சனி, 27 செப்டம்பர், 2014

பதினெண் வருடம்

இன்று சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு.
       பதினெட்டு ஆண்டுகள் நடந்த வழக்கு பலவித இழுபறிகளுக்கும், இடையூறுகளுக்கும் பின்னர் இன்று ஒரு முடிவுக்கு வர இருக்கிறது. பதினெட்டு என்பது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான எண். பதினெண் புராணங்கள், பதினெட்டு நாள் மஹாபாரத யுத்தம் என பல முக்கியமான விஷயங்கள் பதினெட்டு என்ற எண்ணோடு தொடர்பு கொண்டது.
      இன்னமும் இந்த வழக்கை நீட்டிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை நீதித்துறை தகர்த்தெறிந்துவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தமிழகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறிருக்கும். தமிழக முதல்வர் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டால், அவர் உடனே பதவி விலக வேண்டி வரும். அப்பொழுது பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு இருக்குமா அல்லது வேறொருவரை அவ்விடத்திற்கு கொண்டு வருவாரா என்பது போன்ற பல கருத்துக்கள் மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன.
       இன்னொரு பக்கம் அம்மா எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றிச் செல்வியாக வலம் வருவார் என்ற நம்பிக்கைப் பேச்சு ரத்தத்தின் ரத்தங்களால் சொல்லப்பட்டுக் கொண்டே மறுபக்கம் யாகங்களும் வேள்விகளும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. உள்ளே ஒரு எதிர்பார்ப்பும் இருக்குமல்லவா? ஒரு வேளை அம்மா தோல்வியைத் தழுவினால், தீர்ப்பு எதிராக அமைந்துவிட்டால் நமது வேடம் என்ன என்று ஒவ்வொரு இரண்டாம் கட்டத் தலைவரும் யோசித்துக் கொண்டிருப்பர். முதல்வர் பொறுப்பு தனக்குக் கிடைக்குமா என்று ஜோஸ்யமும் பார்த்திருப்பர்.
       வெற்றி ஏற்பட்டால் என்ன ஆகும்? ஜெயலலிதா வெற்றிச் செல்வியாக வலம் வருவதோடு மேலும் பலம் பெற்றவராகிவிடுவார். கூட்டணி என்ற பேச்சே இருக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலை தனியொருவராக எதிர்கொள்ளத் தயாராகிவிடுவார். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்கட்சி குழப்பங்களால் பலவீமனமடைந்துள்ள தி.மு.க வின் மீது ஏவுகணைகளை வீசுவார். பொய் வழக்கு, கருணாநிதியின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் ரத்தத்தின் ரத்தங்களால் தொடர்ந்து நடத்தப்படும். மின் தடை, மிக மோசமாக ஆமை வேகத்தில் நடைபெறும் அரசு நிர்வாகம், ஊழல்கள், ஊற்றெடுத்துப் பாயும் மது போன்றவை பின் நோக்கித் தள்ளப்படும். இவை மக்களின் சிந்தையைலிருந்து அப்புறப்படுத்தும் நிகழ்வுகளைச் செய்வதில் நேரம் செலவழிக்கப்படும்.
       மாறாக, அமைதியாக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம், மதுகுறைப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள், அதற்கான செயல்பாடுகள் என நடைபோட்டால் தமிழகம் நலம்பெறும்;வளம் பெறும். இந்த ஆசையோ எதிர்பார்ப்போ மக்களிடம் இருக்கும் என எதிர்பார்க்கவே இயலாது. ஆனாலும் ஒரு சிலரிடம் இப்படி நடக்காதா என்ற ஆதங்கம் இல்லாமலிருக்காது.
       தி.மு.க வின் நிலை ஜெயலலிதாவின் வெற்றியினால் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு எவ்வளவு உள்ளதோ அதே அளவு வாய்ப்பு தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் அக்கட்சிக்கு இருக்கிறது என்பதே உண்மை. இன்னும் ஒட்டிக்கொண்டுள்ள உடன்பிறப்புகளை அழுத்தமாக கட்சியுடன் ஒட்டும் வேலையை கருணாநிதியால் செய்ய இயலும். ஆனால் அவரது வயதும், குடும்ப அரசியலும் இதை அனுமதிக்குமா என்பது மிகப்பெரியக் கேள்விக்குறி. குடும்ப அரசியல் தொண்டர்களிடையே ஒரு வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மையும் சுடத்தானே செய்கிறது.
        எதிரணியினர் இதை எப்படி எதிர்கொள்வர்? நீதித்துறை விலைபோய்விட்டது. போயஸ்தோட்டத்திற்கு அடிமையாகிவிட்டது. இப்படி அடுக்குமொழியில் வசனங்கள் கூர்தீட்டப்பட்டு வெளியாகும். நீதித்துறையை இது போல் கீழ்த்தரமாக யாரும் விமர்சிக்க முடியாது என்ற நிலையில் இவ்வசனங்கள் எழுத்திலும் பேச்சிலும் இருக்கும். இணையத்தில் பொங்கும் புலிகள் தங்கள் விகார மனங்களின் ஆசைகளை தங்கள் வார்த்தைகளில் வடித்துத் தீர்த்துக் கொள்வர். தனக்குச் சாதகமாக தீர்ப்பு இருந்தால் நீதித்துறையும் போற்றுவதும், இல்லையெனில் தூற்றுவதும் வாடிக்கையாகிப் போன ஒன்று.
        மாறாக இவ்வழக்கில் ஜெயலலிதா தோல்வியடைந்தால் என்ன நிகழும்? ஒரு பொம்மை கொலுவில் அமர்த்தப்படலாம். அது எந்த பொம்மை என்பது சசிகலாவுக்கே தெரிந்திருக்குமா? அப்படி ஒரு பொம்மை ஆட்சியில் அமர்த்தப்பட்டால் அது கருணாநிதியால் புகழப்படும். ஒவ்வொரு முறை அரசுப் பொறுப்பு கிடைக்கும்போதும் தனது மகனுக்குக் கூட வழிவிடாத இவர் அ.தி.மு.க வில் ஒரு தொண்டருக்குப் பொறுப்பு கிடைத்ததை எண்ணி இறும்பூது எய்துவார்.  
  
       
        தான் நியாயமாகத் தொடர்ந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டு விட்டது. நீதித்துறை பணபலத்துக்குப் பணியாமல், எந்த அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கடமையைச் சரிவரச் செய்துவிட்டது என்பார். அன்றுபோல் இன்றும் அ.தி.மு.க ஊழலில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பார். வளைத்து வளைத்து அவர் கொடுக்கும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க அ.தி.முவினர் நிலை தடுமாறித்தான் போக வேண்டியிருக்கும்.

           ஆனால் ஜெயலலிதா மிக உறுதியாக நிற்பார். தனது பொம்மையை ஆட்டுவிக்கும் கலையை மிகத் திறம்படச் செய்வார். நிர்வாகக் குறைகளுக்கு தன் பொம்மையை காரணமாக்கி, சிறப்புகளுக்குத் தன்னைக் காரணமாகக் காட்டிக் கொள்ளும் வல்லமை அவருக்குண்டு. முன்னைவிடத் தீவிரமாகத் தி.மு.கவினரை தாக்கத் துவங்குவார். ஆனால் கடந்த நாட்களில் அவரது கட்சியினர் ஆங்காங்கே உடன்பிறப்புகளோடு கொண்டுள்ள உறவு இதனை சீர்குலைக்க முயற்சிக்கும். இன்னும் தீவிரமாக அவர்களை களையெடுக்க வேண்டிய வேலைகள் அவருக்குக் காத்திருக்கும்.
        தீர்ப்புக்குப் பின் சிறை என்ற நிலை ஏற்பட்டால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு என்ன ஏற்பாடு நடந்திருக்கிறது என்பது தெரிய வரும்போதே ஜெயலலிதாவின் உண்மையான திறமை நமக்குத் தெரியவர வாய்ப்பிருக்கிறது.
                                                                             உண்மையில் அதிமுக, திமுக என இரு திராவிட கட்சிகளிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தப்போகிறது இன்றைய தீர்ப்பு. பொறுத்திருந்து பார்ப்போம். காலம் வரலாற்றில் என்ன பதியக் காத்திருக்கிறது, எதை நோக்கி தமிழக அரசியலை நகர்த்தப்போகிறது என்பதற்கான விடை இன்னும் சில நாளில் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக