வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பிள்ளையார்

எனது பால்ய கால நினைவுகளை சற்றே மீட்டிப் பார்க்க விநாயகர் சதுர்த்தி கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது நினைவுக்கு வந்தது.

நாள் நெருங்குகையில் குயவர் ஏரியிலிருந்து தான் எடுத்து வைத்திருந்த களிமண்ணில் பிள்ளையார் சிலைகளை சிறிதும் பெரிதுமாக அழகாக வெயிலில் உலர்த்தி வைத்திருப்பார். அந்த குயவரது இல்லம் ஒரு குளக்கரையில் அரசமரத்தினடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரின் வீட்டிற்கு அடுத்தது. பிள்ளையார் வீட்டின் வாசல் முழுக்க இவர் பிள்ளையார்களை அணிவகுத்து வைத்திருப்பார்.

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் ஒவ்வொரு வீட்டுக்குழநதையும் குயவரிடம் சென்று பணம் கொடுத்து பிள்ளையார் சிலைகளை வாங்கி வருவர். அந்த ஊரில் இரண்டு குயவர் இல்லங்கள். இருவரும் ஏமாற்றமடையாமல் ஊர்மக்கள் இரண்டாகப் பிரிந்து இருவரது படைப்புகளையும் வாங்கியிருப்பர். அதீத உற்பத்தியுமில்லை, ஏமாற்றமுமில்லை. என்ன ஒரு புரிதல் மக்களிடையே!

எல்லோரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த பிள்ளையாரை நன்கு பூஜை செய்து வழிபடுவர்.வெள்ளெருக்கு மாலை, ஒரு பிடி அருகம்புல், தும்பைப்பூக்கள் கோர்க்கப்பட்ட ஒரு சிறிய மாலை இவ்வளவே அலங்காரம். ஒவ்வொரு பிள்ளையாருக்கும் களிமண்ணால் செய்த வெண்கொற்றக் குடையே மிக பிரமிப்பு கொடுக்கக்கூடியதாய் இருக்கும் எங்களுக்கு. அருகிலேயே பசுஞ்சாணத்தால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார் அவர் தலையிலே அருகம்புல்லே வெண்கொற்றக்குடையாய் மாறியிருக்கும்.

கொண்டைக்கடலை சுண்டல், கொழுக்கட்டை நிவேதனம். பெரிய செலவில்லை. ஆனால் ஒரு பிரமாண்ட பூஜைபோலிருக்கும். ஒவ்வொரு வீடும் அந்நாளை ஆனந்தமாய் வரவேற்க தொடங்கி இருக்கும்.
விவசாய வேலைகளால் நேரந்தள்ளீப் போகும் குளியல் கூட அன்று நேரத்தோடே நடந்திருக்கும். ஒவ்வொரு மனிதரும் மற்றவரைச் சந்திக்கையில் தங்களது பூரிப்பை அடுத்தவரோடு பங்கிட்டுக் கொள்வதை அவர்களது கண்களிலே கண்டு கொள்ளலாம்.

முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் இருக்கும் பெரிய பிள்ளையார்கள் சிறப்பு கவனிப்பு பெறுவார்கள் அன்றைய தினத்தில். நாளெல்லாம் உடன் சுற்றும் நண்பனை பிறந்த நாள் அன்று சிறப்பாக கவனித்துக் கொள்ள முற்படுவோமே, அதுபோலத்தான். பிள்ளையாரின் விழா மட்டுமே ஒரு தோழமை உணர்வோடு மிக யதார்த்தமாக எந்தவித கெடுபிடியுமில்லாமல் கொண்டாடப்படும் விழா.

விழா முடிந்தபின்னர் மறுநாளோ அல்லது இரு தினங்கள் கழித்தோ ஒவ்வொரு குழந்தையும் தான் அலங்கரித்து அழகாக பூஜை செய்த பிள்ளையாரை கைகளில் ஏந்தி நீர்நிலை ஏகி மிக மெதுவாக நீருக்குள் இறக்கி விடுவார்கள். பிருத்வி என்ற மண்ணின் தத்துவத்தை விளக்கும் பிள்ளையார் தான் கரைந்து தனது பிம்பம் தொலைத்து தன்னுருவான மண்ணாய் மாறிப்போவார். எங்கிருந்து வந்தாரோ அங்கேயே போய்ச் சேருவார்.

ஊர்வலமில்லை, ஒலி பெருக்கிகள் இல்லை, வண்ண விளக்கு அலங்காரங்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பிள்ளையார் இருந்தார். ஒவ்வொரு வீடும் ஆவலோடு ஆத்மார்த்தமாக கொண்டாடியது. பிள்ளையாரை பார்த்தார்கள், ரசித்தார்கள், அவரோடு வாழ்ந்தார்கள், அவர் பிரிதலையும் மிக யதார்த்தமாக குழந்தைகள் புரிந்து கொண்டு ஏற்றன.

இயற்கைக்கு கேடில்லா இயல்பான விழாவை இன்று கிராமங்களும் தொலைத்துவிட்டது வேதனை. அதைவிட இன்று நகரங்களில் மூலைக்கு மூலை பிள்ளையார் சிலைகள். மிகமிகப் பெரிதாய், அவை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று பல்வகைப்பட்ட வேதிப்பொருள்களால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள். ஆம் அவை சிலைகள் மட்டுமே. அவை பிள்ளையார் அல்ல. பந்தல்கள், வண்ண விளக்குகள், பறைகொட்டு என மிக சப்தமாக.

ஆனால் இவை அனைத்தும் ஏனோ உள்ளத்தைத் தொடவில்லை. நெஞ்சில் ஒரு ஆனந்தத்தை அளிக்கவில்லை. அமைதியை வீணை மீட்டலென இதயத்தில் மெல்லியதாய் உணரவைக்கவில்லை.

எங்கே செல்கிறோம் நாம், நம்முடைய பயணம் எதை நோக்கி? வெளிர்ந்த மனதில் இன்னமும் நம்பிக்கை கீற்றிருக்கு இயல்பான இயற்கை வாழ்க்கையை மீண்டும் என்றாவது ஒரு நாள் வாழத்தொடங்கி விடுவோம் என்று.