வியாழன், 20 பிப்ரவரி, 2014

அரசியலா? மனிதாபிமானமா?

      ”தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” இது வள்ளுவன் தந்த தெய்வ வாக்கு. ஒரு முறை தூக்கில் தொங்கியிருந்தால் அந்த ஒரு நொடி வலியோடு ஒருவரது வாழ்வு முடிந்து போயிருக்கும். குற்றவாளிகளுக்குத் தண்டனை என்பது அரசியல் சட்டப்படி எழுதி
வைக்கப்பட்ட ஒன்று. இது வள்ளுவன் வாக்கல்ல எக்காலத்தும் பொருந்தி நிற்க! காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடிய ஒன்று.
      முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் கருணை மனுவின் மீதான நடவடிக்கையின் முடிவை மத்திய அரசு கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகள் தாமதித்து மறுக்கப்பட்டதன் விளைவாக உச்ச நீதிமன்றம் அவர்களது தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளது.
      உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றே. மிக மோசமான நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட சவுக்கடியாகவே இதனைக் காண வேண்டும். தேசியக் கட்சியினைச் சார்ந்த ஒருவர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும்போது தாமதம் செய்வது ஒரு நிர்வாகயுக்தி என்பது போலப் பேசினார். ஆனால் இந்தத் தீர்ப்புக்குப்பின் என்ன நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என்பது தெரியவில்லை.
      அப்துல் கசாப் செய்த பயங்கரவாத செயலுக்கு எதிரான வழக்கு, அப்சல் குருவின் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு இவைகளில் காட்டப்பட்ட தாமதம் மக்கள் மன்றத்தில் ஓர் எதிர்ப்பலையை உருவாக்கியது. தேர்தல் நேரத்தில் தங்கள் வெற்றியை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவற்றைப்போன்றே மிகவும் பயங்கரமான செயலே முன்னாள் பிரதமர் ராஜீவ் அவர்களின் படுகொலை. அது தவறுதலாக நடைபெற்ற துன்பியல் நிகழ்வு என்று விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். 
      


            ராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கை போன்ற விஷயங்களுக்காக தாமதமோ, விரைவோ காட்டப்படும் எனில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்களின் உணர்ச்சிக்கும், தங்களது ஓட்டுக்காக அரசு சில விஷயங்களை தள்ளிப்போடுவதையோ, அலட்சியப்படுத்துவதையோ ஏற்றுக் கொள்ள இயலுமா? இங்கு முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் இந்த அரசியல் நாடகங்கள் நிறைய நடந்தேறியுள்ளது என்ற ஐயப்பாடு அனைத்துத் தரப்பிலும் எழுந்துள்ளது.
     
      மரணதண்டனை விலக்கப்பட்டது நியாயம் என்று வாதிடும் அதே தருணத்தில் அவர்கள் விடுதலையை மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்த உடனே விடுதலையை சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவிக்கின்றார். இது மனிதாபிமான செயலாகப்
பார்க்கப்படுகின்றது. ஆனால் சட்டமன்றத்தில் அவரது பேச்சில் திரு. கருணாநிதியின் அமைச்சரவை இவர்களின் விடுதலையை நிராகரித்தது என்றும், தமது அமைச்சரவை அவர்களை விடுதலை செய்வது என்று எடுத்த முடிவையும் ஒப்பிட்டு கருணாநிதி தமிழர்களுக்கு எதிரானவர் என்ற எண்ணத்தை வலுப்படுத்த முனைகிறார். 
      இன்னும் சில மாதங்களிலே பாராளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் தமது வெற்றியை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை என்ற ஐயப்பாடு எழாமலிருக்க முடியாது. ஏனெனில் திரு. ராஜீவ் அவர்களின் மரணத்திற்கு விடுதலைப் புலிகளையும், தி.மு.க வையும் குற்றம் சுமத்தியவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சென்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை எடுத்தவர் இப்படி மாறிப்போக தேர்தல் கணக்கு தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
      திரு.கருணாநிதியின் அமைச்சரவை ஒரு வேளை இவர்களின் விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்குமேயானால்,
நிச்சயம் எதிர்ப்புகுரல் முதல்வரிடமிருந்து அந்த காலகட்டத்தில் வந்திருக்க வாய்ப்பு அதிகமே! தி.மு.க விற்கு விடுதலைப்புலிகளோடும், திரு. ராஜீவின் கொலையோடும் உள்ள உறவு இதன் மூலம் உறுதிப்படுவதாக அறிவிப்பு வெளியாயிருக்கும். ஆனால் தி.மு.க இன்று எதிர்ப்பு நிலையை எடுக்க இயலாத நிலையில் இருக்கிறது. தி.மு.க மட்டுமல்ல, பாரதிய ஜனதா, ஏன் தமிழக காங்கிரசும் இதனை வலுவாக எதிர்க்க திராணியில்லாமல் இருக்கின்றன.
      என்ன காரணம் தமிழ்தேசியம் என்ற எண்ணம் மக்களிடையே வலுத்திருக்கிறதா? விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு தமிழக மக்களிடையே வலுத்திருக்கிறதா? நிச்சயமாக இப்படி இருக்க வாய்ப்பில்லை. தமிழ்தேசியம் பேசும் தமிழ் பிற்போக்குவாதிகள் வேண்டுமானால் இப்படி நப்பாசையில் பேசிக்கொள்ளலாம். இன்னமும் தமிழக மக்களுக்கு தேசிய எண்ணமே மேலோங்கியிருக்கும். பின் என்னதான் ஆயிற்று? தமிழக அரசியல்வாதிகள் இந்த விடுதலையை எதிர்க்காமலிருக்க?
      நிச்சயமாக இதன் பின்புலம், முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழர் இனத்தின் மீதான தாக்குதல் அதன் பின்னே மத்திய அரசின் கரம் இருக்குமோ என்ற ஐயப்பாடு. இது மட்டுமா? தமிழக மீனவர்களின் மீதான தொடர்ச்சியான இலங்கையின் தாக்குதல், கூடங்குளம் அணுமின்நிலையம், மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் அளிக்க மறுப்பு, கெயிலின் விவசாயிகளிடத்தே மோசமான அணுகுமுறை, தொடர்ச்சியாக தமிழகம் பல துறைகளிலும் புறக்கணிக்கப்படுவது, தமிழக மக்களின் குரலை கவனிக்காதது போன்ற தவறுகளை மத்திய அரசு செய்து வருவதால் மக்களிடையே ஒரு எதிர்ப்பு நிலை உருவாகி உள்ளது.
      முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மாணவ மற்றும் தமிழ் சமுதாயத்தினிடையே ஏற்பட்ட ஒரு அதிருப்தி, இன்று அரசியல்வாதிகளை திரு.ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளை எதிர்க்க இயலாமல் கட்டிப்போட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாக திருப்பிவிடக்கூடியவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அது தங்கள் தேர்தல் கணக்கில் பாதிப்பை உண்டாக்கிவிடும் என்ற அச்சம் அனைத்து அரசியல் கட்சிகளையும் நடுநிலைமையோடு பேச இயலாமல் செய்துள்ளது.
      சரி, இந்த விடுதலை ஏன் எதிர்க்கப்படவேண்டும். இவர்கள் முன்னாள் பிரதமரின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்கள் நிரபராதிகள் என்று கூக்குரலிடுவோர் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் உண்மைக் குற்றவாளி இவர்தான் என்று ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இன்றுவரை ஏதும் முயற்சி செய்திருப்பார்களா என்பது சந்தேகமே! அவ்வாறு நிரூபிக்க வேண்டிய கடமையும், உரிமையும் இவர்களுக்கு இருக்கிறதே? ஏன் இன்று வரை செய்யவில்லை? வெறுமே விடுதலைப்புலிகளை கடுமையாய் எதிர்ப்போரை இதில் சம்பந்தப்படுத்திப் பேசுவதனால் யாதொரு பயனுமில்லை.
      ஆனால் இப்படியொரு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டால் குற்றவாளிகளை  விசாரிக்க நீதிமன்றங்கள், எதற்கு? தண்டனைச் சட்டங்கள் ஒன்று எதற்கு? பிரதமரைக் கொன்ற குற்றவாளிகளையே விடுதலை செய்கிறீர்கள், சாதாரண மீனவனைக் கொன்றவர்க்கு விடுதலை தரவேண்டாமா என்று இத்தாலிய அரசாங்கம் கேட்காதா? கேட்டால் உடனே விடுவிக்க வேண்டும் என்று சாந்தன், பேரறிவாளன் விடுதலையை ஆதரிப்போர் ஆதரவு தெரிவிப்பார்களா?
      யார் வேண்டுமானாலும் இந்திய மண்ணில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவர்கள் எம் தமிழ் இனத்தார் என்றால் ஆதரிப்போம், இல்லையெனில் அவர்களுக்கு அரசியல் சட்டப்படி தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று கூறுவார்களா? இப்படி ஒரு நிலைப்பாடு நமது நீதியையும், தர்மத்தையும், நமது நடுநிலைமையையும், தமிழ்ப்பாரம்பர்யத்தின் தன்மையயும் கேள்விக்குறியாக்கிவிடாதா?
      மீண்டும் சொல்கிறேன், சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றால், அதனை அவர்களும் அவர்களை ஆதரிப்போரும் நிரூபித்து விடுதலையைப் பெறவேண்டுமே ஒழிய இப்படி ஒரு வழிமுறையில் அல்ல. அதே நேரத்தில் அவர்களது மரணதண்டனையை கருணை மனுவின் மீதான தாமதத்தைக் காரணமாய் காட்டி விலக்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன். ஒரு தமிழரின் தலைமையிலான உச்சநீதிமன்றக்குழு இந்த ஒரு அருமையான தீர்ப்பினை வழன்கியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுப் பதிவாய் அமைகையில் ஒரு தமிழர் அந்த இடத்தில் இருப்பது பெருமையான விஷயமே! 
 அவர்களின் விடுதலை திரு. ராஜீவ் குடும்பத்தாரின் மன்னிப்பின் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் நடந்தால் நிச்சயம் அது அர்த்தமுள்ளதாய் இருக்கும். இங்கு ராகுல் முன்னாள் பிரதமரைக் கொன்ற குற்றவாளிகள் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். 
      முடிவில் எனது இன்னுமொரு ஐயப்பாட்டை இங்கு எழுப்ப விழைகின்றேன்; நிச்சயம் குழப்புவதற்கல்ல! தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்; ஒரு வேளை இவர்களின் வாழ்வை சூது கவ்வியிருந்ததோ, இன்று தர்மம் வென்றுவிட்டதோ? கண்ணனன்றி வேறே யாரறிவார்? அனைவர்க்கும் அவனே அறிவிப்பான்! அதுவரை பொறுத்திருப்போம். 
     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக