செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

 

சமீபத்தில் தமிழ் மொழி உரிமை மீட்புப் போராட்டம் என்ற ஒரு அறிவிப்பினைக் கண்ணுற்றேன். தமிழ் மொழியின் உரிமை என்பது என்ன? அது ஏன் காணாமல் போனது? அதை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பது எதுவும் விளங்கிக் கொள்ள இயலவில்லை என்னால்.

ஏன் என்றால் எனக்குத் தமிழில் பேசவோ, எழுதவோ எந்தத் தடையும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எனது அருகில் உள்ள எவருக்கும் இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இது எவ்வாறு ஆகிப் போனது என்பது சற்று குழப்பமாக இருக்கத்தானே செய்யும்?

என்னுடைய புரிதல், முதலில் மொழி என்பது எண்ணத்தைக் கடத்துவதற்கான கருவி. அம்மட்டே. அதைத் தாண்டி அதற்கு என்ன உரிமை தடை கிடைத்துவிடப் போகிறது? தாய்க்கும் சேய்க்குமான தகவல் பரிமாற்றத்திற்கான ஒன்றுதானே தாய்மொழி என்றாகிப் போனது?

இந்த மொழியின் மீது ஏன் இத்தனை உணர்ச்சிப் பெருக்கு? அது உணர்வு ரீதியான ஒன்றுதானே? ஒரு சிறு வார்த்தையை, நாம் அதிகம் பயன்படுத்தும் வணக்கம் என்ற ஒரு வார்த்தையை யோசித்துப் பார்த்தேன். பலரும் காலை, மதிய, மாலை மற்றும் இரவு வணக்கம் எனப் பயன்படுத்துகின்றனர். இது சரியான ஒன்றா என்ற ஓர் ஐயம் தலை தூக்கியது?

ஏன் இவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தபோது Good morning,Afternoon, Evening, Night என்பதற்கு மாற்றாக இவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். இது சரியான நடைமுறையா என்றால் எனக்கது சரியாகத் தோன்றவில்லை.

வணக்கம் என்ற வார்த்தை வணங்குதல் என்ற செயலின் பாற்பட்டு உருவான சொல்தானே? அந்த செயல் நாள் முப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கையில் அது எப்படி ஒவ்வொரு வேளைக்குமானது என்பதாக இருக்கும்? மேலும் இது ஆங்கில வடிவத்தின் நேரிடை மொழிமாற்றத்திற்கும் ஒத்ததாக இல்லை.

தமிழ் மொழியின் சிறப்பே, சொல்லும் அதன் எதிர்ச் சொல்லும் வேறாக அமைந்து செயலின் பொருளைச் சுட்டுமாறு அழகாக அமைந்திருப்பது. இதனைக் கூர்ந்து கவனிக்கையில் இந்த மக்களின் பண்பட்ட கலாசாரம், சமயம் சார்ந்த கூறுகளின் ஏற்றம் பெற்ற சொற்களைக் கொண்டே தமிழ் மொழி கட்டமைந்துள்ளது. என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

தமிழக மக்களின் வாழ்வியல் கூறுகள் எவ்வளவு செவ்வியல் தன்மை கொண்டதாக உருமாறி வளர்ந்து வந்ததோ அந்த அளவுக்கு அதன் மொழி வளமும் ஏற்றம் பெற்று வளர்ந்து வந்ததைக் காண்கிறோம். ஆகச் சிறந்த செவ்வியல் மொழியின் அடித்தளம் அதன் செம்மார்ந்த பண்பாடு.

இந்த செம்மார்ந்த பண்பாடு அதன் ஒட்டுமொத்த வாழ்வியல் கூறுகளான அறம், மதம், வீரம், ஈகை என அனைத்தையும் சிறப்புற வார்த்தெடுத்த சொற்களில் பொதித்து வடிவான இலக்கியங்களையும் ஈந்துள்ளது.

இந்த மொழியின் வாழ்வின் நீளமும், இன்னும் செம்மார்ந்து வளமும் பெற வேண்டுமெனில் அதன் வாழ்வியல் கூறுகளும், பாரம்பரியங்களும் சிதைபடாமல் இருந்தால்தான் சாத்தியம். சொல்வளம் சிறக்கச் செய்ய வேண்டும். புதிய சொற்கள் உருவாக வேண்டும். அவை மேலோட்டமாக அமையாமல் செம்மொழித் தன்மையுடன் பண்பாட்டுக் கூறுடன் உருவாக்கப்பட வேண்டும்.

அன்றி இன்றுள்ளது போல ஆங்கிலம் கலந்த தமிழைப் பயன்படுத்துவது என்றில்லாமல் ஆக வேண்டும். மொழிபெயர்ப்புகள் மேற்சொன்னதுபோல நமது பண்பாட்டினை உள்வாங்கியதாக அமைக்க வேண்டும்.

உரிமை மீட்போம் என்கிறவர்கள் இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவே தெரிகிறது. மரபினையும் பண்பாட்டையும் சிதைப்பதில்தான் அவர்களின் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. உண்மையில் மொழியை மீட்க வேண்டியது இவர்களைப் போன்றவரிடம் இருந்துதான்.

பண்பாட்டையும் மரபினையும் சிதைத்துவிட்டால் மொழியின் உள்ளார்ந்த பொருளை நாளைய தலைமுறை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்? அன்று வார்த்தை இருக்கும் அகராதியில்? அதற்கான பொருளும் கூட இருக்கக்கூடும். ஆனால் வாழ்வியல் கூறுகள் இல்லையெனில் அந்த வார்த்தைகள் பயனின்றிப் போகுமல்லவா?

மொழியின் மாண்பு காக்கப்பட வேண்டுமெனில் பாரம்பரிய வாழ்வியல் கூறுகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு தேவை உரிமை அல்ல; அது நிறையவே இருக்கிறது. தேவை கடமை. செம்மொழியைக் காக்க செம்மார்ந்த பண்பாட்டினைக் கூறு போட்டுக் கொல்லாமல் காக்க வேண்டிய கடமை. அதை வாழ்வில் கொண்டாலே போதும். எத்திசையும் புகழ்மணக்க தமிழணங்கு என்றும் அரியணையில் வீற்றிருப்பாள்  என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக