் என்று. எவ்வளவோ உயர்ந்த சிந்தனையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒருவர் தன் சிந்தனையே சரி என்றும், அதன் வழியேதான் ஒட்டு மொத்த உலகமும் இயங்க வேண்டும் என நினைப்பது மூடத்தனம்தானே?

      இப்படி நினைப்பவர் மற்றவர் சிந்தனையை சரியல்ல என்ற நோக்கில்தானே காணுகிறார். அப்படிச் சொல்வதை விட நிராகரிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சமூகம் என்பது பலவித சிந்தனைகளை உடையது; கதம்ப மாலை போன்றது; பல வாசனைகளும், நிறங்களும் கொண்டாலும் இறைவனை அனைத்துமே அடையும் தகுதியுடன் இருக்கின்றன. ஒரு கதம்ப மாலையை இறைவனுக்கு அணிவித்தால் அதிலுள்ள ஒரு நிறத்தையோ அல்லது மணத்தையோ உடைய பூவை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிடுவாரா என்ன? அனைத்தையுமே ஏற்றுக் கொள்வார்.

      அதுபோல பல சிந்தனைகளும், செயல்களும் இருந்தாலும் நோக்கம் ஒன்றாக இருக்கையில் அது வருத்தப்படக்கூடிய ஒன்று அல்ல; விலக்கப்பட வேண்டியதுமல்ல. மதங்களும் கூட அப்படித்தான்; அதனதன் பாதை வேறாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும் இறைநிலையை, ஆன்மீகத்தை நோக்கிய பயணமாகக் காட்டினால் அனைத்தும் நல்ல பாதைதானே? நமது பாதையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவோம். மற்றதை தூற்றாமல் இருக்கப் பழகுவோம்.

      இன்றும் பலர் தாங்கள் பார்த்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று வாதிட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். என்ன செய்ய, அவர்கள் சூழல் அப்படி; தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு அதிலேயே வாழ முயல்கிறார்கள். வேறு எந்த சிந்தனையையும் கவனிக்கவோ, ஆய்வு செய்யவோ அவர்கள் தயாரில்லை. அவர்களை குறை கூறுவதோ, மாற்ற முயற்சி செய்வதோ வீண் வேலை. அது நம் சுயத்தை இழக்கும் முயற்சியாக மாறிவிடும்.           

      நம்மைப் போல் மற்றவரையும் மதிப்போம். நம்மை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே மற்றவரையும் நடத்துவோம். நமது நேர்மறை எண்ணம் நேர்மறை அலைகளை உருவாக்கும். அது நம்மைச் சுற்றி அவ்வாறான அலைகளை அதிகரிக்கச் செய்யும். நம்மைச் சுற்றியுள்ளோரையும் அது தொற்றிக் கொள்ளும். இந்த தொற்று நோயல்ல; இந்தத் தொற்று சமூகத்திலுள்ள பல நோய்களைக் கொல்லும் ஆற்றலுடையது.



அன்பைப் பெருக்குவோம் ! ஆற்றலைப் பேணுவோம் !   

1 கருத்து: