புதன், 17 செப்டம்பர், 2014

பகுத்தறிவுவாதியா ? பகுத்தறிவாளரா ?

       நம்பிக்கை எது, மூட நம்பிக்கை எது என்பதை பகுத்து அறிந்து கொள்ளும் அறிவே பகுத்தறிவு. நீங்கள் ஒன்றைப் பகுத்து அறிய வேண்டுமெனில் அதன் இரு வேறுபட்ட தன்மையோ, அல்லது பன்முகத்தன்மையோ அதனை எந்தவித சார்நிலைப்பாடும் இல்லாமல் அறிய முற்படுகையில் மட்டுமே உண்மையை நோக்கி நகர முடியும்.

      துரதிருஷ்டவசமாக இன்று பகுத்தறிவு என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கையை புறந்தள்ளுவது என்பதாக ஆகிவிட்டது. ஒரு பக்திமான் தனது குரு சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பயணப்படுகின்றான் எனில் அது அவன் சார்ந்துள்ள கொள்கை நிலைப்பாட்டுக்கு உகந்ததாக ஆகிவிடுகிறது. ஏனெனில் வைதீக மார்க்கம் குரு சொல்வதனை மீறாமல் அவர் வழி நடக்க வேண்டும் என்றே போதிக்கிறது.

      நாத்திகம் என்பது பண்டைய இந்து மரபில் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அதன் தன்மையோடு இன்றைய நாத்திகத்தை ஒப்பிட முடியாது. அதுபோலவே பண்டைய வைதீக முறைகளுக்கும், பக்தி வழிகளுக்கும், இன்றைய நிலைக்கும் நிறைய வேறுபாடு இருக்க வேண்டும் என உறுதியாக நம்புகின்றேன்.

      இன்றைய நாத்திகம் பொதுவாக ஈ.வெ.ரா வின் வழி என்றே
கொள்ளலாம். அவர் தவிர்க்க இயலாத வரலாற்று நிகழ்வு எனக் கொள்ளலாம். அவர் நோக்கம் என்ன, அவர் உறுதியான நிலைப்பாடு உள்ளவரா என்பதை அனைவரும் அறிவர். ஆனால் நான் காண்பது அவரால் நிச்சயம் சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பேன்.

      ஆத்திக வழியைப் பின்பற்றும் பலருக்கும் தன் பாரம்பரியப் பழக்கவழக்கங்களை அலசுகின்ற ஒரு மனோபாவம் ஏற்பட்டுள்ளது. மூர்க்கத்தனமாக வசைபாடும் நாத்திகர்களின் பேச்சு இவர்களுக்கு தங்கள் பழக்கத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக ஆராய்ச்சியை ஊக்குவித்திருக்கிறது, உண்மையைத் தேடி நகர்ந்திருக்கிறார்கள்.  இன்னமும் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

      சாதி வேறுபாடின்றி அனைவரும் வேத வேதாந்தக் கருத்துக்களை அறிய முற்படுகின்றனர். அதில் சார்பின்றி உண்மையை மட்டுமே நோக்கி நகர்கின்ற பலபேர் இருக்கிறார்கள், ஆனால் இங்கும் தன் பண்டைய அழுக்கு மூட்டையை சுமக்கும் நபர்கள் இல்லாமல் இல்லை என்பதும் உண்மை. ஆனால் இவர்கள் சிறு அளவு;மேலும் காலப்போக்கில் காணாமல் போய்விடக்கூடியவர்கள்.

      இளைய தலைமுறைக்கு தங்கள் பாரம்பரிய விஷயங்களை கண்டறிவதிலும், நிலைநாட்டுவதிலும் அபார விருப்பம் மட்டுமல்ல அசுர உழைப்புக்கும் தயாராக உள்ளனர். ஆனால் இவர்கள் மீண்டும் தங்களை அறியாமல் சில அரதப்பழசான, செல்லாக்காசான, காலத்திற்கு ஒவ்வாத சில விஷயங்களையும் அணைத்துக் கொண்டு விடுவார்களோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

      ஈ.வெ.ராவின் இன்றைய தொண்டர்கள் மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்பதை உறுதியாகக் கொள்ள இயலும். ஈ.வெ.ரா உருவ வழிபாட்டை எதிர்த்தார். ஆனால் இன்று வெட்கமேயில்லாமல் அவரது உருவத்தை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் நான் இதனை அருவெறுப்பாகக் காணவில்லை. ஏனெனில் அதுதான் இந்த மண்ணின் உண்மையான பாரம்பரிய குணம். அது அவர்களை விட்டு நீங்கவில்லை. ஆனால் ஈ.வெ.ரா கொடுத்ததாகச் சொல்லப்படுகின்ற அச்சமற்ற உணர்வு அவர்களிடம் இல்லை.

      அச்சமற்ற உணர்வு இருக்கின்ற எவரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளத் தயங்கமாட்டார்கள். மேலும் தங்களது செயல்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள். ஏன் எதற்கு என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று ஈ.வெ.ரா சொல்லியிருக்கிறாரே, அவர் சொன்னதையும் ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவரை வழிபாடு செய்பவர்களுக்கு வரவேண்டுமே? ஊஹூம். போலி சாமியார்களின் பின்னால் போகும் மூடபக்தனுக்கும், வெறுமே ஒரு சார்புடைய புத்தகங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தான் பகுத்தறிந்துவிட்டதாகக் கூறும் போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை.
      
      மேலும் அச்சமற்ற உணர்வு கொண்டவர்கள், தாங்களாக கற்பித்துக் கொண்ட ஒரு விஷயத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். இன்று இல்லாத பிராமண ஆதிக்கம்; ஆனால் அது இன்றும் இருப்பதாக நம்பி வாழ்ந்து கொண்டு அதன் மீது வெறுப்பையும், கோபத்தையும், வசைச்சொற்களையும் வீசிக் கொண்டிருப்பவர்களை எப்படி அச்சமற்றவர்கள் என்று கூற இயலும். அச்சமற்ற இயல்பு இல்லாதவர்கள் எப்படி பகுத்தறிவாளர்களாக இருக்க இயலும்? இவர்களை வெறுமே பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லலாமே ஒழிய பகுத்தறிவாளர்கள் என்று நிச்சயமாகக் கூற இயலாது. 

      மரத்தை வழிபட்டது, கல்லை வழிபட்டது, மண்ணை வழிபட்டது, நீரை வழிபட்டது, பசுவை வழிபட்டது நம் பாரம்பர்யம். ஐயகோ இதைப்போல் ஒரு மூட நம்பிக்கை உண்டா என்று கேலி செய்து திரிந்தது ஒரு கூட்டம். ஆனால் அதே கூட்டம் இன்று மரத்தைக் காப்போம், கல்லைக் காப்போம், மண்ணைக்காப்போம், நாட்டுப்பசுவைக் காப்போம் எனத் திரும்பத் தொடங்கியிருக்கிறது. ஏனப்பா ஒரு காலத்தில் இதை தெய்வமாக மதித்து காப்பாற்றி வந்தார்களே; அப்பொழுது அவை பாதுகாப்பாக இருந்ததே; இது தெய்வமல்ல இயற்கை என்று கற்றுக் கொடுத்தாயே; இப்பொழுது நிலை என்ன?

      இங்கு கொடுமை என்னவென்றால் பிள்ளையார் ஒரு அரசமரத்தடியில் அமைதியாக இருந்தார். அந்த மரத்தை வெட்டி பல கோடி ரூபாய் செலவில் கோயிலைக் கட்டி அந்த இடத்தின் அமைதியைக் கெடுக்கிறான் ஆத்திகன். மரத்தை வழிபட்டது மூடத்தனம் என்று
நம்பிவிட்டான். வெறுமே குத்தி நடப்பட்ட கல்லைக் கும்பிட்டு அந்த கல்லைச் சுற்றியிருந்த நிலத்தையும் புனிதமாகக் கருதி வந்தான். ஆனால் இன்று அங்கும் கோயிலைக் கட்டி சுற்றியிருந்த கற்களையெல்லாம் வெட்டி எறிந்து காங்க்ரீட் கட்டிடங்களாக்கி விட்டான். கல்லை வணங்குவது மூடத்தனம் என்றதன் பயனிது.

      நீரில் மலம் கழிப்பதோ, சிறுநீர் கழிப்பதோ பாவம் என்றுதான் எனக்கும் சின்ன வயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று அரசாங்கமே அத்தனைக் கழிவுகளையும் ஆற்றில் சேர்க்கிறது. கிராமத்தில் ஏரி குளங்கள் மலக்கிடங்குகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நீர் தெய்வமல்ல என்ற நினைப்பின் பயனிது.


      நீர் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இன்று பல முதலாளிகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்று தனிப்பட்ட முறையில் பயனடைகிறார்கள். அவர்களில் பலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும், இறைபக்தி கொண்டவர்களும் எனப் பல்வேறுபட்டவர்களும் இருக்கிறார்கள். நீர் விற்பது பாவம் என்று கருதிய ஒரு சமூகம் ஏன் இன்று இந்த அவல நிலைக்குப் போனது. எல்லோருக்கும் பொதுவான நீரை ஒருவன் மட்டுமே எடுத்து விற்றுப் பொருள் ஈட்டுகின்றானே; இது சமூகத்திற்குப் புறம்பானதாயிற்றே என்ற எண்ணம் ஒருவருக்கும் எழவில்லையே ஏன்?

      தனிமனித உரிமை என்றோம். தனி மனிதன் வளர தன் சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கின்றான். நாம் சமுதாயத்தின் உரிமைக்குக் குரல் கொடுத்தவர்கள். ஒட்டு மொத்த சமுதாயத்தின் நன்மைக்காக தனி மனித விருப்பு வெறுப்புகளைத் துறந்தவர்கள். என்று நாம் தனி மனித உரிமை, மனித உரிமை என்பதிலிருந்து மாறி சமுதாய நன்மையைப் பற்றிப் பேசுகிறோமோ, தனி மனிதனின் சமுதாயத்திற்கான கடமையைப் பற்றி பேசுகிறோமோ அன்றுதான் இதற்குத் தீர்வு கிடைக்கும்.

      ஆற்று மணலை அரசும், கறுப்பு முதலாளிகளும் களவாடும் நிலை எந்த ஆற்றுப் படுகையிலும் தொடர்ந்து நடந்து கொண்டேதானிருக்கிறது. சுற்றி வசிக்கும் மக்களுக்கு சூடு சொரணை என்பதே இல்லை. நமது தெய்வம் சுரண்டப்படுகிறதே என்ற வருத்தம் கிஞ்சித்தும் இல்லை. மண்ணை வழிபடுதல் மடத்தனம் என்றீர்களே, விளைவு இதுதான்.

      பசுவை வழிபட்டது, அதன் கோமியத்தை அருந்தியது இன்றளவும் மிகுந்த எள்ளி நகையாடலுக்கு உள்ளான ஒன்று. விளைவு நாட்டுப் பசுக்கள் அருகிப்போனது. அடிமாடுகளாக்கி அந்நிய தேசத்துக்கு விருந்து படைத்தோம். ஆகக் கிடைத்த பயனென்ன; ஜெர்சி பசுக்கள் பெருகி உணவுக்குத் தகுதியற்ற பாலை அருந்துகிறோம். அதன் சாணமோ, கோமியமோ மருந்துக்கோ உரத்துக்கோ லாயக்கற்றது என்பதை இன்று உணரும்போது எங்கு காணினும் ஜெர்சியடா என்றுதான் பாடும் நிலைமை.
      
      பால் விற்பனைக்குரிய பொருளாக இருந்ததில்லை. இன்று அது வணிகமாக ஆக்கப்படதன் பலனும் நாட்டுப்பசுக்கள் அழிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இன்று பசு தெய்வமாக பார்க்கப்படவில்லை; அது ஒரு வணிகப் பொருளாக பார்க்கப்படுகிறது. பசுவின் இறப்பு வரை அதனைப் பாதுகாத்த விவசாயி இன்று இளங்கன்றையும் அடிமாட்டுக்கு விற்கும் நிலைமை. இளங்கன்றை ஆட்டிறைச்சிக்குப் பதிலாக விற்கிறார்களாம். ஏமாற்ற நினக்கும் ஒருவன். தான் என்ன உண்கிறோம் என்பதை அறியாமல் உண்ணும் ஒருவன்.

      இன்று நிலைமையுணர்ந்து பலரும் பாரம்பர்யத்தை மீட்டெடுக்க முயலுகையில் மீண்டும் ஒரு விஷமப் பிரசாரம் நடக்கிறது. பசு இறைச்சி எங்கள் பாரம்பர்ய உணவு என்று. பசு உணவாக இருந்திருக்கலாம்; ஆனால் அது எந்த காலகட்டத்தில்; மனிதனை உண்டது கூட ஒரு காலத்தில் நிகழ்ந்திருக்கும்; அதையும் பாரம்பர்ய உணவு என்று கொள்ள இயலுமா? பசு இறைச்சியை பாரம்பர்ய உணவாகக் கூறும் சிலர் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆம் இவர்கள் வாதிகள் அறிவாளர்கள் அல்ல.

      நீர், மரம், கல், மண், பசு இவை தெய்வங்களாக இல்லாமல் இருக்கலாம். இவைகள் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் அடையாளமான எல்லையில்லா வல்லமை அற்றவையாக இருக்கலாம். ஆனால் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நன்மையளிப்பன. தனக்கு நன்மையைக் கொடுக்கும் ஒன்றைத் தெய்வமாகக் கொண்டாடிய ஒரு நாகரீகம் மூடநம்பிக்கையுடையதா? அது அத்தனையையும் வணிக நோக்கில் காண்கின்ற ஒரு சமூகம் மூட நம்பிக்கையுடையதா?

      இங்கு மதம் சமுதாய உணர்வோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்ற ஒன்று. சமுதாய நன்மையைக் கருத்தில் கொண்டே மதச் சடங்குகள் அமைகின்றன, அமைய வேண்டும். என்று அவை செயலிழக்கின்றனவோ அன்று சமுதாயத்தின் நன்மைகள் முடங்கிப் போகும். நான் வெறும் போலிச் சடங்குகளைப் போற்றச் சொல்லவில்லை. உண்மையை நோக்கி நகரச் சொல்கிறேன். பகுத்து அறிந்து காலத்திற்கு ஒத்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கக் கூடிய சடங்குகளை முன்னிறுத்த வேண்டும். அவைதான் சாதாரண பாமர மக்களை சமூகத்தோடு பிணைத்து உயர்நிலைக்கு உந்திச் செல்லும் சக்தியாக மாறும்.

      வெற்றுச் சடங்குகளில் தோய்ந்து நிற்பதும் நம்மைச் சேற்றுக்குள் அமிழ்ந்து கிடக்கும் நிலைக்கு மாற்றி விடும். ஆராய்ந்து பாரம்பர்யத்தை பேண நினைக்கும் இளைய தலைமுறையினர் உண்மையை அறிவதில் எவ்விடத்திலும் சுணக்கமில்லாமல் இருக்க வேண்டும். உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். உண்மையை நோக்கி நகராமல், காலத்திற்கேற்ப தன்னைச் செவ்வியல் படுத்திக் கொள்ளாத சமூகம் எப்படி பகுத்தறிவு கொண்ட சமூகமாக மாறும்.

      சார்பற்று உண்மையைத் தேடும் ஒரு மனிதனே பகுத்தறிவாளன். பகுத்தறிவாளன் என்று பறைசாற்றிக் கொண்ட ஒருவர் சொன்னதை ஒருவன் அப்படியே ஏற்றுக் கொண்டால் அவனும் மூட நம்பிக்கையாளனே. அவனை பகுத்தறிவு வியாதி பீடித்துள்ளதே தவிர பகுத்தறிந்து கொள்ளும் தன்மை வளரவில்லை. உண்மையான பகுத்தறிவாளனே ஆன்மிகத்தில் ஈடுபடமுடியும். அப்படிப்பட்டவனே உண்மையைத் தேடிச் செல்ல இயலும். உண்மையத் தேடிச் செல்பவனே இறைவனை உணர இயலும்.

பின்குறிப்பு: இன்று காலை கணினி முன் அமர்ந்தபோது என் மனதில் தோன்றியதை தட்டச்சு செய்து வலைப்பூவில் ஏற்றுவதற்காக வைத்திருந்தேன். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இன்று திரு. ஈ.வெ.ரா அவர்களின் பிறந்த நாள் என்பது நினைவுக்கு வந்தது. இன்று பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்களின் பிறந்தநாளும் என்றறியும்போது ஒரு திகைப்பு ஏற்படுகிறது. காலம் அதன் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அது தன் வினைகளை தனக்கேற்றவாறு
வரலாற்றில் நிகழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது ஏற்படுத்தும் விளைவுகளை என்றும் முழுமையாய் தீமையானது என்று சொல்வதற்கில்லை. காலப்போக்கில் அது ஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டே தீர்மானிக்க இயலும். மேலும் இது தனி மனிதர்களின் மன ஓட்டத்தைப் பொறுத்தே அமைகின்றது. அப்படித்தான் நான் ஈ.வெ.ரா மற்றும் மோதி அவர்களின் விளைவுகளை ஒன்று போலவே காண்கிறேன். இது மற்றவருக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம். ஒவ்வொருவரிடமும் மற்றவர்க்கு ஏற்புடைய மாற்றான என்ற இரண்டு விதமான கருத்துக்களும் இருக்கும். நமக்கு மாற்றுக் கருத்துக்கள் அதிகமாக இருப்பவரை புறந்தள்ளி விட இயலாது. வரலாற்றில் அவர் மூலம் காலம் ஆற்றிய வினைகள் என்றும் மறுப்பதற்கோ ,மறப்பதற்கோ இயலாது.  

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக