வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

விவேகானந்தர் வலியுறுத்திய கல்வி

                எங்களது முதல் குழந்தை நடைபயிலத்தொடங்கிய போதே அவளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டன. அந்தக் காலகட்டங்களில் நானும் எனது மனைவியும் முழுமையாக அரசுத்துறையில் பணி புரிவதை வெறுத்தவர்கள். எங்களது பெற்றோர்களும், உற்றோரும் மற்றோரும் ஆட்டை மேய்த்தோமோ கோலை போட்டோமான்னு இருக்கிற அரசு வேலைக்குப் போறதை விட வேற என்ன பெரிசு உனக்கு எனக் கேட்டதுண்டு. அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னது ஆசிரியர் தொழிலை. கிரியா ஊக்கமற்ற தொழிலாகவே அதைக் கண்டதுண்டு. ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப மாணவர்களுக்கு போதிக்கும் வேலையில் என்ன சுவராஸ்யம் இருந்துவிட முடியும் என்ற நினைப்பு மேலோங்கியது. அதில் உண்மையில்லாமலில்லை. 

               எனது மகளை பள்ளியில் சேர்க்க மிகவும் மெனக்கெட்டது எனது மனைவிதான். நகரிலுள்ள அத்துணை பள்ளிகளின் வாசலையும் மிதித்து வந்துவிட்டாள். புதிதாக ஆரம்பித்த ஒரு மாண்டிசோரி பள்ளி மட்டுமே அவளுக்கும் எனக்கும் நம்பிக்கை தந்தது. ஒரு காலகட்டத்தில் அவர்களும் தடம் மாறிட உலகில் எல்லாமும் ஒன்றுதான் என வெறுப்பில் அமிழக்கூடிய சூழல் ஒரு சில நாட்கள் எங்கள் மனதில். ஆனால் எங்கள் முதல் மகள் சேர்ந்த பள்ளியிலேதான் எங்களது இரண்டாவது மகளும் சேர்ந்தாள். அவர்களது பள்ளி நிகழ்ச்சிகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் நாங்கள் தவிர்த்ததேயில்லை. 

              ஒவ்வொரு முறை நிகழும் எங்கள் பள்ளிப்பயணம் எங்களது சிந்தனையை கல்வியின்பால ஈர்த்துச் சென்றது. எது கிடைக்காது என்று ஆசிரியப் பணி வாய்ப்பைத் துறந்தோமோ அந்தக்கல்வி எங்களது குழந்தகளுக்கும் கிடைக்காத போதுதான், மற்ற குழந்தைகளின் பெற்றோர் ப்டும் துயரம் கண்ட போதுதான் நம்து கல்விமுறையின்பால் எனது சிந்தனையைத் திருப்பியது. எப்பொழுதும்போல் எனது நலம்விரும்பியான எனது மனைவியிடம் இதைப்பற்றி விவாதித்தபொழுது அதற்கு முதலில் நான் நன்கு அறிய வேண்டியது சுவாமி விவேகானந்தர், சுவாமி அரவிந்தர், ரபீந்தரநாத் தாகூர், ஜே.க்ருஷ்ணமூர்த்தி போன்றோரை. இந்தக்காலகட்டத்தில் எனது மனைவி தனது B.Ed, M.Ed ஆகியவற்றை முடித்திருந்தார். 

               தான் படித்த காலத்தில் அங்கு நடத்தப்படும் கல்விமுறையைக் கண்டு மனம் வெதும்பியே இருந்தார். இன்று ஆசிரியர்களுக்கு தங்களது ஆசிரியப் பட்டப் படிப்பிற்குப் பிறகும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு தகுந்த காரணங்களில்லாமலில்லை. அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் முழுமையானதாகவோ, அவர்களை திறன்மிக்க ஆசிரியர்களாக உருவாக்குவதாகவோ அமையவில்லை. இப்படிப்பட்ட ஆசிரியர்கள், மண்ணின் சிந்தனையற்ற கல்வி முறை இதனால் நமது எதிர்காலம் எப்படி அமையப் போகிறதோ என்ற கவலை மிகவும் ஆழமாக மனதுள்ளே எழ ஆரம்பித்துவிட்டது. அதன்பின் எனது மனைவியின் அறிவுரையின்படி விவேகானந்தரை கற்க ஆரம்பித்துள்ளேன். இந்த விஷயத்தில் நான் பள்ளிக்கல்விக்கு முன்னதான நிலையில் இருக்கிறேன். 

                ஏன் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற பேச்சு எப்பொழுதும் எல்லா தளங்களிலும் எழுந்து கொண்டுதானே இருக்கிறது? புதிதாக என்ன செய்யப் போகிறாய் நீ என்று என்மனம் கேள்வி எழுப்பியது. அது தந்த பதில்; எல்லாம் பேசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. ஆனால் செயல்படவில்லை;மேலும் சரியானவர்கள் கையில் இந்தப் போராட்டம் இல்லை என்றது. ஏன் போராடுபவர்கள் கல்வியாளர்கள்தானே? அவர்கள் அச் செயலைச் சரியான வழியிலே கொண்டு செலுத்த மாட்டார்களா? என வினவியது என் மனம். அது சரிதானே?

                சிறிதுநாள் அமைதிக்குப் பின்னர் கல்விக்காகப் போராடும் ஒரு நண்பரின் பேச்சினைக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் மார்க்சிய சிந்தனையுடையவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் பேசிய பேச்சின் சாரம் இதோ;
   
                ”தோழர்களே நான் பணியாற்றும் பள்ளியில் பலதரப்பட்ட மாணவர்கள் பயிலுகிறார்கள்; ஏழைகள் பணக்காரர்கள், கல்வியறிவுடைய பெற்றோர், மற்றும் குறைந்த கல்வியறிவுடையோர்; இந்த மாணவர்களனைவரும் மதிய உணவுக்காக அமர்ந்திப்ருப்பார்கள். அங்கு ஏழை மாணவன் கொண்டு வந்திருக்கும் கருவாட்டை எடுத்துக் கொண்டு அங்கு சைவ உணவு சாப்பிடும் மாணவன் மூக்கினருகே கொண்டு சென்று பாருடா எவ்வளவு அருமையான வாசனை; எவ்வளவு அருமையான உணவு தெரியுமா; என்று கேட்பேன். இப்படி ஒரு இருபது நாட்கள் செய்து அவனை அந்த உணவைச் சாப்பிடச் செய்து விடுவேன். இப்பொழுது அந்த மாணவனுக்கு இந்த ஏழை மாணவன் கொண்டு வரும் கருவாட்டின் மீதோ இந்த மாணவனிடமோ வெறுப்பு தோன்றாது என்றார்.”

                சரி, அவர் நல்லதைத்தானே செய்திருக்கிறார் என்றும், அவருடைய நோக்கம் நல்லதுதானே என்று என் மனம் கேட்டது. நீங்களும் கேட்கலாம். நோக்கம் தவறல்ல; ஆனால் வழிமுறை தவறென்றே எனக்குப் பட்டது. இங்கு மாற வேண்டியது மனித மனம்தானே தவிர உணவுப்பழக்கம் அல்ல. ஒருவனின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கலாமே ஒழிய அவனை முற்றிலுமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. நல்ல விஷயங்கள் ஒவ்வொருவரிலும் உண்டு. மனிதம் என்பதும் அதுபோலே. ஒவ்வொருவருள்ளும் உறைந்து கிடக்கும் அதனை வெளிக்கொணர முயல வேண்டுமே ஒழிய நமது எண்ணங்களை, பழக்கங்களை திணிக்க முயலக்கூடாது. திணித்தல் என்பது நாளடைவில் எதிர்மறையான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

               சரி, இதனை எப்படி அணுகியிருக்கலாம், தம்பீ நீ ஓரளவுக்கு வசதி படைத்தவன்; உனக்கு நல்ல உணவினை உனது பெற்றோர் உனக்கு அளிக்கிறார்கள்; பார் இந்த தம்பியை அவனது பெற்றோர் வசதியற்றவர்கள்; அவர்களுக்கு இதுதான் உணவாகக் கிடைக்கிறது. அதனால் இவர்கள் எந்த வகையிலும் இழிந்தவர்கள் இல்லை. தனக்குக் கிடைத்ததைக் கொண்டு வாழக்கூடிய பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் உறுதியும் உள்ளவர்கள். இவர்களைப் போல் உறுதியை நீ பெற வேண்டுமானால் அவர்களை மனித நேயத்தோடு அணுகி அவர்கள் துயர் தீர்ப்பது உனது கடமையென வாழ்ந்தால் நீ எனவே அம்மாதிரியான நண்பர்களோடு நீ பாசமோடு பழகவேண்டும். அவர்களுக்கு உன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இப்பொழுது இங்கு மனம் மாறுகிறது. நாம் ஒருவனை அவனது உணவுப்பழக்கத்தை மாற்றவில்லை; ஆனால் அவனுக்கு சமுதாய பொறுப்பை வழங்கிவிடுகிறோம்.

              என்னதான் வித்தியாசம்? ஒன்று நமது மண்ணில் பிறந்த சிந்தனை; மற்றொன்று வெளியில் இருந்து வந்தது. கல்வி மாற்றங்களை விரும்பி போராட்டங்களை முன்னெடுக்கும் பலர் இந்த மண்ணிற்கு மாற்றான சிந்தனைகளை கொண்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமேடையில் அவர்களது செயல்பாடுகளை விளக்கமாட்டார்கள், அங்கு பொதுவான விஷயங்களை மட்டுமே பேசுவார்கள். ஒரு கட்டத்தில் அவர் பின்னே நிற்போர் அவர் பேசுவதே சரி என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவர். அப்பொழுது நமது மாணவ சமுதாயத்தின் நிலை என்னவாகும்? முழுக்க முழுக்க நமது பாரம்பர்யத்தை தொலைத்துவிட்டு அயல்நாட்டு மோகத்திலே மூழ்கிப்போனால் நமது பாரதம் என்னவாகும்? 

              உண்மையில் கீழைநாட்டு சிந்தனைகள் அனைத்தும் மேலைநாட்டு சிந்தனைக்கு வெகு மாறுப்படு இருக்கின்றது. கல்வியைப்பொறுத்த வரையில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை ஏன் நம் அரசு கைக்கொண்டு செயல்படுத்தவில்லை என்ற கேள்வி பிரம்மாண்டமாய் எழுந்தபோது; அட மடையா, தாகூர் அருமையாக உருவாக்கி வைத்த கல்வி முறையை சீரழித்து அந்த பல்கலையை நாட்டின் மட்டமான கல்விமுறையோடு இணைத்து அவரின் கல்விச் சிந்தனையை கல்லறைக்கு அனுப்பி வைத்தவர்களிடம் இதனை நீ எப்படி எதிர்பார்க்கலாம் என்று எதிர்கேள்வி கேட்டது என் மனம். 

               இன்றைய சூழலில் அரசினை எதிர்பார்த்து காத்துக் கிடந்தோமானால் நாம் நமது சந்ததிக்கு மிகுந்த பாவத்தை இழைத்தவர்களாவோம். மேலும் கல்வித்திட்டத்திற்கான மாற்றமும், மாற்றத்தை விழைகின்ற எண்ணமும் ஆசிரிய சமுதாயத்தினிடையேதான் அதிக அளவில் எழ வேண்டும். இந்த மண்ணின் சிந்தனைகளை மாணவச் சமுதாயத்தினிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமை ஆசிரிய சமுதாயத்திற்குத்தான் உள்ளது. 

               இங்கு இந்த சமுதாயத்தினை எல்லாத் தளத்திலுள்ளவர்களும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனைச் சொல்ல வருந்துகிறேன், இந்தக் குற்றத்தைச் சொல்ல ஆசிரிய சமுதாயத்திற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஏனெனில் சமுதாயம் என்பது ஆசிரிய சமுதாயம் உருவாக்குவது. அவர்களின் பணியே அதுதான். உங்களை, உங்கள் பணிகளை நீங்கள் கண்ணாடியில் காண்பது போல இந்தச் சமுதாயத்தைக் காண்பது. 

                ஒரு மனிதன் அறிகிறான் என்பதைச் சரியான மன இயல் மொழியில் ”கண்டுபிடிக்கிறான்” அல்லது திரையை விலக்குகிறான் என்று சொல்ல வேண்டும். அதுபோலவே ஒரு மனிதன் கற்கிறான் என்பது உண்மையில் அவன் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகிய தன் சொந்த ஆன்மாவை மூடியிருக்கும் திரையை விலக்கிக் கண்டுபிடிப்பதையே குறிக்கும்(1.96)

                கற்றலைப்பற்றி மேற்குறிப்பிட்டபடி அருமையானதொரு விளக்கத்தை சுவாமி விவேகானந்தரல்லாமல் யார் உரைக்கமுடியும்.      ஒருவன தன்னையே அறிய இயலாத நிலையில மற்றவற்றை எப்படி அணுக இயலும். உங்கள் மாணவர்களைச் சூழ்ந்திருக்கும் திரையை விலக்க அவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகவே இயல்பாகவே இருக்கிறான். அதனைக் கண்டுணரும் தன்மைக்கு ஒருவனை முன்னெடுத்துச்செல்வதே கற்பித்தல் ஆகும். கற்றல் என்பது என்ன என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். இதற்கு முன்னதாக விவேகானந்தரின் இன்னும் சில சொற்களை நாம் கவனிக்க வேண்டும்.

                உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது அல்ல, அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச்செய்வது. (9.191.2)

                 கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனத்தில் நிறைப்பதல்ல.மனத்தைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்.(2.297)

                 என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பது அல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒரு போதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன்.முதலில் மன ஒருமைப்பாட்டையும், பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப்பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் வளர்க்க வேண்டும்.(2.359)

              என்ன அற்புதமாய் சொல்லிவிட்டார். ஒரு மாணவனுக்கு என்ன முதலில் வேண்டும் என்று. ஆனால் இன்று நடப்பதென்ன எவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்திருக்கின்றானோ அவனே அறிவாளி என்று. கணினியும், நூலகங்களும் ஏராளமான தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கின்றன. இன்றைய இலக்கணத்தில் உண்மையில் அறிவாளிகள் கணினியும், கூகிள், விக்கிப்பீடியா போன்ற இணையங்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். ஊடகங்களும் நாடுகளின் பெயர்களை அதன் தலைநகரங்கள் மற்றும் கொடிகளோடு சொல்லக்கூடிய நபர்களை மிகவும் அறிவாளி என்று சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் அதுதான் அறிவா? மன ஒருமைப்பாடு இல்லையென்றால் எப்படி வெறும் தகவல்களைக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ள இயலும்? 

             இன்று மன ஒருமைப்பாட்டுக்கான எந்த ஒரு விஷயமும் பள்ளிகளில் இல்லை. உடனே நீங்கள் கேட்கலாம், அரசுப்பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் யோகா கற்பிக்கப்படுகின்றதே. அதனால் அவர்களுக்கு ஆரோக்கியமும் மன ஒருமைப்பாடும் வளராதா? ஊறுகாயினால் ஏதாவது பலனுண்டா என்றால் ஒன்றுமேயில்லை. அந்த நேரத்திற்கு ருசி அளிப்பதைத் தவிர. பள்ளிகளில் யோகா மற்றும் பல நிகழ்ச்சிகள் ஊற்காய் போலத்தான். பாடங்கள் மட்டுமே மிக முக்கியம். இந்த ஊறுகாயும் முக்கியத்துவம் பெரும் எப்பொழுது என்றால், ஆண்டு விழாவிற்கு, அன்று வரும் பெற்றோர்களை தங்களது மாய வலையில் வீழ்த்துவதற்காக பள்ளிகள் இவற்றைப் பயன்படுத்தும். ஆ! என் குழந்தை நல்லா ஆடுறானே! பாடுறானே என்று வருடம் முழுதும் என்ன நடந்தது என்று பாராமல் அந்த ஒரு நாள் கூத்திலே மனம் பறிகொடுத்து செல்லும் ஓர்நிலைதான் இங்கு. 

                இயல்பாகவே எந்தமொழியில் நாம் நமது மனத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோமோ, நமது கோபம்,தாபம், துக்கம், பாசம் இவற்றைத் தெரிவிக்கிறோமோ, அதைவிடப் பலனளிக்கிற வேறுமொழி இருக்க முடியாது. அந்த மொழியின் வேகம் எந்தச் செயற்கை நடைக்கும் வராது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான முக்கிய கருவி,அதன் அடையாளம் மொழியேயாகும். பேச்சு மொழியிலுள்ள இரண்டு சொற்கள் தரும் உணர்ச்சியின் நிறைவை, இரண்டாயிரம் அடைமொழிகளிலும் காண முடியாது. (8.130-2)

               ஆசிரியர் ஒருவரின் பெருமை அவரது மொழியின் எளிமையிலே உள்ளது(10.321)

               வட்டார மொழியின் பெருமையை மேற்கண்டவாறு சுவாமி விவேகானந்தர் இவ்வாறு விளக்குகிறார். இன்று தாய்மொழிக் கல்வி என்பது கேள்வி குறியாய் அல்ல முற்றிலுமே அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டது. மொழி மட்டுமல்ல, உடை, சிந்தனை அனைத்திலும் நாம் மேற்கத்திய பாணியைக் கைக்கொள்ள முனைகிறோம். உடையைக் கொண்டு யாரையும் இந்தியர்கள் மதித்தது கிடையாது. ஆனால் அந்த நிலை மாறி கோட்டும், சூட்டும் நுனிநாக்கு ஆங்கிலம் மட்டுமே மதிப்பும் மரியாதையையும் பெற்றுத் தரும் என்ற எண்ணம் உண்டாகியுள்ளது. எனது மகள் பள்ளியிலுருந்து வீடு திரும்பியபின்பு அவளின் பாதங்களைக் கண்ணுறும் எனது மனது துடிக்கத்தான் செய்கிறது. இந்த வெப்ப சூழ்நிலையில் ஷூவும், சாக்ஸும் போட்டு எட்டு மணிநேரத்திற்கு மேல் அந்த பூப் போன்ற பாதங்கள் படும் வேதனையை யாரும் உணர இயலாதவர்களா? டை என்ற ஒன்று கழுத்தை இறுக்கி வேதனையை மேலும் அதிகரிக்கும். மொழியின் மீது மரியாதை இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால் அனைத்து பெற்றோரும் இதனை உணர்ந்திருக்கின்றனரா என்பது சந்தேகமே!


              சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்த கால்களில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை(6.326)

               சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி(6.125)

               குணம் குப்பையிலே என்று கவிஞன் பாடிச் சென்றுவிட்டான். குணத்தை நாம் மதிப்பதேயில்லை. தனிப்பட்ட முறையில் நாம் குணத்தை எதிர்பார்க்கிறோம் அது நமக்குத் தேவையாயிருக்கும் எனில். அது நம்மிடம் இருக்கிறதா என்றும் யோசிக்க மாட்டோம். பணம் இருந்தால் போதும், குணம் இல்லையென்றாலும் கொண்டாடத் தயங்கமாட்டோம். எத்தனை ஆசிரியர்கள் குணமில்லாத மனிதர்களை போற்றிப்பேச வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க வேண்டாம். புகழாமலாவது இருக்கலாமல்லவா? என்ன செய்வது என் தலைவிதி என்று நொந்துகொண்டே இந்தச் செயலை செய்து விடுவோம். கல்வி பயிலும் மாணவனிடத்தே குணங்களின் தன்மை, பெருமைகள், அவசியம் கற்பிக்கப்படுவதில்லை. 

               சிறந்த குணம் மட்டுமே மன வலிமையை உருவாக்கும். குணமற்றவர்களிடம் நரியின் தந்திரபுத்தியே மேலோங்கி நிற்கும். அது மனவலிமை குன்றிய ஒன்றே. 

               சொந்தக் கால்களில் நிற்கும்படிச் செய்ய வேண்டும் என்கிறார். உண்மையில் நடப்பது என்ன? சிறு குழந்தைகளின் பாடங்களுக்கு என்ன வினாக்கள், அதற்கான விடைகள் என்ன என்று சொல்லிக் கொடுத்த கிளிப்பிள்ளைகளாக உருவாக்குகிறார்கள். தான் கற்றுக்கொள்ளும் விஷயத்தை தானே விளக்க இயலாதவர்களாக அவர்கள் உருவாகும்போது அவர்களால் எப்படி சொந்தக் கால்களில் நிற்க இயலும்? எப்பொழுதும் தங்கள் செயல்களுக்கு அடுத்தவர்களைச் சார்ந்து செயல்படும் அவர்களுக்கு சிங்கம்போன்ற தைரியம் எப்படிக் கிடைக்கும்? 

               வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளவேண்டிய சூழல்களைப்பற்றிய அறிவு மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதைக்கற்றுக்கொள்ள தூண்டப்படுவதில்லை. நான் வருந்துகின்றேன் எனது வீட்டில் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும் நான் யாராவது ஒருவரைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழல். ஒரு சிலரைத் தவிர அநேகர் இந்தப் பிரச்சினையினால் அவதியுற வேண்டியதாயிருக்கும். இதற்குக்காரணம் இவையெல்லாம் கற்கப்படவேண்டிய ஒன்றாகவே நான் நினைத்ததில்லை. 

               தமக்குத் தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது. நமது பணி முக்கியமாக கல்விப் பணியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம், கல்வியறிவு இரண்டையும் அது புகட்ட வேண்டும்; அப்படிச் செய்தால் அல்லவா, அந்த மக்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக, சிக்கனம் மிக்கவர்களாக, திருமணம் செய்யாதவர்களாக இருந்து, வருங்கால பஞ்சங்களிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கற்றுக் கொள்வார்கள்! (11.74)

              விடுதலை பெற்றதிலிருந்து அதிகாரங்கள் கிராமப் பஞ்சாயத்திலிருந்து, மத்திய அரசை நோக்கிச் சென்று விட்டது. தங்களது தேவைகளை தாங்களே செய்து கொண்டிருந்தவர்கள், ஏரியைத் தூர்வாரவும், வாய்க்காலைச் சீரமைக்கவும் அரசை நம்பிக் கொண்டிருப்பவர்களாக மாற்றப்பட்டார்கள். கல்வி இதனைத்தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. சிக்கனம் என்பதிலிருந்து எப்படியெல்லாம் பணத்தைச் செலவு செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஒழுக்கம் குறைவதற்கான செயல்களாக ஊர்தோறும் மதுச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக வங்கியில் கடன் வாங்கி நம் வாய்க்கால்களையும், ஏரி குளங்களை அரசாங்கம் தூர் வாரிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடன் சுமை ஒவ்வொரு குடிமகனின் தலையிலும். இதை அறியாது ஏதோ அரசாங்கம் நமக்கு ஏவல் செய்வது போல நினைத்துக் கொண்டு அரசு செய்யட்டுமென்று காத்திருக்கின்றான் ஒவ்வ்ருவனும். இன்னமும் முற்றிலுமாக இந்தியக் கிராமங்கள் எந்த நன்மையையும் பெற இயலவில்லை இத்தனை ஆண்டுகளில். எவ்வளவு தீர்க்க தரிசனமான வார்த்தைகள் சுவாமி விவேகானந்தரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. 

             இனியாவது மாணவர்களை தம்சொந்தக் கால்களில் நிற்கப் பழக்குவோம். இதற்கு அரசு கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருமென்று காத்திருக்க வேண்டாம். ஆசிரியர்களாகிய நீங்கள் உங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ அதைச் செய்து மாணவ சமுதாயத்திற்கு விவேகானந்தர் வலியுறுத்திய உண்மையான கல்வி கிடைக்கச் செய்யுங்கள். அதற்கு நீங்கள் முன்னுதாரணமாய் திகழுங்கள். அந்த ஆசிரியரைப் போல் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாணவனிடத்தே தோன்றச் செய்யுங்கள். 

(திருப்பூர் பார்க் கல்லூரியில் தேசிய சிந்தனைக் கழகம் நடத்திய விவேகானந்தர் 150-வது ஜெயந்தி விழாவில் ஆற்றிய உரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக