வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இளைஞனே வா! நன்மாற்றம் செய்குவோம்!


                     மக்களவைக்கான தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. மக்கள் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எப்போதும் போல. அரசியல் கட்சிகள் ரகசியக் கூட்டங்கள், தூதுவர்கள் என மண்டையைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன். அரசியல் கட்சிகள் மண்டையைக் குழப்பிக் கொள்வது நிச்சயமாக மக்கள் முடிவை எண்ணி அல்ல. யாரோடு கூட்டு சேர்ந்தால் நமக்கு ஓட்டு கிடைக்கும். தேர்தல் முடிந்த பிறகு எந்த அணிக்குத் தாவுவது என்ற அதே பழைய பிரச்சினைதான். எப்படியும் கொள்ளை அடிக்க ஓரிடம் கிடைத்தால் போதுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
                   ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் சிம்மாசனம் ஏறும் ஒரு நாள் எசமானர்கள் மட்டும் சங்கர் பட ஒரு நாள் முதல்வன் போல சிந்திக்க இது என்ன திரைப்படமா? இலவசம் ஏதும் புதிதாக அறிவிப்பார்களா?, எவ்வளவு பணம் கிடைக்கும்?, வேறேன்ன வித்தியாசமாக விலை அறிவிப்பார்கள் ஓட்டுக்கு என்ற சிந்தனையில் அமைதியாய் ஒரு வர்க்கம். மெத்தப் படித்த மேதாவிகளோ இந்த நாட்டைத் திருத்த முடியாதப்பா என்று புலம்பும் திருந்தாத ஜென்மங்கள் ஓட்டுச் சாவடிக்கு நிச்சயம் போகப் போவதில்லை என்று முடிவெடுத்து அமைதியாய். மாபெரும் முதலாளிகளோ எல்லோருக்கும் ஒரு விலை வைத்து தேர்தலுக்குப் பின் எப்படி சுரண்டலாம், எப்படி ஆட்சியாளர்களை ஆட்டி வைக்கலாம் என்ற ஆராய்ச்சியுடன்.

                 இந்த மக்கள் நிசமாகவே அரசியல்வாதிகள் அரங்கேற்றும் அவலங்களைப் புரிந்துகொள்ளவில்லையா, இல்லை புரிந்தும் புரியாதது போல் இருக்கிறார்களா? என்றும் இல்லாதவகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடந்துள்ளது. சாதாரணமனிதர்களுக்கு விளங்காவிட்டாலும் நடுத்தரவர்க்கங்களுக்கு விளங்கியிருக்கும். விலைவாசி தாறுமாறாக, விவசாயம் விளங்காமல் போக, தொழில்துறையோ தள்ளாட்டத்தில். இங்கு குடிமகன்களோ மதுக் குடிமகன்களாக. 

                அன்னாஹஸாரே இடையில் ஒரு விழிப்புணர்வு ஊட்டியது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தின ஊடகங்கள். இன்று அவரை மூலையில் தூக்கி எறிந்துவிட்டன. ஊடகங்கள் சொல்லும் கதைகளை மட்டுமே நினைவு கூர்தலும், தான் சார்ந்த இயக்கங்களின் ஊடகங்கள் சொல்வதே உண்மையெனவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தமிழ்ச்சிந்தனை மறந்தோராயினர். தமிழ்வழிப் படித்த இவரே இப்படி எனின் ஆங்கில வழி படித்த வருங்கால சந்ததியினர் நிலை என்ன? ஐயகோ! வயிற்றில் ஏதோ பிசைகிறது எம் சந்ததியினர் படப்போகும் துயரெண்ணி. 

            கையாலாகத்தனமாய் இன்று பலபேரும் நான் உள்பட. புதிதாய் கட்சிகள், ஆம் ஆத்மி, லோக்சத்தா என. புதிய அரசியல் நம்பிக்கையை இளைஞரிடையே விதைக்கின்றன, இவை சாதிக்கப்போவதென்ன? ஆளும் கூட்டணிக் கட்சிக்கெதிரான ஓட்டுக்க்ளில் சிலவற்றை வேட்டையாடி மக்கள் நல்ல அரசியல் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என மார்தட்டிக் கொள்ளப்போகிறார்கள். ஆனால் உண்மை விளைவென்ன? ஆளும் கட்சிக்கெதிரான ஓட்டுகளை ஒன்றிணைக்காமல் சிதறச் செய்வதைத்தவிர இவர் பங்கு வேறெதுவுமில்லை. 

            மாநிலக் கட்சிகள் சுயாட்சி, எம் இனம் என்று பிரிந்து தேசியக் கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை சிதைத்து மாநில அளவில் வெற்றி காண்பர். ஒவ்வொரு மாநில கட்சிகளும் சுயநலம் சார்ந்து என் இனம், என் மக்கள் என மேடைப்பேச்சு பேசுபவை. இவர்கள் ஒன்றாக இணைவது பின்னணியில் மட்டுமே. முன்னணியில் இவர்களால் ஒன்றிணைந்து ஆட்சி கொடுப்பது என்பது சாத்தியமல்லவே? 

          கம்யூனிஸ்ட் கட்சிகள் இரு மாநிலத்தில் மட்டுமே என சுருங்கி மாநிலக் கட்சி என்றாகிவிட்டது, அங்கும் ஒரு மாநிலத்தில் கூட்டணிதான். இவர்களும் கார்பரேட் கலாசாரத்தை பின்பற்றத்துவங்கி மக்களிடம் தங்களுக்கென்று இருந்த நம்பிக்கையை குலைக்க முற்படத்துவங்கி வருடங்களாகிவிட்டது. ஒரு சில தலைவர்களே விதிவிலக்கு.

          பாரதிய ஜனதா, மற்ற கட்சிகளால் வலது சாரி என முத்திரை குத்தப்பட்டபோது தன் நிலை உணர்ந்து, நாங்கள் வலது சாரி அல்ல, நடுநிலையில் உள்ளவர்கள் என்பதை உணர்த்தாமல் தங்கள் மீது குத்தப்பட்ட முத்திரையை ஏற்றுக்கொண்டு அந்த வழிதான் அவர்கள் வழி என தவறாக உணர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மோடி பிரதமர் வேட்பாளர், அவர் சாதனையாளர் என்ற ஒரு தனிப்பட்ட மனிதரின் போர்வைக்குள் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டு வந்ததற்கு மாற்றாக  இங்கும் பணம் இருப்போர், வாய்ச் சவடால் விடுவோர் முன்னணியிலும், உழைப்போர் ஓரத்திலுமல்ல என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இவர்கள் எப்படி இவர்களுக்குச் சொந்தமான ஓட்டு வங்கியை பெற முடியும்? 

      காங்கிரஸ் கூட்டணி, நாடு முழுக்க எதிர்ப்பலையை பெற்றுள்ளதாகக் காட்டப்படுகிறது. உண்மையாகக் கூட இருக்கலாம். சரியான நிர்வாகமின்மை, ஊழல், குடும்ப அதிகாரம், இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் செயல்பட்டது, இன்றும் தமிழக விஷய்த்தில் புறக்கணிப்பைக் காட்டுவது என நிறைய சேர்ந்து தமிழகத்தில் வேண்டுமானால் ஒரளவுக்கு எதிர்ப்பலையை உருவாக்கியிருப்பதாகச் சொல்ல முடியும். ஆனால் நாடு முழுவதும் ஓட்டுக்கள் சிதறும்போது, நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கட்சியாக எந்த தேசியக் கட்சியும் இல்லாதபொழுது காங்கிரஸ் கூட்டணிக்குத்தானே சாதகமாக அமையும். 

     சரி, என்னதான் செய்வது. எம்.ஜி.ஆர் பார்முலாவை பாரதிய ஜனதா கூட்டணி பின்பற்றினால், மாநிலத்தில் மாநிலக்கட்சியும், மத்தியில் தேசியக் கட்சி என்கின்ற எண்ணத்தில் அதிக அளவு இடங்களை மாநிலக்கட்சிகளிடம் பெற்றால், குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள், பொதுவான செயல்திட்டம் என தேர்தல் அறிக்கை என முன்வைத்து ஆம் ஆத்மி, லோக்சத்தா போன்ற கட்சிகளையும் ஒருங்கிணைத்தால் ஆட்சியமைக்க வாய்ப்புண்டு. செய்ய இயலுமா? இதை பாரதிய ஜனதா மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளும் கூட முயற்சித்து பார்க்கலாம்.

    மாநிலக்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கவோ, அல்லது ஆட்சியமைக்க உதவும் சூழ்நிலையோ உருவானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. ஒற்றுமையில்லாமல் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வர மற்ற கட்சிகள் உதவினால் அதுவும் நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். 

    அனைத்து மக்களும் குற்றப்பின்னணி இல்லாத தனக்காக சேவை செய்யக்கூடிய ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து தங்கள் சார்பாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தால் முன்மாதிரியாக இருக்கும். இது பெரிய பகல்கனவென்று நீங்கள் கூறலாம். ஆனால் அது என்னுடைய மிகப் பெரிய ஆசை. அரசியல் கட்சிகள் சொல்லும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதை விட மக்கள் தங்கள் தொகுதிக்கான நபரை தாங்களே முன்னிறுத்தினால் அதைவிடச் சிறந்த விஷயம் ஏதுமில்லை. இது சாத்தியமாகுமா? முடியும் என நினைத்து மக்கள் முன்வந்தால் முடியும். தெளிவுற்ற மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.

        அதிகாரக் குவிப்பு மத்திய அரசை நோக்கிச் செல்லாமல் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் கிராம ஸ்வராஜ்யம் மலர வேண்டும். குளத்தைத் தூர்வாரவும், சாலைகளை அமைக்கவும், நீர்மேலாண்மை செய்யவும் மக்களிடமே அதிகாரம் இருக்க வேண்டும். எங்கோ ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு கிராமத்தை நிர்வகிக்கும் கேவலநிலை ஒழிய வேண்டும். துணிவுள்ள, சேவையை மூச்சாகக் கொண்ட நல்லவர்களை அரியணையில் ஏற்றிட மக்கள் முனைய வேண்டும். சொத்து சேர்க்கும், தகுதியற்ற கயவர்களை இனம் கண்டு நல்லவர்க்கு ஓட்டளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


 இளைஞர் கூட்டம் இந்தியாவின் மாபெரும் பொக்கிஷம். ஆனால் அது குறுகிய மொழி, இனம், ஜாதி, மதம் சார்ந்த குறுங்குழுக்களிடையே சிக்கி அவர்கள் போதிப்பதே வரலாறு, தத்துவம், சித்தாந்தம் என்றெல்லாம் நம்பத்துவங்கி ஒருவித போதையிலே தள்ளாடிக் கொண்டிருக்கிறது, விதிவிலக்கு இங்கும் உண்டே. அறிவோடு சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் இளைஞர்களும் நிறைய பேர் உண்டு. ஆனால் அவர்கள் களம் கண்டு வேலை செய்தால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நிச்சயம் நல்லவழி தென்படும். அழைக்கிறேன் உணர்வுள்ள இளைஞர்களை, தோளோடு தோள் சேர்ந்து உழைப்போம், மாற்றத்தை கொண்டு வருவோம். நம்மை நாமேஆள்வோம். 

அனைத்து அதிகாரங்களும் அந்நிய முதலீடு என்ற பெயரில் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு, நமது கனிம வளங்கள் மீண்டும் ஒருமுறை அயல்நாட்டவரால் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், நம் சந்ததிகள் வளமோடும், நலமோடும் நம் அன்னையின் மடியில் தவழவேண்டுமென்றால் வா இளைஞனே, வீறு கொண்டு வா! ஏறு நடை போட்டு வா! பாரதியின் கவி உன் வாக்கிலும், நேதாஜியின் நெஞ்சுரம் உன் இதயத்திலும், காந்தியின் ஆளுமை உன்னகத்தே கொண்டு வா! விரைந்து புயலென வந்திடு! தேசம் காக்க நம் மக்கள் கண்ணை திறந்திடு. நம்மில் ஒருவரை தேர்ந்தெடு, அரசியல்கட்சிகளை அப்புறம் ஓட்டிவிடு!

கொட்டு முரசை! ஓங்கி பறையடி! ஓடட்டும் கயவர் கூட்டம்!

உள்ளம் சிலிர்க்க, உவகை பொங்க நல்லோரை அரியணையில் அமர்த்துவோம்!

வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதரம்!