திங்கள், 25 ஆகஸ்ட், 2014

”குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
          என்ன ஒரு அற்புதமான பொன்மொழி. தமிழ் மிக்க வளமையானது இவ்வாறான அறிவு செறிந்த பொன்மொழிகளை உடையதாலும் கூட. தமிழன் எவ்வளவு அணுவணுவாக வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்திருந்தால் இவ்வாறாக தன் அனுபவங்களை ஒரு சிறிய வாக்கியத்தில் எளிமையாகக் கூறிச் சென்றிருப்பான். என் முற்பாட்டனை நினைக்கையில் எனக்கு மிகுந்த கர்வம் ஏற்படுகிறது; மிகப் பெரிய பாரம்பர்யத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள.

      சரி எடுத்துக் கொண்ட விஷயத்திற்குள் நுழைவோம். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. ஆனால் குற்றம் ஏற்படுகையில் அதைக் காணாமல் இருக்க இயலுமா? நடைமுறைச் சாத்தியமா என்று நோக்கினால் நிச்சயம் அது சாத்தியமில்லை என்றே நம்மில் ஒவ்வொருவரும் கூறுவோம். இன்று நம் வாழ்க்கையில் நாம் குற்றம் காணாத, சொல்லாத நபரோ, செயலோ இருக்குமென்று எண்ணவும் இயலாது. அப்படிச் சொல்லாத நபர் ஒருவர் உண்டென்று சொன்னால் அது உலக அதிசயமாகத்தான் இருக்க முடியும்.

      சாதாரணமாக நண்பரைக் குறை சொல்வதில் தொடங்கி, பக்கத்து வீட்டுக்காரர், கவுன்சிலர், எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம், சட்டம் அப்பப்பா எழுதத் தொடங்கினால் பட்டியல் பலப்பல நீளும். ஆனால் இப்படிக் குற்றம் சொல்லும் எவரும் இந்தக் குற்றத்தில் தன் பங்கு எனப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!

      இதில் சிலர் நைச்சியமாக குற்றத்தை மற்றவர் மனது நோகாமல் சுட்டிக்காட்டுவர். சிலர் மனதில் பட்டதை நேர்மையாகக் கூறுகிறேன் என்று முகத்தில் காறி உமிழ்ந்து அறைவது போலக் கூறுவர். இதில் சில நேரம் இப்படிக் கூறுபவர்களுக்கென்று ஒரு நண்பர் வட்டம் இருக்கும். அவர்கள் இதனை இவர் மிகவும் நல்லவர்; மனதில் பட்டதைப் பட்டென்று கூறிவிடுவார்;என்று சான்றிதழ் அளிப்பர். இந்த சான்றிதழை நான் பெற்றிருக்க வேண்டியவன்.     

      பலமுறை எனது வெளிப்படையான பேச்சால் எனது நண்பர் குழாமில் சச்சரவினைச் சந்தித்திருக்கிறேன். எனது நண்பர் ஒருவருடன் நான் உடற்பயிற்சி செய்ய நான் படித்த பள்ளிக்குச் செல்வதுண்டு. இது எனது கல்லூரிப் படிப்பு முடிந்து அருகிலுள்ள கல்லூரியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது. இந்த காலகட்டத்தில் நண்பர் ஒரு பெண்ணோடு காதல் வயப்பட்டுள்ளார். அந்தக்கால கட்டத்தில் இது போன்ற செயல்கள் என்னை அருகிலேயே வைத்துக் கொண்டு செய்தால் கூட உணர்ந்து கொள்ள முடியாத அப்பாவிதான் நான்.

      சிறிது நாட்களுக்குப் பிறகு நண்பர் குழாமில் அந்த நண்பர் தனது காதலையும், தான் அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாயும் தெரிவித்தார். உடனே ஒரு நண்பர் பற்பல காரணங்களைக் கூறி அந்தத் திருமணம் சரிவராது எனக் கூறினார். ஜாதியைக் காரணமாகக் கூறவில்லை; வேறொரு பிரச்சினையைக் கூறினார். ஆனால் இந்த நண்பரோ நான் அவளை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்.அவளில்லையென்றால் நானில்லையென்றார். நான் உடனே இப்படித்தான் நீ பயிற்சிக்குப் போன இடத்தில் ஒரு பெண்ணைக் காதலிப்பதாய்க் கூறினாய். அதற்கு முன் ஒரு பெண்ணைச் சொன்னாய். இப்பொழுது இந்தப் பெண்? எதுடா உண்மைக்காதல் எனக் கேட்டுவிட்டேன்.

      உண்மைதான். ஆனால் உணர்ச்சியில் மூழ்கியிருக்கும் ஒருவரின் முகத்திற்கு நேராகக் கேட்டிருக்கக் கூடாது என மற்றொரு நண்பர் என்னிடம் கூறினார். இந்த உண்மையான விமர்சனம் பின்னாளில் என்னைச் சிறிது மாற்றிக் கொள்ள உதவியது. பின்னர் திருப்பூரில் இருந்து சென்னைக்குச் சென்றபின்பும், மீண்டும் திருப்பூருக்குத் திரும்பி சொந்தமாகத் தொழில் தொடங்கியபிறகு எனது சகோதரனாக இருந்து எனக்கு உதவிய ஒருவர் இதே விமர்சனத்தை என் முன்வைத்தார். நீங்கள் உண்மையை பலநேரங்களில் உடனே சொல்லிவிடுகிறீர்கள். அது தொழிலில் சரியாக இருக்காது என்று அறிவுறுத்தினார்.

      ஐயா, உண்மையையே நாம் மற்றவர்களுக்குச் சொல்கிறபோது அந்தக் குற்றம் பார்க்கும் தன்மை மற்றவர்களை வாட்டிவிடும். அது தொடர்ச்சியாக நடக்க வேண்டிய நல்ல செயல்களுக்கு இக்கட்டாய் அமைந்து விடும் என்கிற பொழுது மனதில் பட்டதையெல்லாம் பேசினால். இப்படியும் சில பேருக்கு அமைந்துவிடும். நண்பர்கள் சரியான விமர்சனம் செய்யாமல் போனால் நான் பேசுவதெல்லாம் சரியென்ற நினைப்பில் என் மனதில் பட்டதையெல்லாம் உண்மை என்று நம்பி அடுத்தவர் மேல் குற்றங்களைச் சொல்லும் வியாதி எனக்கு வந்திருக்கும்.

      இன்றளவும் முழுதாய் குற்றம் சொல்லும் வழக்கத்திலிருந்து விடுபட்டேனில்லை. ஆனால் அதை நோக்கி என் மனதை செலுத்திக் கொண்டிருக்கின்றேன். சிறிது நாட்களுக்கு முன்பு கூட நண்பர் ஒருவர் கேட்டார். ஜி, சாதாரணமா சொல்லியிருக்கக்கூடிய விஷயத்தைக்கூட என் மேல குற்றம் சொல்ற மாதிரியே சொல்லிட்டீங்களேன்னு? சுரீரென்று இருந்தது. என் மனசாட்சி சொன்னது டேய் இன்னும் நீ நிறைய மாறணும்டான்னு. நண்பர்கிட்டே சொன்னேன். இதைக் குறைக்கணும்னு முயற்சி பண்ணிகிட்டிருக்கேன், இருந்தாலும் அப்பப்ப தப்பு பண்ணிடறேன். இனிமே குற்றம் சொல்லாம இருக்க முழுதாய் முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன். இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் கூட என் குறையை எழுதி அதை என்னிடமிருந்து விலக்கி வைக்கும் ஒரு சிறு முயற்சியே.

      இப்படி விமர்சனம் செய்யாமல் இந்த மனதில் பட்டதை பேசும் பழக்கத்தை உயர்வாகக் கொண்டாடும் நண்பர்கள் இருந்துவிட்டால் தான் பேசுவது எல்லாம் சரியென்ற நினைப்பு எனக்கு ஏற்பட்டிருக்கும். பின்னர் நான் சந்தித்த உண்மை நண்பர்கள் இந்தக் குறையை எனக்குச் சுட்டிக் காட்டியிருந்தால் கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும். எனது அகங்காரம் தூண்டப்பட்டிருக்கும். என்னை விமர்சிப்பவர்களை விரோதிகளாகப் பார்க்க ஆரம்பித்திருப்பேன். தூங்கி எழுந்ததிலிருந்து பார்க்கும் அனைவரையும், குற்றவாளிகளாகவும், அனைத்துச் செயல்களையும் குற்றங்களாகவும் பார்ப்பதும், நான் சரியென்று நினைப்பது நியாயமாகவும், நான் தவறென்று நினைப்பதை அநியாயமாகவும் உணர்ந்திருப்பேன். ஜால்ரா தட்டிய நண்பர்களை நினைத்து எனது நண்பர்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் என்று சொல்லி குற்றம் பார்க்கும் ஒரு கோமாளியாக வலம் வந்திருப்பேன். நல்லவேளை விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும், சுயபரிசோதனை செய்து கொள்ளும் தன்மையைக் கொடுத்த இறைக்கு எனது நன்றி.

      இப்படி எதிர்மறையாக நிகழ்ந்திருந்தால் எனது சுற்றமும் நட்பும் என்பது கேள்விக்குறியாயிருக்கும். ஏதோ ஒரளவு காப்பாற்றிக் கொண்டு வந்திருப்பதை முழுமையாய் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் முழுதாய் என் குறைகளை நீக்க வேண்டும்.
     
       சரி சுற்றம் வேண்டும் என்பதற்காக எந்தக் குறையையும் கூறக்கூடாதா என்ற கேள்வி வரலாம். குறைகளை நிறைகளாக மாற்ற ஆலோசனை தரலாம். குறைகளை குற்றமாக்கக் கூடாது. நாம் முதலில் குறைகளைத் தான் சுட்டிக்காட்டுவதாக ஆரம்பிப்போம். ஆனால் பின்னாளில் குறைகளை குற்றங்களாகக் காட்ட ஆரம்பித்துவிடுவோம். அதைக் குற்றமாகச் சொல்ல ஆரம்பிக்கையில் நமது குரலும் உணர்வும் ஓங்கியிருக்கும். இது அகங்காரம் ஆங்காரமாக மாறும் ஓர் தருணம். இத் தருணத்தில் சுற்றம் சூழல் எதையும் காணாது நாம் ஏதோ தர்மதேவன் போலவும், எதிரிலுள்ள நபர் மிக மோசமான குற்றவாளி போலவும் நடக்கத் தொடங்கி விடுவோம். அந்தக் கூச்சலும், உணர்ச்சி மிக்க வார்த்தைகளும் எதிரிலுள்ள நபருக்கு எவ்வித வேதனையை அளிக்கும் என்ற ஒரு சிறு உணர்வு கூட இல்லாத நபராக நாம் மாறிவிடுவோம். இது கூட பரவாயில்லை. இதனை நம்மிடம் யாராவது சொன்னால் கூட அதிலுள்ள நியாயத்தைப் பாராமல் நம்முடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ள முனைவோம்.

      உதாரணத்திற்கு எனது மனைவியிடம் நான் இப்படி நடந்து கொள்கிறபொழுது உன்னிடமில்லாமல் வேறு யாரிடம் நான் கோபத்தைக் காட்டுவது. நீ என் அன்பிற்கு உரியவள் இல்லையா? நீ புரிந்து கொள்வாய் என்றுதான் உன்மீது கோபப்பட்டு விட்டேன் என்பேன். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற வர்க்கத்தைச் சார்ந்தவள் அவள் என்பதால் குடும்பம் சீராக இருக்கிறது. எனது பலம் அவள்தான். வேறு யாராகவாது இருந்தால் இந்நேரம் குடும்பம் சீரழிந்து போயிருக்கும். சரி மனைவி குழந்தைகள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் சுற்றங்கள் இதனைத் தாங்கிக் கொள்ளுமா? அவர்களிடம் இப்படி நடந்து கொண்டால் சுற்றங்கள் நம் வீட்டு நிகழ்ச்சியில் கடமைக்கு வருவர் மூன்றாம் மனிதர் போல. அப்படி நடந்தால் அப்பொழுதும் அவர்களைக் குற்றம் சொல்வோமே தவிர நம் குற்றம் காணும் பழக்கத்தினால்தான் இப்படி ஒரு நிலை உள்ளது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டோம்.
     
       ஒரு நண்பரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன் இன்னொரு நண்பரோடு. என்னுடன் வந்த நண்பர் நாங்கள் சந்திக்கச் சென்ற நண்பரிடம் என்ன இப்படி செருப்பெல்லாம் கலைச்சி வாசல்ல போட்டிருக்கீங்க; வரிசையா அழகாக வைக்க வேண்டாமா என்று. குழந்தை தனியாகக் கேட்டதாம், உள்ள நுழையும்போதே என்ன குற்றம் சொல்லலாம்னு வருவாங்களாப்பா என? அந்தக் குழந்தையின் உள்ளத்தைத் தாக்கக்கூடிய விதமாக நடந்து கொண்டபின்பு அந்தக் குடும்பத்திடம் ஒரு அந்யோந்யம் எப்படி தொடர்ச்சியாக இருக்கும்.

      நக்கீர பரம்பரை என்று இம்மாதிரி ஆட்களை கிண்டல் செய்வார்கள். பாவம் நக்கீரர் அவர் தமிழில் உள்ள குறைகளைத்தான் வருத்தத்தோடு பதிவு செய்ததாகக் கூறுவார்களே தவிர மனிதனின் குறைகளை குற்றங்களாக கண்டவர் அல்ல.

      இன்றைய சமூகம் குற்றம் காணும் சமூகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. நானும் குற்றம் காண ஆரம்பிக்கிறேன். ஆனால் நானும் அச்சமூகத்தின் ஒரு அங்கமே!
      
     குறைகளைச் தகுந்தவாறு தகுந்த நேரத்தில் சுட்டிக் காட்டினால் அவை நிறைகளாய் மாறிவிடக்கூடும். நல்ல மனிதனை உருவாக்கும் ஒரு சிற்பியாய் நாம் இருப்போம். மாறாக குற்றம் சொன்னால் ஒரு குற்றவாளியை உருவாக்குவோம். அப்படி ஒரு சிற்பியாய் நாமிருப்பது அவசியமா எனச் சிந்தித்தோமானால் குற்றம் பார்க்காத குற்றமில்லாத சமுதாயத்தில் நாமும் ஓர் அங்கமாய் இருப்போம்.


       குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக