செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

மதுவும் வன்முறையும்

மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு,

வணக்கம். நாளைய தலைமுறையை அதன் தரத்தை வாழ்வியலை அது பதியப்போகும் வரலாற்றைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள். உங்களில் ஒருவனாக உங்கள் மாணவப் பருவத்தை கடந்து வந்த உங்கள் சகோதரனாக உங்கள் முன் என் கருத்தை வைக்கிறேன்.

மாணவ சமுதாயம் போராட்டக் களங்களில் இறங்குவது ஒன்றும் புதிதல்ல; மொழிப்போராட்ட காலம் முதல் மாணவ சமூகம் பல்வேறு போராட்ட களங்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு போராட்ட களமும் வரும் இளைய தலைமுறைக்கு கொடுத்து சென்ற செய்தி என்ன? மாணவ சமுதாயமே, இந்த போராட்ட களங்களைக் கண்ட உங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களை சந்தித்திருக்கிறீர்களா? அவர்களின் போராட்ட விளைவுகளைச் சிந்தித்திருக்கிறீர்களா?

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைக்கு எதிராக இன்று நடத்திய போராட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைத்து சமூக ஊடக வாயிலாகவும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தக் காட்சியை நானும் கண்டேன். திரளாக ஓடிச் சென்ற மாணவர்கள் மதுக்கடை மீது கல்வீசித் தாக்குதலைத் தொடங்க,  இருந்த ஓரிரு காவலர்கள் அந்த மதுக்கடையின் கதவை அடைக்க முனைகிறார்கள். அவர்களை தள்ளிவிட்ட மாணவர்கள் மதுக்கடையின் மீது தொடர் தாக்குதலைச் செய்கிறார்கள்.

தள்ளிவிடப்பட்ட காவலர்கள் நழுவிச் சென்ற சிறிது நேரத்திற்குள் காவலர் படை தாக்குதலை மாணவர்கள் மீது நடத்துகிறது. கட்டுப்படுத்த நினைக்கும் ஓரிரு மாணவர்களின் குரல் பெருங்கூட்டத்தின் முன்னே தேய்ந்து காணாமல் போகிறது. அவர்களுக்கும் காவலரின் தடியடி மரியாதை கிடைக்கிறது. காவலரின் தடியடி ஆரம்பித்த சில விநாடிகளில் மாணவர் கூட்டம் நெல்லிக்காய் மூட்டையென சிதறி ஓடிவிட்டது.அடி வாங்கிய மாணவர்களையும், கல்லெறிக்குப் பயந்து பின்னர் எதிர்தாக்குதலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்களையும் என்னால் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை.

உங்களில் எத்துணை பேர் காந்தியின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட காட்சிகளைக் கண்டிருக்கிறீர்கள். காந்தி என்ற திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகளாவது நினைவிருக்கிறதா? அதற்கும் உங்கள் போராட்ட முறைக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்று யோசியுங்கள். அங்கு வன்முறை என்ற ஆயுதத்தை போராடியவர்கள் என்றும் ஏந்தியதில்லை. எதிர்பட்ட வன்முறையைக் கண்டு ஓடியதுமில்லை. மனவலிமையோடு எதிர்கொண்டார்கள்.

மதுவோ விஷமோ அது அரசாங்கத்தின் சொத்து; அரசாங்கம் என்பது நாம்தான் எனில் அது நமது சொத்துதான். நமது என்றால் அது பொதுச் சொத்தே ஒழிய தனிப்பட்ட நபருக்கானது அல்ல. அதைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது;காவல்துறைக்கும் இருக்கிறது. நாம் அதைக் காக்கத் தவறும்போது நம்மைக் கண்டிக்கிற தண்டிக்கிற உரிமையை நாம்தான் அவர்களுக்கு அளித்துள்ளோம். நாமே நமது சட்டத்தை மீறுவதும், அதைக் காக்க நம்மால் நியமிக்கப்பட்டவர்களை தூற்றுவதும் சரியானதா? இப்படி வழி காட்டுபவர்களை எப்படி சரியானவர்களாகக் கொள்ள முடியும்?

நான் இப்படிக்கேட்பது ஆச்சர்யமாக இருக்கலாம்; சமூக ஊடகங்களில் உங்கள் செயல் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கையில் நான் இப்படி.  ”மாணவர்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள் இனி அரசுக்கு வேறு வழியில்லை” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். அதைப் படித்தவுடன் நான் நினைத்தது இவரது மகனையோ மகளையோ காவல்துறையிடம் அடி வாங்கக்கூடிய போராட்டத்துக்கு அனுமதிப்பாரா என்றுதான். இல்லை இவர்தான் அப்படி ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வாரா? அடுத்தவன் வீட்டுப் பிள்ளைதானே என்ற ஒரு அலட்சிய எண்ணம்தானே இவர்களை இப்படி பொறுப்பில்லாமல் சமூக ஊடகங்களில் எழுத வைக்கிறது.

பேடிகளாய் சமூக வலைத்தளங்களில் பொங்குபவர்களை நம்பி நீங்கள் வன்முறைக்களம் காணாதீர்கள். தங்கள் இயலாமையை கொட்டித் தீர்த்துக் கொள்கிறவர்கள் அங்கு அதிகம். நன்மை தீமை இரண்டும் அங்கு உண்டு, அதில் நன்மையை கண்டு தெளிவது நன்று.

 உங்களில் ஒருவர் அடிபட்டு இறந்தால் உங்கள் உடலுக்கு மாலை மரியாதை செய்து உங்கள் படத்தைப் போட்டு தியாக தீபமென்று ஊர் ஊராய் பேசி தனக்கான ஓட்டினை அறுவடை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஈழத்து உறவுகளின் பிணவாடையோடு அரசியல் செய்தவர்கள்தானே இவர்கள்; உங்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கா?

மதுக்கடையை அடித்து நொறுக்கிய உங்களில் எத்துணை பேர் மதுவை தீண்டியதில்லை என்ற விவாதத்திற்குச் செல்ல வேண்டாம். ஆனால் மாணவர்களை குடிகாரர்களாக, பெண்களின் பின்னால் சுற்றுபவர்களாக காட்டுகின்ற திரைத்துறையின் மீது ஏன் உங்களுக்கு அறச்சீற்றம் எழவில்லை. பெண் அரைகுறை ஆடையணிந்து சென்றால் அவள் மீது காமம் ஏற்படுமா என்ற ஒரு கேள்வி எழுப்பிய அதிமேதாவிகள் மதுக்கடை இருப்பதால்தானே குடிக்கிறான் என்று கேள்வி எழுப்பும்போது உங்களுக்கு அவர்கள் மீது ஏன ஐயம் எழவில்லை?

மதுவுக்கெதிரான போராட்டம் என்பது அரசுக்கெதிரான போராட்டமாக,மதுக்கடைகளை உடைத்தெறியும் போராட்டமாக மாறினால் அது அரசியல் போராட்டம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மதுவுக்கெதிரான போராட்டம் என்பது உண்மையில் ஒவ்வொருவரும் மதுவை வெறுக்கும் விழிப்புணர்ச்சியை உண்டாக்குமாறு அமைய வேண்டும்.

மதுக்குடிப்பதை சமுதாயத்தில் அவமதிப்பாக கருதும் நிலை வரவேண்டும். அவர்களை உங்கள் உறவு வட்டத்திற்குள் வைக்காத உறுதிநிலை வேண்டும். உங்களைச் சுற்றி இருப்போருக்கு அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களை மாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.        திரு. சசிபெருமாள் எந்த மதுக்கடையையும் தாக்கவில்லை;மது குடிப்போரின் காலில்தான் விழுந்தார் குடிக்க வேண்டாம் என்று. உண்மையில் அவரின் தியாகத்தை மதிப்பவர்கள் அந்த வழியைத்தான் கைக்கொள்ள வேண்டும்.

திரு. சசிபெருமாள் அலைபேசி கோபுரத்தில் ஏறி நடத்திய போராட்டம் கூட எமக்கு உடன்பாடில்லை; அது காந்திய வழியுமல்ல.  இன்று பலரும் அதைக் கைக்கொண்டு செல்லக்கூடிய வழியைப் படைத்துவிட்டாரே என்று ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. உணர்ச்சிகளுக்கு என்றும் போராட்ட களங்களில் இடம் இருக்கக்கூடாது, தெளிந்த உணர்வோடுதான் அது அமைய வேண்டும்.

அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும் உங்களை வன்முறைப் பாதையில் திருப்ப முயல்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். மாற்றம் என்பது நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்;அது நம் அயலாரை அடைய வேண்டும். அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது நிரந்தரம். கூக்குரலோடு கூடிய கோஷங்களோ, வெறித்தனமாக கண்மூடி செய்யும் வன்முறைச் செயல்களோ உங்களை சாதனையாளர்களாக மாற்றாது.
  

அமைதியாய் நிதானமாய் செய்யும் அறப் போராட்டங்களே உங்களைச் செம்மைப்படுத்தும் என்று உணருங்கள். நீங்கள் கூச்சலிட்டு ஓடியபொழுது உங்களைத் தவிர அந்தப்பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏன் ஒருவர் கூட உங்கள் பக்கலில் நிற்கவில்லை? ஏனெனில் வன்முறையை மக்கள் ஆதரிப்பதில்லை. வன்முறை நிகழ்த்தினால் மட்டுமே போராட்டம் என்று உங்கள் மனதில் பதிய வைத்த அரக்கர்களை உங்கள் மனதிலிருந்து அகற்றுங்கள். மதுவைப்போல் வன்முறையும் சமுதாயத் தீங்கே; அதுவும் அழித்தொழிக்கப்பட வேண்டியதே.

உண்மையில் மதுவை எதிர்த்து போராட நினைத்தால் அரசியல் நிழலை விட்டு ஒதுங்குங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள். அறிவைப் பட்டை தீட்டுங்கள். அமைதியான அறப்போராட்டத்தை மட்டுமே கைக்கொள்ளுங்கள். அறமற்ற எந்த செயலும் உங்களை குற்றவாளிகளாக வரலாற்றில் பதிய வைத்துவிடும் என்ற நினைப்போடு செயலாற்றுங்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத, அவர்களது பரிபூரண ஆதரவு பெற்ற போராட்டங்களே வெற்றி காண இயலும். 

அறம் வளர்த்த தமிழகத்தில் இனி மாணவர்கள் புதிய வரலாறு படைப்பார்கள்; வன்முறையற்ற இனியதொரு சமுதாயம் சமைப்பார்கள்; இனி போராட்ட களங்கள் காந்தியை மட்டுமே அடையாளப்படுத்தும் என்பது என் நம்பிக்கையும், பிரார்த்தனையுமாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக