செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

 

சமீபத்தில் தமிழ் மொழி உரிமை மீட்புப் போராட்டம் என்ற ஒரு அறிவிப்பினைக் கண்ணுற்றேன். தமிழ் மொழியின் உரிமை என்பது என்ன? அது ஏன் காணாமல் போனது? அதை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பது எதுவும் விளங்கிக் கொள்ள இயலவில்லை என்னால்.

ஏன் என்றால் எனக்குத் தமிழில் பேசவோ, எழுதவோ எந்தத் தடையும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எனது அருகில் உள்ள எவருக்கும் இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இது எவ்வாறு ஆகிப் போனது என்பது சற்று குழப்பமாக இருக்கத்தானே செய்யும்?

என்னுடைய புரிதல், முதலில் மொழி என்பது எண்ணத்தைக் கடத்துவதற்கான கருவி. அம்மட்டே. அதைத் தாண்டி அதற்கு என்ன உரிமை தடை கிடைத்துவிடப் போகிறது? தாய்க்கும் சேய்க்குமான தகவல் பரிமாற்றத்திற்கான ஒன்றுதானே தாய்மொழி என்றாகிப் போனது?

இந்த மொழியின் மீது ஏன் இத்தனை உணர்ச்சிப் பெருக்கு? அது உணர்வு ரீதியான ஒன்றுதானே? ஒரு சிறு வார்த்தையை, நாம் அதிகம் பயன்படுத்தும் வணக்கம் என்ற ஒரு வார்த்தையை யோசித்துப் பார்த்தேன். பலரும் காலை, மதிய, மாலை மற்றும் இரவு வணக்கம் எனப் பயன்படுத்துகின்றனர். இது சரியான ஒன்றா என்ற ஓர் ஐயம் தலை தூக்கியது?

ஏன் இவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தபோது Good morning,Afternoon, Evening, Night என்பதற்கு மாற்றாக இவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். இது சரியான நடைமுறையா என்றால் எனக்கது சரியாகத் தோன்றவில்லை.

வணக்கம் என்ற வார்த்தை வணங்குதல் என்ற செயலின் பாற்பட்டு உருவான சொல்தானே? அந்த செயல் நாள் முப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கையில் அது எப்படி ஒவ்வொரு வேளைக்குமானது என்பதாக இருக்கும்? மேலும் இது ஆங்கில வடிவத்தின் நேரிடை மொழிமாற்றத்திற்கும் ஒத்ததாக இல்லை.

தமிழ் மொழியின் சிறப்பே, சொல்லும் அதன் எதிர்ச் சொல்லும் வேறாக அமைந்து செயலின் பொருளைச் சுட்டுமாறு அழகாக அமைந்திருப்பது. இதனைக் கூர்ந்து கவனிக்கையில் இந்த மக்களின் பண்பட்ட கலாசாரம், சமயம் சார்ந்த கூறுகளின் ஏற்றம் பெற்ற சொற்களைக் கொண்டே தமிழ் மொழி கட்டமைந்துள்ளது. என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

தமிழக மக்களின் வாழ்வியல் கூறுகள் எவ்வளவு செவ்வியல் தன்மை கொண்டதாக உருமாறி வளர்ந்து வந்ததோ அந்த அளவுக்கு அதன் மொழி வளமும் ஏற்றம் பெற்று வளர்ந்து வந்ததைக் காண்கிறோம். ஆகச் சிறந்த செவ்வியல் மொழியின் அடித்தளம் அதன் செம்மார்ந்த பண்பாடு.

இந்த செம்மார்ந்த பண்பாடு அதன் ஒட்டுமொத்த வாழ்வியல் கூறுகளான அறம், மதம், வீரம், ஈகை என அனைத்தையும் சிறப்புற வார்த்தெடுத்த சொற்களில் பொதித்து வடிவான இலக்கியங்களையும் ஈந்துள்ளது.

இந்த மொழியின் வாழ்வின் நீளமும், இன்னும் செம்மார்ந்து வளமும் பெற வேண்டுமெனில் அதன் வாழ்வியல் கூறுகளும், பாரம்பரியங்களும் சிதைபடாமல் இருந்தால்தான் சாத்தியம். சொல்வளம் சிறக்கச் செய்ய வேண்டும். புதிய சொற்கள் உருவாக வேண்டும். அவை மேலோட்டமாக அமையாமல் செம்மொழித் தன்மையுடன் பண்பாட்டுக் கூறுடன் உருவாக்கப்பட வேண்டும்.

அன்றி இன்றுள்ளது போல ஆங்கிலம் கலந்த தமிழைப் பயன்படுத்துவது என்றில்லாமல் ஆக வேண்டும். மொழிபெயர்ப்புகள் மேற்சொன்னதுபோல நமது பண்பாட்டினை உள்வாங்கியதாக அமைக்க வேண்டும்.

உரிமை மீட்போம் என்கிறவர்கள் இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவே தெரிகிறது. மரபினையும் பண்பாட்டையும் சிதைப்பதில்தான் அவர்களின் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. உண்மையில் மொழியை மீட்க வேண்டியது இவர்களைப் போன்றவரிடம் இருந்துதான்.

பண்பாட்டையும் மரபினையும் சிதைத்துவிட்டால் மொழியின் உள்ளார்ந்த பொருளை நாளைய தலைமுறை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்? அன்று வார்த்தை இருக்கும் அகராதியில்? அதற்கான பொருளும் கூட இருக்கக்கூடும். ஆனால் வாழ்வியல் கூறுகள் இல்லையெனில் அந்த வார்த்தைகள் பயனின்றிப் போகுமல்லவா?

மொழியின் மாண்பு காக்கப்பட வேண்டுமெனில் பாரம்பரிய வாழ்வியல் கூறுகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு தேவை உரிமை அல்ல; அது நிறையவே இருக்கிறது. தேவை கடமை. செம்மொழியைக் காக்க செம்மார்ந்த பண்பாட்டினைக் கூறு போட்டுக் கொல்லாமல் காக்க வேண்டிய கடமை. அதை வாழ்வில் கொண்டாலே போதும். எத்திசையும் புகழ்மணக்க தமிழணங்கு என்றும் அரியணையில் வீற்றிருப்பாள்  என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

திங்கள், 13 ஏப்ரல், 2020


அன்பு நட்புகளுக்கு வணக்கம்

நிறைய பேர் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலை வெறுப்பார்களா இல்லையா என்ற ஒரு சந்தேகத்தில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் இதனை ஒரு சாபக்கேடாகவும் மக்கள் மிகுந்த துயர் படுவதாகவும் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு சிலருக்கு மக்களிடையே பீதியைக் கிளப்புவதும், பிரச்சினை என்ற நெருப்பு அணைந்து விடாமல் காப்பதிலுமே நிறைய அக்கறை.

நான் தொலைத்தது என்ன, பெற்றது என்ன இந்த நாட்களில்.,
நட்புகளோடு அளவளாவ வெளியில் செல்ல இயலவில்லை.  அலைபேசி இதனை ஓரளவு தீர்த்து வைத்து விடுகிறது. மேலும் புத்தகங்கள் அந்த காலி இடத்தை நிறைவு செய்கின்றன.
எனது தொழில் தொடர்பாக திட்டமிட்டிருந்த வேலைகளைச் செய்ய இயலவில்லை. எல்லோருக்கும் இந்த நிலைமைதான், பெரிதாக ஒன்றும் குறையில்லை. இந்த நிலை மாறிய பின்பு ஈடு செய்து கொள்ளலாம்.

வானை மூடி நிற்கும் புகை மண்டலங்களைக் காண இயலவில்லை. மழைச் சாரலில் எனது பால்ய கால கிராம வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் இப்பொழுது ஏற்படுகிறது.

வாகனங்களின் இறைச்சல் குறைந்திருக்கிறது. அருகாமையில் தொடர்வண்டியின் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தது காணாமல் போய் இருக்கிறது. கிராமத்தின் அமைதி இன்றைய நகரத்தில்.

கருஞ்சிட்டு ஜோடி ஒன்று எங்கள் வீட்டுக் கிணற்றில் கூடு கட்டி இருந்ததைக் கவனிக்கவே இல்லை. ஊரடங்கிற்குப் பின்னர் வந்த நாளில் அதைக் கண்ணுற்றேன். கூட்டில் குஞ்சுகளில் சத்தம் கீச்கீச் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வாரம் கழிந்து காலை வாசற்படியில் ஒரு குஞ்சு அமர்ந்திருந்தது. காலை பத்துமணி வரை வேறெதுவும் செய்யாமல் இரு குஞ்சுகளையும் அதன் பெற்றோரையும் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே அவை குஞ்சுகளுடன் செலவிட்டன. பின்னர் குஞ்சுகள் எங்கு சென்றன எனத் தெரியவில்லை. ஜோடிக் குருவிகல் தங்கள் இருப்பிடத்தை மீண்டும் புதுப்பிக்கத் துவங்கிவிட்டன.

ஆறிப்போன சாதம் என்பதே இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இல்லை. இப்பொழுது சூடாகச் சமைத்து சாப்பிட முடிகிறது. இந்த ஒரு வாரம் மதிய உணவுப் பொறுப்பினை மகள் எடுத்துக் கொண்டு அன்னைக்கு ஓய்வு கொடுத்துள்ளாள். காலையில் எப்பொழுதும் இருக்கும் பரபரப்பு நோஓஓஓஓஓ. முக்கியமா என்னுடைய பாதிக்கு இருந்த பரபரப்பு சுத்தமா இல்லை.  

எனது இளமைக் காலம் ஒரு சினிமா பைத்தியமாக என்னை வைத்திருந்தது. பால்ய காலங்களில் கந்தன் கருணை, சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களைத் தவிர்த்து வேறு எந்த சினிமாக்களுக்கும் அனுமதி இல்லை. அந்தக் கட்டுப்பாடு என்னை இப்படி ஆக்கியதோ என்னவோ. எனது மனைவிக்கோ சினிமாவே பிடிக்காது. திருமணமான புதிதில் ஒரே ஒரு சினிமாதான். வீட்டில் சிடி போட்டால் படம் ஆரம்பிப்பதற்குள் சத்தமில்லாமல் தூங்கிப் போயிருப்பாள். நண்பர்களுடந்தான் திரையரங்குகளுக்கு விஜயம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னும் யாரும் என்னைக் கிண்டல் செய்யவில்லை.
இன்று அவளுக்குச் சினிமா பார்க்க வேண்டும், எனக்கோ அது பிடிக்காமல் போய் வெகு காலம் ஆகிவிட்டது. எப்பொழுதாவது குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களுக்காக மட்டும் செல்லும் வழக்கம். இப்பொழுது இந்த ஊரடங்கு நேரத்தில் சில தெலுங்குப் படங்களைக் காண்கிறோம். தமிழ்ப் படங்களைப் பார்ப்பதற்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. தெலுங்குப் படங்களில் இன்னமும் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்களில் கம்யூனிசம், நாத்திகம், தமிழ்தேச நெடிகள் மட்டுமே அதிகமாக இருக்கிறது போல. திரௌபதி விதிவிலக்கு.

மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் தேவை ஏதாவது இருந்தால். மற்றபடி வெளியில் யாரும் செல்வதில்லை.
அமைதியாக நிம்மதியாக செல்லும் இந்தக் காலம் தொலைந்து போய் பரபரப்பான வாழ்க்கையை வாழாமல் செய்யும் காலம் திரும்பி விடப் போகிறதே என்ற அச்சம் எனக்கிருக்கிறது.  வாழ்க்கை முறையை வடிவமைத்துக் கொள்ள திட்டமிடுகிறேன். பார்ப்போம் என்ன நடக்கும் என்று.,.,







புதன், 9 மார்ச், 2016

அரச மரத்தடியில்
அசைவற்றிருக்கும்
ஒரு பிம்பம் !
அதன்முன் ஏதுமின்றி
இருகைகூப்பி
நெஞ்சில் சேர்த்து
கண்மூடி மனமொருங்கி
நின்ற நேரத்தில்
பேராற்றல் உள்ளிருப்பதும்
பேரண்டத்தின்
ஓர்பகுதி யிதென்றும்
உணர்த்திவிட்ட அது
பிம்பமா? பேரண்ட மூலமா?

கண் திறந்தவேளை
மின்னிற்று மூளை
முன்தெரியுமனைத்திலும்
என்னையுணர
எல்லையற்ற ஆற்றல்

உள்ளுள்ளே ஊற்றெடுக்க
எனக்கே நான் பிரமாண்டமாய் !

நம்பிக்கை கூட்டிவைத்த
தும்பிக்கையான் பிம்பம்
படைத்திட்ட பிரமன்
முகம்தெரியா பாட்டன்
அதனினும் பிரமாண்டமாய்!

செவ்வாய், 26 ஜனவரி, 2016

உடலின் மொழி

              உடலின் மொழி

             உடல் மொழி(body language) நமது எண்ணங்களை மற்றவர்க்கு தெளிவுற அறியச் செய்ய பயன்படுத்துகிறோம். இதற்காக எத்தனையோ புத்தகங்கள், வகுப்புகள் என பலப்பல வழிகாட்டுதல்கள் நமக்கு எளிதாக தற்காலத்தில் கிடைக்கிறது. இது சமூகத்தில் நமக்கு ஓர் இடத்தைப் பெற்றுத்தர பயனுள்ளதாக அமைகிறது.

             நாம் இங்கு சிந்திக்கப்போவது உடலின் மொழி பற்றி. நாம் நமது சிந்தனைகளை, விருப்பங்களை,தேவைகளை மற்றவர்க்கு விளங்க வைக்க மொழி என்ற ஒன்று உள்ளது. அது போலவே நமது உடல் அதன் எண்ணங்களை, தேவைகளை, விருப்பங்களைத் தனது மொழியில் பேசுகிறது.

           ஆயினும் நமது மனமொழி ஆதிக்கம் செலுத்தி அதனின்றும் நம் சிந்தனையை விலக்கி வைப்பதால் உடலின் மொழியை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளவும் தலைப்படாமல் இருக்கப் பழகிவிட்டோம். நமது மனமொழியை சிறிது அமைதிப்படுத்திவிட்டு உடலின் மொழியை கவனிக்கத் தொடங்கினாலே அதன் மொழி நமக்குப் புரிந்துவிடும்.

          ஒரு குழந்தை மற்றும் தாயின் உரையாடல் மற்றவர்க்குப் புரியாமல் போகலாம். ஆனால் அவர்கள் இருவருக்கும் நன்றாகவே புரியும். அதுபோலத்தான் உடலின் மொழியும் கூர்ந்து நோக்கில் நமக்குப் புரியத்துவங்கிவிடும்.

          தாகம் எடுக்கிறது என்கிறோம், பசிக்கிறது என்கிறோம் இவை எவ்வாறு நமக்குத் தெரிகிறது. இது உடலின் மொழி; அது தனது தண்ணீர் தேவையையும் ஆற்றல் தேவையையும் நமக்கு விளக்கிவிடுகிறது. ஆனால் நம்மில் பலருக்கும் தெரிந்த உடல்மொழியினிந்த இரு வார்த்தைகளையுமே பல நேரங்களில் புறந்தள்ளிவிட்டு யாரோ ஒருவர் சொன்னதை, மனம் நம்புவதை, சொல்வதை பின்பற்றத் தொடங்கிவிடுகிறோம்.

          உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் நிச்சயம் ஒருவர் குடிக்க வேண்டும் என்பது. ஆனால் உடல் தனது மொழியில் தாகம் என்ற வகையில் தனது தண்ணீர் தேவையை தெரிவிப்பதை புறந்தள்ளிவிடுகிறோம். குளிர்சாதன அறையில் பணிபுரிபவரின் தண்ணீர் தேவையும், கொதிக்கும் வெயிலில் தார்சாலை அமைக்கும் பணியாளரின் தண்ணீர் தேவையும் வேறு வேறு. இரண்டு லிட்டர் தண்ணீர் என்பது முன்னவர்க்கு வெகு அதிகம்;பின்னவர்க்கு வெகு குறைவு. இங்கு தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துவதுதானே சரியான முறையாக இருக்கும்?

         மூன்று வேளை சரியான நேரத்திற்கு உணவெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் உணவு உடலின் ஆற்றலுக்காக இடப்படும் எரிபொருள். உடல் தனது தேவையை பசி என்ற மொழியில் தெளிவாகச் சொல்கிறது. வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பும்பொழுது எப்படி நிரப்புகிறோமோ அதே முறைதான் இங்கும் பின்பற்றப்படவேண்டும். குறித்த நேரத்திற்கு உணவு என்ற நிலையில் எரிபொருள் வீணாகித்தான் போகும். சரியான நேரத்திற்கு உணவென்பது பசித்த நேரம் தானே தவிர கடிகாரம் காட்டும் நேரம் அல்ல என்று நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறோம்?

          பலருக்கும் காய்ச்சல் தலைவலி என்றாலே பயம் மிகுந்து விடுகிறது; சாதாரண பயம் அல்ல மரண பயம். ஊடகங்கள் வாயிலாக அறிந்த பல நோய்களின் அறிகுறிகளும் விளைவுகளும் நமது மனக்கண்ணில் திரையிடப்பட்டுவிடுகிறது. இந்த பயமே பல மருத்துவமனைகளுக்கும் முதலீடுகளாகி வருமானங்களை அள்ளிக் குவிக்கிறது.

          அது மட்டுமல்ல, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனிருப்பவர்கள் அனைவரும் மருத்துவர்களாகி விடுகின்றனர். ஆளாளுக்குச் சொல்லும் நோய்கள் மருத்துவமுறைகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலாது. காய்ச்சல் உடல் தன் உடலில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு நோய்க்காக போராடும்பொழுது உண்டாவதுதான். அந்நேரம் உடலுக்கு அதிக வேலை இல்லாமல் ஓய்வு அளிப்பதே சிறந்த வழிமுறையாகவும் முதலுதவியாகவும் இருக்கும். தேவை எனில் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கலாம். 

          தலைவலிக்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை, பசித்த நேரத்தில் உணவருந்தாது போனது, மன அழுத்தம் எனப் பல்வேறு காரணிகள் இருக்கலாம். உடலின் மொழி அறிந்துவிட்டால் இதற்கான தீர்வு கிடைத்துவிடும் மனதில் வீண் பயத்திற்கு இடம் இருக்காது.

           உடல் தனது களைப்பை, ஆற்றல் இழப்பை, தனக்குத் தேவைப்படும் ஓய்வை சோர்வு எனும் தனது மொழியில் வெளிப்படுத்துகிறது. சோர்வில்லாமல் உழைப்பது நல்லதாயிருக்கலாம்; ஆனால் சோர்வை புறந்தள்ளி உழைப்பது சரியானதாக இருக்காது. உடல் சோர்வடையும் தருணத்தில் அதற்கு சரியான ஓய்வை அளிப்பதே நாம் நமது உடலுக்குச் செய்யும் நன்மையாக அமையும்.

          தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது என்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஓய்வுக்கு ஏங்குகிறது என்றுதானே பொருள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வதை விட உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒன்று வேறில்லை. முன்னிரவில் உறங்கி அதிகாலையில் விழிப்பதே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். இரவு நெடுநேரம் வேலை செய்வது பெருமையல்ல; அது உடலின் இளமைக்குச் செய்யும் துரோகம்.

          தாய்மொழியில் சிறந்தவராய் இருப்பதும் பன்மொழி வித்தகராய் இருப்பதும் பெருமைதான். ஆனால் உடலின் மொழி அறிந்திருப்பதே நமது வாழ்வுக்கு ஆதாரம். எனவே உடலின் மொழி கற்றிட முனைந்திடுவோம். இளமையோடு நீடு வாழ்வோம்.

 இதனை நிப்ட்-டீ செய்தியில் வெளியிட்டுவிட்டேன். இன்றுதான் இங்கு வெளியிட நேரம் அமைந்தது. படங்களுக்காக இணையத்தில் தேடுகையில் இந்தத் தலைப்பில் உமர் பரூக் என்பவர் எழுதியுள்ள புத்தகம் வந்துள்ளதை அறிந்து கொண்டேன்.