சனி, 1 செப்டம்பர், 2012

என்னவள்

குருவே சர்வம்!


எழுத மிகவும் ஆவல் என் மனதிலே, ஆயினும் என்னுடன் பிறந்த தயக்கம் இதுநாள் வரை என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.  இப்பொழுதும் என்னவள் தந்த ஊக்கமே இவ்வலைப்பதிவினைத் துவக்க வித்திட்டது. என் வளர்ச்சிக்கு வித்திட்டோர், உதவியோர் எத்துணை பேர், ஆயினும் என் இல்லாள் தனித்துவமாய் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து, ரசித்து என்னை செதுக்கும் சிற்பியாய் நிற்கின்றாள். எனவே என் முதல் பதிவினை அவளுக்காக, அவளைப் பற்றியே.


காலமகள் எனக்கு அளித்திட்ட காவியம்
என் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கவள்.

தனக்கென ஒன்றும் வேண்டாள்
தானமாய் அனைத்தும் தந்தாலும் தடுத்திடாள்
இல்லாள் என்றும் இல்லை என்று சொல்லாள்.

இமைகூட என்விழி பிரிந்திடலாம்
இவள் மட்டும் பிரியாள் என்றும் என்னைவிட்டு.

என் நினைவில் ஒன்று உதிக்கையில்
அவள் கரங்களில் அது செயலாய்.

எத்தனை ஏளனங்கள், ஏச்சுக்கள் எதிர்வந்தாலும்
தான் கொண்ட நற்சிந்தனை மாறாள்.

இதுநாள் வரை யாரும் வாழ்த்தியதில்லை
இவளும் எதிர்பார்ப்பதில்லை
உறவுகளுக்கு சுமைதாங்கியாய் வாழ மறுப்பதில்லை
ஆயினும் உறவுகள் தரும் வலியெனக்குப் பொறுப்பதில்லை
இது அவளுக்கு ஏற்படுத்தும் வலி எனக்குப் புரிவதில்லை.


நல்லதோர் மகளாய், மருமகளாய்,
மனைவியாய், தாயாய், இன்னும்
எத்தனை பதவி வரினும் அதில் சிறப்பாள்
ஆயினும் ஒருவரும் அறியாரிதனை.

நானும் ஒருவனாயதில் அவ்வப்போது
இணைவது, அந்தோ பரிதாபம்.

இந்த நொடிமுதல் நிம்மதி கொண்டு
மகிழ்ச்சி கண்டு, வண்டென ரீங்காரமிட்டு
அவள் என்றும் வாழ வேண்டுகிறேன் இறையே!