வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

              2014-தான் முடிவா, உலகம் அழிந்து விடுமா? ஜெபக்கூட்டம் விளம்பரம் கண்டேன். எந்த மதமானாலும் மக்களிடையே இருக்கும் பயம், நாளைக்கு எனக்கு என்ன நடக்கும், கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை வைத்து தங்கள் வியாபாரத்தை நன்கு பெருக்குகிறார்கள். ஜோஸ்யம், பரிகாரம், எண்கணிதம் என பல்கிப்பெருகி இருந்த விஷயங்கள் இன்னமும் உளுத்துப்போகாததைக் கண்ட அனைவரும் மக்களின் பயம், சந்தேகம், அதீத எதிர்பார்ப்பு ஆகியவற்றை பயன்படுத்தி தங்கள் கடைகளை விரிவாக்கம் செய்கிறார்கள். புதிது புதிதாக கிளைகளைத் திறக்கிறார்கள். எத்தனை ஆன்மீக மகான்கள் உதித்த நாடு இது, எத்தனை வேதாந்திகள் உதித்த நாடு இது. அத்துணை பேரும் தன்னம்பிக்கையைத்தானே ஊட்டினர். பாவமோ, புண்ணியமோ விளைவுகளை உனது செயல்களே தீர்மானம் செய்கின்றன என்றனர்.

           ஒரு கணக்கு இருக்கிறது. அதற்கு விடை என்று ஒன்று உண்டு. அந்த விடை எப்படி வரும். அதற்கென்று சில வழிமுறை இருக்கின்றது. ஒவ்வொரு அடியாக அந்த வழிமுறைகளை நாம் செய்து முடிக்கும்போது நம் செயல்களின் பயனாக விடை கிடைத்து விடுகின்றது. விடை என்ன வரும் என்றோ, விடை என்னவாக இருக்கும் என்று எவரிடமோ அறிந்து கொள்ள முயன்றால் உனது செயல்கள் எப்படி சரிவர அமையும்? எனவே கடமையைச் செய் பயனை எதிர்பாராதே என்றது பகவத் கீதை. நமது கடமையைச் சரிவரச் செய்து வந்தால், நல்ல செயல்களைச் செய்து வந்தால் நல்ல விளைவுகள்தானே ஏற்படும். இந்த சூத்திரம் தெரிந்த பின் எதற்காக ஜோஸ்யம், பரிகாரம், உலகம் அழியுமா, அப்படி எனில் நான் பிழைத்துக்கொள்ள இறைவனிடம் உருகி வேண்டுவது என்பதெல்லாம் பம்மாத்து வேலை.

      தன்னம்பிக்கை இல்லாதவன் நாத்திகனாவான். அனைவருள்ளும் இறைத் தன்மை உள்ளது என்கிறபோது ஒவ்வொரு மனிதனும் இறைவனின் துளியே என்கின்றபோது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இறைவனின் ஒரு பகுதியான நாம் நாளை என்ன நடக்குமோ என்று பயந்து கோவில் கோவிலாகவோ, ஜெபக்கூட்டங்களாகவோ எதுவானால் என்ன, இந்த எண்ணத்தோடு சென்றால் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை. மேலும் பயந்தவர்களாகவே மாறப்போகிறீர்கள்.

     நம்பிக்கை கொண்டு நல்ல செயல்களைச் செய்வோம். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் கருணை மிகுந்தவன். அவன் எத்தீமைகளையும் நமக்குச் செய்வதில்லை. நமது செயல்களே நமது துன்பங்களுக்குக் காரணமாகிறது.” நமக்காக கோயிலுக்குச் செல்வது ஒரு முறையெனில், மறுமுறை செல்வது மற்றவர் நலனுக்காக மட்டுமே என்று கொள்ளுங்கள்”(இந்த வார்த்தைகள் நெமிலி ஸ்ரீபாபாஜி சொன்னது).

       கண்டவன் காலில் விழுவதும், அவரவர் சொல்லும் பரிகாரங்களை எண்ணி வீண் செலவு செய்து அலைவதனால் யாதொரு பயனுமில்லை. மாற வேண்டியது கிரகங்கள் இல்லை. மாற வேண்டியது மனித மனங்கள்தான். கிரகங்கள் நாளை என்ன நடக்கும் என்று எந்த செயலையும் செய்யப்போவதுமில்லை, நீங்கள் பரிகாரம் செய்வதால் அவைகள் சுற்றுப்பாதையை மாற்றப்போவதுமில்லை. மாற வேண்டியவர்கள் நாம்.

     சூரியனிலிருந்து வரும் ஒளி ஆற்றல் ஒரே மாதிரித்தான் உள்ளது. தாவரங்களின் இலைகள் அதை பச்சையமாக்குகின்றன. எல்லா இலைகளும் பச்சையத்தை தயாரிக்கின்றன. ஆனால் எல்லா மரங்களும் ஒரே வகையான பூவையோ, காயையோ உண்டாக்குவதில்லையே? ஏன்? ஒவ்வொரு தாவரத்தின் தன்மைக்கு ஏற்ப, செயல்களுக்கு ஏற்ப விளைவுகள் ஏற்படுகின்றன. ஆயின் சூரிய ஒளி ஒன்றுதானே?

    அதுபோல நாம் நமது செயல்களுக்கு ஏற்ப கிரகங்களின் சக்தி நமது வாழ்க்கையில் விளைவுகளை உண்டாக்கும். பரிகாரம் பயனில்லை. பரிகாரம் என்னவென்றால் மனமாற்றம்தான், செயல்மாற்றம்தான். 

     எந்த மகான்களும் தங்கள் வாழ்க்கையில் பரிகாரங்களைச் செய்து கொண்டிருக்கவில்லை. இறைவனை நம்பினார்கள். மனிதர்களிடம் நல்ல சிந்தனையை பரப்பினார்கள். அதன் விளைவுகளை அவர்கள் ஆழ்ந்து அனுபவித்தார்கள். தங்கள் வாழ்க்கையை பாடமாக்கினார்கள். அந்தப் பாடங்களை நாம் துறந்து விட்டோம், மறந்து விட்டோம். வியாபாரிகளின் நயவஞ்சகப் பேச்சில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறோம்.

         ராமனோ, க்ருஷ்ணனோ, யேசுவோ, புத்தரோ அனைவரும் மனிதராகப் பிறந்தவர்கள். ஆனால் அனைவரும் தமது செயல்களின் விளைவாக தெய்வமாய் ஆனவர்கள். இவர்கள் தங்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளவில்லை. தன்னோடு மற்றவர் நலனையும் கருத்தில் கொண்டு தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்து வந்தவர்கள்.

       பரிகாரம் செய்தால் இறைவன் தங்கள் பாவத்தை மன்னித்துவிடுவான் என்றோ, தாங்கள் செய்த பாவத்துக்கு மனமுறுகி மன்னிப்பு வேண்டிவிட்டு, இறைவன் தங்களை மன்னித்து விடுவான், மீண்டும் பாவம் செய்தாலும் மன்னித்து விடுவான் என்று யாராவது உங்களிடம் சொன்னால் அவர் நிச்சயமாக ஆன்மீகவாதி அல்ல, ஒரு வியாபாரி என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். மனமுறுகி மன்னிப்பு வேண்டினால் இறைவன் தன் குழந்தையை மன்னிப்பான், மன்னிப்பு கிடைக்கும் என்று தெரிந்து மீண்டும் மீண்டும் பாவம் செய்தால் மன்னிப்பு கிடைக்கும் என்றால் அது பொய்.


    நான்  செய்கின்ற தவற்றுக்குப் பரிகாரமாக வாரம் ஒருமுறை அன்னதானம் செய்துவிடுவேன், அவர்கள் வாழ்த்துவதால் என் தவற்றுக்கு தண்டனை கிடைக்காது என்று நம்பினால் அவனைப்போல் ஒரு முட்டாள் இல்லை. நீ நல்ல எண்ணத்திலோ, ஒருவன் பசியால் வாடுகின்றான் என்றோ அன்னதானம் செய்யவில்லை. உன் பாவக்கணக்கை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே செய்கிறாய். அது தானத்தில் சேராது.

   நான் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பெருமைப்படுவதோ, கோயிலுக்கு அதைச் செய்தேன் என்று பீற்றிக்கொள்வதோ, இத்தனை உதவிகள் செய்தேன் என்று தம்பட்டமடித்துக் கொள்வதோ தானமோ, சேவையோ அல்ல. அவைகள் புண்ணியக் கணக்கில் சேராது. அவை நீ புகழப் பட வேண்டும் என்ற எண்ணத்தினாலோ, உன் பணவசதியை காட்டுவதற்காகவோ செய்யப்பட்டால் அது பாவமே அன்றி புண்னீயமல்ல.  நீ சம்பாதிக்கும் பணம் எப்படிப்பட்டது? அது எவ்வழியில் உனக்குக் கிடைத்தது? உன் செயல்களே உனது வாழ்க்கையின் பலன்களைத் தீர்மானிக்கும்.

 இனி அன்னதானம் உண்ணப்போகிறவர்கள் யார் அன்னதானம் செய்கிறார்கள் என்று அறிந்தபின் உண்ணச் செல்வது நலம். பாவப்பட்ட கரங்களின் மூலம் பசியாறுவதை விட பட்டினியாய் கிடப்பது எவ்வளவோ மேல்.

      கோயிலில் அர்ச்சகன் ஒரு காலத்தில் இறைவன் எப்படி மனிதர்களிடையே பேதம் பார்க்க மாட்டானோ அப்படியே அவர்களும் நடந்து கொண்டார்கள். அவர்கள் பேச்சில் சத்தியம் இருந்தது. அவர்கள் சொல்லுக்கு மற்றவரிடத்தே மரியாதை இருந்தது. ஆனால் இன்று காசு உள்ளவனுக்கு கூழைக் கும்பிடு, உண்மையான பக்தனுக்காக ஹாரத்தி கூட காட்டுவதில்லை. அதனால் இறைவன் இவனை மதிப்பதில்லை, மக்களும் மதிப்பதில்லை. தன் பெருமையை பறை சாற்ற நினைக்கும் பணக்காரர்களும் அர்ச்சகரும் மட்டும் இடமாகக் கோயில்கள் மாறிப்போனது காலத்தின் கொடுமை. இதனைக் கண்டு இறைவன் கோயிலை விட்டு வெளியேறி  மற்ற உண்மை பக்தர்கள் வசிக்கும் இடம் தேடியும், சேரிகளின் ஓரத்தேயும் ஓடி ஓடி அவர்களைக் கண்டு வருகின்றான், ஆனால் அதை உணராத இவர்கள் இறைவனைக் காண பணக்காரர்களும், அர்ச்சகர்களும் நடத்தும் நாடகம் காண கோயிலுக்கு ஓடுகிறார்கள். பின்னால் கூக்குரலிட்டுக் கொண்டே அழைக்கும் இறைவனை இவர்கள் உணர்வதேயில்லை.

    கடமையைச் சரிவரச் செய்யும், நல்ல செயல்களைச் செய்யும் மனிதர்களிடத்தே இறைவன் நாடி வருகின்றான். அவர்கள் இதயத்தில் குடியேறுகிறான். அதை அறிந்தவர்கள் அறியாமையில் வீழ்வதில்லை.    


      மாறுங்கள் மனிதனாக! மனிதன் என்பவன் தெய்வமாகலாம்! ஆம் உள்ளிருக்கும் தெய்வத்தை உணர்ந்து தெய்வத்துக்கு உரிய குணங்களோடு நம் செயல்களை மாற்றிக்கொள்ளும்போது; மனிதன் என்பவன் தெய்வமாகலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக