வியாழன், 18 ஜூலை, 2013

ஆலமரம்

     ஆலமரம்.,


     குயிலின் குக்கூவையும் மீறி அலறல் சத்தம் கேட்க அலறிப் புடைத்து, படுக்கையை சுருட்டி எழுந்து கொண்டேன். கிராமத்துத் தெருவில் அலறல் சத்தம் கேட்கிறது என்றால் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்று உறுதியாய்ச் சொல்லிவிடலாம். சத்தத்தை கூர்ந்து கவனித்தபொழுது ஆத்தா என்று அலறுவது கேட்க ஒரு கணம் உடல் அதிர்ந்துதான் போனது.
     இங்கு ஆத்தா என்று எல்லாரும் கூப்பிடுவது சேட்டப்பனின் அம்மா ராமாயியைத்தான். சேட்டப்பன் என்ற பெயர் அவரின் நீண்ட கால வட இந்திய வாழ்க்கை கொடுத்த பெயர். சேட்டப்பனின் ஆத்தா மிகுந்த வயதானவள் மட்டுமல்ல நல்ல அனுபவசாலி. பழைய கால நினைவுகளை மிகவும் ரசனையோடு சொல்லக் கூடியவள். இந்தக் கிராமத்தின் ஒவ்வொரு மூலையும் முடுக்கும் ஒவ்வொரு அசைவும் ஆத்தாவுக்கு ஒரு காவியம் போல. அதனை கவிநயத்தோடு எல்லோரோடும் பகிர்ந்துகொண்டது அனைவருக்கும் அவளிடத்தே பிரியத்தை உண்டு பண்ணிவிட்டது.
     பதைப்போடே வாசலுக்கு வந்த நான் விரைந்து ஓடிக் கொண்டிருந்த நடராஜை, ஏன் மாப்ளே, என்னாச்சு என்றேன். ஒண்ணுமில்லேடா ஆத்தா கிழக்கால இருக்கிற கிணத்தில குதிச்சிருச்சிடா, தலையிலே அடிபட்டிருக்கு. ஆசுபத்ரிக்கு எடுத்திட்டு போறாங்க. உசிரு இருக்காடா மாப்ளே, இது நான். அதெல்லாம் இருக்கு சிவா, சீக்கிரம் கொண்டு போய்ச் சேத்தா பொழைச்சிடும்.
     வடக்கால இருக்கிற முருகசாமி அண்ணன் காரில ஆத்தாவைத் தூக்கி போட்டுக்கிட்ட்டு ஆசுபத்திரிக்கு பறந்துட்டாங்க. மனசு முழுக்க பதட்டமும் கேள்விக்கணைகளும். ஆத்தா ரொம்ப விவராமாச்சே, ஏன் கிணத்துக்குள்ளே குதிச்சிச்சு. யாரிடமாவது பதில் இருக்கும். பதில் கிடைக்கும் வரை மனசு அடங்காமல் குதித்துக் கொண்டேயிருக்கும்.
    
     பக்கத்திலிருந்த வேம்பிலிருந்து ஒரு குச்சியை உடைத்து பல்லைத் துலக்க ஆரம்பித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். மெதுவாக தெக்குத்தோட்டத்தை நெருங்கியபோது வேலுச்சாமி அண்ணன் மாட்டைதொழுவத்திலிருந்து மாற்றிக் கொண்டிருந்தார். அண்ணே, ஆத்தாவுக்கு என்னாச்சுண்ணே? ஏன் இப்படி பண்ணிருச்சி? விடை தெரிந்து கொள்ளும் ஆவலோடு கேள்விகளை வேகமாகவே வீசினேன். எப்ப வந்தீங்க தம்பி ஊர்லேர்ந்து என்றார் வேலுச்சாமி. விடியாலதாண்ணே வந்தேன் என்றேன் பொறுமையில்லாமல். அதான் விஷயம் தெரியல போல என பொடி வைத்துப் பேசினார்.
     வடக்குத் தெரு முருகசாமியும், கொமாரும் கிழக்கால பிள்ளையார் கோவிலை எடுத்துக் கட்டணும்னு பேசிட்டிருந்தாங்கில்ல, அதுக்கு பூமி பூசை போட்டாங்க. கோயிலை நல்லா பெரிசா கட்டணும், ஆலமரத்தை வெட்டிடலாம்னாங்க. யாருக்கும் மனசில்லே. ஆத்தா ரொம்பவே மனசொடிஞ்சி போச்சி, டேய் வாணாங்கடா, நம்ம பிள்ளையார் சாமி மரத்திலதாண்டா இருக்காரு, ரொம்ப காலமா நாம இந்த கல்லையும் மரத்தையும்தாண்டா சாமியா கும்பிடறோம். சாமியையே வெட்டணும்கிறீங்களேடான்னு அரற்றிக்கிட்டே இருந்த்துச்சி.
     ஏழை சொல் அம்பலம் ஏறுமா? புதுப் பணக்காரங்க, டைல்ஸ் போட்டு கோவில் கட்டணும்கிறாங்க,கோவிலா, கக்கூஸான்னு வெளங்கல தம்பி, கோவில்ல போய் டைல்ஸெல்லாம் ஒட்டிக்கிட்டு. கடைசியில நேத்து மரத்தை வெட்டிப் போட்டாங்க, ஆத்தா துடிச்சிப் போயிடுச்சி. புலம்பிக்கிட்டே இருந்துச்சு தம்பி, வெள்ளென ஆட்டை ஓட்டிக்கிட்டு போச்சி, இப்படி கிணத்துல குதிக்கும்னு யாருக்கும் தெரியல. 

     உண்மையில் எனக்கு விளங்கவில்லை. படிக்காத இந்த ஆத்தாவுக்கு இருக்கும் ஒரு விவரம், படித்தவர்களுக்கு இல்லையே. மரங்கள் வெட்டப்படக் கூடாதென்பதற்காகத்தானே அங்கே கல்லை நட்டி சாமி மரத்தில் குடியிருப்பதாகச் சொல்லி, மரத்தின் கிளையைக் கூட உடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். இறைவன் படைத்த இயற்கை ஒவ்வொன்றிலும் அவன் உறைந்திருப்பதை உணராமல்,அதை சிதைக்க நாம் முயல்வதேன். மரத்தை வெட்டியபின்பு அவ்விடத்தில் இறையம்சம் எப்படி இருக்கும்? அவன் படைத்ததை அழித்தபின்பு அவனருள் பெருவது எப்படி?
    
     என் கால்கள் என்னையறியாமல் கிழக்காக பிள்ளையார் கோயிலை நோக்கி நடை போட்டது. பெரிதும் பரந்து பல்லுயிர்க்கும் இடமளித்து அரவணைத்து கொண்டிருந்த அந்தப் பெரிய ஆலமரம் அண்ணாந்து சாய்ந்திருந்தது. அதன் கிளைகள் துண்டிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த்தது. ஆத்தாவும் ஆலமரமும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவை. எத்தனையோ காலமாய் எங்கள் சேர்வராயன்பாளையம் கிராமத்தை நிதானமாய் கவனித்து வந்தவை. இன்று ஒன்று அடிபட்டது தாங்காமல் மற்றொன்று தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. என் கண்ணில் தானாக கண்ணீர் பெருகியது ஆச்சர்யமாக இருந்தது.
     இரண்டு நாளில் ஆத்தா வீடு திரும்பியிருந்தாள். அனைவரும் அவளை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என் கண்களும் அவளை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டு கொள்ளுவாள், பழங்கதையை அசைபோடுவாள் என்று மிகவும் ஆசையோடு இருந்தேன்.என் ஆசையை தவிடுபொடியாக்கியது கௌரியக்காவின் குரல். ஆத்தாவுக்கு தலையில அடிபட்டதில சித்தம் கலங்கிடுச்சாம், இனிமே போறமட்டும் இப்படியேதானாம், வார்த்தைகள் இடியாய் இறங்கியது என்னுள்.
     சேட்டப்பன் வட இந்திய முதலாளியின் கம்பெனியில்தான் வேலை பார்த்து வந்தார். நடந்த செய்திகளைக் கேட்டு அவர் அந்த இடத்தை பார்வையிட்டு கிராமத்தாரிடம் அந்த மரத்தை தான் கொண்டு செல்ல அனுமதி கேட்டார். கிராமத்தின் உதவியோடு அருகிலிருந்த தன் தொழிற்சாலை வளாகத்தில் மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த ஆலமரத்தை நட்டுவிட்டார்.   

    வெகுவேகமாக கோயில் வேலை நடந்து கிரானைட், டைல்ஸ் என்று நவீனப்படுத்தப்பட்ட பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகம். முணுமுணுத்தவாறே உலவிக்கொண்டிருந்த ஆத்தா பைத்தியமெனப்பட்டாள், உபயதாரர்களால். பிள்ளையாருக்கும் ஆத்தாவுக்கும் மட்டுமே தெரியும் பைத்தியக்காரர்கள் யாரென்று.
     ஆல் போல்தழைத்து வாழ் என வாழ்த்தும் நாட்டில் ஆலையே வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். இயல்பிலிருந்து மாறிப் போன வாழ்க்கைமுறை மீண்டும் திரும்ப வாய்ப்பிருக்குமா? இந்திய பாரம்பரிய இயல்பு திரும்ப வாய்க்குமா எனப் பலப்பல சிந்தனைகள். ஏம்பா அன்னதானம் ஆரம்பிச்சிடுச்சி சாப்டப் போலாம் வாங்க என்ற குரல் என் சிந்தனையைக் கலைத்தது.

     இயற்கையை அழிக்க ஆரம்பித்துவிட்டோமே, நம் சந்ததிக்கு உணவுவாய்ப்பு எப்படி?  அதை சிறிதும் உணராமல் எல்லோரும் அன்னதானத்தில் உண்ண சென்று கொண்டிருக்கிறார்களே? உண்ண விருப்பமில்லாமல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். தொழிற்சாலை வரை சென்றுவிட்டேன் என்னையறியாமல், உள்ளே நடப்பட்டிருந்த ஆலமரம் துளிர்விட ஆரம்பித்திருந்தது. இனி எனக்கு பிள்ளையார் கோயில் இந்த தொழிற்சாலை ஆலமரம்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக