வெள்ளி, 28 ஜூன், 2024

 சமூக மேம்பாடு என்பதும் ஒரு சமூகத்தின் கலாசார பண்பாட்டு நாகரீகத்தின் புத்தாக்க வளர்ச்சி என்பதும் வேறல்ல என்றே கருதுகின்றேன். இந்த வளர்சி என்பது பரிணாம முறையில் ஏற்படும்பொழுது மட்டுமே அந்த வளர்ச்சி நிரந்தரமானதாக அமையக்கூடும். சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என இங்கு குறிப்பிடுவது ஒரு சமூகம் தனது பண்பாடு கலாசாரத்தின் வழியாக அதனுடனே உறவாடி கால மாற்றங்களுக்கு ஏற்ப அடிப்படை அறத்தினை தளமாகக் கொண்டு உருவாகி மேலெழும்பி வரவேண்டும்.

பாரத சமூகத்தில் தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வரையறைக்குள் அடைக்கப்பட்ட ஒன்று. அந்த சுதந்திரத்தின் நீட்சி அடுத்தவரின் மூக்கினை தொட்டுவிடாமல் இருக்க வேண்டும். முதலில் அந்த சுதந்திரம் குடும்பம், அதற்கடுத்ததாக உறவு, அடுத்ததாக நட்பு, அடுத்ததாக ஒட்டு மொத்த சமூகம், இவற்றின் பண்பாடு, கலாசாரம், இவை அனைத்தையும் தாங்கி நிற்கும் தேசத்தின் பாதுகாப்பு என அனைத்தையும் மீறாமல் இயங்கிக் கொள்ளுமாறான வரையறைக்குள் இருந்தது.
என்று தனிமனித சுதந்திரம் என்ற விஷ விதை இங்கு விதைக்கப்பட்டதோ அன்றே குடும்பம் என்ற கட்டமைப்பு சிதையத் துவங்கியது. பின்னர் உறவுகளுக்குள் விரிசல் அது சமூகத்தில் அடுத்ததாக நுழைந்துவிட்டது.
இன்று எந்த அறமீறலும் அறுவெறுப்புடன் பார்க்கப்படாமல் தனிமனித சுதந்திரம் என்ற அகங்காரத்துடன் வலம் வருகிறது. இதனை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்த இயலாது. இந்தச் சமூகத்தில் அறத்தின் மீதான காதலும் மதிப்பு மரியாதை பயம் என்றிருந்ததெல்லாம் இறைநம்பிக்கையுடன் இணைக்கப்பட்டும் இருந்தது.
கல், மரம், நீர், நெருப்பு, காற்று, வானம், மலை என்று தன்னைச் சுற்றி நின்றிருந்த இயற்கை அனைத்திலும் இறையைக் கண்ட பழங்குடி மரபே அத்வைத தத்துவ சிந்தனையாக வளர்ந்தெழுந்திருக்கக்கூடும். அந்நிய ஆக்கிரமிப்பு நிலத்தை சுதந்திரம் என மீட்டெடுத்து 75 வருடங்கள் கடந்திருக்கலாம். இன்னமும் அந்நிய சிந்தனையும் தத்துவமும், கல்வி முறையும் நமக்குள் தொடர்ந்து திணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இதன் தாக்கமே நீரை வணங்கியவன் அதனை அசுத்தம் செய்யத் தயங்கவில்லை, விற்கவும் தயங்கவில்லை. மண்ணைத் தெய்வமாக நினைத்து செருப்புக் காலோடு விவசாய பூமியை மிதிக்காதவன் இன்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறான். மலைகளைத் தெய்வமாக வணங்கியவன் குவாரி என்ற பெயரில் அதனை அழித்தொழிக்கிறான். மரத்தை வணங்கியவன் அதனை மூடநம்பிக்கை என்று சொன்னவன் பின்னால் சென்று காணும் மரத்தை யெல்லாம் வெட்டி விற்று விடுகின்றான்.
இயற்கையை வணங்கியதை மூடநம்பிக்கை என்ற சிந்தனை இங்கு விதைக்கப்பட்ட பிறகு அதனை ஏற்றுக் கொண்டபின் கனிம வளக் கொள்ளையைச் செய்பவனுக்கு சனாதனஅறம் என்று இந்த மண் வழங்கிய அறம் அனைத்தும் மூடநம்பிக்கையாகத்தானே தெரியும். அதைச் செய்வது பிழை என்று எப்படிக் கருதுவான்.
இப்படி நாற்புறமும் தாக்கப்பட்டு தான் யார் தனது பண்பாடு பாரம்பரியம் எது என்று புரியாமல் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் திணிக்கும் தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய சிந்தனைக்கும் தனது முன்னோர் வழங்கிய சமூக சுதந்திரத்தை பிரதானமாகக் கொண்ட பாரத சிந்தனைக்கும் இடையில் தடுமாறிக் கொண்டு இருக்கும் ஒரு சமூகம் தன்னை எப்படி முன்னெடுத்துச் செல்ல இயலும்?
வாழ்க்கையை போராட்டக் களம் என்று சொல்லித் தருவது மேற்கத்திய சிந்தனை. அது போராட்டக் களமல்ல தனது வாழ்க்கை அதனை எதிர்கொள்ளப் பழக வேண்டும் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும் அதிலிருந்து தன்னையும் தனது உறவையும் சமூகத்தையும் அரவணைத்துக் காத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் நமது பாரம்பரியச் சிந்தனை.
இங்கு முதலில் மீட்டெடுக்கப்பட வேண்டியது குடும்ப அமைப்பு. பின்னதாக ஒரு ஊர் என்ற கிராமம் என்கிற ஒரு சமூகக் கட்டமைப்பு. இங்கு தன்னலம் சுயநலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொதுநலமான சமூகநலன் முன்னிறுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சியும் நலனும் அது அந்தக் கிராமத்தின் ஒரு தனிமனிதரின் அரசியல் கட்சி என்பதிலிருந்து விலகி அந்த ஊரின் நலனுக்காக என்று நிற்கிற நிலை வேண்டும். கேரளாவை அடிக்கடி இந்த விஷயத்திற்காகச் சுட்டிக் காட்டுவார்கள். அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் மத்திய அரசினை தங்களது மாநில நலனுக்காக ஒற்றுமையாக அணுகுவார்கள் என்று.
ஊராட்சிகள், பஞ்சாயத்துக்கள் அரசியல் சார்புள்ளவர்களைத் தேர்வு செய்வதிலிருந்து விலகி கிராமத்தின் மற்றும் சமூக நலத்தின் மீது அக்கறை கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் நிலை வரவேண்டும். ஒழுக்கமுள்ளவர்களையும் அறத்தினை வாழ்வியலாகக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாக கிராம மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
மக்கள் போராட வேண்டாம். பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதில் சரியான பங்களிப்பை அளித்துவிட்டாலே அந்த கிராம நலன் பாதுகாக்கப்படும். சமூகநலனும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
இன்று மக்களின் சுகாதாரம் என்பது மருந்து சந்தையின் கைகளில், மக்களின் கல்வி என்பது கல்வித் தொழிற்சாலைகளின் கைகளில், உணவு என்பது உணவுச் சந்தையின் கைகளில் உள்ளது.
நமது மரபில் இந்த மூன்றுமே விற்பனைக்கு என்று இருந்ததில்லை. மருத்துவர் தனது மருத்துவத்தை விற்பனை செய்ததில்லை, குருகுலங்களோ, தனியாசிரியர்களோ மாணவர்களுக்கு கல்வியை விற்றதில்லை மற்றவர்க்கு உணவளிப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கடமையாகவே இருந்தது. இந்த அற எண்ணங்களினால் மருத்துவரையும் ஆசிரியரையும் சமூகம் பாதுகாக்கும் பொறுப்பினை தான் ஏற்றுக் கொண்டது. இன்று அந்த அறத்தினைக் கைவிட்டு மேற்கத்திய சிந்தனையில் இயங்கி வருவதுதான் மக்களுக்கு ஏற்பட்ட சோதனை.
மது உண்பது, சூதாடுவது, மாற்றான் மனைவியை அடைய நினைப்பது( மணம் கடந்த உறவு), ஊழல் புரிந்து கொள்ளை அடிப்பது, அடுத்தவர் சொத்தை அதிகாரத்தாலோ பலத்தாலோ அபகரிப்பது, பொதுச் சொத்தை, கோவில் சொத்தை தனதாக்கிக் கொள்வது இவையெல்லாம் அற மீறல்களாக கீழ்மையான செயல்களாக ஒருகாலத்தில் இந்த சமூகத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இவை தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் அகங்காரத்துடன் நகர்வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவர்கள்தான் விஐபிக்கள்.
இந்தத் தேசம் வல்லரசாக வேண்டும் என்றாலும், மக்கள் அனைவரும் நலத்தினைப் பெற வேண்டும் என்றாலும் மக்களின் சிந்தனை முறை மாற வேண்டும். அதற்கு கல்வி முறை மாற வேண்டும். நமது சிந்தனை வழியாகக் கற்றலையும், நமது மண்ணின் அறங்களையும், தமிழ் இலக்கியங்களையும் கற்றுணரும் வகையில் மாற்றப்பட வேண்டும். கல்வி என்பது வேலை வாய்ப்புக்கானது அல்ல; அது வாழ்வியலுக்கானது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
நமது வேரான பாரம்பரியத்தையும், அறத்தையும், கலாசாரத்தையும், மருத்துவத்தையும், மீட்டெடுக்காமல் போராட்டங்களாலும் சட்டங்களாலும் எதையும் மாற்றி அமைக்க இயலாது. ஒரு சமூகத்துக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் உண்டு. அதற்கான சிந்தனையையும் சூழலையும் உருவாக்க வேண்டியதுதான் இன்றையத் தேவை.
சு. சத்திய நாராயணன்
28.06.2024