புதன், 6 மார்ச், 2013

மகளிர் தினம் ஒரு பார்வை



மார்ச் – 8 மகளிர் தினம்.

ஒரு ஆண் கல்வியறிவு பெற்றால் அது ஒரு ஆணுக்கு மட்டுமே மாற்றப்படும்.ஒரு பெண்ணிற்கு கல்வியறிவு கிடைக்கப்பெற்றால் அது ஒரு சந்ததியையே மாற்றிவிடும்.
     ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்கென ஒதுக்கப்பட்டு அன்று மட்டுமே அதனை உணர்வதும் அதன்பின் அதனை மறப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இவற்றில் நிறைய நிகழ்ச்சிகள் அரசாலும், சமூக நிறுவனங்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்திலும் மிகச் சிறந்த அறிவாளிகள் உரையாற்றுகிறார்கள். அருமையான் உரைகள். நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள், இவையெல்லாம் நடந்துவிட்டால் நமது தேசமும் உலக சமுதாயமும் எவ்வளவோ முன்னேறிவிடுமே என்று. ஆயின் நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன?
     சூடாகச் சாப்பிட்ட வடையின் சுவை நம் நாவிலும், எண்ணத்திலும் நிற்கும் நேரம் கூட இந்த உரைகளின் தாக்கம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.
     வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம். இப்பொழுதே களைகட்டிவிட்டது. பல்வேறு சமூக அமைப்புகளும் விதம்விதமாக நிகழ்ச்சிகளை நடத்தப்போகின்றன. மகளிர் பெருமை பேசப்போகின்றன. சென்ற ஆண்டுகளிலும் இது நடந்ததுதானே? பின்னர் ஏன் வருடம் முழுதும் மகளிர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மகளிரை ஒரு நாள் மட்டுமே மதித்தால் போதுமா?
     இந்த தேசம் மகளிரை மதித்து வந்த தேசம்தானே. இந்த நாட்டினை, புண்ணிய நதிகளை பெண்ணின் அம்சமாகக் கண்டு வந்த சமூகம்தானே? அன்றில்லாத அளவுக்கு இன்றைக்கு மட்டும் ஏனிந்த நிலை.
     பெண்ணினை காமம் கொண்டு நோக்காத ஆண்மகன் எந்தவொரு நாளிலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அது இயற்கை. ஆயினும் அதனையும் தாண்டி ஒரு கட்டுப்பாடோடுதானே இந்த சமுதாயம் வாழ்ந்து வந்தது? இன்று மட்டும் ஏன் அந்த கட்டுப்பாடு இல்லாமல் போனது. வயது வித்தியாசமே இல்லாமல் குழந்தையோ, மூதாட்டியோ காமம் கொண்டு நோக்கும் காமக்கொடூரன்கள் மிகுந்து போயினரே ஏன்?
     எங்கெங்கு காணினும் பெண்ணை காமக் கண்ணோடு சித்தரிக்கும் காட்சிகளே நிறைந்து கிடக்கின்றன். அது எந்த பொருளாயினும் அதன் அருகில் காம உணர்ச்சியினை தூண்டும் விதத்தில் ஒரு பெண்ணின் படம் இருந்தால் மட்டுமே அந்த பொருள் விற்கும் என்ற எண்ணம் பொருளை விற்பவனுக்கும், வாங்குபவனுக்கும், விளம்பரம் தயாரிப்பவனுக்கும் எப்படி உருவானது. வாங்குபவன் பொருளின் தேவையையோ, தரத்தினையோ கருத்தில் கொள்ளாமல் விளம்பரத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு பொருளினை நுகரும் நிலைக்கு வந்தது ஏன்?

     இந்த விளம்பரங்களை கணவனோடு உட்கார்ந்து தொலைக்காட்சியில் காணும் பெண்ணுக்கும் இந்த விஷயம் எந்தவித உறுத்தலையும் உண்டாக்காதது ஏன்? அது மட்டுமா, சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் ஒரு கேள்வியினை முன்வைத்திருந்தார். உங்கள் இல்லங்களில் கொலைகாரர்களையும், மற்ற குற்றவாளிகளையும் அனுமதிப்பீர்களா என்று. இல்லையென்ற பதிலை யாரும் கூறியிருந்தால் அனைவரும் முட்டாள்களே. தொலைக்காட்சித் தொடர்களில் எத்தனை விதமான குற்றவாளிகள், அத்தனை பேரையும் நம் இல்லங்களில் அனுமதிப்பதோடு அவர்கள் பேச்சுகளையும் அல்லவா கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
     இதனை நாம் உணர்ந்திருக்கிறோமா, உணர்த்தப்படும்போது அதிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்கிறோமா? இதில் பெண்களை எப்படியெல்லாம் கொடுமையாக காட்டமுடியுமோ அந்த எல்லையையும் தாண்ட ஒவ்வொரு தயாரிப்பாளரும் போட்டியிடுக் கொண்டுள்ளார்கள். வேதனையான விஷயம் இந்த தொடர்களுக்கெல்லாம் அதிகபட்ச பெண் ரசிகர்கள். தயாரிப்பாளர்கள் சொல்வதோ நடப்பதைத்தானே காட்டுகிறோம் என்று, பார்க்கும் பெண்ணோ மகளிர் அமைப்புகளோ இதனை கண்டு கொள்வதாகத் தெரியவில்லையே?
     இங்கு திருமணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்குமாயென்றிருந்தது. பின்னர் குடும்பம், ஜாதி, மதம் எனப் பல காரணிகள் இதனைத் தீர்மானித்தன.  இன்றைய நிலை என்ன? படிப்பும் படிப்பும், பணமும் பணமும் திருமணம் செய்து கொள்கின்றன. குணம் என்ற ஒன்று எந்த மதிப்புமில்லாமல் போய்விட்டது.
     அதிகம் தொலைக்காட்சி காணும் பழக்கமில்லை எனினும் அதனைச் சில நல்ல விஷயங்களுக்காக மட்டுமாவது வேண்டுமே என வைத்துள்ளேன். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நான் கண்ட ஒரு விளம்பரம். ஒரு லேமினேஷன் தொடர்பானது அது. மனைவி கணவனது வீட்டிற்குள் நுழைகிறாள். உட்புகும்போதே விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டாகிவிட்டதா என்ற கேள்வியோடு. வரவேற்கும் கணவன், என்ன அவசரம் காபி குடிக்கலாமே என்கிற கேள்வியோடு உள்ளே திரும்பிச் செல்கிறார். மனைவியின் கண் அங்கு வீடு புதியதாக மாற்றப்பட்ட்தைக் கண்டு அதிலேயே லயித்துப் போகிறார். இதெல்லாம் எப்போது மாற்றப்பட்ட்து என்று கேட்கிறார். இதோ விவாகரத்துப் பத்திரம் கொண்டு வருகிறேன் என்று செல்கிறார். விவாகரத்து அவசியமா என்ற கேள்வி மனைவியிடமிருந்து. இந்த மாற்றத்தை உண்டாக்கியது அந்த புதிய பொருள்கள்.
      
     இங்கு ஒரு மனித உயிரின் குணநலனும் பண்பினையும் விட இல்லற வாழ்க்கைக்கு பொருளும் பணமும் மட்டுமே முக்கியம் என்ற ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. இதுவா நம் தேசத்துப் பெண்களின் குணம்? இது போற்றப் படவேண்டிய ஒன்றா? இந்த விளம்பரம் கண்டபோது நானும் என் குடும்பத்தினரும் மிகவும் வருந்தினோம். எம் தேசப் பெண்களுக்கு இந்த குணம் இருக்காதே, அவர்கள் பண்பினையும், மாண்பினயும் மதிப்பவர்களாயிற்றே, இப்படி ஒரு சிந்தனையில் ஏன் படம் பிடித்தார்கள் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
தொலைக்காட்சிகளும் தங்களுக்கென்று எந்த ஒரு கோட்பாட்டினையும் கொள்ளாமல் பணம் ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு நிகழ்ச்சிகளை நட்த்திக் கொண்டிருக்கின்றன், அரசுக்கும் இதனைப்பற்றிய எந்தவொரு கோட்பாடுமில்லை.

இச்சிந்தனை சிறிது சிறிதாக நம் அனைவரின் மனதிலும் பல வருடங்களாக பதிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் அருள் சார்ந்த வாழ்க்கையிலிருந்து பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறோம்.
இந்த மண்ணிற்கென்று ஒரு பெருமை உள்ளதென்றால் அதற்கு முழுக்காரணமாக இந்த தேசத்தின் அன்னையரை மட்டுமே காரணம் என நான் உறுதிபடக் கூறுவேன். ஆனால் இன்று பாரத்த்தின் பெரும்பாலான மகளிர் இப்படி பொருள் சார்ந்த வாழ்க்கைக்கல்லவா மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் உயர்ந்த விஷயம், நீங்கள் நினைப்பது போல் அருள் சார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது.
     இந்த சூழலில் வளர்த்தெடுக்கப்படும் ஆண்மகனிடம், மனிதாபிமானத்தினயும், பெண்களிடத்தே அவனுக்கு மாண்பிருக்கும் என்றும்  எப்படி எதிர்பார்க்கமுடியும். எதிர்பார்க்க இந்த சமூகத்திற்கு என்ன தகுதியிருக்கிறது. உடனே குற்றவாளிகளுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக என் மீது பாயாதீர்கள். இங்கு நான் மகளிரை மட்டுமே இதற்கு காரணமாக முன்னிறுத்தவில்லை, ஒட்டுமொத்த சமுதாயமும் இதற்கு உடந்தையென நான் காண்கிறேன்.
     இது மகளிர் தினத்துக்கு மட்டுமல்ல, அன்னையர் தினத்துக்கும், தந்தையர் தினம் அவற்றுக்கும் இதே நிலைதான். நிறைய பேருக்கு அன்றுகூட பெற்றோரை காப்பகத்தில் சென்று காண நேரமிருக்காது.
     அறிஞர்களே, மகளிரே, மகளிர் தினத்தினைக் கொண்டாடும் முன் நாமிருந்த நிலையென்ன, இன்றிருக்கும் நிலை என்ன என்பதை சற்றே சிந்தியுங்கள். பாராட்டும், ஏச்சும் இங்கு முக்கியமல்ல, சிந்தனையும், தகுந்த மாற்றமுமே இன்றைய தேவை. மாற்றத்தினை மற்றவரிடத்தே தேடாதீர்கள், கேட்காதீர்கள். உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள். ஒரு சிந்தனையை கடைபிடிப்பவன் சொல்லும்போதுதான் அந்த சொல்லில் ஆன்ம பலம் இருக்கும், அப்பொழுதுதான் அது சமுதாயத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
     பெண்கள் இந்த தேசத்தின் கண்கள் என்பது சத்தியம், அந்த கண்கள் சமூகத்தில் நடக்கும் நன்மை தீமைகளை கண்டறிந்து தன் சந்ததிக்கு சரியானதைக் கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த தேசம் தன் இழந்த பெருமையை அடையமுடியும். மேற்கத்திய சிந்தனையால் கட்டப்பட்டிருக்கும் எம் தேசப் பெண்களின் கண்களின் திறக்க எந்த ஆணுக்கும் சக்தியில்லை, அதை அவர்களேதான் கழற்றியெறிய வேண்டும். ஏனெனில் இது வலிந்து கட்டப்பட்டல்ல கட்டல்ல, நயவஞ்சகமாய் கட்டப்பட்டது, தொடர்ந்து இறுக்கப்பட்டும் வருகிறது. எல்லாம்வல்ல ஆதிசக்தி எம் தேசப்பெண்களுக்கு தடைகளை உடைத்தெறியும் சக்தியினை அளிப்பாள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

6 கருத்துகள்:

  1. அருமை!!

    ///மேற்கத்திய சிந்தனையால் கட்டப்பட்டிருக்கும் எம் தேசப் பெண்களின் கண்களின் திறக்க எந்த ஆணுக்கும் சக்தியில்லை, அதை அவர்களேதான் கழற்றியெறிய வேண்டும். ஏனெனில் இது வலிந்து கட்டப்பட்டல்ல கட்டல்ல, நயவஞ்சகமாய் கட்டப்பட்டது, தொடர்ந்து இறுக்கப்பட்டும் வருகிறது. /// உண்மை!!

    பதிலளிநீக்கு
  2. புறப் பொருள் சார்ந்தும் பயன்பாடு சார்ந்தும், நுகர்வு மட்டுமே உன்னதமாக நிலை நிறுத்திக்கொள்ள விரும்பும் சமூகத்தின் மன நிலை இப்படித்தான் இருக்கும். பாரம்பரிய இந்திய மனம் இதிலிருந்து முன்னேறி சென்று கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை, ஆனால் பெரும்பான்மை சமூகம் நுகர்வினைச் சார்ந்தே சென்று கொண்டிருக்கின்றது.பாரம்பரிய இந்திய சிந்தனையுடையோர் பெரும்பான்மையானால் அது நமது தேசத்துக்கு மிகப் பெரும் பலம்தானே?

      நீக்கு
  3. அருமை நண்பரே.
    உங்கள் கட்டுரை தினமணி இணைய தளத்தில், வலைப்பூக்கள் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
    அதன் இணைப்பு: http://dinamani.com/blogs/article1492338.ece

    -வமுமுரளி

    பதிலளிநீக்கு