செவ்வாய், 26 ஜனவரி, 2016

உடலின் மொழி

              உடலின் மொழி

             உடல் மொழி(body language) நமது எண்ணங்களை மற்றவர்க்கு தெளிவுற அறியச் செய்ய பயன்படுத்துகிறோம். இதற்காக எத்தனையோ புத்தகங்கள், வகுப்புகள் என பலப்பல வழிகாட்டுதல்கள் நமக்கு எளிதாக தற்காலத்தில் கிடைக்கிறது. இது சமூகத்தில் நமக்கு ஓர் இடத்தைப் பெற்றுத்தர பயனுள்ளதாக அமைகிறது.

             நாம் இங்கு சிந்திக்கப்போவது உடலின் மொழி பற்றி. நாம் நமது சிந்தனைகளை, விருப்பங்களை,தேவைகளை மற்றவர்க்கு விளங்க வைக்க மொழி என்ற ஒன்று உள்ளது. அது போலவே நமது உடல் அதன் எண்ணங்களை, தேவைகளை, விருப்பங்களைத் தனது மொழியில் பேசுகிறது.

           ஆயினும் நமது மனமொழி ஆதிக்கம் செலுத்தி அதனின்றும் நம் சிந்தனையை விலக்கி வைப்பதால் உடலின் மொழியை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளவும் தலைப்படாமல் இருக்கப் பழகிவிட்டோம். நமது மனமொழியை சிறிது அமைதிப்படுத்திவிட்டு உடலின் மொழியை கவனிக்கத் தொடங்கினாலே அதன் மொழி நமக்குப் புரிந்துவிடும்.

          ஒரு குழந்தை மற்றும் தாயின் உரையாடல் மற்றவர்க்குப் புரியாமல் போகலாம். ஆனால் அவர்கள் இருவருக்கும் நன்றாகவே புரியும். அதுபோலத்தான் உடலின் மொழியும் கூர்ந்து நோக்கில் நமக்குப் புரியத்துவங்கிவிடும்.

          தாகம் எடுக்கிறது என்கிறோம், பசிக்கிறது என்கிறோம் இவை எவ்வாறு நமக்குத் தெரிகிறது. இது உடலின் மொழி; அது தனது தண்ணீர் தேவையையும் ஆற்றல் தேவையையும் நமக்கு விளக்கிவிடுகிறது. ஆனால் நம்மில் பலருக்கும் தெரிந்த உடல்மொழியினிந்த இரு வார்த்தைகளையுமே பல நேரங்களில் புறந்தள்ளிவிட்டு யாரோ ஒருவர் சொன்னதை, மனம் நம்புவதை, சொல்வதை பின்பற்றத் தொடங்கிவிடுகிறோம்.

          உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் நிச்சயம் ஒருவர் குடிக்க வேண்டும் என்பது. ஆனால் உடல் தனது மொழியில் தாகம் என்ற வகையில் தனது தண்ணீர் தேவையை தெரிவிப்பதை புறந்தள்ளிவிடுகிறோம். குளிர்சாதன அறையில் பணிபுரிபவரின் தண்ணீர் தேவையும், கொதிக்கும் வெயிலில் தார்சாலை அமைக்கும் பணியாளரின் தண்ணீர் தேவையும் வேறு வேறு. இரண்டு லிட்டர் தண்ணீர் என்பது முன்னவர்க்கு வெகு அதிகம்;பின்னவர்க்கு வெகு குறைவு. இங்கு தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துவதுதானே சரியான முறையாக இருக்கும்?

         மூன்று வேளை சரியான நேரத்திற்கு உணவெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் உணவு உடலின் ஆற்றலுக்காக இடப்படும் எரிபொருள். உடல் தனது தேவையை பசி என்ற மொழியில் தெளிவாகச் சொல்கிறது. வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பும்பொழுது எப்படி நிரப்புகிறோமோ அதே முறைதான் இங்கும் பின்பற்றப்படவேண்டும். குறித்த நேரத்திற்கு உணவு என்ற நிலையில் எரிபொருள் வீணாகித்தான் போகும். சரியான நேரத்திற்கு உணவென்பது பசித்த நேரம் தானே தவிர கடிகாரம் காட்டும் நேரம் அல்ல என்று நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறோம்?

          பலருக்கும் காய்ச்சல் தலைவலி என்றாலே பயம் மிகுந்து விடுகிறது; சாதாரண பயம் அல்ல மரண பயம். ஊடகங்கள் வாயிலாக அறிந்த பல நோய்களின் அறிகுறிகளும் விளைவுகளும் நமது மனக்கண்ணில் திரையிடப்பட்டுவிடுகிறது. இந்த பயமே பல மருத்துவமனைகளுக்கும் முதலீடுகளாகி வருமானங்களை அள்ளிக் குவிக்கிறது.

          அது மட்டுமல்ல, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனிருப்பவர்கள் அனைவரும் மருத்துவர்களாகி விடுகின்றனர். ஆளாளுக்குச் சொல்லும் நோய்கள் மருத்துவமுறைகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலாது. காய்ச்சல் உடல் தன் உடலில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு நோய்க்காக போராடும்பொழுது உண்டாவதுதான். அந்நேரம் உடலுக்கு அதிக வேலை இல்லாமல் ஓய்வு அளிப்பதே சிறந்த வழிமுறையாகவும் முதலுதவியாகவும் இருக்கும். தேவை எனில் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கலாம். 

          தலைவலிக்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை, பசித்த நேரத்தில் உணவருந்தாது போனது, மன அழுத்தம் எனப் பல்வேறு காரணிகள் இருக்கலாம். உடலின் மொழி அறிந்துவிட்டால் இதற்கான தீர்வு கிடைத்துவிடும் மனதில் வீண் பயத்திற்கு இடம் இருக்காது.

           உடல் தனது களைப்பை, ஆற்றல் இழப்பை, தனக்குத் தேவைப்படும் ஓய்வை சோர்வு எனும் தனது மொழியில் வெளிப்படுத்துகிறது. சோர்வில்லாமல் உழைப்பது நல்லதாயிருக்கலாம்; ஆனால் சோர்வை புறந்தள்ளி உழைப்பது சரியானதாக இருக்காது. உடல் சோர்வடையும் தருணத்தில் அதற்கு சரியான ஓய்வை அளிப்பதே நாம் நமது உடலுக்குச் செய்யும் நன்மையாக அமையும்.

          தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது என்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஓய்வுக்கு ஏங்குகிறது என்றுதானே பொருள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வதை விட உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒன்று வேறில்லை. முன்னிரவில் உறங்கி அதிகாலையில் விழிப்பதே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். இரவு நெடுநேரம் வேலை செய்வது பெருமையல்ல; அது உடலின் இளமைக்குச் செய்யும் துரோகம்.

          தாய்மொழியில் சிறந்தவராய் இருப்பதும் பன்மொழி வித்தகராய் இருப்பதும் பெருமைதான். ஆனால் உடலின் மொழி அறிந்திருப்பதே நமது வாழ்வுக்கு ஆதாரம். எனவே உடலின் மொழி கற்றிட முனைந்திடுவோம். இளமையோடு நீடு வாழ்வோம்.

 இதனை நிப்ட்-டீ செய்தியில் வெளியிட்டுவிட்டேன். இன்றுதான் இங்கு வெளியிட நேரம் அமைந்தது. படங்களுக்காக இணையத்தில் தேடுகையில் இந்தத் தலைப்பில் உமர் பரூக் என்பவர் எழுதியுள்ள புத்தகம் வந்துள்ளதை அறிந்து கொண்டேன்.