புதன், 13 பிப்ரவரி, 2013

திருக்குறள் - அறத்துப்பால்

திருக்குறள்
அறத்துப்பால்
குறள் - 3

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

           உயிர்களுடைய இதய கமலத்திற் சென்றவனுடைய மாட்சிமைப்பட்ட பாதங்களைச் சேர்ந்தார். எல்லா உலகுக்கும் மேலாகிய மோடச வீட்டுலகின்கண் அழிவில்லாமல் வாழ்வார்

           எல்லா மகிமையைமுடைய பாதம் நினைக்குமுன்னே இதயமலரின் மேல் வருவான் எனவுங் கொள்க.சேர்தல் = இடைவிடாமல் நினைத்தல்.

நான் உணர்ந்தது:-

மோட்சமென்பது எவ்வுலகிலோ அல்ல, அது ஈங்கே வாழும் காலத்திலேயே அடையப்பட வேண்டிய ஒன்று.

மலர்மிசை ஏகினான் - குண்டலியில் சஹஸ்ராரம் என்ற சக்ரம், ஆயிரம் இதழ் கொண்ட தாமரையினை ஒத்ததாயிருக்கும். மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி எழுப்பப்பெற்று சஹஸ்ராரச் சக்கரத்திலடையப் பெற்றவர் மோட்சமடைந்தவரே. அவர்தமக்கு விருப்பு, வெறுப்பு நீங்கி, இன்ப துன்ப வேறுபாடற்று வாழும் நிலை கிடைக்கப்பெறும். அவர்கள் இந்நிலத்தில் நீண்டநாள் வாழும் தன்மையுடையவராவர். நீண்ட நாள் என்பதனை உடலால் மட்டும் எனக் கொள்ளாமல் அவர்தம் பெருமை எனவும் கொள்ளலாம்.

மாணடி சேர்ந்தார் - இவ்வாறு மோட்சமடைந்த ஒருவரது திருவடித்தாமரைகளைப் பணிந்து அவரை நீங்காதிருக்கும் ஒருவன் மோட்சமடையும் வழியினை உணர்ந்து இப் புவியில் நீண்ட நாட்கள் வாழும் பேறினைப் பெறலாம்.

மாணடி என்பது இறைவனது திருவடி(மேலே மோட்சமடைதல் என்பது இறைநிலையடைதல் என்பதால், அந்நிலையடைந்தவர் திருவடியும் மாணடி எனக்கொண்டேன்) . இறைவனது திருவடியினை நீங்காது நினைந்து இருப்போர் மலர்மிசை ஏகும் தன்மையினைக் கைக்கொண்டு  இந் நிலமதனில் நீடு வாழும் தன்மை எய்துவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக