புதன், 27 பிப்ரவரி, 2013

திருக்குறள், அறத்துப்பால், அதிகாரம் 1, குறள் 5

            இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
 
பொருள்:-
                      பிறவி மயக்கத்துக்கு ஏதுவாகிய இன்பத் துன்பங்களை உண்டாக்கும் நல்வினையுந் தீவினையுமாகிய இரண்டு வினையுஞ் சேராமல் நீங்கும், இறிவனுடைய மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

நானுணர்ந்தது:-
                          ஒருவன் இறைவனை அடைய வேண்டுமனில் அவன் தீவினை தவிர்த்தால் மட்டும் போதாது, நல்வினையையும் தவிர்க்க வேண்டும். பாவம், புண்ணியம் இரண்டும் இல்லாதிருக்கும்போது மட்டுமே ஒருவன் இறைநிலையோடு கூட முடியும். ஏனெனில் ஒருவன் செய்யும் நல்வினை, தீவினை இரண்டிற்கும் ஏற்ப அவனது மறுபிறவி அமைகிறது. எனவே இறைநிலையோடு ஒன்றுதல் என்பது நிகழாமல் போகிறது.
                        தீவினையைத் தவிர்க்கலாம் என்பது ஒருவகையில் சரியாக இருக்கலாம். ஆயின் நல்வினையினைத் தவிர்ப்பது என்பது எவ்வகையில் சரியாக இருக்கும். இங்கு அறம் என்பதே நல்வினையைத்தானே குறிக்கிறது, அது இந்த மண்ணின் குணமாகவும், மண்ணின் மைந்தர்களின் மரபணுக்களிலே தேங்கி நிற்கிறது.
                        நிச்சயம் வினைகளைப் புரியும்போது நம்முள் அகங்காரம் ஏற்படுவது இயல்பு, அதுவும் நல்வினைகளைப் புரியும்போது கிடைக்கும் புகழ்ச்சொற்கள் நம் அகங்காரத்தினை மென்மேலும் தூண்டிவிடும். அதிலிருந்து விலகி நான் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் என்னைக் கருவியாய்க் கொண்டு உலக நன்மைக்காக செய்தது என்ற எண்ணம் கொள்வோமானால், இச்செயலுக்கு உரிமை கொண்டாடாமல் இருந்தோமென்றால் நாம் செய்யும் நல்வினைகளின் பலன் நம் கணக்கில் சேராமல் இருக்கும், நம்மை இறைவனிடத்து நெருங்கச் செய்யும். சுருங்கச் சொன்னால் நாம் இறை நிலையோடு ஐக்கியமாவோம்.
                        இதனையே இன்னொரு கோணத்தில் சிந்திப்போம். நன்மை, தீமைக்கு அப்பாற்பட்டு மெய்ம்மை நிலையில் இருக்கும் இறைவனின் புகழினை சிந்தித்து, அவனையே மனதில் இருத்தி நம் கடமையை செவ்வனே செய்து வரும்போது நாம் நல்வினை, தீவினை என்னும் இருள் சேர்க்கும்(மறுபிறவி சேர்க்கும்) நிலையினை அடையாதிருக்கலாம்.
                       நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்கிறார் விவேகானந்தர். இருவினைகளிலிருந்து நீங்கி நிற்கும் பரம்பொருளை நாம் மனத்தில் எண்ணிவர நாம் மெதுவாக இறைநிலை நோக்கி பயணப்படுவோம். அவ்விரு நிலைகளும் நம்மை நீங்கி நாம் இறையோடு ஐக்கியமாவோம்.
                        இன்றைய காலகட்டத்திலே நாம் நமக்காக அதிகம் யோசித்து, இறைவனிடம் அதிகம் யாசித்து எந்நேரமும், நான், என் குடும்பம், என் வீடு என வாழ்ந்து வருகிறோம். விதிவிலக்கானவர்கள் இவ்வாக்கியத்தினை தவிர்த்து விடுங்கள். இதிலிருந்து சிறிதேனும் விடுபட்டு பிறர்நலன் யோசித்து அதற்காக இறைவனிடம் யாசித்து, பிரார்த்தனை செய்து வந்தால் நிச்சயம் நாம் இறைநிலையினை நோக்கி பயணப்படுவோம். பிறருக்காக வாழ்ந்து மக்கள் சேவை செய்து வந்தால் மகேசன் பக்கத்தில் நாம் செல்ல வேண்டாம், நம்மிடம் மகேசன் நெருங்கி வருவான் என்கிறார் நெமிலி ஸ்ரீ பாபாஜி.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

திருக்குறள் - அறத்துப்பால்- அதிகாரம் 1-குறள் 4

அதிகாரம் - 1
குறள் - 4

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டூ மிடும்பை யில.

விருப்பு, வெறுப்பு இல்லாதவன் பாதங்களைச் சேர்ந்தார்க்கு எக்காலத்தும்
பிறவித் துன்பமில்லை.

நான் உணர்ந்தது:-

இவ்வுலகில் பொருட்களிலோ, அதனை ஒட்டிய நிகழ்வுகளிலோ எவ்விதமான விருப்பும், வெறுப்பும் இல்லாதிருந்தால் அவர்களை இந்நிலவுலகில் ஒருவரை வருத்தும் எந்தவொரு துன்பமும் அணுகாது. மேலும் இந்நிலையில் வாழ்கையில் ஆன்மா பாவத்தினையோ, புண்ணியத்தினையோ தன்னில் சேர்க்காமல் சூன்ய நிலையில் இருக்கும். சூனய நிலையை ஆன்மா அடைந்ததனால் மறுபிறவி என்ற நிலையிலிருந்து விடுபடுகிறது. எனவே இப்பிறவியுலும் துன்பமில்லை, மறுபிறவி என்ற துன்பமுமில்லை. இதனை எப்படி அடைவது, இந்த தன்மையிலேயே உள்ள இறைவனின் திருவடியினை நீங்காதிருப்பதே என்கிறார்.

புதன், 13 பிப்ரவரி, 2013

திருக்குறள் - அறத்துப்பால்

திருக்குறள்
அறத்துப்பால்
குறள் - 3

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

           உயிர்களுடைய இதய கமலத்திற் சென்றவனுடைய மாட்சிமைப்பட்ட பாதங்களைச் சேர்ந்தார். எல்லா உலகுக்கும் மேலாகிய மோடச வீட்டுலகின்கண் அழிவில்லாமல் வாழ்வார்

           எல்லா மகிமையைமுடைய பாதம் நினைக்குமுன்னே இதயமலரின் மேல் வருவான் எனவுங் கொள்க.சேர்தல் = இடைவிடாமல் நினைத்தல்.

நான் உணர்ந்தது:-

மோட்சமென்பது எவ்வுலகிலோ அல்ல, அது ஈங்கே வாழும் காலத்திலேயே அடையப்பட வேண்டிய ஒன்று.

மலர்மிசை ஏகினான் - குண்டலியில் சஹஸ்ராரம் என்ற சக்ரம், ஆயிரம் இதழ் கொண்ட தாமரையினை ஒத்ததாயிருக்கும். மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி எழுப்பப்பெற்று சஹஸ்ராரச் சக்கரத்திலடையப் பெற்றவர் மோட்சமடைந்தவரே. அவர்தமக்கு விருப்பு, வெறுப்பு நீங்கி, இன்ப துன்ப வேறுபாடற்று வாழும் நிலை கிடைக்கப்பெறும். அவர்கள் இந்நிலத்தில் நீண்டநாள் வாழும் தன்மையுடையவராவர். நீண்ட நாள் என்பதனை உடலால் மட்டும் எனக் கொள்ளாமல் அவர்தம் பெருமை எனவும் கொள்ளலாம்.

மாணடி சேர்ந்தார் - இவ்வாறு மோட்சமடைந்த ஒருவரது திருவடித்தாமரைகளைப் பணிந்து அவரை நீங்காதிருக்கும் ஒருவன் மோட்சமடையும் வழியினை உணர்ந்து இப் புவியில் நீண்ட நாட்கள் வாழும் பேறினைப் பெறலாம்.

மாணடி என்பது இறைவனது திருவடி(மேலே மோட்சமடைதல் என்பது இறைநிலையடைதல் என்பதால், அந்நிலையடைந்தவர் திருவடியும் மாணடி எனக்கொண்டேன்) . இறைவனது திருவடியினை நீங்காது நினைந்து இருப்போர் மலர்மிசை ஏகும் தன்மையினைக் கைக்கொண்டு  இந் நிலமதனில் நீடு வாழும் தன்மை எய்துவர்.


செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

திருக்குறள் - அறத்துப்பால்

திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம் 1
குறள் 2
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின்.
எல்லா நூல்களையுங் கற்ற அக்கல்வியறிவினானாய பயன் யாது, தூய அறிவையுடையவன் நல்ல பாதங்களைத் தொழாதொழிவாராயின்.

எவ்வளவு நூலறிவு இருந்தாலும் அனைத்திற்கும் மேலான, தூய அறிவின் அடையாளமாகிய இறைவனை உணர்ந்து அவன் தாள் பணியவில்லையெனில் நூலறிவினால் யாதொரு பயனுமில்லை. இறையுணர்வு இல்லாத நூலறிவு அகங்காரத்தினைப் பெருக்கும், நான் என்ற அகந்தையில் அழிவின் பாதைக்கே பயன்படும், ஆக்கத்திற்கு ஒரு நாளும் உதவாது. நூலறிவு என்பது வெறும் தகவல் தொகுப்பேயன்றி அறிவல்ல. இறையுணர்வு பெற்று அவன் தாள் பணிந்து பணிவினைப் பெறும் போது அறிவின் தொடக்கம் உருவாகிறது.


திங்கள், 11 பிப்ரவரி, 2013

திருக்குறள்

அறத்துப்பால்.
அதிகாரம் 1
குறள் 1

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.


எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதன்மையாய் உள்ளது போல் இந்த உலகத்துக்கு ஆதிபகவனாகிய கடவுளே முதல்வன்.

இறைவன் ஒருவனே என்றும், அவனை பகவன் என்றும் அழைக்கிறார் திருவள்ளுவர். ஆதியென்பது இறைவனது பழமையையும் முதன்மையையும் உணர்த்துவதாயிற்று.



திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஜாதி - என் பார்வையில்

             ஜாதி - ஐயகோ! இந்தியாவில் இந்த வார்த்தை படும் பாடு சொல்லவொண்ணாதது. ஜாதீய முறைகள் தீவிரமாக இருந்த சென்ற நூற்றாண்டுகளில் கூட இன்றைய நிலையினைக் கண்ணுற்றிருக்க முடிந்திருக்க இயலாது என்பது என் எண்ணம்.

ஜாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவை இந்திய அரசியலமைப்பும், அரசியல்வாதிகளும் கைக்கொண்ட பிறகு தன் ஜாதியின் மீதான பற்று ஒவ்வொரு குறிப்பிட்ட ஜாதியினருக்கும் தீவிரப்பட்டுள்ளதுதான் மிச்சம். எள்ளளவும் குறைக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.

குறைந்த வருடங்களே இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்தால் போதும் சமுதாயத்தில் சமத்துவம் நிலவிவிடும் என்ற நம்பிக்கை அரசியலமைப்பினை உருவாக்கிய அம்பேத்கர் உட்பட அனைவருக்கும் இருந்தது. இதனை மீறி 65 ஆண்டுகள் இவ்வொதுக்கீடு கொடுக்கப்பட்டும் சில குறிப்பிட்ட சமுதாயங்கள், எவை முன்னேற இத்திட்டம் முன்வைக்கப்பட்டதோ அவை இன்னமும் முன்னேறவில்லை என்று அரசு, அரசியல்வாதிகள், அந்த சாதீயத் தலைவர்கள் உறுதிப் பத்திரம் வாசிக்கிறார்கள்.

இதில் வெட்கக்கேடான விஷயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மேலும் பல சாதிகள் இணைந்தன, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்ற பிரிவிகளில் மேலும் பல சாதிகள் இணைந்தன. இன்னமும் பல இந்த வரிசையில் இணைய போராடிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தில் மேம்பட்ட சமுதாயமும் இதில் இணைய  துடிப்புடன் போராடிக் கொண்டிருக்கின்றது.

ஒரு ஜாதி தன் பொருளாதார நிலையிலும், சமுதாய அந்தஸ்திலும் மேலான நிலையை அடைய வேண்டும் என்று இயற்றப்பட்ட சட்டம் அந்த ஜாதியனரையும் மேம்படுத்தவில்லை மாறாக சுதந்திரத்தின் போது மேம்பட்ட நிலையில் இருந்தவர்களையும் கீழ்நோக்கி இழுத்து இணைத்திருக்கிறது.

நிச்சயம் இது இந்திய அரசுக்கு பெருமைக்குறிய விஷயமாகத்தான் இருக்க முடியும். பெரிய சாதனையாகவும் கொள்ளலாம்.

ஒரு செயல்திட்டம் போடுகிறோம், அதற்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கிறோம். செயல்வடிவம் கொடுக்கிறோம் என்ன முடிவுகள் ஒவ்வொரு வருடமும் கிடைக்கிறது என்பது ஆய்வுக்குட்பட்ட ஒன்றாகத்தானே இருந்திருக்க முடியும். இதனை ஒவ்வொரு துறையும் செய்வது போல் இதற்கான துறையும் செய்திருக்குமல்லவா? இதன் விளைவுகள் கீழ்நோக்கி செலவதை உணராமலா இருந்திருப்பார்கள்?

விளைவுகள் என்ன, பல சாதிகள் தங்களை பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் கீழ்நிலையாளராக முன்னிறுத்தின. தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் தாழ்த்திக் கொள்வதற்காக அவர்கள் சிறிதளவேனும் வெட்கப்பட்டார்களில்லை. ஏற்கனவே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் தன் சகோதரனின் சலுகைகளை பங்கு போட துணிந்ததோடு மட்டுமல்லாமல் தங்களை அவர்களுக்கும் பாதுகாவலர்களாக காட்ட  முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நியாயத்தினைக் கூற வேண்டிய, செயல்படுத்த வேண்டிய அரசும் இவர்களுக்கு உறுதுணையாய் இருந்து குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாய் தான் தின்று கொண்டிருக்கிறது.

இது தாழ்த்தப்பட்டவர்களின் விடிவெள்ளிகளாக தங்களுக்குத் தாங்களே அறிவித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களுக்குத் தெரியாதா, இல்லை குரங்கு சிதறும் அப்பத்துக்காக வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்களா?

இங்கு ஜனநாயகம்வெறும் எண்ணிக்கை மட்டுமே,இதற்கு எந்த தொலைநோக்கும், தர்மத்தினப்பற்றிய சிந்தனையுமில்லை என்பதே நிதர்சனமான் உண்மை.

சரி இட ஒதுக்கீடு எதற்காக கொடுத்தார்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயம் படிப்பறிவு மறுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள், அவர்களால் படித்த மற்ற இனத்தவரோடு போட்டியிட்டு வேலைவாய்ப்பினை பெறமுடியாது என்பதால். சில காலம் இவர்களுக்கு இந்த சலுகை கொடுத்தால் இந்த இனம் அந்த கால அளவுக்குள் தன் படிப்பறிவை உயர்த்திக் கொள்ளும் என்பதால்தானே? அம்பேத்கரின் கூற்றுப்படி, அவர் தன் வாழ்நாளில் அடைந்திட்ட பல்வேறு அவமானங்களையும் துடைத்தெறிய வேண்டுமெனில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இடத்தினை அடைய வேண்டுமென்றும் அதற்கு கல்வி ஒன்றே வழி என்று. இத்தனை வருடங்களாகியும் அவர்கள் படிப்பறிவில் உயரவில்லை என்கிறார்களே, அவர்கள் படித்துயர வாய்ப்பளிக்காமல் அவர்களை முட்டாள்களாகக் காட்ட என்ன உரிமையிருக்கிறது. வாய்ப்பு கிடைத்த சகோதரர்கள் சாதிக்கவில்லையா, இல்லை இன்னும் சலுகையினால்தான் அவர்கள் வேலையினைப் பெறுகிறார்கள் என்று கூறுகிறார்களா?இதே நிலை தொடரவேண்டுமென்றுவிரும்புகிறார்களா?

சமத்துவமான, சாதி மீது வெறியற்ற சமுதாயம் படைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதே அரசியல் சட்டத்தினை வடிவமைத்தவர்களின் தீராத வேட்கையாக இருந்திருக்க கூடும். ஆயினும் இற்றை நிலை என்ன?

ஒவ்வொரு குடிமகனும் தன் சாதிக்கான சங்கத்தில் இருக்கிறார், அதன் எண்ணிக்கையின் அடிப்படையில் ஓட்டு வங்கி உருவாக்கி அரசியல் கட்சிகளையிடையே செல்வாக்கினை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் மிகுதியான எண்ணிக்கையில் வாழும் இடங்களில் ஒரு நிழல் அரசு போல் செயல்படுகிறார்கள். இப்படி நடக்கையில் எப்படி சமத்துவத்தையும் நீதியினையும் எதிர்பார்க்க முடியும்.

என்னதான் செய்யலாம்?

1. இடஒதுக்கீட்டினை தொடர்ந்து அமலில் வைப்போம்.
2. சாதிவாரி கணக்கீட்டில் எத்தனை பேர் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியிருக்கிறார்கள் என்ற கணக்கின்படி அவர்களது படிப்பறிவு பெற கால இலக்கு நிர்ணயிப்போம்.
3. அதன் பின்னர் பொருளாதார முன்னேற்றம் அடைந்த குடும்பங்களை சலுகையிலிருந்து நீக்குவோம். காலியான இடங்களுக்கு மேலும் அந்த சமுதாய ஆட்களை கொண்டு நிரப்புவோம். இதற்கும் ஒரு கால இலக்கு நிர்ணயிப்போம்.
4. இக்கால இலக்கில் எந்த மாற்றமும் ஏற்படுத்தக்கூடாது என்ற விதியினை இணைப்போம்.
5. இதனை அடுத்து இடஒதுக்கீட்டினை சாதி அடிப்படையிலிருந்து பொருளாதார அடிப்படைக்கு மாற்றுவோம்.
6. பின்னர் சாதி பெயரை பள்ளிப் பட்டியல் மற்றும் அனைத்து பதிவெடுகளில்  இருந்தும் நீக்குவோம்.

ஆயினும் இது சாத்தியமாகுமா என்பது என் கேள்வி, ஏனெனில் இதனை பாமர மக்கள் ஏற்றுக்கொண்டாலும் ஜாதீயப் பிழைப்பு நடத்துபவர்கள் இதனை ஆதரிக்கக்கூடும் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது.என்னுள் இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது. ஒன்றினை எதிர்ப்பதால் அது மிகவும் வீர்யமாக வளர்கிறது. எதிர்ப்பில்லாதவைகள் சுணங்கி அழிந்து மறைகின்றன. யார் என்ன ஜாதியாய் இருந்தாலென்ன அனைவரும் மனித்ர்கள்தான், அனைவரையும் ஒன்றுபோல் பார்ப்பேன், பழகுவேன் என்ற மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்பட்டால் பேதங்கள் ஒழியும். இது சாத்தியமான ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும் குழ்ந்தையை இந்த எண்ணம் தழைக்க வளர்த்தால் இக் கனவு நிறைவேற வாய்ப்பு அதிகம்.

உயர்ச்சியோ தாழ்ச்சியோ நிச்சயம் பிறப்பாலல்ல. இதனை அனவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வள்ளுவரே ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று எல்லா உயிரையும் ஒரே தட்டில் நிறுத்திவிட்டார். ஒருவன் செயலினால் மட்டுமே உயர்ச்சி, தாழ்ச்சி வருகிறது, இந்நிலையில் நம்மை நாமே உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ அழைத்துக் கொள்ளல் எவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும். அதுபோல் பிறப்பினைக் கொண்டு ஒரு சமூகத்தை தாழ்த்தப்பட்டவர்களாக ஒரு கால கட்டத்தில் சித்தரித்தாரகள் என்பதற்காக இன்றும் அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றே அழைபதில் எனக்கு உடன்பாடில்லை. காந்தி அழகாக அவர்களை ஹரிஜன் என்று குறிப்பிட்டார். ஆனால் அவ்வழகிய சொல்லை அவ்வினத்தவரும் ஒதுக்கிவிட்டார்கள், காந்தியவாதிகளும் அதனை மறந்துவிட்டார்கள். இன்று அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே சித்தரிக்கும் தலித் என்றொரு புது வார்த்தைக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

 தாழ்த்தப்பட்டவர்கள் என்றஒரு பட்டத்தினைச் சுமக்கும் என்சகோதரர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், உங்களுக்கென்று பாரம்பர்யம் உண்டு. உங்கள் அடையாளங்களை தொலைக்காதீர்கள். உங்களை எப்போதும் உயர்வாக எண்ணுங்கள். உழைக்காதவர்கள் கடவுளைத் தேடி செல்ல வேண்டும். உங்கள் நிலை அப்படி அல்ல, கடவுள் நீங்கள் இருக்கும் இடம் தேடி வருவார். நீங்கள் ஹரியின் மைந்தர்கள், நீங்கள் யாரின் அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. ராமானுஜரின் பெயரிலும், ராகவேந்திரரின் பெயரிலும் ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் உயர்ந்தவர்களே, உங்களை நீங்கள் உங்கள் எண்ணத்திலோ, பேச்சிலோ எவ்விடத்திலும் தாழ்வாகக் கருதாதீர்கள்.

சமீபகாலமாக சிலமுழக்கங்களை கேட்டுக்கொண்டிருக்கின்றேன். வன் திருமணத்திற்கானஒரு கோஷம்,இது எந்தவிதத்தில் நியாயம் என்றுதெரியவில்லை. காதலென்பது வேறு, அதனால் இனக்கலப்புகள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதது. மேலுமது தவறுமன்று. நடைமுறையில் நடப்பதென்பது வேறு.  இங்கே தமிழனின் பெருமைமிகு கலாசாரமான பெண்களை மதிப்பதென்பது போய் பகடைக்காயாக பயன்படுத்துவது என்பது மன்னிக்க முடியாத பாபம். உடனே எனது நண்பர் ஒருவர் கேட்டார், உயர்ந்தோர் எனக்கூறப்படுவோர் இதே போல் பெண்களின் மீது தங்கள் பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார்களே? இவர்கள் செய்யக்கூடாதாவென்று. மன்னிக்கவும் நண்பரே, உயரிய விஷயங்களைக் கைக்கொண்டு உயர்ந்தோரென தலைநிமிர்ந்து வாழ்வதேஒரு மனிதனின் லட்சியமாக இருப்பது நல்லது. கீழ்த்தரமான விஷய்ங்களைக் கைக்கொண்டு தன்னையும் தன் சமுதாயத்தையும் கீழ்நோக்கித் தள்ளுவதென்பது எவ்வாறு நம்மை சமூகத்தில் உயர்ந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.

வேதனையில் மனம் உழன்று கொண்டிருக்கிறது.

என்று தணியுமிந்த சாதிவெறி,
என்று காண்போம் மறுபடியுமிங்கே
மாண்புறு மனிதசமுதாயத்தை?
பாரினில் பாரததேசம் மீண்டும்தன்
பண்பட்ட சமூகத்தை சமைக்காதோ?
பற்பல ஞானமும் உதித்தது இங்கன்றோ,
நற்சிந்தனைகள் பல பதித்தது நாமன்றோ,
கேடில்வீழ்ந்து நமைநாமே வீழ்த்துதல் தவறன்றோ?
பாரினில் பாரததேசம் மீண்டும்தன்
பண்பட்ட சமூகத்தை சமைக்காதோ?
மாடாய் உழைப்பவர் ஒருபுறம்
மூடராய்த் திரிபவர் ஒருபுறம்
திருடராய் வாழ்வோரோ அவர் சிரம்!!
பாரினில் பாரததேசம் மீண்டும்தன்
பண்பட்ட சமூகத்தை சமைக்காதோ?
விழித்தெழு என் தோழா,
விதையாய் நீயிரு, பெரும்
விருட்சமாய் மாறிடு
உந்தன் நீழலில் அதர்மம் அழியட்டும்,
உந்தன் விழுதுகள் தர்மம்தாங்கட்டும்,
உயர்ந்தும் பரந்தும் பாரதம் காத்திடு!!
பாரினில் பாரததேசம் மீண்டும்தன்
பண்பட்ட சமூகத்தை சமைக்கட்டும்!!

இதுநாள்வரை சாதி என்ன என்று நச்சரிக்கும், சாதிபார்த்து பழகும் நண்பர்கள் என் வட்டத்தில் சேர்க்காத பகவன் நாராயணனுக்கு நன்றி பகர்கிறேன்.