வெள்ளி, 19 ஏப்ரல், 2013

ஸ்ரீராமன் - இன்றைய தேவை


ஸ்ரீராம நவமி



19.04.2013


     இன்று ஸ்ரீராம நவமி. மனித வாழ்க்கைக்கு உதாரண புருஷனாக வாழந்தவர். காதல்,இல்லற வாழ்க்கை, சகோதர பாசம், அரசியல், நிர்வாகம், சமூக புரிந்துணர்வு, சமத்துவநோக்கு என வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் மனிதன் இப்படித்தான் நடக்கவேண்டும் என சொல்லாமல் தன் வாழ்வினால், செயலால் உணர்த்திய ஒரு மஹா புருஷன். மாற்றங்களை மற்றவரிடத்திலிருந்து எதிர்நோக்காமல் தன்னிலிருந்து நிகழ்த்தி வாழ்க்கையை வரலாறாக பதிவு செய்த வரலாற்று நாயகன்.

     ஸ்ரீராமன் ஒரு காவியத்தலைவனே, அப்படி ஒருவன் வாழ்ந்திருக்க வாய்ப்பேயில்லை என பல அறிவுஜீவிகள் பறைசாற்றலாம். பாரததேசத்தின் பெருமையை உணராதவன், இந்தத் தாய்மண்ணின் வாசனையை ஒரு நாளும் நுகராதவன், அதன் மைந்தர்களின் இயல்புகளை கண்டறியாதவன் இப்படிப்பட்ட ஒருவனால் மட்டுமே ஸ்ரீராமனை சாதரணமான ஒரு காவியத்தலைவனாகவும், அவனது இயல்பை கவிஞனின் அதிகப்படியான புகழ்ச்சியாகக் காணமுடியும். மற்றபடி இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்பவர்கள் ஸ்ரீராமனை இறைவனாகவே கண்டார்கள்.

     இந்த இருவகையான மனிதர்களுமே ஆபத்தானவர்கள். ஒருவன் மண்ணின் பெருமையைக் குறைத்து மதிப்பிட்டு, இம்மண்ணின் மைந்தர்களை தரம் தாழ்த்துவதிலேயே நேரத்தைச் செலவிட்டு சகமனிதர்களையும் தன்னோடு படுகுழிக்குள் தள்ள நினைக்கும் பாதகர்கள். இன்று இறைவனாகக் காண்பவர்கள் அனைவரின் மண்ணின் மைந்தர்கள் என்றோ, அதன் மகிமையை பரிபூர்ணமாக உணர்ந்தவர்கள் என்றோ கருதிவிட முடியாது. ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தால், குடும்ப பழக்கத்தின் காரணமாகவோ ஸ்ரீராமனைத் தெய்வமாகக் காண்கிறார்கள். அந்த வரலாற்று நாயகனின் நிறைகளை பூரணமாக இவர்கள் உணர்ந்தார்களில்லை.

     இவ்வாறானவர்கள் ஸ்ரீராமனின் உயரிய குணங்கள் மனிதர்களுக்கானவை அல்ல அவை தெய்வமான ஸ்ரீராமனால் மட்டுமே செயல்படுத்தக்கூடிய ஒன்றாக நினைப்பவர்கள். விஷ்ணு ஸ்ரீராமனாக, மானுடனாக அவதரித்தது, அற்புதங்கள் நிகழ்த்தாமல் மனிதனாகவே வாழ்ந்தது, மனிதனுக்குண்டான சுகதுக்கங்களை அனுபவித்தது என்று ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்ந்தாலும், மனிதன் அந்நிலையிலும் எவ்வாறு உயரிய குணங்களை தன்னுள் கொண்டு நடப்பது என்பதை செயலில் காட்டவே. மனிதர்கள் இதனை பார்த்து, உணர்ந்து, தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே! அப்படியிருக்க ஸ்ரீராமனின் உயரிய குணங்களை வாழ்க்கையில் பின்பற்றாமல், ஸ்ரீராமனுக்குக் கோயில் கட்டுவதனாலோ, ஸ்ரீராமனுக்குப் பூஜைகள் செய்வதனாலோ எவ்விதப்பயனும் விளையாது. ஸ்ரீராமனது அவதார நோக்கமே மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மாண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதற்காகத்தான் எனும்போது நாம் மற்றெதனினும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

     கண்டதும் காதல் என்பது இன்றைய காலகட்டத்தில் பொருத்தமற்றதாக இருக்கிறது. அதற்குக் காரணம் காமம் என்ன, அதன் இச்சைக்கான காரணம் என்பது சரியான வயதில், சரியானவர்களால் கற்பிக்கப்படாமல் போனதே. காணும் பெண்களையெல்லாம் காமத்துடனே நோக்கும் இக்காலத்தில் இந்த வாக்கியம் அர்த்தமற்றதாகிப் போனது. ஆனால் ஸ்ரீராமன், சீதா விஷயத்தில் இது ஓர் உன்னதமானது. ஸ்ரீராமன் மற்ற பெண்களையெல்லாம் சகோதர பாவத்துடனே கண்டு வந்த போது சீதையை மட்டுமே தனக்கு உரித்தாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கண்டான். சீதையும் ஸ்ரீராமனைக் கண்ணுற்றபோது இவனை நாம் மணாளனாக அடைவோமா என்றெண்ணினாள். இந்தக் கண்டதும் காதல் நிறைவேறியது, காரணம் அவர்கள் மற்றவர்களைக் காமத்துடன் நோக்கியதில்லை.

     இந்தக் காதலை அல்லவா நாம் கொள்ளவேண்டும். இன்றைய ஊடகத்திலேயே பிரமாண்டமான ஊடகமான வெள்ளித்திரை என்ன செய்கிறது? அதன் பிள்ளையான சின்னத்திரை எவ்விதமான காதலை காட்டிக் கொண்டிருக்கிறது. பள்ளிப் பருவத்தில் படிக்க வேண்டிய வயதில் கதாநாயகன் படிப்பினைவிட காதலே முக்கியம் என நினைப்பது, இங்கு அவ்வாறு குறிப்பிடுவது கூட தவறென்றே நினைக்கிறேன்.காமம் என்றே குறிப்பிடவேண்டும். இப்படிப்பட்ட நாயகர்களை ஆதர்ஷ புருஷர்களாக நினைத்து இளைய சமுதாயம் தறிகெட்டுப் போகவேண்டிய நிலை இன்று. ஆதர்ஷ புருஷனாகக் கொள்ள வேண்டிய ஸ்ரீராமன் இளைய சமுதாயம் அறியப்படாத நாயகனாகவே அமைந்துவிட்டான். ஸ்ரீராமன் அறிமுகப்படுத்த வேண்டிய இடம் பள்ளிகளில். அங்கேயே இந்நாயகன் அறிமுகப்படுத்தப்பட்டால் இளைய சமுதாயம் பேராண்மையோடு திகழுமல்லவா?

     இல்லற வாழ்க்கையில் ஏகபத்னி விரதனாக இருந்து தன் மனைவியைத் தவிர மற்ற மாதர் மீது எந்நேரத்திலும் இச்சையெழாமல் உறுதியாக வாழந்தான். வள்ளுவன் கூற்றில் பிறன்மனைநோக்கா பேராண்மை இவனுடையதன்றோ? இன்றைய காலகட்டத்தில் காம இச்சைக்கொண்டு திரியும் மிருகங்களால் பெண்கள் படும் அவதியால் இந்நாட்டின் மாண்பே அல்லவா கேள்விக்குறியாயிருக்கிறது. தன் மனைவி நன்றாய் இருக்கும்போதே பல மணம் புரியும் கேடு கெட்ட ஆண்கள், வேலிதாண்ட நினைக்கும் கருங்காலிகள் இன்று பெருகிப் போயினர். இவர்கள் குறளையும் அறிந்திருக்கவில்லை, குறள்வழி வாழ்ந்த ஸ்ரீராமனையும் அறிந்திருக்கவில்லை. வள்ளுவன் கூறுகிறானே கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத்தக என்று, இங்கு கற்பது என்ன, அனைத்தும் பொருள் சார்ந்த வாழ்க்கை வாழ்வது என்பது அப்படித்தானே, அதோடு இந்த குறளையும் தேர்வுக்காக மட்டுமே படித்த மாணவன் எப்படி இருப்பான்?

     புரிதல் என்பது இல்லறத்திற்கு மிகவும் முக்கியமானது. திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது என்ன செய்கிறோம்? என்ன படித்திருக்கிறார்கள், எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், எவ்வளவு பொருள் ஈட்டுகிறார்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா இவையெல்லாம்தானே மணமக்களின் தகுதிகளாகப் பெற்றோர்களால் நினைக்கப்படுகிறது, குழந்தைகளின்மேல் திணிக்கப்படுகிறது. குடும்பம், கலாசாரம், பண்பாடு, குணம் இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை, அப்படி ஒன்று இருந்ததே மறந்து போய்விட்டது. இந்த நிலையில் நடக்கும் திருமணம் எவ்வாறான இல்லற வாழ்க்கையைத் தரும். விவாகாரத்தைத் தவிர வேறில்லை. அந்நிகழ்வும் வேதனையான விஷயமாக கருதப்படுவதில்லை.

     அயல்தேசத்து பெண்மணி ஒருவர் இந்தியத் திருமண உறவினை மிகவும் சிலாகித்து எங்களிடம் உரையாடினார். அப்போது பெற்றோர்கள் இந்தியாவில் எவ்வாறு தங்கள் குழந்தைகளின் இல்லற வாழ்க்கை சிறப்பாக நடக்க, பிரிதல் ஏற்படாமல் புரிதல் ஏற்பட, விவாகரத்து ஏற்படாமல் விளைவுகளை உள்வாங்கி விளங்கிக் கொண்டு நீண்ட நல்லதோர் இல்லறத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று வியந்து போனார். அன்று நான் நிச்சயம் இந்த மண்ணின் மைந்தனாகப் பெருமைப்பட்டேன். ஆனால் இன்று பெற்றோர்கள்தான் பல விவாகரத்துகளுக்கு காரணமாக உள்ளார்கள் என்ற நிலையினை நான் உணரும்பொழுது மிகவும் வேதனைப்படுகிறேன். இன்னும் எத்தனை நாள் நாம் முன்னோரின் பெருமையை மட்டுமே பாடிக்கொண்டு இருக்க முடியும், அந்த நிழலிலேயே வாழ்ந்துவிட முடியும்? நாம் அந்த சிறப்புகளை அடைய வேண்டாமா? ராமன் இருக்குமிடமே அயோத்தி என்று வாழ்ந்த சீதையின் மனநிலை எப்படி, ஏகபத்னி விரதனாக இருந்த ராமனின் மனநிலை எப்படி, அற்ப காரணங்களுக்காக பிரியும் இன்றைய தம்பதிகளின் மனநிலை எப்படி? ராமாயணம் இவர்களின் வாழ்வில் அர்த்தம் பொதிந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?

     சகோதரத்துவத்தை அன்றே கடைபிடித்து வாழ்ந்த ஸ்ரீராமனை அல்லாது வெற்றுப்பேச்சாளர்களையல்லவா இன்றைய இளைய சமுதாயம் தலைவனாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமனை வழிகாட்டியாகக் கொண்டால் இளைய சமுதாயத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும்? குகனை சகோதரனாகப் பாவித்தபோதும், விபீஷணனை சகோதரனாகப் பாவித்தபோதும் ஸ்ரீராமன் தன் தம்பி லட்சுமணனைப் போன்றே அல்லவா அவர்களையும் மதித்தான். அந்த சகோதர பாவம்தானே இன்றைய சமுதாயத்திற்குத் தேவை. எந்த பேதங்களுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் சகோதர பாவத்துடன் நோக்கினால் எவ்வாறு பிரச்சினை வரும்? ஆனால் இப்படிப்பட்ட ராமாயணம் சகோதரத்துவம் பேசிய வெற்றுப் பேச்சாளர்களால் இழிவுபடுத்தப்பட்டது, தலைமுறை தலைமுறையாக கற்பிக்கப்பட்டு வந்த நற்பண்புகள் தடைபட்டது. இன்றைய சமுதாயம் செல்ல வேண்டிய வழியைத் தவறவிட்டு வேறு பாதையில் வெகுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு சொல், ஒரு அம்பு என்று வாழ்ந்த ஸ்ரீராமன் எங்கே, நொடிக்கொரு வார்த்தைஜாலம் செய்யும் இன்றைய பேச்சாளர்கள் எங்கே, வெறும் பேச்சை நம்பி இளைய சமுதாயம் ஏமாற வேண்டாம். 
இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம் ஸ்ரீராமனின் அளப்பரிய குணங்களையும் அதனை இன்று கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும். பின்னொரு சமயத்தில் அதனையும் காண்போமே!



   வெறுமனே தூப, தீப, நைவேத்யம் செய்து ஸ்ரீராமனை வழிபட்டோமானால் எந்தவொரு வாழ்த்தையும் ஸ்ரீராமன் நமக்கு அருளப்போவதில்லை, அவனது உயரிய கொள்கைகளைக் கடைபிடித்தொழுகி சமுதாயம் மேம்பட்டால் மட்டுமே அவனது வாழ்த்து முழுமையாகக் கிடைக்கப்பெற்று உலகம் செழிக்கும். இது சத்தியமின்றி வேறில்லை.
 ஜெய் ஸ்ரீராம்