ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மஞ்சள் முகமே வருக

மஞ்சள் முகமே வருக
          மஞ்சள் முகமே வருக” - இது ஒரு திரைப்படப் பாடல் வரி; நான் ரசிக்கின்ற வரியும் கூட. இத்திரைப்படம் வந்த காலகட்டத்தில் அநேகமாக தமிழகத்தைச் சார்ந்த அத்துணை பெண்டிரும் மஞ்சள் முகத்தையே கொண்டிருந்திருப்பர் என நம்புகின்றேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கலாசாரத்தின் எச்சங்கள் இருக்கும் என நம்பும் கிராமங்களில் கூட மஞ்சள் முகத்தைக் காண்பது அரிது.

      இந்த மஞ்சள் தமிழகக் கலாசாரத்தின் ஒரு அங்கம். தமிழ்ப் பெண்களின் அடையாளம். ஆனால் இன்று இந்த அடையாளம் இல்லாமல் போனது எதனால்? இந்த அடையாளம் அசிங்கமாகிப் போனது எதனால்?

      நம்மை நயவஞ்சகமாக ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற ஆங்கிலேயர், அவர்களது நயவஞ்சக குணத்தை நமது மக்கள் அறியாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களது ஒவ்வொரு செயலும் மக்களின் நன்மைக்கு என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்று அதில் அதிக அளவு வெற்றி கண்டனர். காந்தி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் முயற்சியால் ஓரளவு அவர்களது வெற்றி தடுக்கப்பட்டது என்றாலும், அந்தப் போலியான முகம் நல்லதொரு முகமாகவே இன்றளவும் நமது மக்களிடையே உள்ளது. இல்லையென்றால் சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆனபின்னும் சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் ஆங்கிலேயர் நம்மை நல்ல நிலைமையில் வைத்திருப்பர் என்ற பேச்சு இன்று எழுமா?

      ஆங்கில அரசாட்சிக்குப் பின் தமிழகத்தில் பகுத்தறிவுப் பெயரில் எழுந்த இயக்கம் நம்மிடம் உள்ள கலாசாரத்தை மூடநம்பிக்கை என்றும் வெள்ளைக்காரர்கள் கடைபிடிப்பதே உண்மையான கலாசாரம் என்ற நோக்கில் செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஏற்கனவே ஆங்கிளேயரின் மூளைச் சலவையில் பாதி மழுங்கிப் போன மூளை இதன் மூலம் மேலும் மழுங்கடிக்கப்பட்டது. இந்த மஞ்சள் பூசுவது பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாகக் காட்டப்பட்டது.

      ஆங்கிலேயர் எழுதிய வரலாறே உண்மை என்பதுபோல அன்றிலிருந்து இன்றுவரை பாடப்புத்தகத்தில் அதுவே பாடமாய். இன்றுவரை சிப்பாய் கலகம் என்பது முதல் சுதந்திரப் போராட்டம் என்று கற்பிக்கப்படவேயில்லை. எனது குடும்ப வரலாற்றை நான் எழுத வேண்டும் அல்லது என் குடும்ப நண்பர் எழுதினால் உள்ளது உள்ளபடி எழுத வாய்ப்புண்டு. எங்கிருந்தோ வந்த ஒருவர் இப்படித்தான் என் குடும்பம் வாழ்ந்திருக்கும் என்று சொன்னால் எப்படி? அப்படித்தான் இன்றைய நமது நாட்டின் வரலாறும்.

      நான் படித்த புத்தகங்களிலும் சில கிறுக்கு பிடித்த மர்ம நாவல்களிலும் ஆங்கில கலாசாரத்தினைப் பின்பற்றும் பல மாந்தர்களை நவநாகரீக யுவதி என்ற ஒரு வார்த்தையில் வர்ணிப்பதைக் கவனித்துள்ளேன். நவநாகரீகம் என்றால் புதிய நாகரீகம் என்ற பொருளைத்தானே தரும். அனைவரும் அப்பொழுது அதனை விரும்பத்தானே செய்வர். பொருந்தா நாகரீகம் என்ற பொருளை உணர்த்தும் விதமாக வார்த்தையை எழுத்தாளர்கள் கையாண்டிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஏனெனில் நமது நாகரீகம் சிறந்தது மட்டுமல்ல நாம் வாழும் சூழலுக்குப் பொருந்திய ஒன்று. எழுத்தாளர்களின் வார்த்தைகளுக்கு மிகவும் சக்தி அதிகம். அது எந்த வகை எழுத்தாளர்களாக இருந்தாலும்; வாசகர்களிடையே அவர்களது எண்ணத்தை விதைக்கும் வல்லமை படைத்தவர்கள். சில வாசகர்கள் எழுத்தாளர்களை குருவாகவும், தெய்வமாகவும் காணும் போக்கு இன்றும் காணக் கிடைக்கிறது.

      இது போன்ற செயல்களெல்லாம் நம்மிடமிருக்கும் அனைத்து பழக்கவழக்கங்களும் மூடப் பழக்கவழக்கங்கள் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டன. அப்பழக்கங்களைக் கைக் கொள்வது ஏதோ ஒரு அகௌரவமான விஷயம் போலவும், சமுதாயத்திலிருந்து தாங்கள் விலகியிருக்கும் தோற்றத்தை ஏற்படுத்துவது போலவும் உணர்வினை மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. எழுத்தாளர்கள் ஒரு புறம் என்றால் ஓவியர்களின் தாக்கம் கூட மக்களிடையே ஓர் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. எழுத்தாளர்களும், ஓவியர்களும் திட்டமிட்டு இப்படி கலாசாரத்தை சீர்குலைத்தார்கள் என்று குற்றஞ்சாட்ட இயலாது. அவர்கள் அந்த நிலைக்குச் சென்றிருந்தார்கள். சரித்திரத்தில் இந்த நிகழ்வு ஏற்பட அவர்களும் ஒரு கருவிகளாயினர்.

      இன்று தமிழ் தமிழினம் என்று கொந்தளிக்கிற பல பேருக்கும் தமிழினத்தின் அடையாளம் இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூட ஒரு தயக்கம் இருக்கிறது. பயம் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் நம்புவதை இந்த மக்கள் நம்புவார்கள் என்ற ஒரு நம்பிக்கை ஒரு புறமும், இந்த அடையாளங்களை மதத்தோடு இவர்கள் அடையாளப்படுத்தியதால் மதங்கள் இவைகளைக் கட்டி காத்துவிடுமோ என்ற பயம் ஒருபுறமும் இவர்களை ஆட்டுவிக்கிறது. 

      ஒரு பெரியாரிச ஆசிரியை கூறினார் பூ, பொட்டு, வளையல், கோலம் போன்றவை தமிழ்ப் பெண்ணின் அடையாளம் அல்ல; அவை அடிமைச் சின்னங்கள் என்று. இவை தமிழ்ப் பெண்ணின் அடையாளம் இல்லை என்றால் யாருடைய அடையாளம்? நான் கண்ட வரையில் இவையனைத்தும் தமிழகத்திலுள்ளோர் மட்டுமே கொண்டிருக்கும் அடையாளங்களாகத்தான் தெரிகிறது. அந்த ஆசிரியை இந்த அடையாளங்களைத் துறந்திருந்தார். அவைகளை மத அடையாளங்களாக மட்டுமே அவர் காண்பதாகப் புலப்பட்டது. எனக்கென்னவோ இந்த அடையாளங்கள் தமிழின அடையாளமாகவே தெரிகிறது.

      நமது பழக்கவழக்கங்கள் அனைத்துமே மூடநம்பிக்கையல்ல என்பது என் வாதமல்ல. நம்முடைய பழக்கவழக்கங்கள் பலவும் சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்தவையே என்பது என் கருத்து. மஞ்சள் ஒரு கிருமி நாசினி. ஆண்களைவிட பலவிதத்திலும் அதிக உழைப்பைக் கொண்டிருந்தது பெண்ணாகத்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஆண்களைவிட பெண்களுக்கே திட்டமிடலும், குடும்பத்தைக் காக்கும் போராட்ட குணமும் அதிகம் இருந்திருக்கும். இவர்களது ஆரோக்கியம் என்பது மிக முக்கியமாய் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது இவர்களது உடலமைப்பு, பருவ மாற்றங்கள் போன்றவை இவர்களது உடல் நலனை பாதிக்காமல் இருக்க இந்த மஞ்சள் மிகவும் உறுதுணையாய் இருந்திருக்கும். இன்று மஞ்சளில்லாததால் அவர்கள் உடல் நலனில் ஏற்பட்ட சீர்கேட்டை மருத்துவரும் மகளிருமே அறிவர்.

      இந்த மஞ்சள் நிறம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் கோபமாகவோ அல்லது மனவருத்தத்தோடோ இருக்கும்பொழுது இந்த மஞ்சள் நிறத்தை உங்கள் மனக்கண்களில் கண்டு பாருங்கள். உங்கள் மனம் அமைதியடையத் துவங்கும். இதனால்தானோ என்னவோ மஞ்சள் பூசிய பெண்களைக் கண்டபோது மனம் சாந்தியுடன் இருக்கிறது. அவர்களை மரியாதையுடன் காணத் தோன்றுகிறது. மஞ்சள் அவர்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கவசமே!

      இன்று மகளிருக்கான சோப்பு, முகப்பூச்சு போன்றவற்றின் விளம்பரங்களில் மஞ்சள் மகிமை பாடப்படுகின்றது. ஆனால் எத்தனை பேர் இந்த மஞ்சளைத்தானே நமது முன்னோர்கள் சாதாரணமாக உபயோகித்து வந்தனர். இன்று இப்படி ஒரு வடிவத்தில் அதிக விலை கொடுத்து உபயோகிப்பது எவ்வகையில் சரியானது. மஞ்சள் பூசும் வழக்கத்தை அநாகரீகமாகக் கருதி விட்டொழித்து விட்டோமே என்று சிந்தித்தவர்கள் எத்தனை பேர்? நிச்சயம் எண்ணக்கூடிய அளவில் இருந்தால் அது வருந்தத்தக்க ஒன்றே!

      நமது கருத்து கந்தசாமி காக்காய்க்குச் சோறு வைப்பதை மிகவும் நக்கலடித்திருப்பார். அதைக் கண்டு வயிறு வலிக்கச் சிரித்து நம்முடைய பழக்க வழக்கத்தை கேவலமாகப் பேசி சந்தோஷப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். நமது மக்களுக்கு தான் சார்ந்த இனத்தை, மதத்தை கிண்டல் செய்தால் உச்சி குளிர்ந்து போகும் குணம் மூளை மழுங்கியதால் ஏற்பட்டிருக்கும். நான் இந்தக்காட்சியை கண்டபோது எனக்குக் கோபம் வந்தது. ஆனால் சரியான விளக்கம் என்னிடமில்லை.

      சமீபத்தில் சேலத்தில் நண்பர் பியூஸ் மனீஷ் அவர்களின் கூட்டுறவு வனத்திற்குச் சென்ற போது இதற்கான விடை கிடைத்தது. அது எந்த அளவுக்குச் சரி என்று தெரியவில்லை. அங்கு அவர்கள் வறண்ட தரிசு நிலத்தை சோலையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். முதலில் பள்ளத்தாக்கில் இருந்து அந்த முயற்சியை புத்திசாலித்தனமாக ஆரம்பித்து இருந்தார்கள். மிக அருமையான சூழல். அங்கிருந்த நண்பர் எங்களுக்கு அந்த இடத்தைச் சுற்றிக்காட்டி விளக்கி வரும்போது சொன்னார்; நிறைய பழ மரங்களை நட்டிருப்பதாகவும், அதனால் பறவைகள் நிறைய வரும்; அவைகள் மூலமாக விதைகள் பரவி நிறைய மரங்கள் முளைக்கும். இது விதையை நட்டு செடியாக்கி, பின் இடம் தேர்வு செய்து நடுவதை விட சுலபமானது. அவ்வாறு முளைப்பவை வலிமையானவையும் கூட என்று. இயற்கையாக பறவைகளால் பரவும் தாவரங்கள் நல்ல விதமாக வளரும். பெரிய தரிசு நிலத்தை சோலையாக்கும் முயற்சி சுலபமாக நிறைவேறும் என்றும் கூறினார்.

      காக்கைக்குச் சோறு வைக்கும் பலபேரும் காய், பழங்களைச் சேர்த்து வைக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் எள்ளைச் சேர்த்து வைப்பார்கள். எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் சமையலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உகந்தது. இந்த எள் பரவுவதற்காகவும் செய்திருக்கலாம். மேலும் காக்கை ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்களின் பழங்களை அதிக அளவில் உண்ணும். தன் இருப்பிடத்திற்கு அருகில் இம்மரங்களை வளர்க்க காக்கைகளை ஈர்க்கக்கூட இந்த யுக்தி கையாளப்பட்டிருக்கலாம்.

      காக்கைக்கு உணவு வைத்தால் முன்னோர்களுக்கு உணவிட்டது போல என்று சொல்வார்கள். நிச்சயம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்தானே; இயற்கையை விரும்பிய அவன் செயல் இதன் மூலம் தொடரும் என்றால் அவன் ஆசி கிடைக்கும்தானே! இது ஒரு யூகம்தான். இதுதான் உண்மை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இதில் வாய்ப்பு அதிகம் இருக்கிறதே! மேலும் நம் முன்னோர் வரும் சந்ததிக்கு நல்ல இயற்கை வளத்தை விட்டுச் செல்லவே விரும்பினர். நிச்சயம் அவர்களது நோக்கம் இவ்வாறிருக்க வாய்ப்புண்டு என என் மனம் உறுதியாகக் கூறுகிறது. தர்க்கம் மூலமோ, அறிவியல் மூலமாகவோ இதை விவாதிக்க நான் தயாரில்லை. யாரும் இதை மறுத்தோ அல்லது வேறு ஒரு நல்ல சிந்தனையை வைத்துக் காரணம் கூறினால் உண்மையை நோக்கி என் மனதை நகர்த்த நான் தயார். வெறும் புரட்டான ஒரு வாதத்தைக் கேட்க நான் தயாரில்லை.

      சரி இவையனைத்திற்கும் நான் சொன்ன இரண்டு காரணங்கள் மட்டும்தானா? நிச்சயம் இல்லை. குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கு இருந்த மரியாதை இல்லாமல் போனதே காரணம். ஒருகுடும்பம் அல்லது சமூகப் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் பெண்களுக்கு இருக்கும் பக்குவமும் திட்டமிடலும் ஆண்களுக்கு இருக்குமா என்பது ஐயமே! பெண் புத்தி பின் புத்தி என்பதை பின்னால் வருவதை அறிந்து திட்டமிடக் கூடியவள் என்றே நான் எண்ணுகின்றேன். இந்த திட்டமிடல் செயல்பாடுகள் என அனைத்திலிருந்தும் பெண் விலக்கி வைக்கப்பட்டதுதான் நமது கலாசாரத்தின் பேரிழப்புக்குக் மிக முக்கியமான காரணம் என நான் கருதுகிறேன்.

      இப்பொழுது பெண்கள் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்களே! படித்தவர்களாக இருக்கிறார்களே! சுய சம்பாத்யம் உள்ளவர்களாக இருக்கிறார்களே! இப்படி பல இருந்தாலும் அவர்கள் அவர்களது உண்மையான பண்பாடு கலாசாரம் அறியாதவர்களாகவும், அதற்கான முனைப்பு இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் உண்மையை உணர்ந்து விட்டால் மீண்டும் கலாசாரத்தை மீட்டெடுக்கும் சக்தி அவர்களுக்கு மட்டுமே உண்டு.  இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
     
      எப்படி எனக்கு இந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆங்காங்கே சில பெண்கள் சுய தேடுதலை நோக்கி நகர்கிறார்கள். தங்கள் மூதாதையர் பழக்க வழக்கங்களை அறிந்து பின்பற்ற முயல்கின்றனர். உணவினைப் பொறுத்தவரை தங்கள் பண்டைய முறைக்கு மாற முயற்சிக்கின்றனர். கிராமங்களில் இன்னும் உயிர்த்துக் கொண்டுதானிருக்கிறது. ஜீன்ஸ் போட்டிருந்தாலும் உள்ளுக்குள்  தமிழுணர்வு துடித்துக் கொண்டுதானிருக்கிறது.

      ஏன் ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகமாகியிருக்கிறது என்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனால் பெண்களுக்குள் ஏற்படும் ஓர் உத்வேகம் மட்டுமே மிக அதீத வளர்ச்சியைக் கண்டடையும். எனது ஆசை பெண்களை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டிப் போட வேண்டும் என்பதல்ல. இந்த தமிழகத்தின் உயரிய கலாசாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ரட்சகர்களாக அவர்களை நான் காண்கிறேன். அவர்கள் தங்கள் இனத்தின் உண்மைக் கலாசாரத்தை உணர்ந்து தங்கள் சந்ததிக்கு கொண்டு சேர்க்க வேண்டும், அவர்களால் மட்டுமே முடியும் என எண்ணுகின்றேன்.

      அந்த நாள் விரைவில் மலரும் என்ற நம்பிக்கை எனக்குள் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ் மணம் வீசும், அதன் சுகந்தம் எண்திசையும் மணக்கும்   ! பரதக் கண்டத்தின் பெருமையை இந்த தமிழின் சுகந்தமே கொண்டு சேர்க்கும் !
 இந்த நம்பிக்கையோடு பழம்பெருமை மீட்டெடுத்த புதிய தமிழ்மகளை வரவேற்க நான் தயாராகிறேன்.

      மஞ்சள் முகமே வருக - எம்
            மாசறு பொன்னே வருக !
      மங்கல விளக்கே வருக - நன்
            மங்கலம் தன்னைத் தருக !
      குங்குமம் தரித்தே வருக - எம்
            குலம் காக்க வருக !
      வாசனை மலரணிந்தே வருக - வரும்
            துயரனைத்தும் விலக !
      மாக்கோலமிட வருக - மங்காப்
            புகழ் விளங்க வருக !
      தமிழ்த் தாயே வருக - தமிழ்க்

            குலம் தழைக்க அருள்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக